இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் என்ற தலைப்பில் அய். நா. மனித உரிமைகள் குழுவின் 28-ஆவது கூட்டத் தொடரில் 25-03-2015 அன்று நடைபெற்ற பக்க நிகழ்வில் பூங்குழலி நெடுமாறன் உரை
நண்பர்களே,
நானே ஒரு பெண்ணாக, தமிழ்ச் சமூகத்திருந்து வந்தவளாக, தமிழ்ப் பண்பாட்டை அறிந்தவளாக, என் சக தமிழ்ப் பெண்களின் மாண்பிற்கு இழைக்கப்பட்ட அவமானங்களைப் பற்றி பேச எனக்கு நா கூசுகிறது. அதிலும் பாயல் வன் கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச எனக்கு மனம் வரவில்லை. அவமானமாக உணர்கிறேன். மண்ணுக்குள் அமிழ்வது போல் உணர்கிறேன். ஆனால் பாதிக்கப்பட்ட அப்பெண்களின் சார்பாக நான் உங்கள் முன் நிற்கிறேன் என்றால், உங்களிடம் இச்செய்திகளைப் பகிர்வதன் மூலம் எங்கள் மாண்பிற்குப் பாதுகாப்புக் கிடைக்கக் கூடும் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டுமே.
நண்பர்களே,
நாம் இங்கு இலங்கையைப் பற்றிப் பேச வந்துள்ளோம். இலங்கை, இந்தியப் பெருங்கடல் இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள ஒரு தீவு நாடாகும். உங்களில் எத்தனை பேர் இலங்கைக்கு சென்றிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. அப்படி சென்றவர்கள் எந்த இலங்கைக்குச் சென்றீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் இலங்கை அரசு சொல்கிறது - இலங்கை என்பது அழகான கடற்கரைகளும் வனங்களும் நிறைந்தது, சுற்றுலாவிற்கு சிறந்த இடம் என்று.
உலக சமூகமும், அய். நா. வும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இலங்கை என்றால் போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்கிறார்கள். இலங்கை அரசு சொல்கிறது அது 30 ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது என்றும் அமைதியை மீட்டெடுத்து விட்டது என்றும் இலங்கை தற்போது சுற்றுலா வருபவர்களுக்கான சொர்க்கம் என்றும் சொல்கிறது. அது உண்மையா?
அய். நா. சொல்கிறது, ஆம் .. போர் முடிவுக்கு வந்து விட்டது.. ஆனால் அப்போரில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்றும் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இது உண்மையா?
ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளராக, இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் வாய்ப்பினை பெற்றேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன், மேலே கூறப்பட்ட இரண்டு கூற்றுகளையும் கடந்த உண்மை ஒன்று உள்ளது.
இலங்கை போர் முடிந்தது என்று அறிவித்த 2009-இலேயே உலகம் இன்னமும் நிற்கிறது. உண்மையில் போர் முடிந்து விட்டதா? அமைதி மீட்கப்பட்டு விட்டதா? என்பதே கேள்வி.
2009-க்கு பிறகு இலங்கையில் என்ன நடக்கிறது? மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? அதாவது, தமிழர்கள், குறிப்பாக தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பாக உள்ளார்களா?
இது ஒரு நுட்பமான கேள்வி. எதிருந்து பாதுகாப்பு? வன்கொடுமைகள், குறிப்பாக பாயல் வன்கொடுமைகளிருந்து பாதுகாப்பு. யாரிடமிருந்து? பாதுகாப்புப் படையினரிடமிருந்து. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியா பிராந்திய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சொல்கிறார் - தடுப்புக் காவல் இருந்த தமிழ் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் எண்ண முடியாத அளவிலான வன்புணர்வுகளை நடத்தியுள்ளனர். அவை வெறுமனே போர்க்கால கொடுமைகள் அல்ல. ஆனால் இன்று வரை தொடர்கின்றவை. இதனால் ஒவ்வொரு தமிழ் ஆணும் பெண்ணும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நிற்கின்றனர்.’’
அப்படியானால் - யார் அவர்களை பாதுகாப்புப் படையினரிடமிருந்து காப்பது? யாருமில்லை.
