போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றும் பன்னாட்டுக் குற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஈழச் சிக்கலைப் பொருத்த அளவில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை பற்றி மட்டுமே பேசப்படுகிறது. நாம் இனப்படுகொலை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம். ஆனால் அய். நா. வோ உலக நாடுகளோ பன்னாட்டு ஊடகங்களோ இது வரை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – எஞுணணிஞிடிஞீஞு என்று சொல்லவே இல்லை. போர்க் குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இலங்கையில் நடந்துள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் உலக சமூகம் இனப்படுகொலை என்ற சொல்லை மட்டும் பயன்படுத்த இந்த அளவுக்கு தயங்குவது ஏன் என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் உள்ள வேறுபாட்டினைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனை புரிந்து கொள்ள, இனப்படுகொலை என்ற கருத்தாக்கத்தின் வரலாறை நாம் அறிய வேண்டும்.
உலக அளவில், இனப்படுகொலை என்றாலே நமக்குமே நினைவுக்கு வருவது யூத இனப்படுகொலைதான். ஆனால் ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இனப்படுகொலை நடந்த போது அது இனப்படுகொலை என்று சொல்லப்படவில்லை. அப்போது இனப்படுகொலை – Genocide என்ற சொல்லே கிடையாது. போலந்தைச் சேர்ந்த யூத வழக்கறிஞர் ரஃபெல் லெம்கின் தான் அச்சொல்லை முதன் முதலில் உருவாக்குகிறார்.
யூதப் படுகொலை நடந்த போது அவை மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் என்ற அடிப்படையிலேயே அவை விசாரிக்கப்பட்டன. அதிலும் போர்க் காலத்தில் நடந்தவை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. ஏனெனில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்டங்கள் இரண்டும் போர்க் காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தவை. அவை போர் இல்லாத காலங்களில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்கள் குறித்து எதுவும் பேசவில்லை.
ஆனால் யூதப் படுகொலை பெரும்பாலும் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே நடந்து முடிந்தது. அவை போர்க் காலத்தில் நடைபெறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தும் கேள்வியற்றுப் போய்விட்டன.
தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி உலகில் மீண்டும் நடந்து விடக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு, யூத வழக்கறிஞரான லெம்கின், போர் இல்லாத காலங்களில் நடைபெறும் மனித அழிப்புக்கென உருவாக்கிய சொல்லே இனப்படுகொலை – எஞுணணிஞிடிஞீஞு. அவரது முயற்சியிலேயே இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பிரகடனம் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. அப்பிரகடனம் Convention on the Prevention and Punishment of the Crime of Genocide என்று அழைக்கப்படுகிறது. அதாவது இனப்படுகொலைக் குற்றத்தை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பிரகடனம்.
ஈழச் சிக்கலைப் பொருத்த அளவில் உலகம் 2009-இல் உறைந்து நிற்கிறது. அதற்கு முன்பு நடந்தவையும் பேசப்படுவதில்லை. அதற்கு பின் இன்று வரை நடப்பவையும் பேசப்படவில்லை. 2009-இல் போர் நடந்த காலத்தில் நடந்த குற்றங்கள், அதாவது, போர்க் குற்றங்கள் குறித்து மட்டுமே பேசப்படுகிறது. அதற்கும் முன்பு தொடங்கி அதற்கு பின்பும் இன்று வரையிலும் தொடரும் இனப்படுகொலை குறித்து உலகம் பாரா முகமாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உலக நாடுகளைப் பொருத்த அளவில் இனப்படுகொலை என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய சொல். அதனை உறுதிப் படுத்த அதற்கு முன் பல படிகள் உள்ளன. அவற்றைச் செய்யாமல் நேரடியாக இனப்படுகொலை என்று சொல்லிவிட முடியாது.
