மே-18, 2015 கனடாவின் அழகான டொரண்டோ மாநிலத்தில் உள்ள "ஆல்பர்ட் கேம்பல்' திடல். துயரம் ததும்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தலைகளால் நிரம்பிவழிந்தது. ஒருபக்கம் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட தமிழீழத் தேசத்தில் நடந்துமுடிந்த இனப்படுகொலைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருக்க, அடக்கிய கண்ணீரோடும் வெளிப்படுத்த முடியாத குமுறல்களோடும் ஓர் இயந்திரத்தைப்போல அக்காட்சிப் படங்களைப் பார்த்தவாறு நகர்ந்துகொண்டிருந்தனர். மற்றொரு பக்கத்தில் அயலகத்தில் பூத்த மலர்களைக் கையில் ஏந்தித் தம் மண்ணில் சிதைக்கப்பட்ட உயிர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி ஒரு பெரும் வரிசை நகர்ந்துகொண்டிருந்தது.
கனடாவின் தேசிய கீதமும் தமிழீழத்தின் தேசிய கீதமும் அடுத்தடுத்து ஒலித்துமுடிந்தபின், "முள்ளிவாய்க்கால் மண்ணே' பாடலுக்கு நம் இளைய தங்கை ஒருவர் நாட்டியம் ஆட, நிகழ்ச்சி தொடங்கியது. கனடா தமிழீழ மக்களின் பொறுப்பாளர் சிறீரஞ்சன் மற்றும் அங்குள்ள நாடாளுமன்ற வெள்ளை உறுப்பினர்கள் தங்களது உரைகளை நிகழ்த்தினார்கள்.
"முதன்முதலாகத் தமிழீழ மண்ணின், மக்களின் இன அழிப்பை ஐ.நா. சபையில் காட்சி ஊடகத்தில் அரங்கேற்றிய எங்களின் இனமான இயக்குநர், வ.கெளதமன் அவர்களை அழைக்கிறோம்'' என்கிற பாசத்துடன் கூடிய வரவேற்போடு நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.
என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான எம் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும், மேதகு பிரபாகரன் குடும்பத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த எம் உறவுகளுக்கும் வணக்கம் என்று கூறித் தொடங்கிய எனது உரையில், இந்தப் பூமிப்பந்தில் தமிழர்களின் வரலாறு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் கொண்டதென்றும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செறிவான இலக்கண நூலான "தொல்காப்பியத்தை' உடைமையாகக் கொண்டவன் தமிழன் என்றும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்திற்கு கல்லணையைக் கட்டி விவசாயத்தைக் கற்றுத்தந்தவன் மாமன்னன் கரிகாலன் என்றும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்களின் பெருமன்னர்கள் "இராஜராஜனும்' "இராசேந்திரசோழனும்' இந்தியாவின் பெரும்பகுதியை மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளை ஆண்டவர்கள் எம்முன்னோர்கள் என்றும் கூறிவிட்டு, மேற்கண்ட இவர்களைப் போலவே நம் தமிழீழ மண்ணை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "எல்லாளன்' மன்னன் ஆண்டதையும் அடுத்தடுத்து "சங்கிலியனும்' "பண்டார வன்னியனும்' ஆண்டதையும் எடுத்துச்சொல்லி இந்தப் பூமிப் பந்தில் நாங்கள் ஏதோ வாழ்ந்துவிட்டுப் போனவர்கள் அல்ல, கோட்டைகட்டிக் கோலோச்சி ஆண்டவர்கள் என்பதைக்கூறி, இழந்த நம் நிலங்களை, இழந்த நம் உரிமைகளை, இழந்த நம் மானத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் எதிர்வரும் நம் தலைமுறைகள் எங்கள் வரலாறும் வரைபடமும் எங்கே என்று கேட்டு, மறைந்துபோன நம் கல்லறையின்மீது காறித்துப்புகின்ற நிலைமை வந்துவிடும். ஆகையினால் நம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் சொன்னது போல் "இலட்சியத்திற்காகக் கெளரவத்தை இழக்கலாம்; கெளரவத்திற்காக இலட்சியத்தை இழந்துவிடக் கூடாது' என்கிற பொன் மொழியைச் சொல்லி நாளையப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகும் தமிழீழத்திலும் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற என்னுடைய தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் ஆய்த எழுத்தைப் போல (ஃ), ஒத்தகருத்தோடு ஒரே நிலையில் நின்று உக்கிரமாகப் போராடுமாறு அன்புக் கட்டளையிட்டுவிட்டு மேலும் சில செய்திகளை எம் உறவுகளோடு பகிர்ந்துகொண்டு என் உரையை முடித்தேன்.
