பாசிசத்தை வீழ்த்த கைகோர்ப்போம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015 12:41

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருப்பது என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றம் அல்ல. மாறாக கடுமையான மதவெறியும் - பாசிசத் தன்மையும் பிற்போக்குத் தன்மையும் கொண்ட ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது.

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியை முன்னிறுத்தி பணத்தை வாரியிறைத்து வெற்றிபெற வைத்தன.. அதே நிறுவனங்கள் அவரது ஆட்சியைத் தாங்கிப்பிடிக்க தங்களது முழு வலிமையையும் பயன்படுத்துகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இந்த அரசு முழுமையாக சரணடைந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகத்தான் நிலத்தை கையகப்படுத்தும் சட்டமும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதும் திகழ்கின்றன. மோடி அரசின் முதல் வரவு-செலவுத் திட்டமும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி ஊக்கமளிக்கும் திட்டமாகும்.

அதே வேளையில் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, மத மோதல்களையும், சாதி மோதல்களையும் ஊக்குவிக்க இந்துத்துவாவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். 2002ஆம் ஆண்டில் இவர்கள் நடத்திய குஜராத் பரிசோதனையை இதர மாநிலங்களுக்கும் கொண்டுசெல்ல சங்பரிவாரம் திட்டமிட்டுள்ளது. சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக பொறுப்பற்ற ஆத்திரமூட்டக்கூடிய அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அவர்களை அவமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்துத்துவா சித்தாந்தத்தைக் கொண்ட இந்து நாடு என இந்தியாவைப் பற்றி பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகிறது. இந்து ராஷ்டிரா என்று அவர்களால் அழைக்கப்படுகிற சித்தாந்தத்தை இந்த நாட்டின் மீது திணிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பிரச்சினையில் தீவிரமாக உள்ளனர். பாபர் மசூதியை இடித்து அதே இடத்தில் இராமர் கோயிலைக் கட்டியே தீரவேண்டும் என இவர்கள் செய்யும் முயற்சி நாடெங்கும் மதக்கலவரங்களுக்குக் காரணமாக இருந்தது என்பதை இவர்கள் அலட்சியப்படுத்தினர். இந்தப் பிரச்சினை சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கிறது என்பதைக்கூட இவர்கள் மதிக்கத் தயாராக இல்லை. இப்போதே உடனடியாக இராமர் கோயிலை கட்டியாகவேண்டும் என மோடி அரசுக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர்.

இராமனை முன்னிறுத்தி மதவெறியைப் பரப்புகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். ஆனால், இராமன் எத்தகையவன் என்பதை கம்பன் அற்புதமாகச் சித்தரிக்கிறான்.
அயோத்தியா காண்டத்தில் இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் தந்தையின் கட்டளைக்கிணங்க கானகம் செல்லும் வழியில் கங்கை ஆற்றைக் கடக்க குகன் என்ற வேடன் உதவுகிறான். இராமனைக் கண்ட மாத்திரத்திலேயே அவன் மீது அளவற்ற பக்தி கொள்கிறான். அவனுக்காக எதையும் செய்வதற்குத் தயாராகிறான். தனது ஆட்சிக்குட்பட்ட காட்டிலேயே தங்குமாறு குகன் வேண்டிக்கொள்கிறான். இராமனைப் பிரிய அவனுக்கு மனமில்லை. அவனுடைய அன்பினைக் கண்டு நெகிழ்ந்து போன இராமன் அவனிடம் பின்வருமாறு கூறுவதாக கம்பன் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளான்.

அன்னவன் உரைகேளா அமலனும் உரை நேர்வான்
என் உயிர் அனையாய் நீ இளவல் உன்இளையான் இந்
நன்னுதலவள் நின் கேள் நளிர்கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்
(676)

துன்பு உளது எனின் அன்றோ சுகம்உனது அது அன்றிப்
பின்பு உனது இடைமன்னும் பிரிவுஉனது என உள்ளேல்
முன்பு உளெம் ஒரு நாள்வேம் முடிவுஉளது என உள்ளா
அன்பு உள இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.
(677)

குகனை நோக்கி இராமன் "சீதை உனது மைத்துனி, இலட்சுமணன் உனது தம்பி, நாங்கள் நான்கு சகோதரர்கள் இப்போது உன்னையும் சேர்த்து ஐவரானோம்'' எனக் கூறுகிறான்.