உலக நாடுகள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த பெரிதும் தயக்கம் காட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள், இன அழிப்புகள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும் தடுக்கவும், எழுந்துள்ள முழக்கமான 'பாதுகாப்பதற்கான பொறுப்பு" (Responsibility to protect) என்பது இன்றைய முக்கிய தேவையாக உருவாகியுள்ளது. 2005-இல் நடந்த அய். நா. வின் உலக மாநாட்டில் உலக நாடுகள் 'பாதுகாப்பதற்கான பொறுப்பு" என்ற அடிப்படையில் அரசுகளுக்கு சில கடப்பாடுகளை அளித்தன. "பாதுகாப்பதற்கான பொறுப்பு' குறித்து விளக்கும் போது பேரா. கரெத் இவான்ஸ் சொல்வது போல, 'இறையாண்மை என்பது கொல்வதற்கான அனுமதிச் சீட்டாக உள்ளது". இலங்கை கூட, ஈழச் சிக்கலைப் பொருத்த வரை ்இது எங்கள் உள் நாட்டுப் பிரச்னை. எங்கள் இறையாண்மையைக் காக்க நாங்கள் எடுத்த நடவடிக்கை. இதில் தலையிட உலக நாடுகளுக்கோ அய். நா. வுக்கோ உரிமை இல்லை' என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. ஆக, இறையாண்மை என்பதை அரசுகள் கேடயமாக பயன்படுத்தி படுகொலைகளை செய்கின்றனர். இதனை உடைத்து, இறையாண்மை என்ற பெயரால் அரசே தலைமையேற்று நடத்தும் படுகொலைகள், நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே 'பாதுகாப்பதற்கான பொறுப்பு" என்ற இந்த கோட்பாட்டின் அடிப்படையாகும்.
ஆக, உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் உலகின் எந்தப் பகுதியிலும் இனப்படுகொலை நடவாமல் தடுக்கம் கடமையும் பொறுப்பும் உள்ளதை இனப்படுகொலை பிரகடனமும் பாதுகாப்பதற்கான பொறுப்பு கோட்பாடும் உறுதி படுத்துகின்றன. எனவே இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்டால், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். குறிப்பாக அய்க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள், நடந்துவிட்ட இனப்படுகொலையை ஏன் தடுக்க முடியாமல் போனது என்பதற்கு விளக்கம் அளித்தாக வேண்டும். இனப்படுகொலை குற்றம் மீதான விசாரணை நடைபெறும் போது இந்நாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இதனாலேயே உலக நாடுகள் இனப்படுகொலை என்ற சொல்லை உச்சரிக்கவே அஞ்சுகின்றன.
மறுபுறம், நடந்தது இனப்படுகொலைதான் என்பதை உலக நாடுகளை ஏற்றுக் கொள்ள வைக்க நம்மால் முடியுமானால் நமக்குக் கிடைக்கக் கூடிய பலன் நிரந்தர அரசியல் தீர்வுக்கானதாக இருக்கும். எந்த ஒரு உரிமை மீறலுக்கும் சட்டம் மூன்று வகையான நிவாரணங்களை அளிக்கிறது. இழப்பீடு, மீட்பு மற்றும் தண்டனை. இது உலக அளவில் எந்த சட்டத்திற்கும் பொருந்தக் கூடியது. அந்த வகையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக இலங்கை புரிந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கான நிவாரணமாக, குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு, அம்மக்கள் இழந்த வாழ்வை மீட்டெத்து அவர்களுக்கு திரும்ப அளிப்பது பன்னாட்டுச் சமூகத்தின் கடமையாகிறது. அதாவது Prosecution and restoration through rehabilitation.
அதாவது போர்க்குற்றம் நடந்த காலத்தில் இருந்த அரசையும், அந்த அரசிற்கு தலைமையேற்ற அரசியல்வாதிகளையும், பொறுப்பில் இருந்த அதிகாரிகளையும் தண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கான திட்டங்களை செயற்படுத்துவது. அதாவது இராஜபக்சே மற்றும் அவர் கூட்டாளிகளை தண்டிப்பது என்ற அளவோடு நின்று விடும். இது தமிழர்களின் சிக்கலை நிரந்தரமாக தீர்க்கப் போவதில்லை. ஈழத் தமிழர்களின் போராட்டம் எந்த ஒரு தனி மனிதருக்கு எதிரான போராட்டம் அல்ல. ஆக தனி மனிதர்களை அடையாளப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதினால் எவ்வித தீர்வும் கிட்டிவிடப் போவதில்லை. அதே போன்று மறுவாழ்வு என்ற பெயரில் மிகப் பெரும் வியாபார சந்தை திறந்து விடப்படுவதைக் கடந்து அதனாலும் தமிழர்களின் சிக்கல் தீரப் போவதில்லை.
