2015 சனவரி 25ஆம் தேதியன்று மதுரையில் நடைபெறும் தமிழர் தேசிய எழுச்சி மாநாடு 4 நோக்கங்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்படுகிறது. முதலாவதாக மொழிப்போர் பொன்விழா ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
1938ஆம் ஆண்டு இந்தித் திணிப்பிற்கு எதிராக நடைபெற்றப் போரில் மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற தமிழறிஞர்களும், பெரியார், அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் இணைந்து பங்கேற்றனர். ஆயிரக்கணக்கில் பலர் சிறை புகுந்தனர். சிறையில் நடராசன், தாளமுத்து ஆகியோர் தங்கள் உயிரை ஈகம் செய்தனர். இதன் விளைவாக இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்டது.
1963ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பு முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. 1965ஆம் ஆண்டு சனவரி 26நாம் நாள் முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்ற சட்ட முன்வடிவை அன்றைய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உடனடியாக தி.மு.க. பொதுக்குழு கூடி இதற்கு எதிரான போராட்டத் திட்டங்களை வகுத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவை தீயிட்டுக் கொளுத்துவது என்றப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டக்குழுவிற்குத் தலைவராக திரு.மு.கருணாநிதி நியமிக்கப்பட்டார். போராட்டத்திற்கு முன்பாகவே கழகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் மாணவர்களான காமராசன், காளிமுத்து ஆகியோர் அரசமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவை எரித்து கைதானார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூட்டில் இராசேந்திரன் என்னும் மாணவர் உயிர்நீத்தார். கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம், சிவலிங்கம்ட விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் தீக்குளித்தும், கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் ஆகியோர் நஞ்சுண்டும் தங்கள் உயிர்களை ஈகம் செய்தனர்.
கி.ஆ.பெ. விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், இலக்குவனார் ஆகியோர் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழகமெங்கும் இப்போராட்டம் பரவியது. இப்போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. 50 நாட்களுக்குமேல் நடைபெற்ற இப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர் வரலாற்றில் இதற்கு முன்போ பின்போ இத்தகைய எழுச்சிமிக்கப் போராட்டம் நடைபெற்றது இல்லை. தமிழைக் காக்கவும், தமிழன்னையை அரியணை ஏற்றவும் பல உயிர்தியாகம் செய்தும், இரத்தம் சிந்தியும், சிறை புகுந்தும் செய்த ஒப்பற்ற ஈகத்தைப் பயன்படுத்தி 1967ஆம் ஆண்டில் தி.மு.க. தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 48 ஆண்டுகளில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன.
ஆனால், எதற்காக மாணவர்களும் மற்றவர்களும் அளப்பரிய தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை புறந்தள்ளிவிட்டு ஆங்கிலத்திற்கு மகுடம் சூட்டும் வெட்ககரமான பணியினை திராவிடக் கட்சிகள் செய்தன. செய்துவருகின்றன. இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழ் பள்ளிகளில் இல்லை. அரசு அலுவலகங்களில் இல்லை. நீதிமன்றங்களில் இல்லை. எல்லா இடங்களிலும் ஆங்கிலமே அரசோச்சுகிறது. இதற்காகவா இத்தனை பேர் உயிரிழந்தார்கள்?
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழுக்கு உரிய இடம் இல்லை. புறக்கணிக்கப்பட்டத் தமிழ் மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறது. இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழை அரியணையில் ஏற்ற தமிழ்த் தேசியர்கள் சூளுரைக்க வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்ற எல்லாவிதமான தியாகங்களுக்கும் தயாராக வேண்டும்.
டில்லியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு வால் பிடிப்பதையே திராவிடக் கட்சிகள் தங்களுடைய இலட்சியமாக கொண்டிருக்கின்றன. அதனால்தான் மத்திய ஆட்சியில் இருப்பவர்கள் தமிழையும் தமிழர்களையும் அவமதிக்கத் துணிகிறார்கள். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் பேசும்போது "இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் சமஸ்கிருதம்'' என்று கூறியிருக்கிறார். மொழிகள் பற்றிய சிறிதளவு அறிவுகூட அவருக்கு இல்லை. மாறாக சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்கும் வெறி இருக்கிறது. இந்தியாவில் சமஸ்கிருதம் எழுதப் பேசத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரத்திற்கும் குறைவானதேயாகும். பேசுவதற்கும் படிப்பதற்கும் ஆளே இல்லாத ஒரு மொழியை இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்று கூறுவதற்கு அறியாமைக் காரணம் என்று நான் கூறமாட்டேன். அகந்தை காரணம் என்றுதான் நான் கூறவிரும்புகிறேன்.
தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழர்கள் வடமொழியையும் அதனுடைய பண்பாட்டு திணிப்பையும் எதிர்த்துப் போராடி வந்திருக்கிறார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்ப்புலவர்கள் உறுதியாக நின்று வடமொழித் திணிப்பை எதிர்த்து வந்திருக்கிறார்கள். சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டதற்கே இதுதான் அடிப்படைக் காரணம். வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக நம்முடைய இலக்கியம் அழிந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அவர்கள் அவற்றைத் தொகுத்து எட்டுத்தொகை நூல்களாகவும் பத்துப்பாட்டாகவும் ஆக்கிவைத்தார்கள். தமிழ்த்தேசிய உணர்வின் விளைவுதான் இது. நால்வர் பாடிய தேவாரங்கள் திருமுறைகளாகவும், 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டதற்கும் இதுவே அடிப்படையானதாகும். சீரிளமைத்திறன் குன்றாத மொழியாகத் தமிழ் இன்றளவும் விளங்குகிறது. தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பேசிய தமிழை நாமும் இப்போதும் பேசுகிறோம் என்பதுதான் நமக்குள்ள பெருமையாகும்.
இம்மாநாட்டின் இரண்டாவது நோக்கமாக அன்னை மண்ணில் அன்னியர் சுரண்டலைத் தடுத்து நிறுத்துவோம் என்பதாகும். தமிழ்நாடு இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள், மார்வாடி, குசராத்திகள் போன்றவர்களின் வேட்டைக்காடாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் வணிகம், தொழில், ஆகியவற்றை 80 சதவிகிதம் இன்று அன்னியரின் கையில் சிக்கியிருக்கிறது. தமிழ் வணிகர்களும், தொழிலதிபர்களும் நசித்துப்போய்விட்டார்கள்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தின் கதவுகள் அன்னியர்களுக்கு திறக்கப்பட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொடங்கும் தொழிற்சாலைகளுக்கு ஏழை விவசாயிகளின் நிலங்களைக் குறைந்த விலைக் கொடுத்துப் பறித்து வழங்கும் வேலையை திராவிடக் கட்சி அரசுகள் செய்கின்றன. பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. நம்முடைய விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறு தொழில் நடத்துபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் அளிக்கப்படவேண்டிய மின்சாரம் திசைதிருப்பி அன்னியத் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது. இதன் விளைவாகத் தமிழர்கள் மீளாத்துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு தொழிற்சங்கம் வைக்கும் உரிமை கிடையாது. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீக்கும் அதிகாரம் பன்னாட்டுத் தொழில் அதிபர்களுக்கு உண்டு. தமிழகத்தின் பொருளாதாரமே அன்னியர்கள் கையில் சிக்கியுள்ளது. தமிழர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்க தமிழ்த் தேசியர்களால் மட்டுமே முடியும். வேறு யாரும் இதை செய்ய முடியாது. அதைச் செய்வதற்கு நாம் தயாராவோம்.
மூன்றாவதாக இந்த மாநாட்டின் நோக்கம் தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை நிலை நிறுத்துவதாகும். தமிழ்நாடு சமய நல்லிணக்கத்திற்குப் புகழ்பெற்ற நாடாகும். அனைத்து மதத்தவரும் சகிப்புத் தன்மையுடனும் நட்புறவுடனும் நெருங்கிப் பழகும் நாடு தமிழ்நாடு. சமயப் பூசல்களுக்கு ஒருபோதும் தமிழர்கள் இடமளித்தது இல்லை. ஆனால், டில்லியில் பா.ஜ.க. ஆட்சிபீடம் ஏறிய பிறகு மத மோதல்களுக்கு அறைகூவல்கள் விடப்படுகின்றன.