வேடனான குகனை தனது சகோதரனாக ஏற்றுக்கொள்கிற இராமன் சீதையை அவனுடைய மைத்துனி என கூறுவது என்பது அனைவரின் உள்ளத்தையும் நெகிழ்விக்கிறது. மேல்சாதி-கீழ்சாதி என்ற வேறுபாடுகளை அறவே நீக்கும் வகையில் பேசிய இராமனை இந்துத்துவாவாதிகள் தங்களுடைய மதவெறிக்கு நாயகனாகச் சித்திரிக்க முயல்கிறார்கள். உண்மையான இராமன் வேறு இவர்கள் தூக்கிச் சுமக்கும் இராமன் வேறு.

பா.ஜ.க.வின் மூலவேர் ஆர்.எஸ்.எஸ். ஆகும். அதனுடைய தத்துவம் பாசிசம் ஆகும். ஜெர்மனியில் இட்லர் தோற்றுவித்த பாசிசத்தையே ஆர்.எஸ்.எஸ். இப்போது பின்பற்றுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் குருவான கோல்வால்கர் 1939ஆம் ஆண்டிலேயே பின்வருமாறு கூறியிருக்கிறார்:

"தன்னுடைய இனம், கலாச்சாரம் ஆகியவற்றின் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளத் தனது நாட்டிலிருந்து செமிட்டிக் இனத்தைச் சேர்ந்த யூதர்களை செர்மனி விரட்டியடித்தது. இனப் பெருமையின் உச்சக்கட்டமாக இது நிகழ்த்தப்பட்டது. அடிப்படையாக முற்றிலும் வேறுபட்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றுபட்டு வாழ முடியாது. ஏதாவது ஒன்றுஅழிந்து தான் மற்றொன்று தலையெடுக்க முடியும். இதற்கு செர்மனி மிகச் சிறந்த முறையில் வழிகாட்டியிருக்கிறது. இந்த பாடத்தை இந்துஸ்தானத்தைச் சேர்ந்த நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு அதன் மூலம் ஆதாயம் அடைய வேண்டும்.''

இந்துத்துவா வாதிகள் ஒரு நாடு, ஒரு கலாச்சாரம் என முழக்கமிடுவதன் மூலம் மாற்றுச் சிந்தனைகளை மறுக்கிறார்கள். கிறித்தவர்களையும், முசுலீம்களையும் தங்கள் மதங்களின் புண்ணியத் தலங்களைப் புறக்கணிக்கும்படி வற்புறுத்துகின்றனர். இந்திய நாட்டிற்குள்ளாகவேதான் அவர்களின் புண்ணிய பூமிகள் அமைந்திருக்க வேண்டும் என ஆணையிடுகிறார்கள். அதாவது கிறித்துவர்களின் புனிதத் தலமான செருசலம், முசுலீம்களின் புனிதத்தலமான மெக்கா போன்றவற்றை இந்தியக் கிறித்துவர்களும், முசுலீம்களும் அடியோடு துறந்து விடவேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். அறிவுரை கூறுகிறது.