இனப்படுகொலையும் ஒரு குற்றச் செயலே. ஆனால் அது வரலாற்று நோக்கில் தமிழர்களின் சிக்கலை முழுமையாக தெளிவாக்கும். தமிழர்கள் மீது இலங்கை நடத்தியது இனப்படுகொலை என்பது முடிவானால் அதற்கானத் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படும். அண்மையில் இனப்படுகொலை நடந்த நாடுகளான கிழக்குத் தைமூர், மாண்டிநீக்ரோ போன்ற நாடுகளில் இத்தகைய விவாதமே பொது வாக்கெடுப்புக்கு இட்டுச் சென்று அந்நாடுகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. அது போன்றதொரு வழி நமக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்கான முதல் படியாக நம் முன் உள்ளது அங்கு நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்பதை நிறுவுவதே ஆகும். அப்படி உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் நிறுவ வேண்டுமெனில், நாம் இனப்படுகொலைக்கான உலக வரையறை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இனப்படுகொலைப் பிரகடனத்தின் பிரிவு 2 இனப்படுகொலை என்பதை இவ்வாறு விவரிக்கிறது.
"any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious bodsily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part; imposing measures intended to prevent births within the group; [and] forcibly transferring children of the group to another group.”
அதாவது 'ஒரு தேசிய, இன, சமய அல்லது இனக்குழுவைத் திட்டமிட்டு பரந்த அளவில் முழுமையாக அழித்தொழிப்பது அல்லது அழித்தொழிக்க முற்படுவது என்ற நோக்கத்துடன் – இந்த நோக்கம் என்ற சொல்லே மிக முக்கியமானது – செய்யப்படும் கீழ்காணும் செயல்கள் அக்குழுவைச் சேர்ந்தவர்களை கொல்வது
அக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு உடல் அல்லது உள்ளத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவது
அக்குழுவைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழியும் வகையில் திட்டமிட்ட வாழ்நிலையை அவர்கள் மீது திணிப்பது
அக்குழுவிற்குள் குழந்தைகள் பிறப்பதை கட்டாயமாக தடுப்பது
அக்குழுவைச் சேர்ந்த குழந்தைகளை கட்டாயமாக வேறொரு குழுவிற்கு மாற்றுவது' என்பதாக வரையறை செய்கின்றது.
அப்பிரகடனம் இனப்படுகொலை என்பதை மேலும் விரிவாக விளக்குகிறது. அந்த விளக்கங்கள் அனைத்திற்குமான ஆதாரங்கள் கிடைத்து உறுதிப்படுத்தப் படாமல் இனப்படுகொலை என்ற சொல்லை உலக அரங்கில் பயன்படுத்த முடியாது.
உண்மையில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் தமிழர்கள் மீது இன்று வரையிலும் நடக்கின்றன. பல ஆண்டு காலமாக நடந்து வந்தும் உள்ளன. 2009-க்குப் பிறகு மிக தீவிரமாக நடக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
இனப்படுகொலை என்பது உயிர்களை கொல்வது மட்டுமல்ல. இலங்கை அரசு தமிழர்களின் உயிரை மட்டும் பறிக்கவில்லை.
