34 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் : கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு சீரழியும் - மதுவிற்கு எதிராக நெடுமாறன் உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:19

6-4-81 அன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு திருத்தச்சட்ட முன்வடிவை எதிர்த்து தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் பேசியதாவது:

"மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இந்த சட்ட முன்வடிவிற்கு எங்கள் கட்சியின் சார்பிலே என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்னாலே பேசிய அருமை நண்பர் டாக்டர் சவுரிராஜன் அவர்கள் சொல்வதுபோல் இது மதுவிலக்குச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கே எதிராகும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நோக்கங்கள் 47-வது பிரிவிலே தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

" 47. The State shall regard the raising of the level of nutrition and the standard of living of its people and the improvement of public health as among its primary duties and in particular, the State shall endeavour to bring about prohibition of the consumption except for medicinal purposes of intoxicating drinks and of drugs which are injurious to health."

-- என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த நோக்கத்திற்கு எதிராக, அரசியல் சட்டத்திற்கு எதிராக இந்த சட்ட முன்வடிவை இங்கே கொண்டு வருவதை நான் எதிர்க்கிறேன். இந்த மன்றத்திலே மிகப்பெரிய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன. இங்கே வள்ளுவரின் படம் இருக்கிறது. வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்?
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
- என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

ஒருவன் மது அருந்திவிட்டு வருவானேயானால், அதை அவனைப் பெற்ற தாய் பார்த்தாலும் சகித்துக் கொள்ள மாட்டாள் என்று சொல்லி, பெற்ற தாயே சகித்துக் கொள்ளாத ஒன்றை சான்றோர்கள் எப்படிச் சகித்துக் கொள்வார்கள் என்று இங்கே படமாக வீற்றிருக்கிற வள்ளுவர் பெருமான் கேட்டிருக்கிறார்.

அவைத்தலைவர் அவர்களே, உங்களுடைய தலைக்கு மேலாக இருக்கிற தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகள் மதுவிலக்குக் கொள்கையை அவருடைய உயிர் கொள்கையாக கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய படத்தை இங்கே மாட்டிக் கொண்டே மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்துகின்ற ஒரு சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தப் பக்கத்திலே மூதறிஞர் இராஜாஜி அவர்களும், பெருந்தலைவர் காமராஜ் அவர்களும், உருவப்படங்களில் நின்று கொண்டிருக்கிறார்கள். தந்தை பெரியார் இருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் இருக்கிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உருவப்படம் இருக்கிறது. மதிப்பிற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களுடைய உருவப்படம் இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படம் இருக்கிறது. இந்தத் தலைவர்கள் எப்படி மதுவை வெறுத்தார்கள் என்பதும், மதுவிலக்கைப் பூரணமாக அமுல் நடத்த வேண்டும் என்று எப்படியெல்லாம் முயற்சிசெய்தார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அந்த மாபெரும் தலைவர்களின் உருவப்படங்களை எல்லாம், இந்த அவையிலே வைத்துக்கொண்டு, அவர்களுடைய முன்னிலையில், மது விலக்கைத் தளர்த்துகின்ற ஒரு சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்ய நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த மாபெரும் தலைவர்களின் ஆன்மா நிச்சயமாக இந்த காரியத்தை மன்னிக்காது என்பதையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அரசுக்கு உண்மையிலேயே மதுவிலக்குக் கொள்கையில் நம்பிக்கை யிருக்குமானால், அவர்கள் இந்த சட்ட முன்வடிவினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பிலே அன்புடனும் உரிமையுடனும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, இந்த அவையிலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும்கூட, அரசு பிடிவாதமாக இந்த சட்ட முன்வடிவினைக் கொண்டு வருவது, தமிழகத்திலே உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் காரியமாகும் என்ற முறையிலே, எங்கள் கட்சியின் எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையிலே இந்த அவையிலே இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.''

(தலைவர் நெடுமாறனும், காமராஜ் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் வெளி நடப்புச் செய்தனர்.)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.