தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் ஈழத்தமிழர் உரிமை பிரச்சினைக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அயராது போராடி வருபவருமாகவும் விளங்கும் பழ.நெடுமாறன் "காலத்தை வென்ற காவிய நட்பு'' என்ற தலைப்பில் இந்திய-ரஷ்ய பண்டைய உறவு பற்றியும், இருநாடுகளுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றியும் ஒரு அற்புதமான காவியத்தை படைத்துள்ளார். 732 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை எழுத 30 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகக் கூறும் இந்நூலாசிரியரின் உழைப்பு வீண் போகவில்லை.
இன்று சோவியத் யூனியன் சிதறுண்டு போனாலும், அன்றைய காலக்கட்டத்தில் "சோவியத் புரட்சி'' உலக நிலைமைகளில் மாபெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது என்பதற்கு அடுக்கடுக்கான விவரங்களைத் தக்க ஆதாரங்களுடன் மேற்கோள் காட்டியுள்ளார்.
சிந்து சமவெளி நாகரீகத்தில் துவங்கி 2000 ஆணடுகளுக்கு முன்னரே ,மத்திய ஆசியாவிற்கும் சிந்து நாகரீகத்திற்கும் இடையிலான தொடர்புகளை விவரிக்கும் இந்நூல், சிந்து சமவெளி நாகரீகத்தின் மொழி முன்னிலை திராவிட மொழிகளோடு ஒற்றுமையுடையது என்ற சோவியத் ஆய்வாளர்களின் கருத்தினை மேற்கோளாகக் காட்டுகிறது.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இருந்த பண்டைய பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள், இந்தியாவில் ஜார்ஜியர்களின் வருகை, ஆர்மீனியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வர்த்தகக் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்களை இந்நூல் கொண்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆடசிக்கு முடிவுகட்ட அன்றைய ரஷ்ய மன்னர்களின் உதவியை நாடியபோது இவர்களுக்கு எதிர்பார்த்த எந்த உதவியும் கிட்டவில்லை. ஆனால் புரட்சிக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் லெனின் தலைமையில் சோவியத் அரசு நிறுவப்பட்ட பிறகு ஏராளமான புரட்சியாளர்கள் சோவியத் நாட்டிலேயே தங்கி சுதந்திர போராட்டத்திற்கான பல்வேறு உதவிகளைப் பெற்றனர் என்ற விவரம் ஏராளமாக விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆன்மீகத் துறவியான விவேகானந்தர் கூறிய புரட்சிகரமான கருத்துக்கள் பற்றி ஏராளமான விவரங்கள் இந்த நூலில் உள்ளன. ரஷ்யப் புரட்சிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பாக தனது சிஷ்யையான கிறிஸ்டினா என்பவரிடம் "புதிய உலகிற்கு வழிவகுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சி என்பது ரஷ்யாவிலோ, சீனாவிலோ வெடிக்கும்'' என்றும், மற்றொரு கூட்டத்தில் உலகத்தை ரஷ்யா தலைமையேற்று நடத்தும் என்றும் விவேகானந்தர் குறிப்பிட்டதாக இந்நூல் இயம்புகிறது.
விவேகானந்தரின் இளைய சகோதரர் பூபேந்திர நாத் தத்தா ஒரு இடதுசாரி புரட்சி வீரராக சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட வரலாறு பற்றியும் அவருக்கு சோவியத் நாட்டுடன் இருந்த உறவு பற்றியும் விரிவாகக் கூறுகிறார் நூலாசிரியர்.
ரஷ்யப் புரட்சி இந்தியாவில் எத்தகைய எதிரொலிப்பை ஏற்படுத்தியது, இந்திய விடுதலை இயக்கத்தையும், இந்திய புரட்சியாளர்களையும் எவ்வாறு வீறுகொண்டு எழச் செய்தது என்பதற்கான தகவல்கள் ஏராளம், ஏராளம்.
குறிப்பாக இந்தியப் புரட்சியாளர்களான வீரேந்திர சட்டோபாத்தியாயா, அபானி முகர்ஜி, இராஜா மகேந்திர பிரதாப், எம்.பிடி. ஆச்சாரியா உள்ளிட்ட ஏராளமான புரட்சியாளர்களின் சோவியத் உறவு மற்றும் அவர்களுக்கு எவ்வாறு சோவியத் யூனியன் அடைக்கலம் தந்தது, அவர்களது புரட்சிகர விடுதலைப் போராட்டப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது போன்ற பல விவரங்கள் நமக்கு திகைப்பூட்டுபவையாக உள்ளன.
இந்தியப் புரட்சி வீரரும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இடம்பெற்றவருமான எம்.என்.ராய் அவர்களின் பணிகள் பற்றியும் அவருக்கும் லெனினுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் பற்றியும் விரிவாக இந்நூல் படம்பிடித்துக் காண்பிக்கிறது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகள் குறித்து லெனின் உன்னிப்பாக கவனம் செலுத்தி வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்தியப் புரட்சியாளர்கள் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கத்திற்கு ஆதரவு தருவது அவசியம், ஆனால் அதில் அவர்கள் இரண்டறக் கலந்துவிடக்கூடாது என்று லெனின் எச்சரித்திருந்தார்.
இந்தியத் தலைவர்கள் விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர் போன்றவர்கள் சோவியத் புரட்சியின் விளைவாக எத்தகைய எழுச்சியைப் பெற்றனர் என்ற விவரம் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.
