தமிழ் ஆட்சிமொழியும் தடைகளும் - முனைவர் மலையமான் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:38

இந்தியக் குடியரசு நாளாகிய 26-1-59 அன்று சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவை நிறுவினர். அவ்விழாவை ஆளுநர் விட்டுணுராம் மோதி, இராசாசி மண்டபத்தில் துவக்கி வைத்தார். கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தன் வரவேற்புரையில் "தமிழைப் போதனா மொழியாக்க வேண்டுவது இன்றியமையாதது. ஆயினும் அதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. சென்னைப் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் இதற்கான முயற்சி செய்து திட்டம் வகுக்க முன்வரவில்லை. எனவே அவற்றை நம்பிக்கொண்டிருந்தால் இச்செயல் நிறைவேறுமா நிறைவேறாதா என ஐயுற வேண்டியிருக்கிறது. தமிழே பாடம் போதிக்க முடியாது என்று சிலர் பேசுகின்றனர். அதில் உண்மையில்லை'' என்பதை விளக்கத்தான் இக்குழு துவக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முதலமைச்சர் காமராசர் தன் தலைமையுரையில் "படித்தவர்களின் மனப்பான்மை மாற வேண்டும். தமிழ் போதனா மொழியாக உள்ள பள்ளிகளுக்கே தம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். இதனைச் செய்தால் தமிழில் பாடப்புத்தகங்கள் தானே வெளிவந்துவிடும்'' என்று கூறினார்.

அரசு படிப்படியாக, தமிழை ஆட்சி மொழியாக்க முயன்றது. இதன் முதல் இரு திட்டங்களாவன:

1. துறைத் தலைமையகங்கள் பொதுமக்களிடமிருந்து வரும் தமிழ்க் கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் தருதல்.
2. மாவட்டம் மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட அலுவலகங்களுக்கு எளிமையான மற்றும் குறிப்பிட்ட செய்திகளில் தமிழில் தொடர்பு கொள்ளுதல்.

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை தவிர மற்ற துறைகளில் 1-5-66இல் தமிழ்த் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலத்திலுள்ள அலுவலகங்களில் தமிழ்த் திட்டம் செம்மையாக நடைபெறுவதைக் கவனிக்கத் தனி அலுவலர் (ஆய்வு) ஒருவர் நியமிக்கப்பட்டார். தமிழ்ப் புத்தக வெளியீட்டுச் சிறுகுழு பொருளாதாரம், வரலாறு, சமுதாயவியல் ஆகிய துறைகளில் பல நூல்களையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டது. 1966ஆம் ஆண்டுவரை இக்கழகம் 116 புத்தகங்களை வெளியிட்டது. இவற்றை மக்களிடையே பரப்ப, புத்தகப் பொருட் காட்சிகளையும் அது நடத்தியது.
அரசு சில நிலைத்த திட்டங்களை ஏற்படுத்தியது.

1. தட்டச்சு வேலைக்கு மனு செய்பவர்கள் தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

2. தமிழ் ஆட்சிமொழி தொடர்பான ஆட்சிச் சொல் அகராதி போன்ற வேலைகளை மேற்கொள்ள ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றல் குழு அமைக்கப்பட்டது.

3. பழங்கால ஏட்டுச் சுவடிகள் கல்வெட்டுகள் போன்றவற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும், ஓலைச் சுவடிகளைப் பதிப்பிக்கவும், நாட்டுப் பாடல்கள், நடனங்கள் ஆகியவற்றைப் புத்துயிரூட்டி வளர்க்கவும், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கான நூல்களை ஆராயவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஜüன் மாதம் 1960ஆம் ஆண்டில் சட்டமன்றத் துறைக்குரிய கலைச் சொற்களை அத்துறை வெளியிட்டது.

ஆட்சிமொழி தொடர்பாக அரசு பல ஆணைகளையும் குறிப்பிட்டட மடல்களையும் (Mஞுட்ணி) அலுவல்முறை சாராக் குறிப்புகளையும் (க்.O. Nணிtஞு) வெளியிட்டது. ஆனால் அவற்றில் 85 விழுக்காடு ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளன. அவை பின்வரும் பொருள் பற்றியவை.

1. அலுவலகங்களில் தமிழை ஆட்சிமொழியாகச் செயல்படுத்துதல்.
2. தட்டெழுத்தர், தட்டச்சு பற்றியவை
3. தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பானவை.
4. தமிழ் மொழியின் பயிற்சியும் தேர்வும்
5. பணியில் அமர்த்துதல்
6. ஆய்வறிக்கை, முன்னேற்ற அறிக்கை
7. நூல்களும் படிவங்களும் மொழி பெயர்த்தல்
8. தலைமைச் செயலகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குதல்.
9. சிறந்த வரைவுகளுக்குப் பரிசும் சான்றிதழும் தருதல்.
10. நீதி மன்றங்களில் தமிழை நடைமுறைப்படுத்துதல்.
11. தமிழில் கையொப்பமிடல்.
12. எழுத்துச் சீர்திருத்தம்
13. சாலை, தெரு, முதலியவற்றிற்குத் தமிழில் பெயரிடல் முதலியன.

தமிழக அரசின் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா 7-9-67இல் மதுரைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் "தமிழ் ஆட்சி மொழியாக, எல்லாத் துறைகளிலும் திகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற்றிட எல்லாருடைய நல்லார்வமும் நிரம்பத் தேவை' என்று கேட்டுக் கொண்டார்.

அவ்விழாவில் அண்ணாதுரை பட்டமளிப்பு விழாப் பேருரையை முதல் முறையாகத் தமிழில் நிகழ்த்தி ஆட்சி மொழியான தமிழுக்கும் பெருமை சேர்த்தார். பின்னர் 20-8-75இல் நடைபெற்ற சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவினை முதல்வர் கருணாநிதி தமிழில் ஆற்றினார். (1937ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்புச் சொற்பொழிவு - முதல் முறையாக இரவீந்திரநாத் தாகூர் தாய் மொழியாகிய வங்காளத்தில் உரை நிகழ்த்தினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.