காரைக்குடி - கோவிலூர் மற்றொரு போபால் ஆகிறது : மக்களின் இறுதிக்கட்டப் போராட்டம் பழ.நெடுமாறன் தொடக்கி வைத்தார் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015 12:05 |
காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் நிறுவனம் சோடியம் ஹைட்ரோ சல்பைடு என்னும் கொடிய நச்சு இரசாயனப் பொருளை உற்பத்தி செய்கிறது. உலக நாடுகளில் இதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டு அதன் விளைவாக இத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் கோவிலூர் பெரிய கண்மாயில் பாய்ந்து தேனாற்று வழியாக காரைக்குடி கண்மாய் வரைக்கும் வந்தடைகிறது. இதன் விளைவாக சுமார் 1000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு தகுதியற்று பாழாகிவிட்டது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், குளங்கள், ஆகியவை வேதிப் பொருள் கலந்த நீராக மாறிவிட்டது. இந்நீரைக் குடிக்கும் மனிதர்களும், ஆடு, மாடுகளும், மீன்களும் பாதிப்புக்குள்ளாகி பல நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
இத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வேதிப்பொருள் கலந்த நச்சுக்காற்றுப் புகையின் விளைவாக மக்களுக்கு தோல்நோய், மூச்சுத் திணறல், சளிப்பிடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. பெண்களுக்கு குறைப்பிரசவங்கள், கருச்சிதைவு, ஊனமுற்றக் குழந்தைகள், இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன.
காரைக்குடி மக்களுக்கு குடிநீர் தருகிற சம்பை ஊற்றிலிருந்து நாள்தோறும் 20 இலட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு இத்தொழிற்சாலைக்கு அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்த நீரும் வேதிப்பொருள் கலந்த நீராக மாறிவருகிறது. இதன் விளைவாக காரைக்குடி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கிருந்து வெளியேறவேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு அதிகாரிகளால் பல உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டும் எதையும் மதிக்காமல் இந்த தொழிற்சாலை நிருவாகம் தன்போக்கில் செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் உண்ணாநிலைப் போராட்டம் 20-05-2015 அன்று நடைபெற்றது. இந்த உண்ணா விரதப்போராட்டத்தை தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தொடக்கி வைத்துப் பேசும்போது "இப்பிரச்சினையை நாடு தழுவிய பிரச்சினையாக்கித் தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதாக'' தெரிவித்தார். |