மோடியின் மாயமான் வேட்டை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 12:49

இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் இலங்கைச் சுற்றுப்பயணம் நிறைவேறி டில்லி திரும்பியுள்ளார். இந்தியா-இலங்கைக்கு இடையே விசா, சுங்கவரி, இளைஞர் நலன் மற்றும் இரவீந்திரநாத் தாகூர் நினைவிடம் அமைப்பது ஆகியவை குறித்து நான்கு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சு இந்திய-இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை கீழ்க்கண்ட அம்சங்கள் உறுதி செய்கின்றன.

சர்வதேச செலாவணிச் சந்தையில் இலங்கையின் ரூபாய் சந்தித்துள்ள பெரும் சரிவைச் சரிப்படுத்த ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா அளிக்கும்.
இந்தியச் சந்தையில் இலங்கை தயாரிப்புப் பொருட்கள் எளிதில் நுழைவதற்கும் விற்பனை செய்யப்படவும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்.
இந்தியாவிற்கு இலங்கைதான் நெருக்கமான பொருளாதாரக் கூட்டாளியாகும்.
இருநாடுகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் இந்துமாக்கடல் இன்றியமையாதது. இருநாடுகளும் இணைந்து பணியாற்றி ஒருவரின் நலனை மற்றவர் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
இலங்கையுடன் பாதுகாப்புக் கூட்டுறவையும், கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இந்தியா பெரிதும் விரும்பி மதிக்கிறது.
இலங்கையின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவுக்கு மிக முக்கியமானது.
இலங்கையின் முன்னேற்றத்தில் அதிக விருப்பம் கொண்டது இந்தியா. இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு எதுவென்றால் அது இலங்கைதான்.
இலங்கை அரசு தீவிரவாதத்தைத் தோற்கடித்து நீண்ட கால மோதலை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது. சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி அவர்களுடைய இதயங்களை வெல்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது'.

போரினால் புண்பட்டு அழியாத இரணமாக மாறியுள்ள தமிழர்களின் உள்ளங்களுக்கு மருந்தாக 13வது சட்டத்திருத்தத்தை மோடி பரிந்துரை செய்துள்ளார். 26 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய-இலங்கை உடன் பாட்டிற்கிணங்க இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட 13வது சட்டத்திருத்தம் இன்று வரையில் சிறிதளவுகூட நிறைவேற்றப்படவில்லை என்பதும். மாறாக பின்னோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதையும் பிரதமர் மோடி அறிந்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

]அப்போதைய இராஜீவ் அரசால் வட-கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்த்தப்பட்ட வரதராஜ பெருமாள் சிறிய அளவு அதிகாரங்களைக்கூட பெறமுடியாமல் வெறுப்பின் உச்சக்கட்டத்தில் தமிழீழத் தனிப்பிரகடனம் செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பிச்சென்றார் என்பது வரலாறு.

இலங்கை அரசியல் சட்டத்திற்கான 13ஆம் சட்டத் திருத்தமும் மாகாண சபையின் சட்டமும் ஒரே நாளில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப்போக வைப்பதற்காகவே மாகாண சபைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஜெயவர்த்தனா தங்களுக்கென மாகாணங்கள் கேட்காத சிங்களர்களுக்கு எட்டு மாகாணங்களையும் தமிழர்களுக்கு ஒரு மாகாணமும் கொடுத்ததோடு நிற்காமல் பெரும்பாலான மாகாண சபைகள் ஒப்புக்கொண்டவற்றை அனைத்து மாகாண சபையினரும் ஏற்கவேண்டும் என அச்சட்டத்தில் சேர்த்தார். இதன் மூலம் தமிழ் மாகாணத்தின் உரிமைகள் சிங்கள மாகாணங்களால் பறிக்கப்படும்.

வட-கிழக்கு மாகாணங்கள் சபை தற்காலிகமாகவே இணைந்து செயற்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இணைப்புக் குறித்து நாடாளுமன்றம் ஏதேனும் ஒரு சட்டத்தின் மூலம் தீர்மானிக்கலாம் என்று மட்டுமே கூறப்பட்டது. அதன்படி செய்யப்படவில்லை.

