மன்னார்குடியில் காவிரிப்படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம் - "மீத்தேன் எமன்' நூல் அறிமுக விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:31

காவிரிப் படுகையை பாழாக்கிக்கொண்டிருக்கும் மணல் கொள்ளை, இரால் பண்ணைகள், அனல்மின் நிலையங்கள்,எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் ஆகியவை தொடராமல் தடுக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் காவிரிப்படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம், கடந்த சூலை மாதம் 25ம் நாள் மன்னார்குடியில் நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு இக் கருத்தரங்கை நடத்தியது.

இக்கருத்தரங்கிற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் தலைமை வகித்தார். மன்னார்குடியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் திரு மோகன், இராசமோகன்,செந்தில்குமார்,விக்னேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்துரை அரங்கத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு "பேரழிவுத் திட்டங்களுக்கான மாற்று' என்ற தலைப்பிலும், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.இளங்கோவன் "காவிரிப்படுகை பாதுகாப்பு- என்ன செய்யவேண்டும்- என்ற தலைப்பிலும், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் கோ.நடராசன் "சூழல் பாதுகாப்பு அரசியல்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

சிறப்புரை அரங்கத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தோழர் முகிலன் "கூடங்குளம் போராட்டப் படிப்பினைகள்' என்ற தலைப்பிலும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் கோ.சுந்தரராசன் "நியூட்ரினோ பேரழிவு' என்ற தலைப்பிலும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி "நச்சுக்காடாகும் தமிழகம்' என்ற தலைப்பிலும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன் "காவிரி உரிமை மீட்போம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

நூல் அறிமுக அரங்கத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர் இரா பாரதி செல்வன் "மீத்தேன் எமன் – நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்'என்ற நூலை அறிமுகம் செய்தார்.

இந்நூல் இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனம் காவிரிப் படுகையின் காற்றையும், மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசாக்கி, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சோக வரலாற்றையும் , மீத்தேன் எடுப்புத் திட்டத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகளையும் பற்றிஅப்பகுதி மக்களின் நேர்காணல்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர் கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில், எளிய நடையில், எழுத்தாளர் கு.இராமகிருஷ்ணன் அவர்களால் பசுமை விகடனில் தொடராக எழுதப்பட்டது. தற்போது விகடன் பிரசுர நிறுவனம் நூலாக வெளியிட்டிருக் கிறது. இந்நூல் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்ட, மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராளிகளுக்கு பயனுள்ள போர்க்கருவியாக விளங்குகிறது.

நூலாசிரியரைப் பாராட்டி எழுத்தாளர் ராகவ மகேசு உரை நிகழ்த்தினார்.

இறுதியாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர், பழ.நெடுமாறன் நூலாசிரியருக்கு துண்டு போர்த்தி பாராட்டி, இயற்கை வளங்களைக் காப்பதில் எழுத்தாளர்களின் கடமை மற்றும் தமிழர்கள், தங்களின் இயற்கை வளங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், இரண்டாம் உலகப்போரின்போது எப்படி உருசிய நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களைப் போரில் ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் தங்கள் தாய்நாட்டை இட்லரிடமிருந்து காப்பாற்றிக் கொண்டார்களோ அவர்களைப்போல , சுற்றுச் சூழலைப் பாதுகாக்கின்ற போராட்டங்களிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

கருத்தரங்கின் கோரிக்கைகள் :

1.தமிழக அரசே! பாரம்பரிய வேளாண் மண்டலமாகிய காவிரிப் படுகையை, பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்துவிடு! 2.இந்திய அரசே! மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடு! 3. இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தை யும், காவிரி ஒழுங்கு முறைக்குழுவையும் உடனே அமைத்திடு!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.