பதவி வெளவால்களும் ஊழல் பெருச்சாளிகளும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 ஜூலை 2015 11:43

"திராவிட இயக்கத்தைச் சாய்க்க விடமாட்டேன். எத்தனையோ பேரின் தியாகத்தால் கட்டப்பட்ட மாளிகை இந்த திராவிட இயக்கம். இதை எந்தக் காலத்திலும் எப்படிப்பட்ட புயலும், ஏன்- பிரளயமே வந்தாலும் சாய்க்க முடியாது; சாய்க்கவும் விடமாட்டோம்.'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி சூளுரைத்துள்ளார்.

தி.மு.க.வை. சாய்க்க விடமாட்டேன் என அவர் கூறாமல் திராவிட இயக்கத்தை எனக் கூறியது ஏன்?

"புலிக்குப் பயந்து ஓடிப்போய் குப்புறப் படுத்துக் கிடந்த ஒருவன்' புலிக்குப் பயந்தவர்கள் என்மீது வந்து விழுங்கள் என்று கூறிய கதையாக கருணாநிதியின் கூற்று அமைந்திருக்கிறது.

1949ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தி.மு.க.வைத் தோற்றுவித்தபோது அக்கழகத்தின் நோக்கங்களாகக் கீழ்க்கண்டவைகள் அறிவிக்கப்பட்டன.

1. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், (துளுவம் உள்ளடங்க) கேரளம் ஆகிய மொழி வழி மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய சுயநிர்ணய அடிப்படையில் சுதந்திரத் திராவிட சமதர்மக் குடியரசுக் கூட்டாட்சியை நிறுவுவது.

2. சமத்துவம், சமதர்மம், பகுத்தறிவு நெறி கொண்ட திராவிட சமுதாயம் காண்பது.

தி.மு.க. தோன்றி 66 ஆண்டுகள் கடந்தோடி விட்டன. மேற்கண்ட நோக்கங்களில் எதுவும் இப்போது தி.மு.க.வில் இல்லை.

திராவிட நாடு கோரிக்கையைக் குழியில் தள்ளி மண்போட்டு மூடி அதன் மீது புல்லும் புதரும் மண்டி வளர்ந்து கிடக்கின்றன.

கழகத்தை தன் குடும்பமாக மதித்து அனைத்துத் தோழர்களையும் சமமாக மதித்து அரவணைத்தார் அண்ணா.

கழகத்தையே தனது குடும்பச் சொத்தாக்கி சமத்துவத்தை அடியோடு அழித்தவர் கருணாநிதி.

சமதர்மம் என்னும் நோக்கம் காணாமல் போய் வெகுகாலமாகிவிட்டது. அரசியலை மட்டுமே மூல தனமாகக் கொண்ட புதிய கோடிசுவரர்களின் கூடாரமாகக் கழகம் திகழ்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகக் கருணாநிதி குடும்பம் திகழ்கிறது.

மற்றொரு நோக்கமான பகுத்தறிவுக்குக் கழகம் விடைகொடுத்து நீண்டகாலமாகிறது. கருணாநிதியின் குடும்பத்தினர் உள்பட கழகத்தினர் குடும்பங்கள் ஏறி இறங்காத கோயில்கள் இல்லை. பெரியாரின் தலையாய சீடன் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கருணாநிதி கழுத்தில் மஞ்சள் துண்டை அணிந்தபோதே பகுத்தறிவு ஓட்டமாக ஓடிவிட்டது.

தமிழ்! தமிழ்! என முழங்கி ஆட்சியைப் பிடித்த வர்கள் அரசு, கல்வி, ஆகிய துறைகளில் ஆங்கிலத்திற்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

"உலகத் தமிழினத் தலைவர்!'' என கருணாநிதியை அவரது கட்சியினர் அழைத்துப் பெருமிதம் கொள்கிறார்களே தவிர உலகத் திராவிட இனத் தலைவர் என அவரை அழைப்பதில்லை. அவரும் அவ்வாறு சொல்வதை விரும்புவதுமில்லை.

பெரியாரும் அண்ணாவும் மதுவை அகற்றி மக்களைக் காப்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் மதுக்கடைகளைத் திறந்து சில தலைமுறைத் தமிழர்களை சீரழியச் செய்த பெருமை இரு கழகங்களுக்கும் உண்டு.

