இந்தியாவில் அனைத்து மாநில மக்களாலும் நன்கு அறியப்பட்ட சமுதாய உரிமைப் போராளி மேதா பட்கர் 09-02-15 அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வருகை தந்து மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்தியதன் மூலம் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத் ஆகிய மாநிலங்களில் வாழும் மலைவாசி மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.
நர்மதா பட்சாவோ அந்தோளன் அமைப்பை உருவாக்கியவர். இந்தியாவில் உள்ள மக்கள் இயக்கங்களை இணைத்து மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், அணைகள் குறித்த உலக ஆணையம் என்பதின் ஆணையராகவும் விளங்கி வருகிறார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள சிந்தூர் மாவட்டத்தில் டாடா நிறுவனம் சிறிய கார் உற்பத்தித் தொழிற்சாலையை தொடங்கியபோது, அதற்காக விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து பெரும் போராட்டத்தை நடத்தி அந்த ஆலை அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதற்கு காரணமாக இருந்தார்.
டில்லியில் அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியபோது அதற்கு முழுமையான ஆதரவு அளித்தார். மகாராஷ்டிரத்தில் கூட்டுறவு துறையில் இயங்கிய சர்க்கரை ஆலைகளைக் கைப்பற்றப் பெருமுதலாளிகள் முயன்றபோது அதற்கு எதிராகப் போராடியவர் மேதாபட்கர்.
ஆந்திர மாநிலத்தில் சிறீகாகுலம் மாவட்டத்தில் அணுஉலை அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராகப் போராடினார். இவற்றைப்போல பல்வேறு மக்கள் போராட்டங்களை நடத்திய பெருமைக்குரியவர் மேதாபட்கராவார்.
தமிழ்நாட்டில் தஞ்சை சமவெளிப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட விவசாய மக்களை நேரில் சந்திக்கவும், 08-12-14 அன்று தமிழகத்திற்கு மேதாபட்கர் வருகை தந்தார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையபாளையம் பகுதியில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பணிகளை மேதாபட்கர் பார்வையிட்டார். பிறகு, இங்கு வெளியேற்றப்பட்ட கழிவுகள் மற்றும் கழிவு நீரைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக எடுத்துக் கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். எருக்காட்டூரில் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டார்.
சிதம்பரத்திலும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நடை பெற்ற செய்தியாளர் கூட்டங்களில் கலந்துகொண்டு மீத்தேன் எரிவாயு திட்டத்தை உடனடியாகக் கைவிடும்படி மத்திய–மாநிலஅரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மனம் கலங்கினார்
மாலை 6 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வருகைதந்த அவரை வரவேற்று முற்றத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அவருக்கு அது குறித்து பழ. நெடுமாறன், மரு. பாரதிசெல்வன், வழக்கறிஞர் நல்லதுரை ஆகியோர் விளக்கம் கூறினர். முள்ளி வாய்க்கால் படுகொலை, முத்துக்குமார் உட்பட தீக்குளித்து மாண்டவர்களின் சிற்பம் ஆகியவற்றை அவர் பார்த்தபோது மனம் கலங்கினார். ஓவிய மண்டபத்தில் உள்ள மாவீரர்களின் ஓவியங்களைப் பார்த்து வியந்து பாராட்டினார்.
முத்தமிழ் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். மண்டபத்திற்குள்ளும், வெளியிலும் மக்கள் திரள் அலைமோதிற்று. மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை முள்ளிவாய்க்கால் அறங்காவலர் சி. முருகேசன் வரவேற்றார். கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கி பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
"புத்த மதம் பரவியுள்ள 50 நாடுகளில் பேசப்படும் மொழிகளில் புத்தகாப்பியம் கிடையாது. தமிழில் மட்டும்தான் மணிமேகலை என்னும் புத்தகாவியம் உள்ளது. மணிமேகலை அமுதசுரபியை ஏந்திவந்து மக்களின் பசிப் பிணியைப் போக்கினார். சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக வேண்டும் என முழங்கினார். அந்த மணிமேகலை பிறந்த தமிழ் மண்ணிற்கு நவீன மணிமேகலையாகத் திகழும் மேதாபட்கர் வருகை தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அவரது வருகை மீத்தேன் எதிர்ப்புப் போராளிகளுக்குப் புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் என நம்புகிறேன். காந்திய வழியில் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் மேதாபட்கர் அனைத்து மனித உரிமைப் போராளிகளுக்கும் முன் மாதிரியாகத் திகழ்கிறார்'' என்று கூறினார்.
கூட்டத்தில், உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் கோ. இளவழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வே. துரைமாணிக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. திருஞானம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேரா. த. செயராமன், ஆலோசகர்கள் மருத்துவர் பாரதிசெல்வன், திருநாவுக்கரசு, மீத்தேன் எதிர்ப்பு பேரியக்கம் கே.கே.ஆர். லெனின், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் மருத்துவர் ஜீவா, அருள்ராஜ், காபிரியல், மூத்த வழக்கறிஞர் தஞ்சை இராமமூர்த்தி, விளார் சாமிநாதன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன், வழக்கறிஞர் நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் பொன். வைத்தியநாதன், மாநிலப் பொதுச் செயலாளர் சதா. முத்துக்கிருட்டிணன் முதலியோர் கலந்துகொண்டனர்.
மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தமிழ் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இறுதியாக சமூகப் போராளி, மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதாபட்கர் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது ஈழத் தமிழர்கள் தொடர்ந்து இனப் படுகொலைக்கு ஆளாவதைக் கண்டித்தார். மீத்தேன் எரிவாயு திட்டத்தை உடனே கைவிடுமாறும் வற்புறுத்தினார்.
(விரிவான அவரது பேச்சு பின்னர் வெளியிடப்படும்) |