அத்வானி ஊதிய அபாயச் சங்கு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 ஜூலை 2015 13:50

1975ஆம் ஆண்டு சூன் 25இல் பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். அதன் 40ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி பா.ஜ.க.வின் மூத்தத் தலைவரான அத்வானி "தற்போதையக் காலக்கட்டத்தில் அரசியல் சட்டம், சட்டத்திட்டங்களுக்கான பாதுகாப்பு முறைகள் இருந்தாலும்கூட சனநாயகத்தை அழிக்கிற சக்திகள் வலிமை பெற்றிருக்கின்றன. தற்போது உள்ள அரசியல் தலைமை முதிர்ச்சியற்றதாக இல்லை. நெருக்கடி நிலையை மீண்டும் கொண்டுவந்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது அறவே இல்லையென்று சொல்லிவிடமுடியாது. எந்தவொரு தாக்குதலிலிருந்தும் சனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை எனக்கு வழங்குகிற சிறப்பான தன்மை இன்றைய அரசியல் தலைமையிடம் குறைவுபட்டுள்ளது. நெருக்கடி நிலைமை காலகட்டத்தி லிருந்து இன்றுவரை மனித உரிமைகள் மீண்டும் நிறுத்திவைக்கப்படமாட்டாது என்றோ அழிக்கப்படமாட்டாது என்றோ வாக்குறுதிகள் அளிக்கும் வகையில் எதுவும் நடைபெறவிருப்பதாக நான் கருதவில்லை. பத்திரிகைகளும் நீதித்துறையும்தான் இந்திய சனநாயகத்தின் நம்பிக்கை ஆகும். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போதுதான் இவை எந்த அளவுக்கு உண்மையான அக்கறையுடன் செயல்படும் என்பது தெரியவரும்'' என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க.வில் மட்டுமல்ல இந்திய அரசியலில் மிக மூத்தத் தலைவர்களில் அத்வானியும் ஒருவர் ஆவார். நெருக்கடி நிலை மீண்டும் வராது என்று சொல்வதற்கில்லை என அவர் ஊதியுள்ள அபாயச் சங்கு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

1975ஆம் ஆண்டு எத்தகைய சூழ்நிலையில் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது இன்றைக்கு அத்தகைய சூழ்நிலை மெல்ல உருவாகிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது.

1975ஆம் ஆண்டு சூன் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்கா "இந்திராகாந்தி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது செல்லாது என்றும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பதவிகளுக்கு அவர் போட்டியிடுவதைத் தடைசெய்தும் தீர்ப்பளித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமர் பதவியிலிருந்து இந்திராகாந்தி உடனடியாக விலக வேண்டும் என வற்புறுத்தின. பதவியில் தான் தொடர்வதற்காக நெருக்கடி நிலையை அறிவித்தாக வேண்டிய அவசியம் இந்திராவிற்கு ஏற்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதிலிருந்து தப்பி நாடாளு மன்றத்திற்குள் இரகசியமாகப் புகுந்த நாடாளுமன்ற தி.மு.க.வின் தலைவராக இருந்த இரா. செழியன், நெருக்கடி நிலைக்கு எதிராக அங்கு பின்வருமாறு முழங்கினார்.

"1971 டிசம்பர் 2ஆம் தேதி, பிரதமரின் அறைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவசர காலச் சட்டம் போட வேண்டியதன் கட்டாய நிலை விளக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், நாடாளுமன்றத்தில் தீர்மானம் வந்தபொழுது, அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் தந்தனர்.

1971 டிசம்பர் 3ஆம் நாள் அவசரகால அறிவிப்பு இன்றி, நாடாளுமன்றத்தில் நாங்கள் முழு ஆதரவைத் தந்தபொழுது, தீர்மானத்தை முன்வைத்த அமைச்சர் திரு. கே.சி.பந்த் அவர்கள், ்அவசர கால அதிகாரம் அவசியமில்லாமல் பயன்படுத்தப்பட மாட்டாது. அரசியல் காரணங்களுக்காகப் பிரயோகம் செய்யப்பட மாட்டாது. குறித்த தேவைக்கு மேல் ஒரு நாள்கூட நீடிக்காது' என்று வாக்குறுதி தந்தார். வாக்குறுதி என்னவாயிற்று? பங்களாதேஷ் போர் 14 நாள்களில் முடிவடைந்தது. சுதந்திர வங்கம் உருப்பெற்றது. ஒரு கோடி அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர். போர் நிலைமை நீங்கியது. சிம்லா அமைதி உடன்பாடு வந்தது. இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையே போக்குவரத்துத் தொடங்கியது. வர்த்தக உடன்பாடு ஏற்பட்டது. நல்லெண்ணக் குழுக்கள் பறிமாறப்பட்டன. இவ்வளவுக்குப் பிறகும் அவசர காலம் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீண்டு விட்டது.

