வரலாறு அறியப்பட்ட காலம் தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலக்கட்டத்தில் பழந்தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே சங்க இலக்கியமாகும்.
இனக்குழுவாக வாழ்ந்த காலம் முதல் வேளிர்கள், மூவேந்தர்களின் அரசு உருவாக்கக் காலம் வரை சங்க இலக்கியப் படைப்புகள் தொடர்ந்தன. பின்னை இலக்கியங்களுக்கு ஒரு முன்வடிவமாகவும் செவ்வியல் மரபுடையனவாகவும் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.
சங்க இலக்கியங்கள் என்று கருதப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவற்றில் 2380 பாடல்கள் அடங்கியுள்ளன. 746 புலவர்கள் இவற்றைப் பாடியுள்ளனர். பெயர் தெரியாத புலவர்கள் பாடிய 102 பாடல்களும் இவற்றில் உள்ளன.
இந்தப் பாடல்கள் பாடப்பட்ட காலம் வேறு. அவை தொகுக்கப்பட்ட காலம் வேறு. இவை பாடப்பட்ட காலத்திலிருந்து மூன்று, நான்கு நூற்றாண்டுகள் பிற்பட்டுத்தான் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாடிய புலவர்கள் ஒரே நாட்டினைச் சேர்ந்தவர்கள் அல்லர். சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்த தமிழகத்தில் பலவேறு ஊர்களிலும் பலவேறு காலங்களிலும் வாழ்ந்தவர்கள். இவர்களின் பாடல்களைத் தொகுப்பது என்பது அதுவும் அந்த நாளில் மிகக்கடுமையான பணியாகும். கால் கடுக்க நடந்து நடந்து ஊர் ஊராகச் சென்று இப்பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்று சேர்த்துப் பகுத்துத் தொகுப்பதென்பது இமாலயச் சாதனையாகும். அந்த நாளில் வாழ்ந்த மன்னர்களின் உதவியோடு புலவர்கள் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
சங்க இலக்கியம் அகம்-புறம் எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இத்தகைய பாகுபாடு இல்லவே இல்லை. தமிழுக்கே உரிய சிறப்பு இதுவாகும். இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுக்கப்பட்டன.
தலைசிறந்த தமிழறிஞரான தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் "சங்க இலக்கியங்கள் தேசியக் கவிதைகளே. வலுவான ஒரு தேசிய இனத்தின் குரல் அந்தக் கவிதைகளின் கருவில் அமைந்து கிடக்கிறது' என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க நாட்டுத் தமிழறிஞரான ஜார்ஜ் ஹார்ட் "சங்க இலக்கியம் தமிழுக்கே உரிமையுடையது. எவ்விதமான புற மரபின் தாக்கமும் அறவே இல்லாதது. மேலும் முக்கியமானது யாதெனில் சங்க இலக்கியம் உலகப் பேரிலக்கியக் கருவூலங்களில் ஒன்று என்பதாகும். அவ்விலக்கியம் மனித வாழ்க்கை, மானுட அனுபவங்கள் பற்றிக் கூறுகிறது.
சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் அல்லது மற்ற எந்த மொழியாயினும் அவற்றிலிருந்தும் வேறுபட்ட பார்வை, அனுபவம், தோற்றம் ஆகியவற்றை சங்க இலக்கியம் முன் வைக்கிறது.
அதன் யாப்பு வடிவங்கள், மொழி நடை, இலக்கிய மரபு, அது விளக்கும் மன உணர்வுகள் அனைத்தும் முற்றிலும் தமிழ் மரபிலக்கணத்திற்கே உரியனவாகும். அதன் இலக்கிய வளப் பரப்பு வேறு எந்தச் செவ்வியல் இலக்கியத்துடனும் மிக எளிதாக ஒப்பிடக்கூடிய அளவிற்கு மிக விரிவானது.' என்று வியந்து கூறியுள்ளார்.
தமிழிலக்கியத்தின் மற்றொரு சிறப்பு முத்தமிழ்ப் பாகுபாடாகும். இயல், இசை, நாடகம் என முத்தமிழாகத் தமிழ் போற்றப்பட்டது. பழந்தமிழகத்தில் படைக்கப்பட்ட இசை, நாடக நூல்கள் பல இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், மறைந்த அந்த நூல்களின் பெயர்களைப் பல்வேறு குறிப்புகளிலிருந்து நாம் அறிகிறோம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க் காப்பியம் என்று உலகம் போற்றுகிறது. சோழப் பேரரசனான இராசராசனின் மெய்க்கீர்த்தி அவனை முத்தமிழுக்கும் தலைவன் எனப் பாராட்டுகிறது.
