உன் பெயரும் என் பெயரும் வியத்நாம் - நூல் விமர்சனம் - இன்குலாப் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00
பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த சத்யசித்ரேயின் "பிரதித்வதநிதி” என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது. வேலை தேடும் கதாநாயகன் ஒரு நேர்காணலுக்குச் செல்கிறான்.

(இந்தப் படத்தில்தான் இப்படி ஒரு நேர்காணல் காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு தமிழில் இயக்குநர் சிகரம், இமயங்கள் எல்லாம் இப்படியொரு காட்சியைக் கந்தர கோலமாக்கி விட்டனர்)

அதிகாரி : இந்த நூற்றாண்டில் உங்களைப் பாதித்த வரலாற்று நிகழ்வு என்ன?

கதாநாயகன் : வியத்நாம் போர்

அதிகாரி : வியத்நாம் போர்? ஏன் மனிதன் நிலவில் போய் இறங்கியதைச் சொல்லக்கூடாது?

கதாநாயகன் : அது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம்தான். ஆனால் வியத்நாமியப் போர் இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட மனித வரலாறு.

அதிகாரி : நீங்கள் கம்யூனிஸ்டா?

கதாநாயகன் : இவற்றையெல்லாம் தெரிந்திருக்க ஒருவன் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டியதில்லை.

தமிழோசைப் பதிப்பகம் (கோயம்புத்தூர்) ஹோசிமின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டிருக்கிறது. மொழி பெயர்ப்பாசிரியர் க. விசயகுமார். யெவ்கனி கொபலெவ் என்ற ருஷ்ய இதழியலாளர் 1983-இல் எழுதி, முன்னேற்றப் பதிப்பகம் (மாஸ்கோ) வெளியிட்ட நூல் ஆங்கிலத்தில் 1989-இல் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. மூல நூலாசிரியர் யெவ்கனி பற்றி எந்தக்குறிப்பும் இல்லை. இதழியலாளர் என்று சுட்டியது கூட இந்நூலில் ஓரிடத்தில், தாம் டாஸ் நிறுவனத்தில் நிருபராகப் பணியாற்றியதை யெவ்கனி குறிப்பிடுகிறார்.

சில வரலாற்று நிகழ்வுகளை நவிலும் நூல்கள் இளமையில் என் சிந்தனைப் போக்குகளை மாற்றி அமைத்திருக்கின்றன. ரைஸ் வில்லியம்ஸ் என்ற அமெரிக்கச் சமவுடைமையாளர் எழுதிய நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி-கல்லூரி மாணவனாய் இருந்தபோது என்னை வெகுவாகப் பாதித்த புத்தகம். எட்கர் ஸ்நோ என்ற அமெரிக்க இதழியலாளர் எழுதிய சீனத்தின் மீது செந்தாரகை என்ற நூல் ஆசிரியப் பணியின் தொடக்க நாட்களில் என்னை இடதுசாரியாகத் திருப்பிய காரணிகளில் ஒன்று. என் அறுபத்தொன்றாவது வயதில் ஹோசிமின் வரலாற்றை முழுமையாகப் படிக்கிறேன், போராடுவதற்கு இன்னும் கொஞ்சம் வயது வேண்டும் என்ற உணர்வோடு.

முதலில் தமிழ் மொழிப்பெயர்ப்பைப் பற்றிச் சொல்லவேண்டும். முன்னேற்றம் பதிப்பகம் (மாஸ்கோ) வெளியிடும் தமிழ் மொழிபெயர்ப்புகளை மீண்டும் தமிழில் மொழிபெயர்த்துப் படிக்க வேண்டும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவேன். தமிழோசை வெளியிட்ட இந்தப் புத்தகம் கூடத் தோற்றத்தில் என்.சி.பி.எச் வெளியீடு போலத்தான். ஆனாலும் க. விசயகுமாரின் மொழிபெயர்ப்பு, இந்நூலைத் தமிழாகவே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. க. விசயகுமார் இத்தகைய பணிகளை நிறையச் செய்யவேண்டும்.

இப்போதுதான் நிறைவடைந்த 20ஆம் நூற்றாண்டின் செம்பகுதிகளில் அரசியல் உலகத்தவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் ஹோசிமின்.

சார்லி சாப்ளின் போன்ற கலை உலக முன்னோடிகளும், மிகச்சிறந்த எழுத்தாளர்களும் ஹோசிமின் நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள். ஹோசிமின் முயற்சியால் உருவான சர்வதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கமான கிளார்த்தே யில் அனதோல் பிரான்ஸ், பெர்னாட்ஷா, சிஸ்களோ, தாகூர் போன்றவர்கள் அங்கம் வகித்துள்ளனர் (ப. 86).