இதன் விளைவாக இராசபக்சே ஆட்சியில் அவருடைய மறைமுக தூண்டுதலின் பேரில் சிங்கள இனவெறிக் கட்சியொன்று வடக்கு-கிழக்கு இணைப்புச் செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இணைப்பு செல்லாது என்ற தீர்ப்பையும் பெற்றது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், வரிவிதிப்பு, நிலம், சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படை விசயங்களில்கூட போதிய அளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாண சபைகளுக்குச் சுதந்திரமாகச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருக்கவில்லை. சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர். ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.

மாகாண சபை நிறைவேற்றிய சட்டங்களை நாடாளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் மாகாண சபையின் அனுமதி இல்லாமலேயே திருத்தி அமைக்கலாம்.
மாகாண நிருவாகம் ஆளுநர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைச்சரவைகளின் ஆலோசனைகளை ஆளுநர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அதிகாரிகளும் ஆளுநரின் கட்டளைப்படியே செயல்படுகின்றனர். இது குறித்து வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கிழக்கு மாகாண கல்வியமைச்சராக ஒரு சிங்களவர் இருந்தபோதிலும் அவர் "கல்வியமைச்சர் பதவியை வகிப்பதைவிட வயலில் விவசாயக் கூலியாக வேலை செய்யப்போகலாம்'' என மனம் நொந்து கூறினார்.

இலங்கையில் நிலம் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்திய-இலங்கை உடன்பாட்டின் கீழ் வட-கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழர் தாயகப்பகுதியில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் நிலங்களை இராணுவம் பறிக்கிறது. எனவே தமிழர்கள் தங்கள் பகுதி நிலத்தின் மீது உள்ள அதிகாரம் தங்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என வற்புறுத்துகிறார்கள். ஆனால், இலங்கை ஒரே நாடு ஆகையால் யார் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என சிங்கள அரசு அந்த அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளது.

காவல்துறை, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றின் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது. ஆளுநரின் மூலமாக அவர் அவற்றை நிறைவேற்றுவார். மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என சிங்கள அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதைப்போலவே கல்வித்துறையும், குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே கொண்டுவரப்பட்டுள்ளது.

நீதித்துறை அதிகாரப் பகிர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண நீதித்துறை கொண்டுவரப்பட்டுள்ளது. மாகாண அமைச்சரவைக்கும் நீதி நிர்வாகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களத்துடன் தமிழுக்கும் சம மதிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.
மாகாண ஆட்சியை குடியரசுத் தலைவர் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம்.

பெரும் விளம்பரத்துடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாடு மேற்கண்டவாறு சிதைக்கப்பட்டும், சிறுமைப்பட்டும் போனபோது அதை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வரவில்லை. இந்த உடன்பாட்டுக்கு உத்தரவாதம் அளித்த இந்திய அரசு இதைத் தட்டிக்கேட்க முற்படவில்லை.

13வது சட்டத் திருத்தம் ஒரு மாயமான் வேட்டை போலாகிவிட்டது. இத்திருத்தச் சட்டத்திற்குள் தமிழர்களுக்கான தீர்வைத் தேடுவது சுழியத்திற்குள் புள்ளியைத் தேடுவதுபோலாகும். இது நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல முற்றுப்புள்ளியுமல்ல. ஒன்றுமே இல்லாத ஒன்றிற்குள் எதையோ தேடி அலைவதாகும்.

"இலங்கையில் நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைதான் எனவும் இதையொட்டி சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் இலங்கையின் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விக்னேசுவரன் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் இந்தக் கருத்தை மோடி மதித்ததாகத் தெரியவில்லை.

மோடியின் பயணத்திற்கு முன்பாக மார்ச் 4ஆம் தேதியன்று நடைபெற்ற மத்திய அரசு - வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இலங்கைக் குடியரசுத் தலைவர் சிறீசேனா கலந்துகொண்டார். அவர் முன்னிலையில் பேசிய மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் "போரின் போது காணாமல் போன பலர் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தமிழர்களுக்கு நல்லெண்ண சமிக்ஞையைக் காட்ட வேண்டும்'' என வேண்டிக்கொண்டார். இந்தப் பிரச்சினை குறித்தாவது இலங்கை அரசிடம் மோடி ஏதாவது பேசினாரா?