கூட்டம் முடிந்த அன்றைய இரவு 12 மணிக்கு அண்ணன் மோகன் அவர்கள் தலைமையில் ஒன்றாகக் கூடினோம். நிகழ்வைப் பற்றி அனைவரும் கருத்துச் சொன்னார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் நெகிழ்ந்து நெகிழ்ந்து பேசினார்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மறுஆண்டு 2010 இல் கூடிய கூட்டத்தை விட இந்த ஆண்டு அதிகக் கூட்டம் என்றும், அதுவும் இறுதிவரை கூட்டம் கலையவே இல்லை என்றும் கூற எனக்கு நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
என்முறை வந்தபோது எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நம் தமிழர்களும் அவர்களை ஒழுங்கு படுத்துகிற கனடியத் தமிழர் தேசிய அவையும் ஒற்றுமையாக நிற்பதை மனதாரப் பாராட்டி மேலும், அடுத்தடுத்து நாம் அனைவரும் செய்ய வேண்டிய பணிகளை நான் அன்போடு கூறியபோது அதனைப் பற்றிய ஆலோசனையாக அடுத்தடுத்த கட்டம் நகர்ந்தது.
பின்னிரவு கூட்டம் முடிந்து அவர்கள் என்னை அறைக்கு கொண்டுவந்துவிட்டபோது அதி காலையாக இருந்தது. அதன்பிறகு தூக்கம் எளிதாக வரவில்லை. கனடா மண்ணில் கால் வைத்த நொடிக்கு என் மனம் ஓடியது. "டொரண்டோ" விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய என்னையும் என்னுடன் வந்த பாடலாசிரியர் சினேகன் அவர்களையும் பாசம் தழுவிய முகங்களோடு மோகன், தேவா, ரொனால்ட் மற்றும் நம் அன்புக்குரிய உறவுகள் புடைசூழ வருகை தந்து கட்டியணைத்து அழைத்துச் சென்றது முதல், கடந்த மூன்று நாட்களாகக் குழுக் குழுவாக அமைத்து எங்களுக்கு உணவு கொடுக்கவும் எங்களை ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுக்கு அழைத்துச் சென்றும் சிறு சிறு தீவுகள் உள்ளிட்ட நயாகரா நீர்வீழ்ச்சியைக் காட்டி வந்ததும் நினைவில் வந்து வந்து அலைமோதின.
பெற்றவர்கள் ஒரு பெண்ணைப் பாதுகாத்துப் பாசம் காட்டுவதைப்போல எங்களை வழிநடத்தினார்கள். முதலில் நம் உறவுக்குடும்பங்கள் மூன்று, நான்கு பேர் மட்டும் எங்களை அவர்கள் வீட்டிற்கு உணவு உண்ண அழைத்திருந்தார்கள். படிப்படியாக வளர்ந்து கிட்டத்தட்ட இருபது குடும்பங்களுக்குமேல் உணவுக்கு அழைக்க, தடுமாறிப்போன நமது ஏற்பாட்டாளார்கள் உடனே ஆலோசனை நடத்தி ஒரு வீட்டிற்குச்சென்று இன்னொரு வீட்டிற்குச் செல்லவில்லை என்றால் மிகுந்த மனச்சிக்கல் ஏற்படும் என்று முடிவு செய்து, அனைத்து விருந்தையும் மறுக்கவேண்டிய நிலைவந்ததை எண்ணி ஒருபக்கம் வருத்தமாகவும் இன்னொரு பக்கம் முகம் தெரியாமல் வாழ்ந்த நிலையிலும்கூட எங்கள் மீது வைத்த பாசத்தை எண்ணி அகம் நெகிழ்ந்தும் போனது.
