தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டே போகிறது. இது குறித்து உலக நாடுகள் அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 72ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இதிலும் கடைசியான நிலையில் உள்ள சில மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.
இந்திய அளவில் 18 வயது முதல் 23 வயது வரை 14 கோடி மாணவர்கள் இருக்கிறார்கள். இதில் 2.6 கோடி மாணவர்களுக்கு மட்டுமே உயர் கல்வி கிடைக்கிறது. உயர் கல்வி 10 சதவீதம் பல்கலைக் கழகங்களிலும் 90 சதவீதம் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கிடைக்கிறது. தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் மிகவும் குறைவு. இது எந்த அளவுக்கு அதிகரிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு உயர் கல்வியின் தரம் பெருகும்.
காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேராசிரியர் டெண்டல் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. தனியார் பல்கலைக் கழகங்களை அந்தக் குழு தரம் பிரித்து 43 பல்கலைக் கழகங்களை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற சிறீபெரும்புதூர் ராஜீவ் இளைஞர் மேம்பாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு 20 கோடி ரூபாய் நிதி வழங்கி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகமாக அதை அறிவித்தது. தன்னால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை மீறி மத்திய அரசே இவ்வாறு முறைதவறி நடந்துகொள்வதும் மாநில அரசுகள் அதே பாதையைப் பின்பற்றுவதும் கல்வித் துறையைச் சீரழிப்பதாகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்லூரிகளுக்குப் பல்கலைக் கழக இணைப்பு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆங்கி லேயர் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த இணைப்பு அங்கீகார முறை பின்பற்றப்படுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த இணைப்பு அங்கீகார முறை இல்லை.
ஆராய்ச்சிப் பணிகளுக்கு இணைப்பு அங்கீகார முறை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. உயர் கல்வியில் நிலவும் முறைகேடுகள் பல இதன் காரணமாக நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மிகச்சிறந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட காலம் போய் தகுதியற்றவர்களும், பெரும் தொகையைக் கொடுத்து அப்பதவியை விலைக்கு வாங்குபவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிற வெட்கக்கேடு தொடர்கிறது.
பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் ஆகியவர்கள் நியமிக்கப்படுவதற்கு பல்கலைக் கழக மானியக்குழு குறைந்த பட்ச தகுதிகளை நிர்ணயித்துள்ளது. 10 ஆண்டு காலம் ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள் அல்லது அதற்குச் சமமான பதவியில் 10 ஆண்டுகாலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் ஆராய்ச்சித்துறை, கல்வி நிர்வாகத்துறை ஆகியவற்றில் சிறப்பான தகுதிபெற்ற கல்வியாளர் ஒருவர்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் இதை மீறி மேற்கண்ட தகுதிகளில் எதுவும் இல்லாதவர்கள் ஆளுங்கட்சியின் ஆதரவுடன் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழகப் பல்கலைக் கழகம் ஒன்றில் இவ்வாறு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ஒருவரை உயர்நீதி மன்றம் அப்பதவியிலிருந்து நீக்கி அளித்த தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டது.
"துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு பல்கலைக் கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகள் கட்டாயமானவை அல்ல என வாதி குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக்கொண்டால் எத்தகைய தகுதியுமற்ற ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப் படும் அபாயம் நேரிடும். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அரசு உயரதிகாரிகளாக இருந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே இத்தகைய போக்கு தடுக்கப்படவேண்டும் பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறைகள் எழுத்தாலும் உணர்வாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்'' என எச்சரித்து அந்தத் துணைவேந்தரின் பதவியை இரத்து செய்தது. ஆனால் அவர் உச்சநீதி மன்றம் சென்று அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றார் என்பது வேறு விசயம்.
கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்தச் சீரழிவு தொடர்ந்து வருகிறது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக செனட், சிண்டிகேட் உறுப்பினர் பதவிகள் ஆகியவை ஏலம் விட்டு நிரப்பப்படுகின்றன. பணம் கொடுக்காமல் யாரும் இந்தப் பதவிகளைப் பெற முடியாது.
செனட், சிண்டிகேட் ஆகியவற்றில் நேர்மை யான ஆசிரியர்கள் உள்ளே நுழைய முடியாது. அரசியல் செல்வாக்கு, அல்லது பணம் கொடுத்து துணைவேந்தராக வந்தவர்கள் மேலே கண்ட பல்கலைக் கழக அமைப்புகளை சனநாயக ரீதியில் செயல்பட அனுமதிப்பதில்லை. ஆளுங்கட்சியின் பொறுப்பாளர்களைப் போல பல துணைவேந்தர்கள் நடந்துகொள்கின்றனர்.
துணைவேந்தர் பதவி வகித்த ஒருவர் தன்னை நியமித்த முதலமைச்சரை "தனது கடவுள் என பகிரங்கமாகக் கூறினார். மற்றொரு துணைவேந்தர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநராக இருந்த ஒருவர் மேடையேறியதும் பகிரங்கமாக அவர் காலடியில் விழுந்து வணங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் இந்த அவமானகரமான நிகழ்ச்சி நடைபெற்றது. மீண்டும் துணைவேந்தராக நியமிக்கப்படும் வாய்ப்புத் தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே துணைவேந்தர் தனது தன்மானத்தை அடகு வைத்தார்.
