கேட்பாரற்று கெடும் தமிழ் ஒருங்குறி - நாக. இளங்கோவன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 12:48

ஒருங்குறி என்பது, உலக மொழிகளை உலகின் எந்தக் கணினியில் இருந்தும் எழுதவோ படிக்கவோ இயல வேண்டும் என்ற அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டுத் தரப்பாடு ஆகும். ஒருங்குறிச் சேர்த்தியம் (மய்ண்cர்க்ங் cர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம் : ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ன்ய்ண்cர்க்ங்.ர்ழ்ஞ்)ள் என்ற நிறுவனத்தின் வழியே இது செயற்படுத்தப்படுகிறது. உலக மொழிகளில் ஒன்றான தமிழும் அதில் இடம் பெற்றது. அதனால்தான் நம்மால் இன்று தமிழைக் கணினியில் பரவலாகப் பயன்படுத்த முடிகிறது.

முதற்கட்டமாக இப்படி இடம்பெற்ற தமிழ் எழுத்துக் குறியேற்றம் தமிழறிஞர்களால் முறையான ஆய்வுக்குள்ளாகி இடம்பெற்றிருந்தால் செம்மையாக இருந்திருக்கும். ஆனால் நடுவணரசு, ண்ள்cண்ண் என்ற தேவநாகரி அடிப்படையிலான இந்திய மொழிகளில் ஒன்றாகத் தமிழைக் கருதி, அப்படியே ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அள்ளிக்கொடுக்க, பல பிழைகளோடு தமிழ் குறியேற்றம் கண்டது. தமிழுலகமும், தமிழ் கணினித்திரையில் தெரிந்தால் சரி என்று விட்டுவிட்ட நிலையில், கணினியில் தெரியும் எழுத்துக்களுக்குப் பின்னே, தமிழுக்குப் புறம்பான மிகத் தவறான குறியேற்ற நெறி இருப்பது பலருக்குத் தெரியாது. இக்குறையைத் தீர்க்கவே சிலர் பல ஆண்டுகளாகப் போராடி வந்தாலும் இன்னும் இயலவில்லை.

அடுத்த கட்டமாக தமிழர் அறியாத ஓரிரு கிரந்த எழுத்துக்களை ஒருங்குறியில் புகுத்தி வெள்ளோட்டமிட்டார்கள். அதனைத் தொடர்ந்து 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்தியபோது 2010இல் தமிழகம் கொந்தளித்து அதனைத் தடுத்து நிறுத்தியது வரலாறு. அந்தக் கிரந்தத் திணிப்பைச் செய்ய முயன்ற இருவரில் ஒருவர் திரு. இரமணசர்மா ஆவார். தமிழுலகம் தொடர்ந்த கவனம் வைக்காமையால் மீண்டும் ஒரு குறியேற்றப் பிழை ஏற்பட்டிருக்கிறது. மூன்றாம் கட்டமாக நிகழும் இந்தக் குறியேற்றம், தமிழில் பழங்காலத்தில் நாம் எழுதிய பின்ன எண்கள், பணம், பைசா, வராகன் போன்ற நாணய மதிப்புகள், பாரம், குழி, வேலி போன்ற எடை, பரப்பு போன்ற அளவைகள், வேளாண் நிலப் பெயர்கள், கணக்கு, பத்திரம் ஆகியவற்றில் காணப்படும் சின்னங்கள் போன்றவற்றிற்குக் குறியேற்றம் செய்கிறார்கள். இந்தச் சின்னங்களைக் குறியேற்றம் செய்வதால், பழைய ஓலைச்சுவடிகள், கல்வெட்டு போன்ற தொல்லியல் ஆவணங்கள், அரச சாசனங்கள், தாள்களில் இருக்கும் ஆவணங்கள் ஆகியவற்றை எண்மயம் செய்வதற்குப் பயன்படும். இந்த பழஞ்சின்னக் குறியேற்றத்தைச் (ஆங்கிலத்தில் : ஹழ்cட்ஹண்c ள்ஹ்ம்bர்ப் ங்ய்cர்க்ண்ய்ஞ் என்பர்) செய்பவரும் திரு. இரமணசர்மாதான். இதில் என்ன பிழை என்று பார்த்தால், முதலில் திரு. இரமணசர்மா ஒரு தொல்லியல் வல்லுநர் இல்லை. இதில் அவருக்குத் துணையாயிருக்கும் யாருமே தொல்லியல் வல்லுநர் இல்லை. அதனால், தமிழ்ப் பின்னங்களின் அடிப்படையே தெரியாமல், தன்னிச்சையாக குறியீடுகளின் வடிவத்தைச் சேர்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, அரை என்ற பின்ன எண்ணை, சோழர் காலத்தில் "ல' என்ற குறியீட்டால் எழுதினார்கள் (தி.நா. சுப்பிரமணியன், சா.கணேசன்), ஒரு நூற்றாண்டு முன்பு "இ' என்ற குறியீட்டால் எழுதினார்கள். இது போல அரை என்பதற்கு மட்டும் 4 வடிவங்களில் ஆன குறியீடுகள் இதுவரை தென்படுகின்றன. ஆனால் இரமணசர்மா தேர்ந்தெடுத்திருப்பது "ஏ' என்ற இந்த வடிவத்தைத்தான். இவ்வடிவம் கிரந்த ஆவணங்களிலும் தமிழ் ஆவணங்களிலும் காணப்படுவதாக அவர் சான்று காட்டுகிறார்.