காந்தியடிகளை கொலை செய்த கோட்சே உண்மையான தேசபக்தர் எனவும், அவருக்குச் சிலை வைக்க வேண்டும் எனவும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகப் பேசினார்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களே என மற்றொரு உறுப்பினர் வெளிப்படையாக கூறினார். இராமரை வணங்காதவர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதவர்களும் நச்சுக்கருத்துக்களைத் தாங்கியவர்கள் என மிரட்டினார் மற்றொரு உறுப்பினர். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களை மிரட்டும் போக்கு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு இருக்கிறது. அதைப்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்கச் சாதியினர் தூண்டிவிடப்படுகிறார்கள். எனவே சிறுபான்மை மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்துத்துவவாதிகளால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு அரணாக நின்று காக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியர்களுக்கு உண்டு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்படும் ஒடுக்குமுறைகளையும் இழிவுகளையும் எதிர்த்துப்போராடுவது நமது கடமை. அவர்களின் சமூக விடுதலையில்லாமல் தமிழ்த் தேசிய விடுதலை சாத்தியமற்றது. கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த அயல்நாட்டு பாதிரிகள் சமயப் பரப்புரை செய்வதற்காக தமிழகம் வந்தபோது தமிழைக் கற்றார்கள். அதன் இனிமை அவர்களைக் கவர்ந்தது. இத்தாலியில் இருந்து வந்த பெஸ்கி என்னும் கிறிஸ்தவத் துறவி தமிழில் புலமைப் பெற்றார். தன்னுடைய பெயரையே வீரமாமுனிவர் மாற்றிக்கொண்டார். தேம்பாவணி என்ற தீந்தமிழ் காப்பியத்தைப் படைத்தார். திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்தார்.
மற்றொரு கிறிஸ்தவத் துறவியான ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதன் விளைவாக உலகெங்கும் திருக்குறளின் பெருமை பரவியது. அதன் மூலம் தமிழின் சிறப்பையும் உலகம் அறிந்தது. இன்னும் பல கிறிஸ்தவத் துறவிகள் தமிழுக்குச் செய்துள்ளத் தொண்டு அளப்பரியதாகும். ஆனால் இந்துத்துவாவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களைப் பரப்புகிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்துப்போராட வேண்டியது நமது கடமையாகும். நமது தோழர்கள் அதற்குத் தயாராகிக்கொள்ள வேண்டும்.
இந்தியத் தேசியவாதிகளுக்கும், இந்து தேசியவாதிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் கிடையாது. பல அம்சங்களில் இருவரும் ஒத்தக் கருத்துடையவர்கள். இந்து தேசிய முதலாளித்துவத்தை ஆதரிப்பதிலும் அதனுடைய உதவியைப் பெற்றுக்கொள்வதிலும் இருவருக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை. அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டின் கதவுகளைத் திறந்துவிடுவதிலும் இரு தரப்பிற்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இல்லை.
இந்தியாவெங்கும் நடைபெறும் தேசிய இனப்போராட்டங்களை இராணுவத்தின் மூலம் ஒடுக்க முனைவதிலும் இருதரப்பினரும் ஒன்றுதான். சமஸ்கிருதம் அரியணையில் அமரும் சூழ்நிலை வரும்வரை இந்தி அந்த இடத்தை வகிக்கும் என்ற கருத்தோட்டத்தில் இருகட்சிகளுக்கும் எத்தகைய வேறுபாடும் கிடையாது.
மொழிவழித் தேசியத்தை ஒடுக்க இருவரும் கொஞ்சங்கூட தயங்கமாட்டார்கள். நம்மைத்தான் அவர்கள் பெரும் எதிரிகளாகக் கருதுகிறார்கள். எனவே நாம் மதவெறியர்களின் அறைகூவலை ஏற்போம். அவர்களை முறியடிக்க நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்வோம். நான்காவதாக இம்மாநாட்டின் நோக்கம் தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்பது என்பதாகும்.
இந்தி ஆதிக்கத்தைத் எதிர்த்து நடைபெற்றப் போராட்டங்கள் ஆனாலும், காவிரி, முல்லைப்பெரியாறு போன்றவற்றை நமக்குள்ள உரிமைகளுக்காக நாம் நடத்தியப் போராட்டங்கள் ஆனாலும், தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்சிமொழியாகவும், ஆட்சிமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஆக்குவதற்காகவும் நடத்தும் போராட்டங்கள் ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் ஆனாலும், அனைத்தும் தமிழ்த் தேசியப் போராட்டங்களின் வெவ்வேறு வடிவங்களே ஆகும். தமிழ்த் தேசியப் போராட்டம் நாளுக்கு நாள் கூர்மை அடைந்துவருவதின் எடுத்துக்காட்டுகள்தான் மேற்கண்டப் போராட்டங்களாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நமதுமொழி, பண்பாடு ஆகியவற்றை அழிக்க முயற்சி நடந்தது. நாடு சுதந்திரம் பெற்றப் பிறகும் புதிய ஆட்சியாளர்கள் அந்த முயற்சியை தொடர்ந்தனர். ஆனாலும் நாம் கொஞ்சமும் அஞ்சாமல் எதிர்த்துப்போராடி நம்முடைய மொழியையும் பண்பாட்டையும் காக்க கொஞ்சமும் தயங்கவில்லை.