இந்திய நாட்டிற்குள் புண்ணிய பூமிகள் அமைய வேண்டும். அவ்வாறு அமைத்துக்கொள்ளாத மதங்கள் அந்நிய மதங்கள் என கோல்வால்கர் கூறிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டால் இந்துக்களும் அந்நியர்களாகி விடுவார்கள். ஏனெனில் இந்துக்களின் பெரிய கடவுளான சிவபெருமான் வாழும் கைலாயம் சீனாவில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உள்பட சகல இந்துக்களும் சீனாவிடம் விசாபெற்றுத்தான் கைலாயத்திற்குள் நுழைந்து சிவபெருமானைத் தரிசிக்க முடியும்.
ஆர்.எஸ்.எஸ். வகுத்துள்ள கலாச்சார, தேசிய இலக்கணத்திற்கு உட்பட்டவாறு மட்டுமே பிறமதத்தவர்கள் தங்களின் மதச்சடங்குகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்கர் இக்கருத்தை அப்பட்டமாக பின்வருமாறு கூறுகிறார். "விழிப்புணர்வு பெற்ற பழைய தேசிய இனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் மேலே கண்ட கருத்தை வரவேற்கிறேன். இந்துஸ்தானத்திலுள்ள வெளிநாட்டினங்கள் இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிக்கவும். அதனிடத்தில் பக்தி செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்து இனம், இந்துக் கலாச்சாரம் ஆகியவற்றைப் போற்றுவதைத் தவிர வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அவர்களின் தனித்துவத்தைத் துறந்து இந்து இனத்தில் ஐக்கியமாகிவிடவேண்டும். எந்தவிதமான சலுகையோ உரிமையோ கேட்கக் கூடாது. இந்து இனத்திற்கு உட்பட்டவர்களாக நடந்து கொண்டால், இந்த நாட்டில் வாழலாம். இந்நாட்டின் குடியுரிமையைக்கூட அவர்கள் கோரக்கூடாது.''

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கலாச்சாரம், மதம், அரசியல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த குறிக்கோளினைக் கொண்டதாகும். மத அடிப்படையில் இந்து தர்மம் கலாச்சார அடிப்படையில் இந்து சமஸ்கிருதம், தேசத்தின் அடிப்படையில் இந்து இராஷ்டிரம், ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது.

இந்துயிசம் என்பதைவிட இந்துத்துவா விரிவான பொருள்கொண்ட தத்துவம் என சாவர்க்கர் உறுதியிட்டுக் கூறினார். இந்துயிசம் என்பது மரணத்திற்குப் பிறகு ஆன்மாவுக்குக் கிடைக்கும் இரட்சிப்பு, கடவுள், முழுமையான படைப்பு ஆகியவற்றைக் குறித்துக்கூறுவதாகும். ஆனால், "பொது கலாச்சாரம், பொது வரலாறு, பொது மொழி, பொது நாடு, பொது மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய தனியான தேசிய இனமாக இந்துக்கள் விளங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும் சொல்லே இந்துத்துவா ஆகும்'' என சாவர்க்கர் கூறினார்.

இந்து என்ற சொல்லுக்கு இத்தகைய ஆழ்ந்த நோக்கமுடைய அர்த்தத்தைக் கூறியதோடு அதன் அடிப்படையில் இந்து இராஷ்டிரா, இந்துத்துவா ஆகியவை பிறந்தன என விளக்கம் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உருவாக்கிய ஹெட்ஹேவார், சாவர்க்கரின் விளக்கங்களுக்குப் பிறகு தெளிவடைந்தார். 1925ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உருவாக்கியபோது இருளில் தடுமாறிக்கொண்டிருந்த அவருக்கு சாவர்க்கரின் விளக்கங்கள் வழிகாட்டிய ஒளிவிளக்குகள் ஆயின.

மத அடிப்படையில் தேசிய இனம் உருவாக முடியாது என்ற உண்மையை முழுமையாக மறைத்து சாவர்க்கரும் அவரைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களை ஏமாற்ற முயல்கின்றன.

முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று கூறி முஸ்லிம்கள் தலைவரான ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கினார். ஆனால், பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான கிழக்கு வங்க முஸ்லிம்கள்மீது உருதுமொழி திணிக்கப்பட்டபோது அவர்கள் அதை எதிர்த்துப் போராடி வங்க தேசத்தை சுதந்திர நாடாக்கினார்கள். முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என மத அடிப்படையில் ஜின்னா கூறிய கொள்கை பொய்த்துப்போயிற்று. வங்காள முஸ்லிம்கள் தங்களை மொழி அடிப்படையில் வங்காளிகளாக கருதினார்களே தவிர உருது மொழி பேசிய மேற்கு பாகிஸ்தானிய மக்களோடு இணைந்து நிற்க விரும்பவில்லை.