டொரண்டோவிலிருந்து 500 கி.மீ தள்ளியிருக்கும் இன்னொரு மாநிலம் "மொன்றியல்'. அங்கு நம் உறவுகளைச் சந்திக்கும் ஒரு நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. நம் அண்ணன்களோடும் தம்பிகளோடும் பயணம்செய்து ஓர் இரவின் தொடக்கத்தில் அவர்களோடு இணைந்தோம். நான் இறுதியாகப் படைப்புச் செய்த "இது இனப்படுகொலையா? இல்லையா?' என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது. படைப்பினைப் பார்த்து அனைவரும் கதறினர். 92 வயதுப் பெரியவர் ஒருவர், என் கையினைப் பிடித்துக்கொண்டு "தலைவர் மேல நம்பிக்கை இருக்கு. நாடு அடைஞ்சே தீருவோம்' என்று உறுதிபட கண்கள் விரித்து பெருநம்பிக்கையோடு பேசியதுகேட்டு என் உள்ளம் சிலிர்த்தது. ஐந்து வயதே நிரம்பிய ஒரு சிறுமி ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு "மறந்துபோகுமோ மண்வாசனை.. தொலைந்துபோகுமோ தூரதேசத்தில்.." என்று வாடிய சோகத்தில் பாடிய குரலை இப்பொழுதும் மறக்கமுடியவில்லை. பெரும் வரலாறு கொண்ட, என் இனத்தின் பிஞ்சுகளையும் என் இனத்தின் பெரியோர் களையும் இலங்கை அதிகாரவர்க்கம் சிதைத்துப்போட்டது மட்டுமல்ல, இந்தப் பூமிப்பந்து முழுக்க இப்படிச் சிதறடிக்கப்பட்டுக் கிடப்பதையும் இந்த உலகம் இன்னும் வேடிக்கை பார்க்கிறதே என்று எண்ணி எண்ணிக் கோபம் கொப்பளித்துக் காறி''த்தூ.. எனத் துப்பவேண்டும் என்று தோன்றியது.
கூட்டம் முடிந்து, முரளி அவர்கள் வீட்டில் இரவு உணவு. காரில் அவர் வீடு நோக்கிச் செல்லும்போதே அவரைப்பற்றிய குறிப்புகள் எங்களிடம் சொல்லப்பட்டது. ஊசிபோல் குத்திக்கொண்டிருக்கும் குளிரில் முரளி அண்ணனின் சேவைகள் பற்றியும் ஆறுமாதத்திற்கு முன்பு அவர் அகால மரணமடைந்தது பற்றியும் வாழ்நாள் முழுக்கத் தமிழீழ விடுதலைக்காக உழைத்தவர் தமது குடும்பத்திற்காகத் தம் குழந்தைக்காக - ஒரே ஒரு காசு கூடச் சேர்த்துவைக்காமல் தமக்கென வீடு கூட இல்லாமல் இந்த மண்ணில் மறைந்தவர் என்று சொல்லி முடிக்கும்போது, அவரின் வாடகை வீட்டிற்கு அருகில் வந்துவிட்டோம். படியேறி வாசலை அடைய, அண்ணியும் முரளி அண்ணனின் சிறுவயது மகனும் எங்களைப் பாசத்தோடு வரவேற்றார்கள். கண்களில் ஒளியோடும் பேரழகோடும் இருந்த முரளி அண்ணனின் புகைப்படத்திற்கு மலர்வைத்து வணங்கினோம்.