மொழிவழியாக நாடு பிரிக்கப்படவேண்டும் என பல்வேறு தேசிய இனங்களும் போராடின. நாமும் போராடினோம். இதன் விளைவாக 1956ஆம் ஆண்டில் புதிய தமிழகம் பிறந்தது. ஆனாலும், எல்லைப் பகுதி பலவற்றை நாம் பறிகொடுத்திருக்கிறோம். அப்பகுதிகளை மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய மாபெரும் கடமை. அதற்காகத் தொடர்ந்து போராடுவோம்.
30 ஆண்டு காலத்திற்கு மேலாக அறவழியிலும், 33 ஆண்டு காலத்திற்கு மேலாக மறவழியிலும் தங்களுடைய மண்ணைப் மீட்பதற்கும் முழுஉரிமை பெற்ற மக்களாக வாழ்வதற்கும் ஈழத் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை இந்திய, சீனா, இரஷ்யா, பாகிஸ்தான் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணையுடன் சிங்களப் பேரினவாத அரசு ஒடுக்கியுள்ளது. இது தற்காலிகமான பின்னடைவே தவிர தோல்வியல்ல. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் மீண்டும் அந்த விடுதலைப் போராட்டம் தொடங்கும். அதற்குத் துணையாக உலகத் தமிழர்களை திரட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உண்டு. அதை நாம் செய்வோம்.
தமிழர்கள் தங்களின் இறையாண்மையை மீட்கவும் உரிமை பெற்ற மக்களாக தலைநிமிர்ந்து நிற்கவும் பண்பாட்டு மறுமலர்ச்சி இன்றியமையாததாகும். நமது பண்பாடுதான், நமது மக்களைத் திரட்டும் வழிமுறையாகவும், நமது உரிமைப்போராட்டத்திற்கான ஆயுதமாகவும் விளங்கும். எனவேதான் நமது பகைவர்கள் நம்முடைய பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் நம்மை ஒடுக்கிவிட முடியும் என நம்பி, அம்முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
பண்பாட்டு மறுமலர்ச்சி என்பது நமது வேர்களை நோக்கித் திரும்புவ தாகும். நமது பண்பாட்டின் வேர்களாக இருப்பவர்கள் நமது மக்கள். பண் பாட்டை உருவாக்கவும் பாதுகாக்கவும் வரலாற்றைப் படைக்கவும் உண்மை யிலேயே ஆற்றல் படைத்தவர்கள் நமது மக்களே. எனவேதான் ஆப்பிரிக்க நாட்டு கவிஞரான கப்ரால் வேர்களை நோக்கித் திரும்புக என்ற அறைகூவலை விடுத்தான். வேர்களை நோக்கி திரும்புவது அதாவது நமது பண்பாட்டை நோக்கி திரும்புவது என்பது தனிநபர்களைக் கடந்து மேலும் விரிவடைந்து இயக்கரீதியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் மேலும் மேலும் கூர்மையடை கிறது. எனவே நாமும் நமது வேர்களை அடையாளம் காண்போம். அதை நோக்கித் திரும்புவோம்.
தமிழகத்தில் நமது தாய்மொழியான தமிழை அரியணை ஏற்றவும், அந்நியர் சுரண்டலை தடுத்து நிறுத்தவும், சமய நல்லிணக்கத்தை நிலைநிறுத்தவும், தமிழ்த்தேசியம் வலிமை வாய்ந்ததாக மாறவேண்டும். அப்போதுதான் மேலே கண்ட நோக்கங்களில் நம்மால் வெற்றிபெறமுடியும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்கள் சூறை யாடப்படுவதை தடுத்து நிறுத்துவது முக்கியக் கடமையாகும். அந்தந்தப் பகுதி மக்களைத் திரட்டி அந்தந்தப் பகுதிகளில் மக்கள் போராட்டங்களை நடத்த நமது தோழர்கள் முன்வரவேண்டும். இத்தகையப் போராட்டங்களில் ஈடுபட மக்கள் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்ட நாம்தான் முன்வரவேண்டும். அப்போதுதான் மக்கள் துணிந்து போராட்டங்களில் இறங்குவார்கள். மக்கள் பிரச்சினைகளுக்காக எத்தகைய துன்பத்தை ஏற்கவும், தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மக்களுக்காக நாம் இருக்கிறோம் என்றால், மக்களும் நம்பக்கம் இருப்பார்கள். மக்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் பணியில் ஈடுபட முன்வருமாறு இங்கே குழுமியிருக்கக்கூடிய அனைத்துத் தோழர்களையும் வேண்டிக்கொள்கிறேன். |