மோடி-இலங்கை வருவதற்குச் சில நாட்கள் முன்பாக மார்ச் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென், பல பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்வருமாறு பத்திரிகையாளரிடம் கூறினார்:

"2006-2009வரை நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டது குறித்து இலங்கை அரசு நடத்தும் விசாரணை சிறுபான்மை தமிழர்கள் மனநிறைவு கொள்ளும் வகையில் நடத்தப்படவேண்டும். நிலவுரிமை, காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள், காணாமல் போனவர்கள் பிரச்னை, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அளவுக்கு மீறி இராணுவம் குவிக்கப்பட்டுள்ள பிரச்னை ஆகியவை குறித்தெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும்'' என்று கூறினார். ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் பகிரங்கமாகக் கூறிய இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசிடம் மோடி விசாரித்தாரா?

பிரிட்டிஷ் பிரதமர் இலங்கைக்கு வந்தபோது யாழ்ப்பாணத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். ஆயிரக்கணக்கான தாய்மார்கள்கூடி அவரிடம் காணாமல்போன தங்களின் கணவர்கள், சகோதரர்கள், புதல்வர்கள் ஆகியோர் குறித்து முறையிட்டனர். இலங்கை அதிபர், இராசபக்சேயை அவர் சந்தித்தபோது இக்குற்றச்சாட்டுகள் குறித்துக் கண்டனம் தெரிவித்தார்.

ஆனால், மோடி அவர்கள் அரசு ஏற்பாடு செய்த வீடு வழங்குகிற விழா, தலைமன்னார்-மடுசாலை இரயில் தொடக்கவிழா, அனுராதபுரம், மகாபோதி மரவழிபாடு, நகுலேஸ்வரம் கோயில் வழிபாடு, இந்தியக்கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் கலந்துகொண்டாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க அவருக்கு நேரமில்லை.

தனது தோல்விக்கு இந்தியாவின் "ரா' உளவுத்துறை முக்கியக் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியவரும் தேர்தல் தோல்விக்குப்பின் தன்னைச் சந்திக்க வந்த பா.ஜ.க. உயர்மட்டக்குழுவைச் சந்திக்க மறுத்தவருமான இராசபக்சேயுடன் பேச மோடி தவறவில்லை. ஏனென்றால் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்குரிய வாய்ப்பு இராசபக்சேவுக்கு உள்ளது என்பதால் அவரைச் சந்தித்துச் சமாதானம் செய்ய முயன்ற மோடி இராசபக்சேயின் கொலைவெறிக்கு ஆளான தமிழ் மக்களைச் சந்தித்துப்பேச நேரம் ஒதுக்கவில்லை.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள மலையகத் தமிழர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்துத் தங்கள் குறைகளை தெரிவிக்க விரும்பியபோது டில்லிக்கு வந்து பேசும்படி கூறிவிட்டார்.

மோடி இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கடுமையாகத் தாக்கியது. இந்தியாவின் பிரதமர் தங்களின் நட்பு நாடி தங்கள் மண்ணில் இருக்கும்போதே தமிழக மீனவர்களைத் தாக்கும் துணிவும், திமிரும் இலங்கைக் கடற்படைக்கு இருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பு?

இலங்கையில் இருந்து மோடி திரும்பிய மறுநாளே மார்ச் 16ஆம் தேதியன்று பேசிய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா "இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுடும் உரிமை தங்கள் நாட்டின் கடற்படைக்கு உண்டு' என பகிரங்கமாக கூறியிருக்கிறார். அந்நாட்டிற்குச் சென்று உறவாடி விருந்துண்டு மகிழ்ந்து திரும்பிய மோடி அதிரும் வகையில் அந்நாட்டுப் பிரதமர் பேசுகிறார். இத்தகைய துணிவு அவருக்கு எப்படி வந்தது? யார் இதற்குப் பொறுப்பு?

ஆசியப் பகுதியில் வலிமை வாய்ந்த சீனாவுடன் நெருக்கமான உறவு கொள்வதுதான் இந்தியாவைத் தன்னிடம் பணிய வைக்கும் என்ற உத்தியை சிங்களத் தலைமை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையை விடுவித்து தன்னுடன் நட்புறவுக் கொள்ளவைப்பதற்காக ஈழத் தமிழர்களையும், இந்திய வம்சாவழித் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் பலிகொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் சுவடுகளிலேயே மோடி தடம் பதித்திருக்கிறார்.

- நன்றி : தினமணி 23-3-2015

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.