"தமிழக கம்யூனிச இயக்கத்தின் மூத்தத் தலைவரான தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்னமும் தொடர்ந்து பொது வாழ்வில் ஈடுபட்டு இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்பது நம் அனைவருக்கும் பெருமையளிக்கும் செய்தியாகும்.'' என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் புகழ்மாலை சூட்டினார். தொடர்ந்து அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தோழர். ப. மாணிக்கம் அவர்களும் துணைச் செயலாளராக தோழர் இரா. நல்லகண்ணு அவர்களும் விளங்கியபோது 1980ஆம் ஆண்டிலிருந்து கடந்த 34 ஆண்டுகாலமாக அவருடன் நெருங்கிப் பழகி வருகிறேன்.
அன்று எப்படி எளிமை, இனிமை, பண்பு, பணிவு, தொண்டு, தியாகம் ஆகியவை நிறைந்தவராக விளங்கினாரோ இன்றளவும் அதைப்போலவே வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்க்கை திறந்தப் புத்தகம் போன்ற வாழ்க்கையாகும்.
அப்படியே இன்னமும் இருப்பார். இனிமேலும் இருப்பார். இந்த உயர்ந்த பண்புகள் அவரோடு ஒட்டிப் பிறந்தவையாகும். கட்சி அரசியலைத் தாண்டிய பெருமதிப்பை அவர் மீது தமிழக மக்கள் வைத்துள்ளனர். சிறந்த அரசியல் தலைவருக்குரிய ஆளுமையும் சீரிய பண்புகளும் நிறையப் பெற்றவர். இலக்கியத்தில் மனித நேயத்தையும் மனிதநேயத்தில் இலக்கியத்தையும் தேடும் தலைவராகத் திகழ்கிறார். நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் இளம் வயதிலேயே ஈடுபட்டு அடக்குமுறைகளைச் சந்தித்தவர். நாடு விடுதலைப் பெற்றப்பிறகும் சொல்லொண்ணாத கொடுமைகளுக்கு ஆளானவர்.
1948ஆம் ஆண்டில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடலெங்கும் காயங்களுடன் இரத்தக் கறைப்படிந்த உடையுடன் திருவைகுண்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறையினர் அழைத்துவந்து சோதனையிட்டபோது அக்காட்சியைக் கண்ட அவரது தாயார் மயங்கி விழுந்தார். நாங்குநேரி முச்சந்தியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலர்கள் அவரை மிகக்கடுமையாகத் தாக்கினார்கள். இவ்வளவும் எதற்காக? விவசாயிகளின் நலனுக்காக அவர் போராடினார் என்பதே அவர் செய்த குற்றமாகும்.
சிறுகதை மன்னர் ஜெயகாந்தன் மனம் நெகிழ்ந்து அவரைப் பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார். "விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்றத் தலைமுறையினர் மெல்லமெல்ல அருகிவருகின்றனர். தோழர் நல்லகண்ணு விடுதலைப்போராட்ட வீரர்களின் கடைசிப் படைவீரராக இருப்பார். சுதந்திரப் போராட்டத்திலும் அதற்குப் பிறகு நடந்த மக்கள் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்ததால் சொந்த வாழ்க்கையைப் போராட்டக் களமாக்கிகொண்ட தியாகிகள் மிகச்சொற்பமானவர்கள். அவர்களில் ஒருவர் தோழர் நல்லகண்ணு ஆவார்.'' என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த திறனாய்வாளரான தி.க. சிவசங்கரன் அவர்கள் தோழர் நல்லகண்ணு அவர்களின் தன்னலமற்றப் பொதுவாழ்க்கையை நினைவு கூரும்போது "ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சீரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறார்'' என்று குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவரும் சிறந்த தமிழறிஞருமான பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார் :
"தமிழ்நாட்டில் இடதுசாரிக்கொள்கைகள் தொடங்கிய காலத்தில் அது பகுத்தறிவு வாதத்தோடு தொடர்புற்று நின்று அதன் காரணமாக தமிழ்நாட்டின் அடிநிலை பண்பாட்டு அம்சங்கள் பலவற்றை தன் வளர்ச்சி நிலையில் வளத்துக்குப் பயன்படுத்தவில்லை. உண்மையில் அந்த நிலையில் நாட்டின் பண்பாட்டு உயிர்களோடு அதிகத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், தோழர் ஜீவா அவர்கள் அந்தப் போக்கிற்குப் புறநடையாக இருந்தார். தமிழ்நாட்டில் பொதுவுடைமை வளரவேண்டும் எனில் அது கம்பனையும், பாரதியையும் உள்வாங்கவேண்டும்.