அதைப் போல்தான் மத அடிப்படையில் இந்துக்கள் ஒரு தனி தேசிய இனம் என்று கூறுவது விஞ்ஞானப் பூர்வ உண்மைகளுக்கு எதிரானது. இந்து என்ற சொல்லுக்கு இந்தியாவின் உள்ள எந்த மொழியிலும் வேர்ச்சொல் கிடையாது. வேதங்கள், உபநிடதங்கள், கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்ற எவற்றிலும் இந்து என்ற சொல் இடம்பெறவில்லை. சிந்து என்பதே ஏனைய மொழிகளில் இந்து என ஆனது என்று தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வாழ்வியல் களஞ்சியம் கூறுகிறது.

பாரசீகர்களும், கிரேக்கர்களும் இந்த நாட்டை சிந்து நாடு என்று அழைத்தார்கள். பாரசீகர்களின் உச்சரிப்பில் சி இல்லாததால் இ என்று உச்சரித்து இந்து ஆக்கிவிட்டார்கள்.

முகலாய ஆட்சிக் காலத்தில் முகமதியர்கள் அல்லாதோர் அனைவரும் இந்துக்கள் என அழைக்கப்பட்டனர். அதையே பிற்காலத்தில் ஆங்கிலேயே ஆட்சி பின்பற்றியது.

பல்வேறு வழிபாடுகளைப் பின்பற்றியவர்களையும் பல்வேறு கடவுளர்களை வணங்கியவர்களையும் வெவ்வேறு புனித நூல்களை உயர்வாகக் கருதியவர்களையும் குறிப்பதற்கு ஆங்கிலேயர்கள் இந்து மதம் என்ற பெயரால் 1884ஆம் ஆண்டில் முதல் குடி கணக்கு எடுக்கப்பட்டபோது குறித்தார்கள்.
இதை மறைந்த சங்கராச்சாரியாரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பின்வருமாறு உறுதி செய்தார்.

"அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவ, வைணவ, சாக்த, முருக பக்தர், எல்லையம்மனை கும்பிடுகிறவர்கள் என்று தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாளா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல. சைவர்களில் தீவிரவாதிகளுக்கு விஷ்ணு சாமியே அல்ல. சிவன்தான் சாமி. விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது. வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது''

இமயம் முதல் குமரி வரை வாழும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு மொழிகள் பேசுகிறார்கள். அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாக விளங்குகிறார்கள். தமிழ்த் தேசிய இனம், தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், வங்க தேசிய இனம், குஜரத்திய தேசிய இனம், மராட்டிய தேசிய இனம், இந்தி தேசிய இனம் போன்ற பல தேசிய இனங்களாகத்தான் விளங்குகிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைத்து இந்து தேசிய இனமாக ஆக்கிவிட முடியாது.

பஞ்சாபி, உருது, சிந்தி, வங்காளி, புஷ்டு போன்ற மொழிகளைப் பேசுகின்ற முஸ்லிம்கள் அனைவரையும் இணைத்து ஒரு தேசிய இனமாகக் கூறி பாகிஸ்தானை ஜின்னா படைத்தார். ஆனால், வங்க தேசிய இனம் பிரிந்து சென்றுவிட்டது. பாகிஸ்தானில் சிந்து தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுகிறது. புஷ்டு மொழி பேசுகிற தேசிய இனம் பிரிவினைகோரி போராடுகிறது. முஸ்லிம்கள் ஒரே தேசிய இனமாக விளங்க முடியவில்லை என்பது நமது கால வரலாற்றிலேயே மறைக்க முடியாத உண்மையாகி விட்டது.

பல மொழி தேசிய இனங்களையும் இந்து தேசிய இனம் என சாவர்க்கார் கூறியதை அப்படியே பின்பற்றி நிலைநாட்ட முயலும் இந்துத்துவா வாதிகளின் கொள்கையும் தோற்றுப்போகும் என்பதில் ஐயமில்லை.

மொழி வழி மாநிலங்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் வழிவந்த ஜனசங்கமும் கடுமையான நிலை எடுத்தன.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்கர் பின்வருமாறு கூறினார். "சுயாட்சி உரிமையுள்ள மொழிவழி மாநிலங்களை அமைப்பது பிராந்தியவாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இதற்குப் பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய மட்டங்களில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து அமைக்கப்படும் ஜனபாத அமைப்புகள் இப்போது உள்ள மாநில அரசுகளைவிட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்.''