அவரின் உயிர் நண்பர் ஒருவர், "இந்நேரத்தில் முரளி இருந்திருந்தா.. உங்களக் கவனிக்கிற விதமே வேற.. தேசியம், தேசியம் என்று உயிரைக் கொடுப்பான்.. தேசியம் கிடைக்கிறதுக்கு முன்னாடியே எங்கள விட்டுப் போயிட்டான்..' என்றதும் எனக்குப் பின்னால் பெருமூச்சும் பெருவிம்மல் ஒன்றும் வந்தன. என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. என் இனத்தின் நேர்மையான விடுதலைக்காக நேரிடையாகவும் இந்தப் பூமிப்பந்தில் மறைமுகமாகவும் இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் போகவேண்டும்.. என்கிற கனத்த மனத்தோடு அண்ணி தன் கையால் எடுத்துவைத்த ஈழத்து உணவுகளை உண்டுவிட்டு ஆறுதல் சொல்லக்கூடச் சொற்கள் இன்றிப் படியிறங்கியபோது அண்ணியின் கைப்பிடித்து நின்ற முரளி அண்ணனின் வாரிசின் கண்களில் தெரிந்த ஒளி எனக்குப் பெரு நம்பிக்கையை ஊட்டியது.
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் நினைவேந்தலுக்காக அழைக்கப் பட்டிருந்தோம். தமிழர்களால் கட்டப்பட்ட அய்யப்பன் கோயிலின் உள்ளரங் கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புங்குடுத்தீவு முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவி வித்தியாவுக்கு இரங்கல் செய்ய என்னை மேடைக்கு அழைத்தார்கள். மலர் வணக்கம் செய்துவிட்டு நான் உரையாற்றிய போது "முழுக்க முழுக்க எங்கள் வீட்டின் உடன்பிறந்தாளுக்கு நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுஞ்செயலுக்கு இலங்கை அதிகார வர்க்கமே காரணம் என்றும், அங்குலம், அங்குலமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இராணுவத்திற்கு நடுவே இது நடந்ததோடு மட்டுமல்லாமல் ஒழுக்கமாக இருந்த எங்களது இளைஞர்களை மதுவுக்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையாக்கிய இராசபக்சேவும் சிறிசேனாவும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, இதற்காக ஈழத்தில் நடந்த போராட்டங்களில் எம் தமிழீழப் பள்ளி மாணவர்கள் கையில் ஏந்திய பதாகைகளில், "இருப்பவர்கள் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா" என்கிற வாசகங்களைச் சுட்டிக்காட்டி, "ஏ உலக அதிகார வர்க்கமே..எங்களுக்குக் கொடுக்க வேண்டிய நீதியை உடனே கொடு.. இல்லையேல் அவர்களைப்போல் இவர்களும் மாறுவதை இந்த உலத்தில் எவராலும் தடுக்க முடியாது" என்று பேசிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தேன்.
இதன்பின்பு சிறு சிறு சந்திப்பெனச் சில நிகழ்வுகள் நடந்தேறின. இறுதியாக 25--05--2015 அன்று எங்களுக்கு விடையளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஓர் அரங்கத்தில் ஒன்று கூடினார்கள். அண்ணன் அருமை அவர்களின் புதல்வியின் நாட்டிய நிகழ்வில் தொடங்கி, நான் இயக்கிய "வேட்டி" குறும்படமும் ஐ.நா வில் திரையிடப்பட்ட "பர்சியூட் ஆஃப் ஜஸ்டிஸ்' என்கிற ஆவணப்படமும் திரையிடப்பட்டன. உணர்ச்சிப்பெருக்கோடு கூடிய அந்தச் சூழலில் நான் மேடை ஏற்றப்பட்டேன். நான் செய்த படைப்புகளுக்காக நன்றி தெரிவித்தமையால், அதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு, என் குடும்பத்திற்காக நான் செய்யும் செயலுக்கு நன்றி சொல்வது என்னைச் சிறுமைப் படுத்துவதற்குச் சமம் என்று கூறி, "என் இனம் விடுதலை அடையும்வரை நான் படைப்பாலும் செயல்களாலும் இயங்குவேன். தமிழராகப் பிறந்தவர்கள் யார் எங்கு