இரு கழகத் தலைமைகளும் தங்களுக்குக் கீழ் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரையும், ஊழலில் ஈடுபடுத்தி மொத்தத்தில் ஆட்சி நிர்வாகத்தையே ஊழல் மயமாக்கிவிட்டனர். இத்துடன் நிற்கவில்லை. மக்களையும் ஊழல் குட்டையில் ஆழ்த்துவதற்காக இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்திலிருந்தே அவர்களுக்குத் தொலைக்காட்சி, மாவு அரைக்கும் இயந்திரம், அரிசி போன்றவற்றை அள்ளிஅள்ளிக் கொடுத்ததோடு தேர்தல் நேரங்களில் அவர்களுக்குக் கட்டுக்கட்டாகப் பணத்தையும் கொடுத்து மக்களையும் கறைப்படுத்திவிட்டனர்.

இதன் மூலம் நாட்டின் சனநாயகத்தின் வேர்கள் அறுக்கப்பட்டு பணநாயகத்தை நிலைநிறுத்த இருகழகங் களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன.
இரு கழகங்களின் தற்போதைய நோக்கங்கள் பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

பதவியை வைத்துப் பணத்தைக் குவிக்க வேண்டும்''

குவிந்த பணத்தை வைத்துப் பதவியைப் பிடிக்க வேண்டும்!

இவற்றைத் தவிர வேறு நோக்கம் எதுவும் தி.மு.க.விற்குக் கிடையாது. இதன் சகோதரக் கட்சியான அ.தி.மு.க.விற்கும் அதுவே நோக்கம். இரு கழகங்களின் போட்டாப் போட்டியில் ஆட்சி நிர்வாகத்தில் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றன.

தமிழகத்தின் இயற்கை வளங்கள் தங்கு தடையின்றி சூறையாடப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளிலும் உள்ள மணல் கொள்ளையோ கொள்ளை என அள்ளப்படுகிறது. இதன் விளைவாக விவசாயமும் குடிநீரும் பாதிக்கப்படுவதைப் பற்றி இரு கழகங்களும் கவலை கொள்ளவில்லை. மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள். இரு கழகங்களின் ஆட்சியிலும் ஒரேகூட்டத்தினர் என்பது ஊரறிந்த இரகசியம்.

உலகத்திலேயே தரத்தில் உயர்ந்த கிரானைட் கற்கள் தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன. பல இலட்சம் கோடி பெறுமான இக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாதுமணல் கப்பல் கப்பலாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பன்னாட்டுக் குளிர்பான ஆலைகள் தமிழகத்தில் தொடங்க அனுமதிக்கப்பட்டு நாள்தோறும் நமது ஆறுகளிலிருந்தும், நிலத்தடி நீரிலிருந்தும் பல இலட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, குளிர்பானமாக மாற்றப்பட்டு நமது மக்களிடமே விற்கப்படுகிறது. உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் இப்பானங்களைத் தடுக்க இரு கழக அரசுகளும் எதுவும் செய்யவில்லை.

தோல் ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆகியவற்றின் மூலம் நமது ஆறுகளும், நிலத்தடி நீரும் மாசடைந்துவிட்டன. இவற்றைப் பருகும் நமது மக்கள் தோல்நோய்களால் அவதிக்குள்ளாவதைப்பற்றி இரு கழக அரசுகளுக்கும் கவலையில்லை.

தமிழகக் காடுகள் தங்குதடையில்லாமல் அழிக்கப் படுகின்றன. ஏரி, குளங்கள், ஆக்கிரமிக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுஉலை, தஞ்சை சமவெளியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், தேனி மாவட்டம் தேவாரத்தில் நியூட்ரினோ திட்டம் போன்ற மரணத் திட்டங்கள் தமிழக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழக வளங்களைச் சுரண்டுவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் தந்து ஊக்குவித்த பெருமை இரு கழகங்களுக்கும் உண்டு. பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழகத்தின் கதவுகளைத் திறந்துவிடுவதில் இரு கழகங்களும் போட்டிப் போட்டன.

ஆட்சியில் இருக்கும்போது இரு கழகத் தலைவர்களும் தங்களின் சொந்தக் கருவூலங்களை நிறைப்பதற்காக நாட்டின் வளங்களைச் சூறையாட அனுமதிக்கிறார்கள்.