ஆனால், இந்த வடிவம்தான் தமிழிலே அதிகம் புழங்கிய வடிவமா என்பதற்கு எந்தச் சான்றும் அவர் காட்டவில்லை. ஏன் பழமையான சோழர் கால வடிவத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் அவர் விளக்கமளிக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்கள், தமிழின் நெடிய வரலாற்றில் இருக்கும்போது, ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுக்க ஏதேனும் வலுவான அறிவியல் ஆய்வு அடிப்படையிலான காரணத்தை வைக்க வேண்டுமல்லவா? அது போன்ற எந்த முறையையும் கையாளவில்லை. 1/16. 1/32, 1/8 போன்ற பிற பின்னங்களுக்கும் பழைய ஆவணங்களில் காலம் மாறுபட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட குறியீட்டு வடிவங்கள் இருக்கின்றன. அவற்றிற்கும் எந்தவித ஆராய்ச்சியும் இன்றி தன்னிச்சையான குறியேற்றம் செய்திருக்கிறார். அரை பின்ன விதத்தில் அரசும் இது போன்ற குறியீட்டைக் கொடுத்திருந்தாலும் அதிலும் சரியான ஆராய்ச்சியைக் காணமுடியவில்லை. அரசாங்கம். ஆணை எண் 29 (2010) வழியே கொடுத்திருக்கும் குறியீட்டு வடிவங்களில் ஆறு குறியீடுகளை இரமணசர்மா மாற்றியமைக்கிறார். அதற்கான விளக்கம் எங்கும் இல்லை. அரசாங்க ஆணையைக்கூட தனியார் ஒருவரால் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் மாற்றிவிட முடியும் என்றால் அது அச்சத்திற்குரியதாகிறது.

அதேபோன்று, தமிழ் நாட்டில் "குழி' என்ற பரப்பளவையை அனைவரும் அறிவோம். தொல்லியல் அறிஞர்கள், ஒரு குழியின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுவதைக் காட்டியதோடு, 121 ச.அடி பரப்புடைய குழி அளவையைத்தான் தமிழ்நாட்டில் 57% இடங்களில் கி.பி. 800இல் இருந்து பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று நிறுவியிருக்கிறார்கள். இதே கருத்தை, இலக்கிய அறிஞர்கள் சிலப்பதிகாரத்தில், மாதவியின் நடனமேடை பற்றி வரும் அளவுக் குறிப்புகளை வைத்து 121 ச. அடிதான் தமிழர்களின் தொன்மையான குழி அளவை என்று சொல்கிறார்கள். ஆனால், 144 ச. அடிதான் குழி அளவை என்று இரமணசர்மா பதிவு செய்கிறார். அது வடநாட்டு அடிப்படை என்று நிலைநாட்டுகிறார் அறிஞர் இராம.கி. இந்த இரண்டைப் போன்று, 55 குறியீடுகளில் பலவற்றிற்கு மிகப் பிழையான அடிப்படைகளில் குறியீட்டு வடிவத்தையும் விளக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் இரமணசர்மா. அவற்றை எழுதப் போனால் பக்கம் பக்கமாக கட்டுரை நீளும்.

