கவிஞர் தெசிணி கடிதம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 ஜூலை 2015 13:48

பெருமதிப்பிற்குரிய மாவீரர் அவர்களுக்கு...

வணக்கம். தமிழர்கள் நலமும் குடும்பத்தினரின் நலமும் அறிய நாட்டம்.
இன்றைய "தினமணி'யில் (பதவி வெளவால்களும் ஊழல் பெருச் சாளிகளும்) தங்கள் கட்டுரையைப் படித்ததும், இம்மடலை எழுதுகிறேன்.

வரவர உலகியல் போக்குகளைக் கண்டால், ஏடுகளில் படித்தால், நெஞ்சு புண்ணாகின்றது.

நம் தமிழகத்தின் நிலையோ, சொல்லுந்தரத்தினதாய் இல்லை. எவரும், முந்தைய தலைமுறையினரைப் போல், நாடு பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படுவதாகத் தோன்றவில்லை, ஏன், எண்ணிப் பார்க்க முனைவதும் இல்லை!

இக்கொடிய சூழலில், அறமுரைப்பார்-நடுநிலை நின்று அறிவுரைப்பார் ஒருவரேனும், துணிந்தெழுந்து குரல் கொடுக்காரோ என்று ஏங்குவேன்.

"இத் தலைமுறையில், யானொருவன் உளேன், தட்டிக்கேட்க!'' என்றெழுந்த தங்கள் கொதிப்பை/உணர்வைத் தங்கள் கட்டுரையில் கண்டதால், நெஞ்சு நிறைந்து, இம்மடலை, இயலாத நிலையிலும், எழுதி என் பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திருந்துவார்கள் என்பது முயற்கொம்பே, எனினும் திருத்த, பண்பட்ட தலைவர் தாங்கள் முனைந்திருப்பது என் போன்றோர்க்கு நிறைவைத் தருவதாகும்.
தமிழகத்தைப் பிடித்துள்ள இச் சனி என்று பெயருமோ?

"ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்'' என்று பொறுப்புணர்வோடு அம்பலப்படுத்தியுள்ள தங்களை, நல்லோர் அனைவரும் தலைமேல் வைத்துக் கொண்டாடுவர், தமிழ்த்தாய் நெஞ்சம் குளிர்ந்து நிற்கின்றாள், தாங்களேனும் இத் தமிழ் மண்ணின் பொதுநலம் பற்றிப் பொழுதெல்லாம் எண்ணி எண்ணிச் செயற்பட்டு வருவது கண்டு கண்டு.
இன்று தங்களைவிட்டால் தமிழகத்திற்கு வேறு கதி இல்லை. பணிவார்ந்த நன்றி தங்கள் பொறுப்புணர்வுக்கு!

இதை எழுதிக் கொண்டிருந்தபோது, சரியாக 46 ஆண்டுகட்கு முன், தாங்கள் சிறைப்பட்டபோது, என் "கவிதை' இதழில் (01.06.1969) யான் முகப்பில் எழுதிய கவிதை கண்ணிற் பட்டது. அப்போது அதைப் படித்தீர்களா என்று தெரியாது. அப்போதே இக்கொடுமைகளின் தொடக்கத்திலேயே எதிர்த்துச் சிறைப்புகுந்தவர் தாங்கள். "இளைதாக முள்மரம், களைய முயன்றீர்கள் அப்போதே, இன்றோ வளர்ந்து வதைக்கின்றது. இதன் வெளிப்பாடே தங்களின் தற்போதைய கட்டுரை. என்சொல்லிப் போற்றுவேன்.

அன்புடன்
தெசிணி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.