வியாழக்கிழமை, 14 மே 2015 17:50 |
முதலில், ஒரு தமிழருக்கு "புலிட்சர்' விருது வழங்கப்பட்டதென்பதே மிகவும் பெருமை தருவதாக இருக்கையில், செய்தியை முழுமையாகப் படித்தபோது, அப்பெருமை பன்மடங்கு பெருகிற்று, கரணியம், அத் தமிழர், தங்களின் திருமகனார் என்பதேயாகும். புலனாய்வு இதழியல் பிரிவில் வழங்கப்பட்டுள்ள, மிகவுயர்ந்த புலிட்சர் விருதினைப் பங்கிட்டுக் கொண்டுள்ளவர் தங்கள் மைந்தர் பழநிக்குமணன் அவர்கள் என்கின்ற செய்தி, இயலாத நிலையிலும் என் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிர்த்திட வைத்தது.
வரவர புலன்கள் ஒடுங்கிவருகின்றன. உழைப்பின் ஊதியம் இது. நினைவாற்றலும் மங்கிவருகின்றது. எப்போதாவது இதுபோல் அத்திப்பூத்தது போன்று ஓர் இனிய செய்தி கண்களில் படும்போது, நெஞ்சம் சற்றே நிறைவுகொள்கிறது. அவ்வகையில் இச்செய்தி கண்டதும், தங்கள் வழி, அறிவார்ந்த தங்கள் திருமகனாருக்கு என் உளங்கனிந்த பாராட்டினைத் தெரிவித்துக்கொள்ளவே இம் மடலை எழுதுகின்றேன். அவருக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.
இன்னும் உயர்ந்த பெரும் விருதுகளையெல்லாம் எங்கள் மாவீரரின் திருமகனார் பெற்றுத் தந்தைக்கும் தமிழினத்திற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி நிற்கின்றேன்.
தங்களின் திருமகள் பூங்குழலி அம்மை, உலக மன்ற அரங்கில் ஈழத் தமிழர்க்காக குரல்கொடுத்த செய்தியை இதழில் படித்தேன். தங்கள் மகள் தங்கள் வழியில் பணியாற்றுவது பெருமைக்குரியதாக உள்ளது.
மயிலாப்பூர், 25-4-2015 |