தமிழ் இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி எதனால் தொடங்கப்பட்டது? வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாகத் தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இதைக் கருத வேண்டும். சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்டுத் தொகை நூல்களாக ஆக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக்காட்டும் இப்பாடல்கள் அழிந்திருக்கும். இன்றளவும் நமது மொழிக்குப் பெருமை சேர்க்கும் இப்பாடல்களை நாம் இழந்திருந்தால் தமிழ் செம்மொழியாக செம்மாந்து விளங்கியிருக்க முடியாது. சீரிளமைத்திறன் குன்றாத மொழி என்ற பெருமையையும் பெற்றிருக்க முடியாது.
சங்க நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை பதினெண்மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. அதைப்போலவே திருக்குறள், நாலடியார் மற்றும் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. சங்கப் புலவர் கையாண்ட இத்தொகுப்பு முறை பல்வேறு காலங்களிலும் தொடர்ந்தது. ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என நமது காப்பியங்கள் தொகுக்கப்பட்டன. தேவார, திருவாசகங்கள் பன்னிரு திருமுறையாக தொகுக்கப்பட்டன. ஆழ்வார்களின் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரந்தமாகத் தொகுக்கப்பட்டன. சைவ சமயச் சாத்திரங்கள் 14 பதினெண் சித்தர் பாடல்கள் ஆகியவை இவ்விதமே தொகுக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளில் எழுதப்பெற்ற மேற்கண்ட பாடல்கள் இவ்விதம் தொகுக்கப்படாமல் போயிருந்தால் அவையும் அழிந்து போயிருக்கும்.
சங்க இலக்கியங்களிலிருந்து சித்தர் பாடல் வரை இன்றுவரை அழியாமல் பாதுகாக்கப்பட்டதற்குத் தொகுப்புமுறையே காரணமாகும். சங்க காலத்திலிருந்து சித்தர்கள் காலம் வரை பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் ஒன்றுவிடாமல் தொகுக்கப்பட்டன என்று கூற முடியாது. தொகுக்கும் முயற்சியில் பலபாடல்கள் கிடைத்திரா. கிடைத்த பாடல்களே தொகுக்கப்பட்டன. கிடைத்த பாடல்களில் சிலவற்றைத் தொகுத்தவர்கள் ஒதுக்கியிருக்கக்கூடும். நமது இலக்கியச் செல்வம் தொலைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டதற்கு நமது முன்னோரின் எச்சரிக்கை உணர்வும், அயராத முயற்சியுமே காரணமாகும்.
உரையாசிரியர்கள்
தொல்காப்பியம், சங்கப் பாடல்கள், காப்பியங்கள் ஆகியவை தோன்றிய காலத்தில் அவற்றின் பொருளை அந்தக் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் எளிதாக உணர்ந்து கொண்டனர். ஆனால், 1000 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றின் பொருளைப் பிற்காலத் தலைமுறையினர் உணர்வது அரிதாகிவிட்டது. அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முடியாமல் பிற்காலத் தலைமுறையினர் தவித்திருப்பார்களேயானால் அந்த இலக்கியங்களைச் சிறிது சிறிதாகப் புறக்கணித்திருப்பார்கள். அவைகளும் நாளடைவில் மறைந்திருக்கும்.
இந்த அபாயத்தை உணர்ந்த உரையாசிரியர்கள் மேற்கண்ட நூல்களுக்கு விரிவான உரைகளை எழுதினார்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் புரியும் நடையில் அவர்களின் உரைகள் படைக்கப்பட்டன.
