புலிட்சர் விருதுபெற்ற முதல் தமிழன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 மே 2015 14:40

அமெரிக்காவில் பத்திரிகைத் துறை, இலக்கியம், இணையப் பத்திரிகை, இசை அமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்க்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் "புலிட்சர்' விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய சிறப்பு விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்பவருமான நெ. பழநிக்குமணன் மிக உயரிய "புலிட்சர்' விருதை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் புகழ்பெற்றப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற இதழும் அதன் மென்பொருள் குழுவில் பணியாற்றிய பழநிக்குமணன், ஜான் கேரிரவ், கிறிஸ்டபர் வீவர், கிறிஸ்டபர் ஸ்டிவார்ட், டாம் மிக்னிட்டி, ராப் பாரி, அன்னா மாத்யூஸ், ஜேனட் அடாமி ஆகியோரும் இப்பரிசை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அண்மையில் அமெரிக்க மருத்துவத் துறையில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தும் கட்டுரையை வெளியிட்டது. இக்கட்டுரைக்கான வரைபடம் தகவல் தொகுப்புகளை உருவாக்கியவர்கள் குழுவில் பழநிக்குமணன் முக்கிய இடம் பிடித்திருந்தார்.

பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த ஊழல் முறைகேடுகளை பத்திரிகை துறையில் வெளிப்படுத்த& தகவல் தொழில்நுட்பத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்த பழநிக் குமணன் மிகவும் உதவினார். மக்களுக்கான மருத்துவ நலத் திட்டம் குறித்து அனைவரும் எளிதில் பயன்படுத்தத் தக்க தகவல் களஞ்சியம் ஒன்றினை பழநிக்குமணன் உருவாக்கினார்.

அமெரிக்காவில் 8,80,000 பேருக்கு மருத்துவச் சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவ ஆய்வுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் அளித்தது. பல்வேறு மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இப்பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்த பழநிக்குமணன் கண்டுபிடித்த மென்பொருள் மிகவும் உதவியது.

இம்மென்பொருளின் உதவிகொண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மருத்துவத் துறையில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தும் "மருத்துவ நலன் திட்டத்தின் முகமூடி கிழிந்தது' என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டது. அமெரிக்கா முழுவதும் இக்கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 கோடியே 30 இலட்சம் மூத்த குடிமக்களுக்கும் 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடுமையான நோயாளிகளுக்கும் உதவுவதற்காக இத்திட்டத்தில் நடைபெற்ற தவறுகளை இக்கட்டுரை வெளிக்கொண்டு வந்தது.

இந்த மாபெரும் திட்டம் எவ்வாறு ஊழல் நிறைந்ததாகவும், மக்கள் பணத்தை விரையம் செய்வதாகவும் அமைந்திருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்தியதன் விளைவாக அமெரிக்க காங்கிரசில் பல கேள்விகள் எழுந்தன. கிரிமினல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதன் விளைவாக மருத்துவ நலத்திட்டம் குறித்த மக்களின் கருத்தில் மாபெரும் மாற்றம் உருவாயிற்று. எங்கள் இதழில் வெளியான இக்கட்டுரை மிக முக்கியமானதாகும் & என வால் ஸ்ட்ரீட் இதழின் ஆசிரியர் குழுவின் தலைவரான ஜெரால்டு பேக்கர் பெருமிதத்துடன் அறிவித்தார்.

7 ஆண்டு காலத்திற்கு மேல் இந்த இதழ் நடத்திய போராட்டத்தின் விளைவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் பொதுமக்களின் முன் அம்பலப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக அமெரிக்க அரசு உடனடியாக குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்த அரிய சாதனைக்காகத்தான் "புலிட்சர்' விருது வால் ஸ்ரீட் ஜர்னல் குழுவினருக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.