இந்தப் போக்குத் தொடருமேயானால், எதிர்காலத் தலைமுறைக்குப் பாழடைந்த வளமிழந்த தமிழ் நாட்டையே நாம் விட்டுச்செல்வோம் என்பது உறுதி.
அண்ணா காலத்தில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கி காங்கிரசைத் தோற்கடித்தார்.

ஆனால், அவர் மறைவிற்குப் பின்னால் காங்கிரசோடு கூட்டுச் சேர கருணாநிதி ஒருபோதும் தயங்கிய தில்லை. அ.தி.மு.க. தலைமையும் அதே பாதையைப் பின்பற்றியது.

மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும் யார் முதலில் அக்கட்சிகளோடு கூட்டுச்சேர்வது என்பதில் இரு கழகங்களிடையே போட்டா போட்டி. இதன் விளைவாகத் தமிழகத்தின் நலன்கள் தில்லியின் பலிபீடத்தில் காவுகொடுக்கப் பட்டன.

வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்த கழகம் தெற்குத் தேய்ந்தாலும் பரவாயில்லை. வடக்கோடு கூட்டுச்சேர்ந்து வளமாக வாழ்வோம் என்ற புதிய முழக்கத்தை முன் வைக்கிறது.

தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிமீது தில்லி எத்தகைய நடவடிக்கையும் எடுத்துவிடக்கூடாதே என்பதற்காக தில்லியிடம் சரணாகதி அடைந்த கழகங்களுக்கு எதைப்பற்றியும் பேசுவதற்குத் தகுதி கிடையாது.

2009ஆம் ஆண்டில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இந்திய அரசின் உதவியுடன் சிங்கள அரசு பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்த போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் எதிர்க்கட்சியில் இருந்த ஜெயலலிதாவும் கண்டும் காணாததுபோல் இருந்தனரே தவிர இந்திய அரசை வற்புறுத்தி போர் நிறுத்தம் கொண்டுவரவும் அந்த மக்களைப் பாதுகாக்கவும் எதுவும் செய்யவில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான 2ஜி அலைக் கற்றை ஊழலை மிகத்திறமையாகச் செய்து காட்டியது கழகக் கறை போட்ட வேட்டிக்கட்டிய ஒரு தமிழன்தான்.
கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி, மகள் மற்றும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள், எள் என்பதற்கு முன் எண்ணெயாகச் செயற்பட்ட அதிகாரிகள் அத்தனைபேரும் ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்கள் செய்த ஊழல்கள் எதுவாக இருந்தாலும் கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் செய்திருக்க முடியவே முடியாது. ஆனால் இவர் மீது மட்டும் ஒரு ஊழல் வழக்குக்கூட பதியப்படவில்லை என்பது ஒரு பெரும் புதிர்தான்.

இவருடைய ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் செய்தவர் என்ற பட்டத்தைச் சூட்டியது இதனால்தான்போலும்.

தன்மீது படிந்துவிட்ட ஊழல் கறைகளை மறைப்பதற்காகத் திராவிட இயக்கம் எனக் கூப்பாடு போட்டுத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மற்றவர்களையும் அழைக்கிறார்.

மற்றொரு கழகத்தின் தலைவியோ ஊழல் வழக்கில் சிக்கிச் சிறைசென்றபோது அவரது அமைச்சர்களும் தொண்டர்களும் கோயில் கோயிலாக ஏறி இறங்கியும், தீ மிதித்தும், காவடி எடுத்தும் நடத்திய பகுத்தறிவுக் கூத்துக்கள் நாட்டையே சிரிக்க வைத்தன.

ஊழல் சேற்றில் திளைத்து எழுந்து தனது உடலெங்கும் கறைபடிந்து காட்சியளிக்கிற இரு கழகங்களோடு யார் சேர்ந்தாலும் அவர்கள் மீதும் ஊழல் கறைபடியும். தங்கள் மீதுள்ள ஊழல் கறையை மற்றவர்கள் மீதும் பூசுவதற்காகவே திராவிட இயக்கத்தைச் சாய்க்கவிடமாட்டேன் என கருணாநிதி சவால் விடுகிறார்.

"எத்தனையோ பேரின் தியாகத்தால் கட்டப்பட்ட மாளிகை இந்த திராவிட இயக்கம்'' என கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால், அந்த மாளிகையில் இப்போது பதவி வெளவால்களும், ஊழல் பெருச்சாளிகளும் திரிகின்றன.

நன்றி : தினமணி 22-06-2015

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.