பழைய சின்னங்கள் குறித்த இந்த ஆவணம், தொல்லியல்துறை வல்லுநர்களால் முறையாக ஆராயப்பட்டதா என்றால், அவர்களுக்கு இதனை அனுப்பவே இல்லை. சி-தமிழ் என்ற வெளிநாட்டவர் இணையக்குழு ஒன்றும், உத்தமம் என்ற அமைப்பின் மேனாள் பணிக்குழு ஒன்றும் சேர்ந்து இதனை ஆதரித்திருக்கின்றன. இக்குழுக்களில் ஒரு தொல்லியல் அறிஞரோ, வரலாற்று அறிஞரோ கிடையாது. ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் இக்குழுக்கள் ஆதரித்த ஆவணத்தை தமிழ் இணையக் கல்விக் கழகம் தக்க தொல்லியல் வரலாற்று அறிஞர்களுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யாது அப்படியே அதனை பரிந்துரைப்பது கவலைக்குரியதாகும். கடந்த 5 மாதங்களில் இதுபற்றி விரிவான மீள்பார்வை கொண்ட 3 ஆவணங்கள் சென்றும், த.இ.க. அவற்றைப் பொருட்படுத்தவில்லை. மாறாக, பிழையான குறியேற்றம் செய்யமுற்படும் திரு. இரமணசர்மாவையே ஒருங்குறி உயர்மட்டக் குழுவில் சேர்த்து, அவரின் குறியேற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

திரு. இரமணசர்மா, தமிழ்ப் பின்னங்களும் பிற சின்னங்களும், அப்படியே கிரந்த ஒருங்குறியிலும் பயன்படுத்தலாம் என்றும், கிரந்த ஆவணங்களில் பயன்படுத்தப்பட்ட யாவும் தமிழ்ப் பின்ன சின்னங்களே என்றும் வாதிடுகிறார். அப்படியென்றால் இதைத் தமிழ் அறிஞர்களும், வரலாறு, தொல்லியல் சார்ந்த அறிஞர்களும் ஆழ்ந்து சரிபார்க்க வேண்டுமல்லவா? அதற்கு வாய்ப்பே இல்லாமல் அவர்களின் கண்களைக் கட்டிவிட்டு அவசர அவசரமாக ஏன் இந்தக் குறியேற்றம் செய்யப்படுகிறது என்ற பெரும் ஐயம் வருகிறது. ஆகவே, இக்குறியீடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து, கிரந்தக் குறியீடு எது, தமிழ்க்குறியீடு எது என்று தெளிவான மொழிவாரி ஆய்வு செய்ய வேண்டும். அதோடு, அக்குறியீடுகளும் அளவை முறைகள் போன்றவையும் தமிழ்நாட்டில் எப்படி இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன என்றும், கால ஓட்டத்தில் எப்படி மாறிவந்திருக்கின்றன என்றும் அறிவியல் முறைப்படியான ஆய்வும் செய்தால்தான் சரியான குறியீட்டைத் தேர்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாவிட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் இருக்கும் சூழலில், ஒன்றை ஒன்று அழித்து, பெரும்பாலும் மணிப்பிரவாள காலத்துக் குறியீடுகளே நிலைக்கின்ற சூழல் ஏற்படும். 16ஆம் நூற்றாண்டில் இருந்து 19ஆம் நூற்றாண்டு வரை எழுந்த ஆவணங்கள் பெரும்பாலும் சமற்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் எழுந்தன. அவ் ஆவணங்களை மட்டும் எண்மயம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குறியேற்ற முயற்சி அமைந்துவிட்டால், இதற்கு முந்தைய ஆவணங்களில் உள்ள இணையான வடிவங்கள் திரிவுக்குள்ளாகி, கணினிமயமாகும் போது காணாமல் போய்விடும். இது வரலாற்று அழிவுக்கு வித்தாகும். இதைத் தடுத்து செம்மையான குறியேற்றத்தினைச் செய்ய தமிழக அரசும் தமிழ் அறிவுலகமும் முன்வரவேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.