பிற்காலச் சோழர் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உரையாசிரியர்கள் தோன்றித் தொல்காப்பியம் மற்றும் பழந்தமிழ் நூல்களுக்கு உரைகளை எழுதினார்கள். இதன் மூலம் அந்த நூல்களை அழியாமல் பாதுகாத்தனர். அந்த நூல்களின் பொருளை மக்களுக்குப் புரிய வைத்தனர். இடைக்காலத்தில் எழுந்த இந்த உரைகள் இயற்றப்பெறாமல் போயிருந்தால் நாம் பேரிழப்பிற்கு ஆளாகியிருந்திருப்போம். தமிழ் மொழிப் பயிற்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் இவை பேருதவிபுரிந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றில் உரையாசிரியர்களுக்கு உயர்ந்த உன்னதமான இடம் உண்டு.
உரை நூல்கள் வலிமைவாய்ந்த இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தன. கி.பி. 13-ஆம் நுற்றாண்டு முதல் 3 நூற்றாண்டுகளுக்கு இந்த இயக்கம் தொடர்ந்து இயங்கியது. இளம்பூரணர், களவியல் உரைகாரர், பேராசிரியர், அடியாருக்கு நல்லார், சேனாவரையர், பரிமேலழகர், மயிலை நாதர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளனர்.
உரையாசிரியர்கள் தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டு மிகப்பெரிதாகும். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதுவதோடு அவர்கள் கடமை முடிந்துவிடவில்லை. தங்களது உரைகளின் வாயிலாகப் பழந்தமிழ் மீட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தனர். சங்க கால நூல்கள் மீது பற்றுக்கொண்டு அவற்றைக் கற்க மக்களைத் தூண்டினர். சங்க காலத் தமிழ் வழக்கு நடைமுறையில் நின்றுபோய் வெகுகாலமாகிவிட்டது.
இடைக்காலத்தில் தமிழில் வடமொழிச் சொற்களும், வடமொழிக் காவியமரபுகளும் புகுந்தன. வடமொழிப் பண்பாடும் ஊடுருவியது. வடசொற்கள் பெரும்பான்மை விரவித் தமிழ்சொற்கள் சிறுகிவரத் தொடங்கின. இதனால் தமிழ்ப்புலவர்களின் படைப்புத் திறன் குறைந்தது. இந்த நிலைமையை எண்ணி எண்ணிப் பலரும் வருந்தினர். சங்க நூல்களைத் தமிழர்கள் கற்கும் நிலை வளரவேண்டும் என்ற எண்ணம் பெருகியதன் விளைவாக உரையாசிரியர்கள் தோன்றி சங்க நூல்களுக்கு உரைகளைப் படைத்தனர்.
உரையாசிரியர்களின் தொண்டு பழந்தமிழர் நூல்களுக்கு உரைகண்டதோடு நின்றுவிடவில்லை. பழைய நூல்களில் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த இடைச்செருகல்களை ஆராய்ந்து நீக்கினர். ஏடு எழுதியவரால் நேர்ந்த பிழைகளைக் களைந்தனர். திருத்திய பொருந்தாப் பாடங்களைப் போக்கினர். இவ்வாறு நூலின் மூலச் செய்யுட்கள் பிழையின்றி அமைய வழிவகுத்தனர். உரையாசிரியர்கள் பண்டையத் தமிழ் நூல்களுக்குச் செய்த பெருந்தொண்டு மூலச் செம்மையாகும் என அறிஞர் வ.சுப.மாணிக்கம் கருதினார்.
சங்க நூல் பதிப்பாசிரியர்கள்
தமிழகம் அந்நியரான ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட பிறகு, ஆங்கில வழிக் கல்வி புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சமயப் பரப்புரைக்காக வந்த கிறிஸ்தவத் துறவிகள் தமிழைக் கற்றனர். அதனுடைய சிறப்பில் மெய்மறந்தனர். அவர்களில் சிலர் தமிழ் அறிஞர்களாக ஆனார்கள். அச்சு இயந்திரமும் அவர்களால் கொண்டுவரப்பட்டது. திருக்குறள் எத்தகைய உயர்ந்த நூல் என்பதை உணர்ந்த அவர்கள் அதைத் தங்கள் மொழியில் பெயர்த்தனர். வீரமாமுனிவர் என்ற பெஸ்கி இலத்தீன் மொழியிலும், ஜி.யு. போப் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தனர். இதன் விளைவாக உலகம் திருக்குறளின் பெருமையை மட்டுமல்ல, அந்த நூலைப் படைத்தளித்த தமிழ்மொழியின் பெருமையையும் உணர்ந்தது.