இன்று தோழர் நல்லகண்ணு அந்தப் பாரம்பரியத்தில் வந்து தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் பண்பாட்டினை பொதுவுடைமை கருத்து நிலைக்கானத் தளமாக காண்கிறார். தோழர் நல்லகண்ணு அவர்களது பொதுவுடைமை தமிழ்மண்ணுக்குள்ளிருந்து வருவது. அந்த வலுதான் இன்று அவரை தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மாத்திரமல்லாது அனைத்திந்திய முக்கியத்துவம் உள்ளவராக ஆக்கியுள்ளது.
தனிப்பட்ட நிலையில் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் நவீன கால வரலாற்றின் சமூகப் பிரச்சினைக்கான விளக்கங்களை தோழர் நல்லகண்ணு மூலம் அறிந்ததைப் போன்று வேறு ஒருவரிடத்திலிருந்தும் நான் தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.'' என்று கூறினார்.
வள்ளலார் கூறியது போல உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர். தி.க.சி அவர்கள் கூறியதைப்போல ஒரு உண்மையான கம்யூனிஸ்டாக தனது அகவாழ்விலும் புறவாழ்விலும் திகழ்ந்து வருபவர். தமிழ்மாநில கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக அவர் இருந்த போது மருத்துவரான அவருடைய மகள் தனது தந்தையோடு இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக கட்சி அலுவலகத்தில் வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தார். மூன்றாம் நாள் தந்தையிடம் விடைபெறச் சென்றபோது "மூன்று நாட்கள் தங்கியதற்கும் உணவு உண்டதற்கும் ரூ.110 ஆகிறது. அதைக் கொடுத்துவிட்டுப் போ என்று'' அவர் கூற மகள் அதிர்ந்துபோய் அழத்தொடங்கினார். ஏழை எளிய மக்கள் கட்சிக்குக் கொடுத்த காசு இது என்று கண்டிப்புடன் கூறி அதைக் கட்டச் செய்தார்.
இந்தச் செய்தியை நான் படித்தபோது எனக்கு காந்தியடிகளின் நினைவு வந்தது. காந்தியடிகளின் மகனான தேவதாஸ் காந்தி ராஜாஜியின் மகளான இலட்சுமியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்தில் இத்திருமணம் நடந்தது. நேரு உட்பட 20 பேர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் தேவதாஸ் காந்தி தனது மனைவியுடன் டில்லிக்குப் புறப்பட்டார். அதற்கு முன் காந்தியடிகளைச் சந்தித்து விடைபெறச் சென்றார்.
"இந்துஸ்தான்-டைம்ஸ் பத்திரிகையில் நீ வேலைப் பார்க்கிறாய். ஊதியம் பெறுகிறாய். ஆசிரமத்தில் நடைபெற்ற உனது திருமணத்திற்கான செலவை செலுத்திவிட்டுப்போ'' என காந்தியடிகள் கண்டிப்பாக கூறிவிட்டார்.
உண்மையான மக்கள் தொண்டர்கள் பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு காந்தியடிகளும் நல்லகண்ணுவும் சீரிய உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
தோழர் நல்லகண்ணு அவர்களின் சொந்த மாமனார் தோழர் அன்னசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் துன்ப துயரங்களில் பங்கேற்றவர். இரட்டைக்குவளை முறை போன்ற கொடுமைகளை எதிர்த்து இடைவிடாமல் போராடியவர். அவர் திடீரென தனது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். இச்செய்தியை அறிந்த தோழர் நல்லகண்ணு அவர்கள் "மாமா அப்பகுதிகளில் தொடர்ந்து வசித்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள் நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை மோதலை வளர்க்கவேண்டும் என திட்டமிட்டு ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்களே இதைச் செய்து தலித்துகள் வெட்டிவிட்டதாக பழியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். நாம் மிக கவனமாக இருக்கவேண்டும்.'' என்று நிதானமாக கூறியதைக் கேட்டு அதிர்ந்ததாக தோழர் த. லெனின் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
தோழர் நல்லகண்ணு அவர்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு வள்ளுவர் எழுதிய மூன்று குறட்பாக்கள் நினைவுக்கு வரும்.
"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையிலும் மானப் பெரிது.
தன்னிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு மலையின் உயர்வைவிட மிகவும் பெரியதாகும்.
"அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சான்றாண்மை என்பதைத் தாங்கியுள்ளத் தூண்களாகும்.
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றே மண்புக்கு மாய்வது மன்
பண்பாளர்கள் இருப்பதால்தான் உலகப்பொது நலம் உள்ளது. இல்லையானால் எப்போதோ அழிந்திருக்கும்.
வள்ளுவர் கூறிய இந்த மூன்று குறளுக்கும் உரியவடிவமாக நம் மத்தியில் வாழ்ந்து வருபவர் தோழர் நல்லகண்ணு ஆவார். அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழர்களுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன். |