இந்திய ஒற்றுமைக்காகப் பதில் யோசனைகளை ஜனசங்கம் கூறியது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான தீனதயாள் உபாத்தியாயா ஜனபாத நிர்வாக அமைப்பு பற்றிய திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவில் உள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு நிருவாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு ஜனபாத அமைப்பு உருவாக்க வேண்டும். அப்படி இந்தியா முழுவதிலும் 100 ஜனபாத அமைப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்த ஜனபாத அமைப்புகள் இயங்கும். மொழிவழி மாநிலங்களும் - அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும். 1951, 1954ஆம் ஆண்டுகளில் ஜனசங்கம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இத்திட்டம் வலியுறுத்தப்பட்டது.

வருணாசிரமதர்ம அடிப்படையில் அமைந்த சாதிப் பாகுபாடுகளை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடாகும். சாதி வேறுபாடுகளற்ற சமுதாயத்தை நிறுவுவதை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக எதிர்க்கிறது.

"தாழ்த்தப்பட்டவர்கள் பலபகுதிகளில் உயர்ச் சாதியினரால் படுகொலைக்கு உள்ளாகிறார்கள். இந்த இரண்டு பிரிவினருமே இந்துக்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த நிலையில் உங்களுடைய விசுவ இந்து பரிஷத் யார் பக்கம் நிற்கும்? என்ற கேள்வி அந்த அமைப்பின் தலைவரான கிரிராஜ் கிஷோரிடம் எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதில் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது.

"ஒவ்வொரு சமூகமும் பிரிந்திருப்பதுதான் நல்லது. அதுதான் நல்லிணக்கத்தின் உயர்ந்த வடிவம். இந்து சமூகத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகளும், வேறுபாடுகளும் இருப்பதை நான் ஆதரிக்கிறேன். இந்துத்துவா என்பது ஒரு பல் பொருள் விற்பனை அங்காடியைப் போன்றது. அங்காடியில் பொருள்கள் தனித்தனியாக "பேக்கிங்' செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல் இந்த சாதிப் பிரிவுகளும் தனித்தனி பேக்கிங்குகளாக இருக்க வேண்டும். அதுதான் சரி!'' - என்றார் கிரிராஜ் கிஷோர்! (ஆதாரம்: "ஃட்ஹந்ண் நட்ர்ழ்ற்ள் ஹய்க் நஹச்ச்ழ்ர்ய் எப்ஹஞ்ள்") உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் இதே கருத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி அவர் வெளியிட்டார்.

2011ஆம் ஆண்டு செப்டம்பரில் - தென்னாப்பிரிக்காவில் - டர்பன் நகரில் அய்.நா. சார்பில் இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாடு நடந்தது. இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு முறையையும். இன வேறுபாடுகளுக்குச் சமமானதாக, அய்.நா. அங்கீகரிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள், அய்.நா. மாநாட்டில் பங்கேற்று வலியுறுத்தின. அப்போது இதே விசுவ இந்து பரிசத் தலைவர் கிரிராஜ் கிஷோர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

"சாதி வேறுபாடுகளை, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சித்தரிக்கும் உரிமை அய்க்கிய நாடுகள் சபைக்குக் கிடையாது. ஒரு மனிதன் செய்யும் தொழிலைச் சாதி நிர்ணயிக்கிறது. இது காலம் காலமாகப் பழக்கத்தில் இருந்து வருகிறது. பழங்கால மரபுகளையும் பழக்கங்களையும் எந்த நீதிமன்றத்தாலும் ஒழித்துவிட முடியாது. சாதியை ஒழிப்பது மனித உரிமைக்கு எதிரானது. நாளைக்கு "தேசியம்' கூட வேற்றுமைகளை வளர்க்கிறது என்று கூறி அதையும் ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்'' என்று பகிரங்கமாகவே அவர் அறிக்கை விடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடைய துணை அமைப்புகளின் நோக்கங்களை புரிந்து கொண்ட மக்கள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. இந்து மகா சபை என்ற பெயரிலும், ஜனசங்கம் என்ற பெயரிலும் அவர்கள் தேர்தல்களில் போட்டிபோட்டபோது மிகக் குறைவான வாக்குகளேப் பெற்றார்கள். சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. காரணம் மக்கள் அவர்களை மதவெறிக் கட்சியினராகப் பார்த்ததுதான்.
மேலும் மகாத்மா காந்தியைக் கொலை செய்தக் கூட்டம் என ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை மக்கள் வெறுத்தொதுக்கினர்.

