தலைசிறந்த தமிழர் அப்துல் கலாம் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:25

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரும், உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்த ஏவுகணை-அணு விஞ்ஞானியுமான முனைவர் ஆ.ப.ஜே. அப்துல்கலாம் அவர்கள் காலமான செய்தி அனைவரையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

குறிப்பாக உலகம் போற்றிய தமிழரான அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுகத்திற்குப் பேரிழப்பாகும்.

இந்திய விண்வெளித்துறையிலும் அணு ஆயுதம், அணுசக்தி திட்டங்களிலும் அவரது சாதனை என்பது உலகை வியக்க வைத்த சாதனையாகும்.த 1980ஆம் ஆண்டு சூலை 18ஆம் நாளில் இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோளான ரோகிணியை விண்வெளியில் செலுத்தியதன் மூலம் ஏவுகணையை ஏவும் பட்டியலில் இந்தியா இணைந்தது.

1980-1990 ஆகிய ஆண்டுகளில் அவர் தலைமையில் ஒருங்கிணைந்த ஏவுகணை வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டு-அக்கினி, பிரித்திவி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணைகள் உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்கு அவருக்கு உண்டு.

1998 மே 13 இராஜஸ்தான் மாநில பொக்ரானில் இந்தியாவின் முதலாவது அணுகுண்டு சோதனை நடைபெற்றது. அமெரிக்காவின் கழுகுக் கண்களுக்குத் தென்படாமல் இந்தச் சோதனையை மிக இரகசியமாக நடத்திக்காட்டியப் பெருமைக்குரியவர் அப்துல் கலாம் ஆவார்.

1981ஆம் ஆண்டில் பத்மபூசன், 1990ஆம் ஆண்டில் பத்மவிபூசன், 1997ஆம் ஆண்டில் பாரத ரத்னா ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப் பட்டன. 30க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கின.

2002ஆம் ஆண்டு சூலை 25ஆம் தேதி இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக அவர் கட்சிகளின் கருத்தொற்றுமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பதவியை ஏற்றப்பிறகு எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் ஆழ ஊன்றி, ஆராய்ந்து சட்டப்படியும் நீதியின்படியும் என்ன செய்ய வேண்டுமோ அதை உரிய ஆலோசகர்களை கலந்தபிறகே முடிவு எடுத்தார். சிறந்த விஞ்ஞானியான அவர் சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார்.

தனது தாய்மொழியான தமிழ் மீது அளவற்றப் பற்றுக் கொண்டவர். தமிழில் பேசுவதையும் அதன் புகழைப் பரப்புவதிலும் முன் நின்றார். தமிழைப் பேசத் தவறினால் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவார்கள் என்பதை செல்லுமிடமெல்லாம் வலியுறுத்தினார்.

"தொழில்புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாகி அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி வாழ்வின் அனைத்துத் தேவைகளுக்கும் தமிழைப் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ அன்றைக்குத்தான் தமிழ் வளரும்.

தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித் துறைச் செயல்பாடுகள், அரசியல், திரைப்படம், ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி அதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே தமிழ் மேன்மேலும் செழித்து வளரும். மேலே கண்ட துறைகளில் தமிழைக் கொண்டுவர தேவையான தமிழ்ச்சொற்களை உருவாக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள பாடப்புத்தகங்களை, உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். முதலில் தமிழ்மொழியில் உயர் கல்வியை கற்பிக்கச் செய்து அதன் பிறகு ஆராய்ச்சியை நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதித் துறையிலும் தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதோடு, மற்ற மொழிகளின் நூல்களை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடவேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருக்குறளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். முயற்சி உழைப்பு ஆகியவற்றை குறள் வழியில் நின்று செயல்படுத்தியதால்தான் தன்னுடைய வாழ்வில் பல்வேறு சாதனைகளை புரிந்ததாக அவர் கூறினார்.

குமரி மாவட்டத் தமிழர்கள், அறிஞர் பத்மநாபன் தலைமையில் அளித்த திருவள்ளுவர் சிலையை குடியரசுத் தலைவர் மாளிகையில் முக்கியமான இடத்தில் நிறுவினார். அம்மாளிகையின் வரவேற்பறையில் திருக்குறள் பெரிதாக தெரியும்படி டிஜிட்டல் பலகையை மாட்டி வைத்தார்.

2007ஆம் ஆண்டு சூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் நிறைவடைந்தப்பிறகு நாடு முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைஞர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

8 ஆண்டு காலம் இளைஞர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய பணியில் ஈடுபட்டிருக்கும்போதே அவர் காலமான நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. தனது வாழ்வின் நோக்கத்தை பரப்பும் பணியில் அவர் மறைந்தது பேரிழப்பாகும். தலைசிறந்த தமிழரை நாம் இழந்திருக்கிறோம். சிரம் தாழ்த்தி அவருக்கு தலை வணங்குகிறோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.