இந்தக் காலக் கட்டத்தில் ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் இலக்கியங்களை அச்சில் பதிக்கும் முயற்சி ஓர் இயக்கமாகவே தொடங்கப்பட்டது. ஈழத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதய்யர் போன்றவர்கள் ஊர் ஊராக அலைந்து திரிந்து ஓலைச் சுவடிகளைக் கண்டறிந்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு நூல்களாகப் பதிப்பித்தார்கள். சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்கள். எத்தகைய கடும் முயற்சியை மேற்கொண்டார்களோ. அத்தகைய கடும் முயற்சியைப் பதிப்பாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இவர்களைத் தொடர்ந்து பலரும் இந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதே காலக்கட்டத்தில் புரூஸ்புட், அலெக்சாண்டர் ரீ ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் (1899-1905) அகழ்வாராய்ச்சி செய்ததன் மூலம் தமிழினத்தின் தொன்மையை உலகறியச் செய்தார்கள். 1909-ஆம் ஆண்டில் எட்கார் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் குறித்த சமூகவியல் தொகுப்புகள் வரலாற்று ஆய்வுக்குத் தூண்டுதலாக அமைந்தன.
கி.பி. 150-இல் வாழ்ந்த கிரேக்கரான பிளினியின் குறிப்புகளும் ஏறத்தாழ இதேக் காலத்தைச் சார்ந்த "எரித்ரிய கடலில் பெரிப்ளுஸ்' என்னும் நூலும் வெளியாகிப் பழந்தமிழர் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை வளரச் செய்தன. 1922ஆம் ஆண்டு சர். ஜான் மார்சல் சிந்து-சமவெளிப் பகுதியை அகழ்வாய்ந்து அந்நாகரிகம், தமிழர் நாகரிகம் என்பதை நிலை நாட்டினார்.
இவற்றைத் தொடர்ந்து தமிழ் இலக்கியப் பழைமையையும். தமிழர்களின் வரலாற்றையும் ஆராய்ந்தறிந்து நூல்களாக எழுதிப் பதிப்பிக்கும் மரபு தோன்றிற்று. எண்ணற்ற தமிழறிஞர்கள் கணக்கற்ற தமிழாய்வு நூல்களையும் தமிழர் வரலாற்று நூல்களையும் படைத்தார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிகளின் காரணமாக ஒட்டுமொத்தமான தமிழ் இலக்கிய வரலாற்றைப் பிறநாட்டு அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் தமிழறிஞர்களும் எழுதியுள்ளனர். தமிழின் இலக்கிய ஆய்வினைத் தமிழ்நாட்டின் வரலாற்றோடு இணைத்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றைத் தளமாகக் கொண்டு இலக்கிய வரலாற்றை ஒழுங்குபடுத்துவதால் அம்மொழியிலும் இலக்கியத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் காலத்திற்குக் காலம் இலக்கியத்தில் ஏற்பட்ட பொருள் உருவ மாற்றங்களையும் நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.
தமிழுக்குப் புதிய துறைகளான சிறுகதை, நெடுங்கதை, அரசியல், அறிவியல், கட்டுரைகள், போன்றவை எழுப்ப மாபெரும் சாதனைகள் படைக்கப்பட்டன.இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எண்ணற்ற மொழிகளில் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் திறன் படைத்தது தமிழ்மொழி ஒன்றே என்பது ஐயந்திரிபின்றி நிலைநாட்டப்பட்டது.
எத்தனை சோதனைகள் நேர்ந்தாலும், எத்தனை பண்பாட்டுப் படையெடுப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் தமிழ்மொழி என்றும் அழியாது. அதை அழிக்கும் வலிமை உலகில் யாருக்கும் கிடையாது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் உணரவேண்டும். அதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் சென்ற இரு நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழறிஞர்கள் படைத்த அரிய நூல்களை எல்லாம் தேடித்தேடிச் சேகரித்துப் பல தொகுப்பு நூல்களை நண்பர் இளவழகன் படைத்தளித்து இருக்கிறார். இதற்குத் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. இந்த நூல்களை இளைய சமுதாயம் வாங்கிப் படித்துப் பெரும் பயன் அடைய வேண்டும். அதுதான் இந்த விழாவின் நோக்கமாகும்.
(5-1-15 சென்னையில் நடைபெற்ற "தமிழ்மண்' பதிப்பக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை) |