அவர்களின் பாரம்பரியமான நில உரிமையை பறித்து, அங்கு சிங்கள மக்களை குடியேற்றியது. தமிழ் மாவட்டங்களுடன் சிங்கள ஊர்கள் இணைக்கப்படுகின்றன. சிங்கள மாவட்டங்களுடன் தமிழ் ஊர்கள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதி என்று உரிமை கோர இயலாதவாறு மக்கள் தொகை விகிதாச்சாரம் முற்றிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் பரம்பல் அடிப்படையிலான இனப் படுகொலையை இலங்கை செய்து வருகிறது. (Demographic genocide)
முகாம்களிலிருந்து 'விடுவிக்கப்பட்ட" மக்கள் மீள் குடியேற சொந்த நிலங்கள் இல்லை. வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் உள்ளன. முகாம் வாழ்வே மேலானதோ என்று தோன்றும் அளவுக்கு வெளியில் வாழ்க்கை துன்பகரமான தாக இருக்கிறது. புதிய கட்டுமானங்கள், புதிய தொழில்கள் என அனைத்தும் அங்கு குடியேற்றப்பட்டுவிட்ட சிங்களரின் நலன் சார்ந்தே மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் வாழ்வை தாங்களே கட்டமைப்பதற்கான அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில், தமிழர்கள் அங்கு ஒரு கட்டமைப்பு இனப்படுகொலைக்கு (Structural Genocide) ஆளாகி நிற்கின்றனர்.
இன்று அங்கு 89,000 விதவைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மறுபுறம், 5 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இராணும் அடர்த்தியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. எகனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையின் படி 1,80,000 இராணுவத்தினர் வடக்கில் நிறுத்தப் பட்டுள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது. இந்த இராணுவத்தினரால் தனித்து வாழும் பெண்களும் அவர்களின் பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். மறுபுறம் 13 முதல் 16 வயதான சிறுமிகள், இராணு வத்திடமிருந்து தப்ப குழந்தை திருமணத்திற்குள் தள்ளப்படுகின்றனர். சிறுவர்களை. மிக எளிதாக கிடைக்கும் போதை பொருட்களின் பிடியில் சிக்காமல் காக்க பற்றவர்கள் தவிக்கின்றனர். கல்வியை பெரிதாக மதிக்கும் அச்சமூகத்து குழந்தைகள், கல்விக்கு வழி யின்றி முடங்கி கிடக்கின்றனர். இவை அனைத்தும் சிங்களப் பேரினவாதம் தமிழர்கள் மீது மேற்கொண்டுள்ள பண்பாட்டு இனப்படுகொலையின் (இதடூtதணூச்டூ ஞ்ஞுணணிஞிடிஞீஞு) விளைவுகளே.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடரும் இந்த மக்கள் பரம்பல், கட்டமைப்பு மற்றும் பண்பாட்டு இனப்படுகொலைகளுக்கு இணையாக, தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் தோல்வி மனப்பான்மையை நிரந்தரமாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மிகப் பெரும் உளவியல் இனப்படுகொலையை (ணீண்தூஞிடணிடூணிஞ்டிஞிச்டூ ஞ்ஞுணணிஞிடிஞீஞு) இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதப் போர் 2009 ஆண்டில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் இன்று வரையில் தமிழர்கள் மீதான உளவியல் போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எல்லாம் முடிந்தது, இந்தியாவை நம்ப கூடாது, அய். நா. வை நம்பக் கூடாது, உலக நாடுகளும் ஏமாற்றுக்காரர்கள் என்று நம்மில் சிலரே பேசுகிறோம். மாற்று எதுவும் சொல்லாமல் வெறுமனே எவரையும் நம்பி பயனில்லை என்று பேசுதும் கூட இலங்கை அரசின் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தும் உளவியல் போருக்குத் துணை செய்வதாகவே இருக்கும். இருக்கும் கட்டமைப்பிற்குள் நின்று நாம் என்ன செய்ய முடியும் என்பதை பேசுவதே அந்த உளவியல் போருக்கு சரியான பதிலடியாக இருக்கும்.