காந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் இடையேயான ஆன்மீக ரீதியான உறவுகள் எவ்வாறு டால்ஸ்டாயை காந்தியின் மானசீக குருவாக ஏற்க வைத்தது என்ற தகவல் வியப்பூட்டும் ஒன்றாகும்.
லெனினைப் பற்றிய நேருவின் மிக உயர்ந்த மதிப்பீடு, நேருவின் சோவியத் பயணம், அக்டோபர் புரட்சி நேருவுக்கு சர்வதேசக் கண்ணோட்டம் ஏற்பட எவ்வாறு வழி வகுத்தது போன்ற அரிய தகவல்களை ஆசிரியர் மிக விரிவாக தொகுத்து அளித்துள்ளார்.
ஜப்பான் ஆதரவுடன் பிரிட்டிஷ் இந்தியா மீது போர் தொடுத்து, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற இந்திய தேசிய ராணுவத்தைத் திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எவ்வாறு சோவியத் ஆதரவு நிலைமேற்கொண்டார் என்ற செய்தி விரிவாக இடம் பெற்றுள்ளது. சோவியத் நாட்டின் மீது ஜெர்மனி படையெடுத்தபோது சுபாஷ் சந்திரபோஸ் அதைக் கண்டித்தார். சுதந்திர போராட்டத்திற்கு சோவியத் ஆதரவு பெற பல முயற்சிகளை மேற்கொண்டார் என்ற விவரமும் பல்வேறு ஆதாரங்களுடன் இடம் பெற்றுள்ளது.
"இந்திய தேசிய இராணுவம் என்பது கேலிக்கூத்தாகும். ஒரு சுண்டெலியைக் கூட இந்தியர்களால் கொல்ல முடியாது' என்று ஹிட்லர் கூறியதாக இடம் பெற்றுள்ள வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களை இந்நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.
சோவியத் புரட்சி இந்தியாவில் பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை உருவாக்கியது. இந்துஸ்தான் சோஷலிச குடியரசு இராணுவம் என்ற அமைப்பை உருவாக்கவும், இளைஞர்களை அதில் அணி திரட்டவும் பகத்சிங் போன்ற இளைஞர்கள் முன்வந்தனர். பகத்சிங் தூக்குமேடைக்கு செல்லுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக லெனின் எழுதிய அரசும்-புரட்சியும் என்ற நூலைப் படித்தார் என்ற விவரத்தை இந்நூலாசிரியர் தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்,
ரஷ்யப் புரட்சியின் தாக்கம் அன்றைய தமிழக சுதந்திர போராட்ட தலைவர்களான செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், சிங்காரவேலர், பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., வரதராஜüலு நாயுடு, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, ÿனிவாச அய்யங்கார், ஜீவா மற்றும் ராஜாஜியைக்கூட எவ்வாறு புரட்சிகர சிந்தனையாளர்களாக மாற்றியது என்பதற்கு ஏராளமான தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களின் வீரமும், தியாகமும் எவ்வாறுபாசிச ஹிட்லரை வீழ்த்தியது என்ற வரலாற்று நிகழ்வுகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் தூதுவர்களாக செயல்பட்ட சுக்லத் வாலா உள்ளிட்ட பல தலைவர்கள் பற்றிய அரிய கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவர்களில் அமிர் ஹைதர்கான் பற்றிய விவரம் மிகச் சுருக்கமாக உள்ளது. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்கவும், சுந்தரய்யா போன்ற தலைவர்களை உருவாக்கவும் காரணமான இவரைப்பற்றி இன்னும் சிறப்பாக கூறியிருக்கலாம்.
ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொன்மை தோய்ந்த இலக்கிய உறவுகள் பற்றி ஏராளமான ருசிகர ஆதாரங்கள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யப் பேரறிஞர் டால்ஸ்டாய் எவ்வாறு திருக்குறளை நேசித்தார், திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் காந்தியடிகள் டால்ஸ்டாய் மூலமே அறிந்துகொண்டார் என்பதுமான செய்தி அனைவருக்கும் திகைப்பூட்டும் செய்தியாகும்.
சோவியத் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாக்சிம் கார்க்கியை இந்திய மக்களுக்கு காந்திதான் அறிமுகப்படுத்தினார் என்ற செய்தியும், கார்க்கியை முன் உதாரணமாகக் கொண்டு இந்திய மக்களும் விடுதலைப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என காந்தி விடுத்த வேண்டுகோளும் கார்க்கி மீதான உன்னத நட்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அக்டோபர் விடியலில் பாடிய குடியல்கள் என்ற தலைப்பில் மிர்ஜா, காலிப், தாகூர், இக்பால், வள்ளத்தோள், நஸ்ருல் இஸ்லாம், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் அக்டோபர் புரட்சியை குதூகலித்துப் பாடினர் என்ற விவரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
காலமெனும் பெருவெளியில் கரையாத பெட்டகமாக இந்நூல் திகழும் என்பது நிதர்சனம். தனது இலட்சிய பூர்வ குறிக்கோளாக இந்நூல் வரவேண்டும் என்று பெருமுயற்சி மேற்கொண்டு தகவல் ஆதாரங்களைத் திரட்டி வருங்காலத் தமிழர்களும் சோவியத்தின் மாண்பை அறிந்துகொள்ள வேண்டும் என இந்தக் காவியத்தை படைத்துள்ள பழ. நெடுமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்நூலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தமிழக வாசகர்களுக்கு பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது.
நன்றி : "தீக்கதிர்" 24-05-2005 |