தமிழ்ப் பெண்கள் பாதுகாப்புப் படையினரால் போர்க் காலத்திலும் அதன் பின்னரும் மிகக் கடுமையான வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று பல அறிக்கைகளும் விசாரணைகளும் வெளிப்படுத்தியுள்ளன. புகழ் பெற்ற ஊடகவியலாளரான பிரான்சிஸ் ஹாரிசன் "இறந்தவர்களை இன்னமும் எண்ணிக் கொண்டுள்ளோம்' என்ற தனது நூல் இவ்வாறு குறிப்பிடுகிறார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போது, பெண்கள், குறிப்பாக இளம் பெண்களும் சிறுமிகளும் தனித்துப் பிரிக்கப்பட்டு, பாதுகாப்புத் தேடல் என்ற பெயரில் பாயல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சானல் 4 வெளியிட்ட ஆவணப்படமான "இலங்கையின் கொலைக் களம்' காட்டிய காட்சிகளில், இறந்த தமிழ்ப் பெண்களின் உடைகள் கூட களையப்பட்டு, பின்னணியில் சிங்கள மொழியில் மோசமான பாயல் ரீதியான உரையாடல்களுடன், அப்பெண்களின் இறந்த உடல்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது வெளியானது. இலங்கை அரசின் ஆயுதப் படையினரின் கொடூரம் அந்த அளவிலானது.
பாயல் வன்கொடுமைகளும் வல்லுறவுகளும் பாதிக்கப்பட்டவர்களின் மாண்பிற்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அவமானமாகவே பார்க்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் அத்தனை எளிதில் அதனை வெளிப்படுத்து வதில்லை. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் இலங்கை அரசின் தொடர்ந்த தொல்லைகளுக்கு ஆளாக நேரும் என்ற அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் வாய்கள் இழுத்து மூடப்பட்டிருந்தன. இந்த கட்டாய அமைதியின் பின்னணியில்தான் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பிப்ரவரி 26, 2013 அன்று பாயல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட 75 தமிழ்ப் பெண்களின் வாக்குமூலங்களை வெளியிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முன் வந்தால் மேலும் கொடூரமான நிகழ்வுகள் வெளிவரக்கூடும். தற்போது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், பெண்களின் நிலை உடலளவில், பொருளாதார நிலையில், சமூக அளவில் மேலும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. அவர்கள் தொடர்ந்த உளவியல் அழுத்தத்திலேயே வாழ்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேவைக்கு மிக அதிகமான ஆயுதப் படையினரின் இருப்பே ஆகும்.
போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட உடனேயே வடக்கு மாகாணத்தில் இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வார இதழான எகனாமிக் அண்ட் பொட்டிக்கல் வீக் இதழ் இலங்கையில் போர் முடிந்த பிறகான நிலையில் இராணுவத்தின் நிலைகள் குறித்து ஓர் ஆழமான மற்றும் விரிவான ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. இராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஊடக அறிக்கைகள் உள்ளிட்ட பல இடங்களிருந்தும் சேகரிக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கை, வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தின் 75 விழுக்காடு படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதன் பொருள் ஏறத்தாழ 1,80,000 படையினர் வடக்கு மாகாணம் முழுவதும் பரவியுள்ளனர். அதாவது 5.04 பொது மக்களுக்கு ஒரு பாதுகாப்பு படையினர் என்ற அளவில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இலங்கை இராணுவம் என்பது முழுவதுமாக சிங்கள இராணுவமே. இத்தகைய அடர்த்தியான இராணுவ இருப்பிற்கு மத்தியில் வாழ்வது என்பது தமிழ்ப் பெண்களின் நிலையைத் துன்பகரமாக ஆக்கியுள்ளது.
இந்தப் பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்கள் முகம் கொடுக்கும் மூன்று முக்கிய சிக்கல்கள் குறித்து உங்கள் முன் தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக - விதவைகள்
கிழக்கு மாகாண சபையின் பெண்கள் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 86,000 விதவைகள் உள்ளனர். அனைவரும் தமிழர்கள். பாதுகாப்புப் படையினரின் பாயல் வன்கொடுமைகளுக்கும் வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பயாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாயல் வன்செயல்களிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கும் பெரும்பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் அவர்களது இள வயது பெண்கள் இராணுவத்தினருடனான கட்டாயத் திருமணத்திற்கும் முகம் கொடுக்கும் நிலை உள்ளது. தனித்து வாழும் இப்பெண்களுக்கும் அவர்களின் பெண் குழந்தைகளுக்கும் அரசு பண்ணைகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இலங்கை அரசின் விவசாயத் துறையின் நிர்வாகத்தில் இருந்த இப்பண்ணைகள் தற்போது இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பண்ணைகளில் இப்பெண்கள் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். ஆனால் மிக குறைந்த ஊதியமே அவர்களுக்குத் தரப்படுகிறது. அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது. மேலும் அவர்களின் வறுமையையும் தனிமையையும் பயன்படுத்தி இராணுவ மேலதிகாரிகள் அவர்களை பாயல் ரிதீயாக துன்புறுத்துகின்றனர்.