ஒரு பள்ளி ஆசிரியராகவும், பிறகு அரசு அதிகாரியாகவும் இருந்த தந்தைக்கு மூமூன்றாவதாய்ப் பிறந்த குயன் சிங்குங், எப்படி ஹோசிமின் (ஒளிமிக்கவர்) னாக வியத்நாமுக்கு விடுதலை வெளிச்சத்தைப் பாய்ச்சினார் என்கிற வரலாற்றை வெகு இயல்பாகவும் அழகாகவும் யெவ்கனி எழுதிச் செல்கிறார்.எழுதியவர் ஒரு ருஷ்யர் என்ற நினைப்பைத் தொடரும் பக்கங்கள் மாற்றிவிடுகின்றன. வியத்நாமியச் சொலவடைகள், தொன்மங்கள், பாடல்கள், வியத்நாமிய மண் சூமணம் இவற்றோடு ஹோசிமின் வளர்கிறார். விடுதலை நோக்கத்துக்காகத் தம்மை முழுமையாக வழங்கிய ஒரு மனிதரின் வரலாறு, வியத்நாமிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறாகவே விரிகிறது. பெருந்தலைவர் காமராசரைப் போலவே எளிமையும்அடக்கமும் கொண்டவர். இளமையில் எந்த ஒரு வியத்நாமியப் பெண்ணுக்கும் செம்பட்டுத் துணியைக் கையுறையுளாகத் தர அவருக்குத் தோன்றவில்லை (வியத்நாமிய இளைஞர்கள் தம் காதலை அப்படித்தான் வெளிப்படுத்துவார்களாம்). போராட்டத்தின் காரணமாகக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு பிரஞ்சுக் கப்பல் ஒன்றில் சமையல்காரரின் உதவியாளராகத் தாயகத்தை விட்டு வெளியேறுகிறார். உல்லாசப் பயணியின் உலகமாக அமெரிக்கா, பிரான்ஸ், ருஷ்யா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் முதலிய நாடுகளும் நகரங்களும் அவருக்குத் தோன்றவில்லை. ஒரு போராளியின் தேடல்களாகவும், பள்ளிகளாகவும், பயிற்சிக் களங்களாகவும் இவை வரிக்கப்பட்டன. ஹோசிமின் மாற்றிக் கொண்ட பெயர்கள், புனைந்த வேடங்கள், பேரரசர் முடிதுறக்கும் காட்சி இவற்றை எல்லாம் நாடகமாக்கலாம் என்று தோன்றுகிறது. நுழைவாயிலில் நூலின் சாரத்தைக் கண. குறிஞ்சி பிழிந்து வழங்குகிறார்.

தேசிய விடுதலை குறித்த லெனினியக் கோட்பாடுகளே, ஹோசிமின்னை மார்க்சிய லெனினியத்தின் பால் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. இன்று நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களின் சாயல் வியத்நாமிய விடுதலைப் போரிலும் முகங்காட்டி இருக்கிறது.

முன்னாள் இந்தோ-சீனக் கம்யூனிஸ்டுக்கட்சியின் அடிப்டையில் லாவோ மக்கள் கட்சி (தற்போதைய லாவோ மக்கள் புரட்சிக்கரக் கட்சி), கெமர் மக்கள் புரட்சிக்கரக்கட்சி (தற்போதைய கம்பூச்சிய மக்கள் புரட்சிக்கரக்கட்சி) என்று மேலும் இரண்டு கட்சிகள் தோன்றின.

இந்தோ-சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மூமூன்று தனித்தனிக் கட்சிகளாகப் பிரிந்தது. இந்தோ-சீன வரலாற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருந்தது. காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட இந்தோ - சீன ஒன்றியம் என்ற ஒன்று இனிமேலில்லை. வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா மூமூன்றும் தனித்தனியான சுதந்திர நாடுகளாக மாறிவிட்டன. அவற்றின் தேசிய விடுதலைப் புரட்சிகளின் வளர்ச்சிப் போக்குகள் பல்வேறு நிலைகளில் இருந்தன. அதற்கேற்ப அங்குள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகள் முடிக்க வேண்டிய பணிகளும் பல்வேறுபட்டவையாக இருந்தன. (ப. 345-46)”

1951-இல் இவ்வாறு மூமூன்று கட்சிகள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, இந்தோ - சீனக் கம்யூனிஸ்டுக்கட்சியின் பெயரும் வியட்நாம் தொழிலாளர் கட்சி என மாற்றப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி யாகவே இயங்கும் எல்லா இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், சரியான எளிய இந்த வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ளாமல் போனது ஏன்?
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.