அவசர காலத்தின் பேரில் எடுத்துக்கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கைவிட மத்திய அரசு மறுக்கிறது. அவசர காலத்தை நீக்கி, பழைய உரிமைகளை மீண்டும் தருமாறு, ஒவ்வொரு தொடர் கூட்டத்திலும் நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டு வருகிறோம். அதற்குப் பதில், இருந்த அவசர கால நிலைக்கு மேல், இன்னோர் அவசர கால நிலைமையை அமல்படுத்தியதுதான்'' எனக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு பத்திரிகைகளில் அவர் பேச்சு இருட்டடிப்பு செய்யப் பட்டாலும், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியானது. தலைமறைவாக இருந்த தொண்டர்கள் அவருடைய பேச்சை கோடிக்கணக்கில் அச்சடித்து இந்தியாவெங்கும் மக்களிடையே பரப்பினார்கள். செழியன் அவர்களின் பேச்சு இருண்ட வானத்தில் மின்னல் ஒளிபோல மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது.

ஆனாலும், இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன என இந்திரா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் முறையிட உரிமையில்லை எனவும் அரசு அறிவித்தது. ஆனால், 1976ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நெருக்கடி நிலைக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டபோது 5 நீதிபதிகள் கொண்ட ஆயம் இம்மனுவை விசாரித்தது. நான்கு நீதிபதிகள் அரசின் முடிவு சரியே என தீர்ப்பளித்தனர். நீதிபதி ஹெச்.ஆர். கன்னா மட்டுமே மாற்றுத் தீர்ப்பை வெளியிட்டார். அடிப்படை உரிமைகள் இரத்து செய்யப்பட்டால் அதன் விளைவு எவ்வளவு கேடுகளை உருவாக்கும் என்பதை தொலைநோக்குடன் சிந்தித்தார். மாற்றுத் தீர்ப்பு அளித்தால் தலைமை நீதிபதி பதவி தனக்குக் கிடைக்காது என்பது தெரிந்தும் அவர் துணிவுடன் செயல்பட்டார்.

அதன்படியே 3 மூத்த நீதிபதிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு படிநிலையில் மிக இளையவரான ஏ.என்.ரே என்பவரை தலைமை நீதிபதியாக இந்திரா நியமித்தார். அதன் விளைவாக மூத்த நீதிபதிகள் பதவி விலகினார்கள்.

நெருக்கடி காலக் கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவரான நீதிநாயகம் ஜெ.சி.ஷா பின்வருமாறு கூறினார். "இந்திய நாட்டின் எந்தப் பகுதியிலும் நெருக்கடி நிலைகளைக் கொண்டுவருவதற்கு ஏற்ற வகையில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.அதிகாரத்தில் தான் தொடரவேண்டும் என்பதற்காகவே இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். இதன் மூலம் சிலரின் பேராசைகளை நிறைவேற்றுவதற்காக ஏராளமானவர்களின் நலன்கள் பாதிக்கப்பட்டன.''

நெருக்கடி நிலை அமுலில் இருந்த 21 மாதங்களில் 1,40,000 பேருக்கு மேல் கைதுசெய்யப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்ட்டி இன்டர்நேசனல் அறிவித்தது. பல்லாயிரக்கணக்கானவர்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. ஏழை மக்களின் குடிசைகள் பிய்த்தெறியப்பட்டன. பத்திரிகைகளுக்குச் செய்தி தணிக்கை கொண்டுவரப்பட்டு அவைகள் முழுமையாக சுதந்திரம் இழந்தன.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்தக் காலத்தில்கூட 1944ஆம் ஆண்டில் வங்காளத்திலும், மும்பையிலும் மட்டுமே நெருக்கடி நிலை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதே தவிர நாட்டின் பிறபகுதிகளில் கொண்டுவரப்படவில்லை.

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டு நாடெங்கும் பெரும் பதட்டம் உருவான காலத்தில்கூட அப்போது பிரதமராக இருந்த நேரு நெருக்கடி காலச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை.

இந்திரா காலத்தில் நிலவிய சூழ்நிலை பிரதமர் மோடியின் காலத்திலும் நிலவுகிறது.
1. அமைச்சரவையின் அனைத்து அதிகாரங்களும் பிரதமரின் செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அமைச்சர்களின் துறைகளுக்கு உயர் அதிகாரிகளை

பிரதமரின் செயலகமே நியமித்தது. இதன் விளைவாக அமைச்சர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் மூலம் பிரதமர் செயலகம் ஆணைகளைப் பிறப்பித்தது. அமைச்சர்கள் வெறும் பொம்மைகளாக இருந்தனர். பிரதமர் இந்திரா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த முறைகேடு மோடியின் காலத்திலும் தொடர்கிறது.

2. இந்திராவின் காலத்தில் அவருடைய கொள்கைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அதிகார வர்க்கம் உருவாக்கப்பட்டது. இப்போது மோடியின் காலத்திலும் அது தொடர்கிறது.