இருந்தாலும் என்ன வேலை செய்யினும் நம் இனத்தின் விடுதலைக்காக உறுதியுடன் வேலை செய்யவேண்டும். நாம் இப்பொழுது நிற்பது விளிம்புநிலை. நாம் இப்பொழுது மீட்டெடுக்க முடியவில்லை என்றால் பின்பு எப்பொழுதும் நம் விடுதலையை வென்று எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்கள் ஒரே கருத்தில் ஒற்றைத் தீயாய் நில்லுங்கள். நான் ஒரு படைப்பாளியாக இருப்பதால் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்கிற வீர காவியத்தை அடிப்படையாகக் கொண்டு என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையையும் வீரம் செறிந்த நமது விடுதலைப் போராட்டத்தையும் திரைப்படமாக எடுக்க உள்ளேன். எனது இரத்தம் சூடாக இருக்கும்போதே, எனக்குள் படைப்பு ஆளுமை நிறைந்து நிற்கும்போதே நம் தலைவர் அவர்கள் பற்றிய படைப்பையும் அண்ணன் பால்ராஜ் அவர்கள் பற்றிய படைப்பையும் செய்து முடிக்க உலகத் தமிழர்களாகிய நீங்கள் பேருதவி செய்ய வேண்டும்'' என்று உரிமையோடு கேட்டுக்கொண்டு விடைபெற, என்னையும் கவிஞர் சினேகனையும் நிற்கவைத்து ஒட்டுமொத்தக் குடும்பங்களும் எழுந்து நின்று கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இடைவிடாது கைதட்டியது மெய்சிலிர்க்கச் செய்தது, ஏனோ கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அனைவரும் உணவருந்த நான் மட்டும் முன்பே கூறியிருந்தபடி இளையோர்கள் கூடியிருந்த இடத்திற்குச் சென்றேன். இனிமேல் எந்த நிகழ்வு செய்தாலும் ஈழத்தின் வடக்கு, கிழக்கு மாணவர்களும் தமிழ் நாட்டின் மாணவர்களும் கனடா உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாணவர்களும் ஒவ்வொருமுறையும் ஒரே கொள்கையை முன்வைத்து, ஒரே நேரத்தில் ஒற்றைக்குரலாக இந்த உலகத்தின் செவிட்டுச் செவிகளைத் திறக்கப் போராட வேண்டும் என்று எனது அன்பான கோரிக்கையை வைத்து, அதற்கான அவசியத்தையும் விளக்க, அவர்கள் உள்ளன்போடும் பெரு உணர்வோடும் இணைப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னது எனக்குப் பெரு நம்பிக்கையையும் பெரு மகிழ்ச்சியையும் தந்தது.
மே 26 ஆம் நாள். எட்டு நாட்களுக்கு முன்பு வந்திறங்கிய அதே டொரண்டோ விமானநிலையம். வரவேற்க வந்த மோகன் அண்ணா, தேவா அண்ணா, ரொனால்டா அண்ணா உள்ளிட்டவர்களோடு மேலும் பல உறவுகளும் வழியனுப்ப வந்திருந்தார்கள். எட்டு நாட்கள் அந்த மண்ணில் வாழ்ந்த வாழ்வு எட்டு ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையாக மனத்தை அழுத்தியது. அவர்களும் நாங்களும் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு புன்னகைத்தபடி பேசிக் கொண்டிருந்தபோது, சரிபார்ப்புக்குரிய நேரம் நெருங்குவதைத் தம்பி குமரன் சொன்னார். கண்களில் நீர் கோர்க்க "வெல்வோம்" என்ற ஒற்றைச் சொல்லுடன் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி விடைபெற்றோம்.
கனடியத் தமிழர் தேசிய அவையும் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கிற என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் குடும்பத்தின் எனது சக உறவுகளையும் மீண்டும் சந்திக்க மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.. கனடாவில் அல்ல, விடுதலைபெற்ற எழுச்சிமிக்க எனது தமிழீழத் தேசத்து மண்ணில்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். |