இவ்வாறு முறைகெட்ட வகையில் நியமிக்கப் பட்ட துணைவேந்தர்கள் பல்கலைக் கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளைத் துச்சமாக மதித்து கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேராசிரியர்களையும், ஆசிரியர்களையும் நியமிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தகுதியற்றவர்கள். அண்மையில் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பதவியில் சேர்ந்த இரண்டு துணைப் பேராசிரியர்கள் நான்கு பல்கலைக் கழக ஊழியர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி இதை உறுதி செய்கிறது. இத்தகையவர்களிடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்ன? மற்ற பல்கலைக் கழகங்களிலும் இத்தகைய விசாரணை மேற்கொள்ளப்பட்டால் ஏராளமானவர்கள் பதவிகளை இழப்பது உறுதி.
பணத்தைக் கொடுத்து துணைவேந்தரானவர்கள் கொடுத்த பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
கல்வித் துறையில் ஆசிரியர்கள் - மாணவர்கள் உறவு பற்றியும், ஆராய்ச்சி மேம்பாடு குறித்தும் கல்வியின் தரம் குறித்தும் எவ்விதக் கவலையும் இல்லாமல் பணம் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பல துணைவேந்தர்கள் தமிழக உயர்கல்வியை அடியோடு சீரழித்துவிட்டார்கள். இதன் விளைவாக சிறந்த கல்வியாளர்கள் ஒதுங்கிவிட்டார்கள்.
இலண்டன் பல்கலைக் கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தை பிரிட்டிசு அரசு 1839ஆம் ஆண்டு அமைத்தது. தென்னிந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் இதுதான் மிகப் பழமையான பல்கலைக் கழகமாகும். இப்பல்கலைக் கழகத்தில் சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியார் என்.டி. சுந்தரவடிவேலு, முனைவர் மால்கம் ஆதிசேசையா போன்ற சிறந்த அறிஞர்கள் பலர் துணைவேந்தர்களாக பதவி வகித்து இதை உலகப் புகழ் பெறச் செய்திருக்கிறார்கள்.
ஆனால், புகழ்ப்பெற்ற இப்பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலை என்ன? பிரதமர் மோடி இலங்கை சென்றபோது இப்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் காவலில் வைக்கப்பட்டனர்.
அண்மையில் மதுவிலக்கை வற்புறுத்தி பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே உண்ணா விரதம் இருந்த மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து நிர்வாகம் மிரட்டியது. குறிப்பாக அரசியல் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் துறைத் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் அழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்பதற்காக அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
தன்னிடம் படிக்கும் மாணவர்களைப் பற்றி புகார்ப் பட்டியலை அளிப்பதுதான் ஒரு பேராசிரியரின் வேலையா? அவ்வாறு கொடுக்கவில்லை என்று சொன்னால் அவரைப் பதவி இறக்கம் செய்வதுதான் துணைவேந்தரின் வேலையா?
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக காவல்துறையினர் உள்ளே நுழைந்தது இல்லை. துணைவேந்தரின் அனுமதியின் பேரில் காவல்துறையினர் உள்ளே நுழைந்து அறவழியில் போராடிய மாணவர்களை கைது செய்தகொடுமை நேர்ந்தது. தனது மாணவர்களை நேசித்த ஒரே காரணத்திற்காக ஒரு பேராசிரியரை பதவியிறக்கம் செய்வது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகும்.
சம்பந்தப்பட்ட பேராசிரியர் மணிவண்ணன் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் விஞ்ஞானத் துறை அறிஞராவார். இந்தியாவில் இயங்கிவரும் திபேத் சுதந்திர அரசு, மியான்மார் அரசு ஆகியவற்றின் கல்வித்துறை ஆலோசகரும் ஆவார். அவரிடம் அரசியல் விஞ்ஞானம் கற்க வேண்டும் என்பதற்காகவே திபேத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்து சேர்ந்துள்ளார்கள். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தினால் அழைக்கப்பட்டு அங்கு சென்று ஈழத் தமிழர் துயரம் குறித்து உரை நிகழ்த்தியவர். அவரும் அவருடைய மாணவர்களும் இணைந்து 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அப்பட்டமான இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து ஏராளமான ஆவணங்களுடன் கூடிய நூலை வெளியிட்டு உலக கவனத்தை அப்பிரச்சினையின் பால் திருப்பிய பெருமைக்குரியவர் ஆவார்கள். பல்கலைக் கழகத்திற்குப் பெருமை தேடித்தந்த கற்றறிந்த அறிஞரை அவமதிப்பது ஒட்டுமொத்தத்தில் அறிவுலகை அவமதிப்பதாகும் என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்து தங்கள் தவறை திருத்திக்கொள்ள வேண்டும். |