அரசியலில் தங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரத்தக்க தலைவர் ஒருவரை இந்து தேசியவாதிகள் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அவர்களுக்கு அப்படியொரு தலைவர் கிடைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் தியாகங்கள் செய்து மக்களிடம் மகத்தான செல்வாக்குப் பெற்றிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திராகாந்தி அவர்களின் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து அறவழிப் போராட்டத்தைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து நிற்கும் வாய்ப்பு இந்துத்துவா வாதிகளுக்கு கிடைத்தபோது அதை தவறவிடவில்லை.

இந்திரா அரசின் சர்வாதிகாரத்தை எதிர்க்கவும் சனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தொடங்கிய போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. மக்கள் திரண்டெழுந்து ஜெயப்பிரகாஷ் அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டனர். மாபெரும் தியாகத் தலைவரான ஜெயப்பிரகாசர் தலைமை தாங்கியதால் அந்தப் போராட்டம் வெற்றிபெற்றது. இந்திராகாந்தி சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்து நாடாளுமன்றத் தேர்தலையும் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக்கப்பட்டார்.

ஆனால், இந்துத்துவவாதிகளுடன் ஜெயப்பிரகாசர் கைகோர்த்ததை வினோபாபாவே ஏற்கவில்லை. தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஓராண்டு காலம் மவுன விரதம் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்தார்.

அதைப்போலவே தென்னாட்டில் தனது இயக்கத்திற்கு காமராசரின் ஆதரவை நாடி ஜெயப்பிரகாசர் சந்தித்தபோது அவரும் ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.

ஜனசங்கம் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனதாதளம் என்ற ஒரு அமைப்பை ஜெயப்பிரகாசர் உருவாக்கினார். ஜெயப்பிரகாசர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியை வெற்றிபெறவைத்தனர்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதாதளத்திற்கு 295 இடங்கள் கிடைத்தன. ஜனதா தளத்தில் ஐக்கியமாயிருந்த கட்சிகள் பெற்ற இடங்களின் சதவீதம் வருமாறு:

1. ஜனசங்கம் 31%
2. பாரதிய லோக்தளம் 19%
3. சோசலிஸ்டுகள் 17%
4. ஸ்தாபனக் காங்கிரஸ் 15%
5. ஜனநாயக காங்கிரஸ் 10%
6. சந்திரசேகர் குழு 2%

ஜெயப்பிரகாசரின் மறைவிற்குப் பின்னால் ஜனதா தளம் உடைந்தது. ஆனால், ஜனதாதளத்தில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த ஜனசங்கம் மற்றும் பல கட்சிகளில் இருந்தவர்களையும் சேர்த்துக்கொண்டு பா.ஜ.க.வை தொடங்கியது.

ஜெயப்பிரகாசர் சேர்த்துக்கொண்டதால் மக்கள் அங்கீகாரம் பெற்ற பா.ஜ.க. வளர்ந்து இன்று மத்திய ஆட்சியைப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

ஜெர்மனியில் இட்லர் கையாண்ட அதே முறைகளை இங்கே இந்துத்துவா வாதிகள் கையாளுகின்றனர். இந்துத்துவாவும் ஃபாசிசமும் வேறுபட்டவை அல்ல. இரண்டும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை. இரண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரே மாதிரியான முறைகளைப் பின்பற்றியவை. கீழ்க்கண்ட உண்மைகள் அதை தெளிவுபடுத்தும்.

1. வலிமை வாய்ந்த தொழிலாளர் இயக்கத்தின் மூலம் பாசிசம் வளர்ச்சி பெற்று வலிமை அடைந்தது.

ஆனால் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்ந்த சாதியினர் ஆகியோரின் கரங்கள் ஓங்குவதைத் தடுத்ததன் மூலம் இந்துத்துவா பலப்படுத்தப்பட்டது.