இரண்டாவதாக - பாதி விதவைகள்
தங்கள் கணவர்களின் நிலை என்னவானது என்பது அறியாத பெண்கள் இவர்கள். ஏனெனில் போர் முடிந்த உடன் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 40 வயதிற்கு குறைவான பெரும்பகுதியான ஆண்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயினர்.
வடக்கு மாகாண சபையின் பிரதிநிதியான ஆனந்தி சசிதரன், தங்கள் சொந்தங்களை தொலைத்தவர்களின் அடையாளமாக நிற்கிறார். விடுதலைப் புகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த அவரது கணவர், அவரது கண் முன் இலங்கை இராணுவத்தினால் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இன்று வரை அவரது நிலை என்ன என்பது குறித்துத் தெரியவில்லை. தனது 3 மகள்களுடன் அவர் இன்னமும் தனது கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவரைப் போலவே 40 வயதிற்கு குறைவான பல ஆண்கள், போராளி என்ற சந்தேகத்தில் இலங்கை இராணுவத்தினால் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏறத்தாழ 6 ஆண்டுகள் கடந்து விட்டன. குழந்தைகள் வளர்கின்றனர். கற்பனை செய்து பாருங்கள்.. இந்த குழந்தைகளிடம் யாரோ ஒருவர்.. பள்ளியிலோ.. அல்லது சாலையிலோ.. அல்லது மிக சாதாரணமாக பேருந்தில் பக்கத்தில் இருக்கையில் அமர்பவரோ.. அவர்களது தந்தையைப் பற்றி இயல்பாக கேட்டால்.. இக்குழந்தைகள் என்ன பதில் சொல்வார்கள்? தங்கள் தந்தை இறந்து விட்டார் என்று அவர்களால் சொல்ல முடியாது. இல்லை.. அவர் உயிருடன் இருக்கிறார்.. இன்ன இடத்தில் இருக்கிறார் என்றாவது அவர்களால் சொல்ல முடியுமா ? அதுவும் முடியாது. மிக இயல்பான, சாதாரணமான இந்த ஒரு கேள்வியைக் கூட எதிர் கொள்ள முடியாத நிலையில் அக்குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலை எண்ணிப் பாருங்கள். இது அக்குழந்தைகளின் வளர்ச்சியில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் ? மிகவும் புத்திசாயான குழந்தைகள் கூட படிப்பில் கவனம் செலுத்த முடியாதவர்களாக சோர்வுற்றவர்களாக - மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆண் குழந்தைகள் கோபமும் வெறியும் கொண்டவர்களாக முரட்டுத்தனமாக மாறிப் போகின்றனர். பெண்குழந்தைகள் பாதுகாப்பற்ற மனநிலை கொண்டவர்களாக, அச்சம் கொண்டவர்களாக ஒடுங்கிப் போகின்றனர். அந்த அளவிற்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு இராணுவத்தினால் கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்து ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆனந்தி சசிதரன் மக்களைத் திரட்டி அரசை வற்புறுத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட தங்கள் கணவரை, தந்தையை, சகோதரர்களை, மகன்களை இன்னமும் தேடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் அடையாளமாகவே ஆனந்தி சசிதரன் எழுந்து நிற்கிறார். அதனால்தான் வடக்கு மாகாண மக்கள் ஆனந்தி தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி கண்டுபிடிக்க உதவுவார் என்ற பெரும் நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்து அவரை மாகாண சபையின் உறுப்பினராக ஆக்கி உள்ளனர்.
இவ்வாறு மக்களிடையே நன்கு அறிமுகமானவராக, மக்கள் பிரதிநிதியாக தான் இருந்த போதும், சாலையில் நடந்து செல்லும் போது தன்னை நோக்கியும் ஆபாசமான சொற்களை இராணுவத்தினர் பேசுவதாக ஆனந்தி சசிதரன் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அப்படியெனில் மற்றப் பெண்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.