"2009-உடன் போர் முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த சிக்கலும் இல்லை' என்று இலங்கை அரசு சொல்வது உண்மைதான். போர் முடிந்ததுடன், எவ்வித தடையும் இன்றி இனப்படுகொலையைத் தீவிரமாக நடத்தி முடிப்பதில் இலங்கை அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை. அண்மையில் கொலையுண்ட மாணவி வித்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழீழ பள்ளி மாணவர்கள், ்இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?' என்ற பதாகையை உயர்த்திப் பிடித்திருந்தனர். அதுதான் உண்மை. இனப்படுகொலையை பரவாக நடத்தத் தடையாக இருந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இனி அவர்கள் மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடாது.. அதற்கும் அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்பதே இலங்கை அரசின் நோக்கம்.
இதனை உணர்ந்து நாம் விரைந்து செயலாற்ற வேண்டும். போர்க் காலத்தில் மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாகவும், போருக்குப் பின்னும், இன்று வரையிலும் தமிழர்கள் மீது நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை உறுதிப் படுத்துவதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் நாம் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும். இதன் மூலம் மட்டுமே உலக அளவில் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தும் வாய்ப்பை நாம் பெற முடியும்.
அதிலும் குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பல மாயங்களை செய்து விடும் என்று தமிழர்கள் சிலரே நம்பத் தொடங்கி உள்ளனர். இதுவும் இலங்கையின் உளவியல் போரின் ஒரு பகுதி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அங்கே இன்னமும் ஓர் இனப்படுகொலை தொடர்கிறது என்பதை நாம் உலகம் அறிய செய்ய வேண்டும். இதை குறித்த கருத்துருவாக்கத்தை நாம் ஈடுபட வேண்டும். இந்தியாவெங்கும் உள்ள குடிமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரிடம் நாம் இக்கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
இது வரை தமிழர்கள் நாம் மட்டுமே பேசி வந்ததை தமிழர் அல்லாதவர்களும் பேசும்படி செய்ய வேண்டும். ஈழத் தமிழர் போராட்டத்தை 30 ஆண்டுகால அறவழிப் போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் என்று நாம் பிரித்துக் கூறுகிறோம். முதல் முப்பதாண்டு காலம் ஈழத் தமிழர்கள் மட்டுமே போராடினார்கள். தமிழ்நாட்டில் கூட அவர்கள் போராட்டம் பற்றி பெரிதாக எவரும் அறிந்திருக்கவில்லை. அடுத்த முப்பதாண்டு காலத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது. 2009-க்கு பிறகு உலகம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். ஒன்றரை இலட்சம் மக்கள் தங்கள் உயிரை இழந்து இப்போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு முன் நகர்த்தி உள்ளனர் என்ற பொறுப்புணர்வோடு நாம் செயல்பட வேண்டும்.
உலகம் என்பது அரசுகள் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள குடிமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை நாம் அணுகி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களைக் கொண்டு இலங்கையில் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்கிறது என்பதை பேச வைக்க வேண்டும். அதன் முதல் கட்டமாக இந்தியாவெங்கும் இதனை ஒரு விவாதப் பொருளாக மாற்ற வேண்டும். இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விடாதுதான். ஆனால் இப்படியான கருத்துருவாக்கத்தின் மூலமாக நாம் ஏற்படுத்தும் அழுத்தமே, இந்திய அரசு தமிழருக்கு எதிராக செயல்படும் வேகத்தை கொஞ்சமேனும் மட்டுப்படுத்த உதவும்.
இந்தப் பணியில் வெற்றி பெற நாம் யூதர்களின் சியோனிஸ்ட் இயக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஹோலோகாஸ்ட்டுக்கு முன்னும் பின்னும் உலகெங்கும் பல சியோனிஸ்ட் இயக்கங்கள் இருந்தன. ஆனால் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த உடன் அவர்கள் தங்களுக்கு இடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து இணைந்து நின்று செயல்பட்டனர். அதனால்தான் அவர்களால் தங்கள் இலக்கை அடைய முடிந்தது. நமக்குள் ஒத்தக் கருத்து இல்லாத விசயங்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, ஒத்தக் கருத்துடையவற்றை அடிப்படையாக வைத்து பணி செய்வோம். |