2. பாசிசம் என்பது மக்களின் நலன்களைவிடத் தேசிய இனவெறி நலன்களை முன்னிலைப்படுத்தியது.
இந்துத்துவா என்பது சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு மேலாக மதவழி தேசிய நலன்களை ஆதிக்க வன்முறையோடு முன்னிலைப்படுத்துவதாகும்.

3. பாசிசம் என்பது தனது அதிகார எல்லைகளை விரிவுபடுத்துவதாகும். அண்டை நாடுகள் பலவும் பண்டைய ஜெர்மானிய நாட்டின் பகுதிகளாக இருந்தவை என்று கூறி இட்லர் அந்த நாடுகளைக் கைப்பற்றினார்.

4. நாட்டின் சகல தீமைகளுக்கு யூதர்களே காரணம் என்று கூறி அவர்களைக் குறி வைத்து ஒழித்துக் கட்டியது பாசிசமாகும். நாட்டின் சகல தீமைகளுக்கும் முசுலிம்களும் சிறுபான்மையினருமே காரணம் எனக் கூறி அவர்களைக் குறி வைப்பது இந்துத்துவா ஆகும்.

5. பண்டைய பெருமைகளைப் பறை சாற்றுவதும் குறிப்பிட்ட இனத்தின் உயர்வைக் கூறுவதும் பாசிசமாகும்.
ஆரியர்களின் மேன்மையையும் உணர்வையும் கூறுவது இந்துத்வா ஆகும்.

6. யூதர்கள், கம்யூனிஸ்டுத் தொழிலாளர்கள் ஆகியோர் மீது ஒடுக்குமுறைகளைப் பாசிசம் ஏவியது. சமையல் அறையில் பணி புரிவதும், தேவாலயத்தில் தொழுவதும் குழந்தை பெறுவதும் பெண்களின் கடமையாகும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு முக்கியத்துவம் கிடையாது என்று கூறுவது பாசிசமாகும்.
அதைப் போலவே, தொழிலாளர்கள் நாட்டிற்காக உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் உரிமைகளைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. பெண்கள் இலட்சிய மனைவிகளாகவும், தாய்களாகவும் விளங்க வேண்டும். சிறுபான்மையினர் இந்துக் கலாச்சாரத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவது இந்துத்துவா ஆகும்.

7. மக்களிடையே இனவெறியை ஊட்டி யூதர்களுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகளை நடத்தியது பாசிச ஆ:டசி.
அதைப் போல பாபர்மசூதி தகர்ப்புக்குப் பிறகு சமுதாயத்தில் மனித உரிமைகளுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தின் மூலமும் மதவழி தேசிய வெறியை ஊட்டுவது இந்துத்துவா ஆகும்.

8. நகர்ப்புற நடுத்தர வர்க்கம் மற்றும் நிலப்பிரபுக்களுமே பாசிசத்தின் சமுதாய அடித்தளமாக அமைந்திருந்தார்கள்.
நகர்ப்புற மத்தியதர வர்க்கம், பெரும் நிலப்பிரபுக்கள், பார்ப்பனர்கள் மற்றும் மேல்சாதியினர் ஆகியோரே இந்துத்துவாவின் பிரதான ஆதரவுத் தளமாக அமைந்திருக்கிறார்கள்.

9. யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

பசு வளையப் பகுதியில் சமுதாயத் தளத்தை வகுப்பு வாதத்தின் மூலம் சிறிது சிறிதாகக் கைப்பற்றுவதிலும் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்ட பிறகு உயர் சாதியினரை அதற்கு எதிராகத் திருப்புவதிலும் இந்துத்வா வளர்ந்தது.

10. முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான பொருளாதார நெருக்கடியின் விளைவாக சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பைப் பாசிசம் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்தது. 1980-களின் நடுவில் வளர்ந்த வந்த வேலையின்மை, வறுமை ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு இந்துத்வா வளர்ந்தது.

இந்து ஃபாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய கடமை உண்மையான ஜனநாயக சக்திகளுக்கும், மொழிவழி தேசிய கட்சிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் மற்றும் முற்போக்காளர்கள் அனைவருக்கும் உண்டு. அனைவரும் ஓரணியில் திரண்டு ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.