இராணுவத்தினரின் பாயல் வன்கொடுமைகள் என்பது வயது வந்த பெண்களுடன் நிற்கவில்லை. அண்மையில் கடந்த சூன் 2014-இல் யாழ்ப்பாணம் காரை நகரைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுமி தொடர்ந்து 11 நாட்கள் இலங்கை கடற்படையினரால் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஆனால் இது குறித்து மகிந்த இராஜபக்சே தலைமையிலான அப்போதைய அரசு, படையினரின் இத்தகைய செயல்களை விசாரித்துத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று சொன்னது. இன்று வரை, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், நீதி வழங்கப்படவில்லை.
நீதித் துறையின் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்த நிலையில் இப்படியான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிப்பதையே மக்கள் நிறுத்திவிட்டனர். இந்த பாதி-விதவைகள் என அறியப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் ஒரு வன்முறை செயலாக வெள்ளை வான் கடத்தல்கள் இருக்கின்றன. அடையாளம் காண இயலாத சிலர் வெள்ளை வானில் வந்து ஆண்களை கடத்தி செல்வர். அதன் பின்னர் அவர்களின் நிலை என்னவென்பதை அறிய இயலாது. இந்த வெள்ளை வான் கடத்தல்கள் அரசை எதிர்த்து குரல் எழுப்புபவர்களை குறி வைத்தே நிகழ்த்தப்படுகின்றன. கடந்த 2005 தொடங்கி நாட்டின் தலை நகரான கொழும்பு உட்பட நாடெங்கும் இத்தகு கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் இதற்கு பயாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சில நாட்கள் கழித்து இறந்த நிலையில் கண்டறியப்பட்டனர். பிறரைப் பற்றிய எந்த செய்தியும் இன்று வரை கிடைக்கவில்லை.
அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிராக எழும்பும் குரல்களை ஒடுக்க இந்த வெள்ளை வான் கடத்தல்களை இராணுவம் மற்றும் ஒட்டுக் குழுவினர் பயன்படுத்துவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மூன்றாவது நிலை - கேள்வியற்ற கைதுகளும் தடுப்புக் காவல்களும்
நீதிக்காக எழும்பும் குரல்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் மற்றொரு ஆயுதம் பொய்யாக புனையப்பட்ட வழக்குகளும் அதை தொடர்ந்த கைதுகளும். போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகான கடந்த 6 ஆண்டுகளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நெடுகிலும், ஆண்களும் பெண்களுமாக பலரும் காரணமின்றி கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பங்களின் நிலையும் மிக மோசமானது. கணவனை இழந்தவர்கள் மற்றும் காணாமல் போகக் கொடுத்தவர்கள் அனுபவிக்கும் துயரங்களை இவர்களும் அனுபவிக்கின்றனர். கூடுதலாக வழக்குக்கென இவர்கள் பெரும் பணத்தை செலவிட வேண்டி உள்ளது. ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் தவிக்கும் அவர்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவில், தெற்கு இலங்கையின் ஒரு மூலையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினரை காணச் செல்வதற்கே பெரும் பணத்தை செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர்.
அண்மையில் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயகுமாரி ஆகியோர் உண்மையின் குரலை ஒடுக்குவதில் இலங்கை அரசு காட்டும் தீவிரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாவர்.
மார்ச் 13, 2014 அன்று பாலேந்திரன் ஜெயக்குமாரியும் அவரது 13 வயது பள்ளிச் சிறுமி விபூசிகாவும் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். காவலர் ஒருவரை சுட்டுக் காயப்படுத்திவிட்டு தப்பியோடிய ஒரு விடுதலைப் புக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சாட்டப்பட்டது. ஜெயக்குமாரியையும் அவரது சிறிய மகளையும் காவல்துறை இரவு முழுவதும் தடுத்து வைத்தது. மார்ச் 14 அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை காவல் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தெற்கு இலங்கையில் உள்ள பூசா சிறைக்கு அனுப்பப்பட்டார். இச்சிறை அவரது சொந்த ஊரிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்லாமல் சித்ரவதைக்கு பெயர் பெற்றதாகவும் இருந்தது.
சித்ரவதை, கேள்வியற்ற தடுப்புக் காவல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு மறுப்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக இலங்கையின் கொடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளதாக உலகெங்கும் உள்ள சட்ட அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். ஆனாலும் இலங்கை அரசு இச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது.
ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் மீது இலங்கை அரசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது என்பது காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் அவர்கள் ஆற்றிய பங்கிருந்து எழுகிறது. ஜெயக்குமாரியின் 15 வயது மகன் மே 2009-இல் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் அரசு அவர் தங்கள் பொறுப்பில் இருப்பதை மறுத்தது. ஆனால் அரசு நடத்திய முன்னாள் போராளிகளுக்கான மறு வாழ்வு மய்யம் ஒன்றின் புகைப்படத்தை அரசு வெளியிட்ட போது, அதில் தனது மகன் இருப்பதை கண்ட ஜெயக்குமாரியின் மகனுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதிகாரிகள் மேலும் விவரங்களை அளிக்க மறுத்த நிலையில், ஜெயக்குமாரியும் விபூசிகாவும் காணாமல் போனவர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஜெயக்குமாரியை பூசாவில் தடுத்து வைத்ததின் பின்னணியில் உள்ள சட்ட, நீதி மற்றும் இராணுவ நடவடிக்கைகள் இலங்கை வடக்குப் பகுதியில் இலங்கை அரசின் கொள்கைக்கு சீரிய எடுத்துக்காட்டாகவே உள்ளன. வலுக்கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுதல் மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை அச்சுறுத்த அது பயன்படுத்தப்படுகிறது.
நாம் இப்போது தொடக்கத்தில் கேட்ட உண்மை குறித்த கேள்விகளுக்கு செல்வோம். போர் முடிந்ததாகவும் அமைதி திரும்பிவிட்டதாகவும் இலங்கை அரசு கூறுவது உண்மையா? அல்லது போர் முடிந்தது ஆனால் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற உலக சமூகத்தின் கூற்று உண்மையா? நான் தொடக்கத்தில் கூறியது போல, இவை தவிரவும் பிறிதொரு உண்மை உள்ளது. அந்த உண்மை ஆனந்தி, ஜெயக்குமாரி மற்றும் விபூசிகாவின் வடிவில் உள்ளது.
அந்த உண்மை இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள அதீத இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள 86,000 தமிழ் விதவைகளின் வடிவில் உள்ளது.
அவர்கள் சந்திக்கும் துன்பம் என்பது வெறுமனே போருக்குப் பின்னான காலத்தின் எச்சங்கள் அல்ல.
பிப்ரவரி 11, 2015 அன்று இலங்கையின் வடக்கு மாகாண சபை, அதிகாரப்பூர்வமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. கடந்த 1956 தொடங்கி, தொடர்ந்த இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியதாக அத்தீர்மானத்தில் அது குற்றம் சாற்றியுள்ளது. இறுதியாக, இங்கு அக்கறையுடன் கூடியுள்ள உங்களிடம் நான் சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.
முதலாவதாக -
போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்களுடன் இனப்படுகொலையையும் சரியான கோணத்தில் விசாரிக்கும் பொறுப்பு உலக சமூகத்திற்கு உள்ளது. தான் நடத்திய போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க செய்யும் கடமையுடன், இந்தத் தொடர்ச்சியான குற்றங்களுக்கான நீதி என்பது ஈழத் தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினைத் தருவதாக இருக்க வேண்டியதை உலக சமூகம் உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக -
தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். இதற்கு உலக சமூகம் இலங்கை அரசின் மீது அழுத்தம் தர வேண்டும்.
மூன்றாவதாக -
கடந்த பிப்ரவரி 1, 2010-இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேர் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இலங்கை அரசும் 11,000 பேர் முன்னாள் போராளிகள் அல்லது விடுதலைப் புகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என ஒப்புக் கொண்டுள்ளது. இந்த 30 பக்க அறிக்கைக்கு மிகப் பொருத்தமாக "விடுதலைப் புகள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நிச்சயமற்ற நிலை'“ என்று தலைப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களை கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசிற்கு அழுத்தம் தரப்பட வேண்டும். மேலும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் போர்க் கைதிகளாகக் கருதப்பட்டு போர்க் கைதிகளுக்கான உலகச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இலங்கை அரசு மீது உலக சமூகம் அழுத்தம் தர வேண்டும். இறுதியாக, இலங்கையின் இனச் சிக்கலுக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வுக்கான வழிகளை கண்டறிய இலங்கை அரசை உலக சமூகம் வற்புறுத்த வேண்டும் என வேண்டுகிறேன். அது மட்டுமே இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பையும் மாண்பையும் உறுதி செய்யும்.
- நன்றி. |