மெல்லச் சாகும் கல்வி சார்ந்த அறம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:19

தமிழ்நாட்டில் உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை எத்தகைய சீரழிவிற்கு உள்ளாகியிருக்கின்றன என்பதைக் குறித்து அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அனைவரையும் அதிரவைத்துள்ளன.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவிகள் இருவர் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஆகியோர் மீது கூறியுள்ள புகார்கள் புனிதமானவர்கள் என கருதப்படும் ஆசிரியர்கள் எவ்வளவு கீழான நிலைக்கு இறங்கிவிட்டார்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

பாலியல் சீண்டல், ஆய்வு வழிகாட்டியாக இருப்பதற்கு பணம் கேட்டல், ஆய்வு மாணவர்களை கொத்தடிமை போல் நடத்துதல் போன்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மீது சுமத்தியுள்ளனர்.

கடலில் மிதக்கும் பனி மலைகளின் உச்சிப் பகுதிமட்டுமே சிறிதளவு வெளியே தெரியும். மிகப் பெரும் பகுதி மூழ்கியே இருக்கும். அதைப்போல உயர் கல்வி ஆய்வுத் துறைகளில் புரையோடி முடை நாற்றமெடுக்கும் ஊழல்கள் குறித்து புகார் செய்வதற்கே மாணவ-மாணவிகள் அஞ்சுவார்கள். எனவே அவர்கள் ஆய்வுப்பட்டம் பெறுவது பேராசிரியர்களின் கரங்களிலேயே இருக்கிறது. எனவே எத்தகைய அவமானத்தையும் சகித்துக்கொண்டு அடங்கியிருப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை. இந்தச் சூழ்நிலையில் இரு மாணவிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டத் துணிந்திருப்பது எதனால்? இனி பொறுக்க முடியாத நிலையில் வேறுவழியின்றி அவர்கள் தங்களின் கண்ணீர்க் கதைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் உயர்வும் வளர்ச்சியும் உயர்கல்வியோடும், ஆராய்ச்சியோடும் தொடர்புடையவை ஆகும். தமிழ்நாட்டில் பேரறிஞர்கள் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் அங்கம் வகித்து ஏராளமான மாணவ மாணவிகளை மிகச்சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கியிருக்கிறார்கள். ஆய்வுத்துறையில் இந்தியாவின் பிறமாநிலங்களைவிட தமிழகம் மிகவும் முன்னேறியிருந்தது. தங்களது கடின உழைப்பினாலும், வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர்களின் அறிவுக்கூர்மையினாலும் ஏராளமானவர்கள் முனைவர் பட்டம் பெற்றார்கள். பேரறிஞர்களினால் உருவாக்கப்பட்ட முனைவர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கினார்கள். ஆனால் இதெல்லாம் பழங்கதையாய், பகற் கனவாய் போய்விட்டன.

"மாதா, பிதா, குரு, தெய்வம்' என்பது ஆன்றோர் வாக்கு. அன்னைக்கும் தந்தைக்கும் மேலாகவும் தெய்வத்திற்கு அடுத்தப்படியாகவும் ஆசிரியர்கள் மதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது குருவே தனது மாணவிகளின் பெண்மையைப் பரிசாகக் கேட்கும் அடாதப் போக்கு வளர்ந்துவிட்டது.

ஆய்வுத் துறைக்கான சட்டவிதிகளே இந்த முறைகேடுகளுக்கும் சீரழிவிற்கும் காரணமாகும். முனைவர் பட்டம் பெறவிரும்பும் ஒரு மாணவர் அல்லது மாணவி தனது வழிகாட்டியாக பேராசிரியர் ஒருவரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். பட்டம் பெறும்வரை அவரே எல்லாமாக இருப்பார்.

அந்த நாளில் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டியாகத் திகழ்ந்ததோடு அறிவுச்செல்வத்தை வாரி வாரி வழங்கினார்கள். இந்நிலைமை ஏன் மாறிப்போயிற்று?

துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ஆகிய பதவிகள் விலைக்கு வாங்கப்படுகின்றன என்பது ஊரறிந்த இரகசியமாகும்.

துணைவேந்தர்கள் தேர்வுக்குழுவில் அறிஞர்கள் இடம் பெறுவதற்குப் பதில் கல்வி வணிகர்கள் இடம் பெறுகிறார்கள். அதைப்போல பேராசிரியர்கள் தேர்வுக் குழுவிலும் அவர்களே அங்கம் வகிக்கிறார்கள். எனவே இப்பதவியில் யாவும் ஏலம் விடப்படுகின்றன. கோடிகோடியாகப் பணம் கொட்டிக் கொடுப்பவர்களுக்கு இப்பதவிகள் கிட்டுகின்றன.

போதிய கல்வித் தகுதி எதுவும் இல்லாமல் பணம் கொடுத்து பதவிகளைப் பெற்றிருப்பவர்கள் தாங்கள் கொடுத்தப் பணத்தை எப்படியும் ஈட்டியாக வேண்டும் என கருதுகிறார்கள்.

பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி அதில் வெற்றிபெற்றவர்களை ஆசிரியர் தகுதிபெற்றவர்களாக அறிவித்தது. எனவே கல்வித் தகுதியாலும் மற்றும் பண்பு நலன்களாலும் சிறந்தவர்கள் இப்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வழி இருந்தது.

ஆனால் தி.மு.க. ஆட்சியின்போது தங்கள் அரசே இத்தேர்வை நடத்துவதாகக் கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் ஒன்றை அமைத்து அதன்மூலம் ஆசிரியர் பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தது. கல்லூரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு தனித்தனியே ஆசிரியர் தேர்வு வாரியங்கள் அமைக்கப்பட்டன. பணி மூப்பு உள்ளதாக சான்று காட்டுவதற்கு தனியார் கல்விக்கூடங்களில் பணியாற்றியதாக போலி சான்றிதழ் பெற்றதோடு பணமூட்டைகளை அவிழ்த்துக்கொட்டியவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டவை எதுவானாலும் அவற்றை அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறிந்துவிடும். ஆனால், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. கையாண்ட முறையை அ.தி.மு.க.வும் அப்படியே பின்பற்றுகிறது. ஏனெனில் இம்முறையினால் இவர்களின் பணப்பெட்டிகள் நிறைகின்றன.

பாவம் அப்பாவி மாணவ-மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து புகார் செய்யவும் முடியாது. முறைத்துக்கொள்வதற்கும் வழியில்லை. குறிப்பாக மாணவிகள் இருதலைக் கொள்ளி எறும்புகள்போல் தவியாய்த் தவித்தனர். தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமை குறித்து வெளியே கூறினால் சமூக மதிப்பீட்டில் தங்கள் நிலை மிக இழிவாகக் கருதப்படும் என அஞ்சினார்கள். ஆமைபோல் அடங்கி ஒடுங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்

உயர் கல்வி துறையிலும், ஆய்வுத் துறையிலும் பணமே எல்லாமாகிவிட்ட பிறகு அங்கு கல்வி சார்ந்த அறத்திற்கு இடமில்லை. கல்வித்துறை சார்ந்த முழுமையான அறிவு அனுபவம், தொலைநோக்கு ஆகியவற்றில் எதுவுமே இல்லாதவர்கள் கல்வி அமைச்சர்களாக ஆகிறார்கள். கல்வி வணிகமாக்கப்பட்டதற்கு இவர்களே காரணமாவார்கள்.

இளைய ஆய்வு மாணவர்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குகின்றது. மூத்த ஆய்வு மாணவர்களுக்கு 38 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. பல்கலைக் கழக மானியக்குழு உரிய காலத்தில் இந்தத் தொகைகளை அனுப்பி வைத்துவிடுகிறது. ஆனால் துறைத் தலைவர்கள் புதிய தந்திரம் ஒன்றை கடைப்பிடிக்கிறார்கள். ஆய்வு மாணவர்களின் வங்கி கடன் அட்டைகளை தாங்கள் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தேவையானப் பணத்தை அவர்களே வங்கிகளில் இருந்து எடுத்துக்கொண்டு மீதமிருப்பதை மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

தங்களின் ஆய்வுச் சுருக்கத்தை அளிக்கும்போது வழிகாட்டும் பேராசிரியருக்கு மோதிரம் பரிசளிக்க வேண்டும்.

ஆய்வுப் பணியில் ஓராண்டு முடிந்த பிறகு தங்கள் ஆய்வுப் பணியை சரிபார்ப்பதற்கு வரும் குழுவிற்கு ஆடம்பர விருந்து அளிக்க வேண்டும்.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்ய அனுப்பும்போது கணிசமான தொகையொன்றை பேராசிரியர், பதிவாளர், துணைவேந்தர் ஆகியோருக்கு அளிக்க வேண்டும்.அப்போதுதான் ஆய்வேட்டிற்கான மதிப்பீடு செய்யப்படும்.

வாய்மொழி தேர்வு நடக்கும் போது வழிகாட்டிப் பேராசிரியருக்கும், தேர்வாளர்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 இலட்சம் வரை தனித்தனியே கொடுக்க வேண்டும். ஆயிரம் பேருக்கு குறையாத புலால் விருந்து அளிக்க வேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களாலும், துணைவேந்தர்களாலும் உருவாக்கப்படும் மாணவர்கள் அவர்களின் மறுஅச்சாக வார்க்கப்படுவார்களே தவிர நல்லறிஞர்களாக உருவாக்கப்படமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் அடியோடு சீர்குலைந்துபோய்விட்டன. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்படவேண்டுமானால், இப்போதுள்ள ஆய்வு முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

நம் நாட்டில் தனி ஒரு பேராசிரியர் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை மாற்றி ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் உள்ளதைப்போல பேராசிரியர்கள் அடங்கிய குழுக்கள் ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்தவேண்டும்.

உயர் கல்வியும் சிறந்த ஆய்வுத்திறனும் நிறைந்த நாடு உலகில் உயர்ந்த இடத்தைப் பெறும். மேலிருந்து கீழ்வரையிலும் கல்வியைக் காசு சம்பாதிக்கும் கருவியாக பயன்படுத்தும் நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.