3. காங்கிரஸ் கட்சிக்குள் மூத்தத் தலைவர்களை இந்திரா ஒதுக்கி காங்கிரசைப் பிளந்து தனக்கென ஒரு காங்கிரசை உருவாக்கிக்கொண்டார்.
பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களையும் மோடி ஒதுக்கி வைத்திருக்கிறார். கட்சிக்குத் தலைவராக தனது நெருங்கிய தோழரான அமித்ஷாவை நியமித்து கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.

4. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும் இந்திராவிற்கு விசுவாசமாக நடந்துகொள்வதின் மூலமே பதவிகள் கிடைக்கும் என நம்பினார்கள். மோடியின் புகழ் பாடுவதன் மூலமே அரசியலில் உயரமுடியும் என்னும் போக்கு பா.ஜ.க.வில் பரவி வருகிறது.

5. 1971 டிசம்பரில் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்து சுதந்திர வங்காளத்தை உருவாக்கியதன் மூலம் நவீன துர்க்கையாக இந்திரா போற்றப்பட்டார்.
அதே வழியைப் பின்பற்றி பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கையாண்டு அதை அடிபணியச் செய்தால் தன்னுடைய தலைமையை யாரும் அசைக்க முடியாது என மோடி கருதுகிறார்.

6. மரபுகளையும், கொலிஜியத்தின் பரிந்துரைகளை மீறியும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை தன் விருப்பம்போல் இந்திரா நியமிக்கச் செய்தார்.
இப்போது கொலிஜியம் முறையை மாற்றி நீதித்துறை நியமன ஆணையம் ஒன்றை மோடி கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.

7. நாடாளுமன்றம் கூடாத காலத்தில் முக்கிய காரணங்களுக்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படும். ஆனால் அவைகள் பிறகு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். இந்திரா காலத்தில் இந்த மரபு அறவே புறந்தள்ளப்பட்டு பல அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.

அதைப்போல இப்போது மோடியும் நிலம் கையகப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை மூன்றாம் முறையாக கொண்டு வந்திருக்கிறார். தொடர்ந்து பல அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இது நாடாளுமன்ற மரபுக்கே எதிரானது என்பது குறித்து மோடி கவலைப்படவில்லை.

8. இந்திராவின் காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு இராணுவம் மற்றும் ஆயுதப்படை கரங்களில் முழுமையான அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஃபாசிசம் என்று இதை முழுமையாக சொல்லாவிட்டாலும் அதன் சாயல் படிந்த நடவடிக்கை எனக்கூறலாம்.

மோடியின் ஆட்சியிலும் பல மாநிலங்களில் இதே நிலைமை தொடர்கிறது.

9. இந்திராவின் காலத்தில் ஊழல் அரசியல்வாதிகளும் பெரும் தொழிலதிபர்களும் ஊக்குவிக்கப்பட்டார்கள். மோடி அரசிலும் அதைவிட அதிகமான அளவில் அதே நிலைமை தொடர்கிறது.

10. இந்திராவின் ஆட்சியில் கல்வி, கலாச்சாரம், வரலாறு போன்ற துறைகளில் அறிஞர்கள் புறந்தள்ளப்பட்டு துதிபாடிகள் நியமிக்கப்பட்டார்கள். மோடி ஆட்சியிலும் இந்த நிலையே மாற்றமில்லாமல் தொடர்கிறது.

காங்கிரஸ்-பா.ஜ.க. மற்றும் பல மாநிலக் கட்சிகளில் உட்கட்சி சனநாயகம் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் நாட்டில் மட்டும் சனநாயகம் தழைக்குமா?
இங்கே சனநாயகம் பதவிநாயகமாகவும், பணநாயகமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அரசு அமைப்பது, கவிழ்ப்பது ஆகிய எல்லாமும் பணநாயகத்தின் உதவியில்லாமல் நடைபெறாது என்ற போக்கு சர்வாதிகாரத்தில்தான் போய்முடியும்.

ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் துணையோடு நாட்டின் இயற்கை வளங்களை உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கு தடையில்லாமல் சூறையாடுகின்றன. இதை எதிர்த்துப் போராடும் மக்கள் ஈவு இரக்கமில்லாமல் ஒடுக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் ஏறத்தாழ 44 கோடி பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள் என ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது. மகாராட்டிரம், உத்திரப்பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையின் மூத்த அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கை ஒன்றில் பாலியல் பலாத்காரம், குடும்ப வன்முறைகள், வரதட்சணை தொடர்பான மரணங்கள், கெளரவக் கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், சிறார் திருமணம், கொத்தடிமைகளாகப் பயன்படுத்துவது, பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும் சிறார்களையும் கடத்துவது ஆகியவை மிகப்பெரிய சமூகப் பிரச்சினைகளாக நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.

சுருக்கமாகக் கூறினால் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. இதை மனதில்கொண்டுதான் மூத்தத் தலைவரான அத்வானி அபாயச் சங்கை ஊதியிருக்கிறார்.

நன்றி : தினமணி 06-07-2015

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.