சங்க காலத்தில் தமிழகத்தில் நீதி மன்றங்களை அறம் கூறும் அவையம் என அழைத்தனர். ஊர்தோறும் இத்தகைய அவையங்களில் அறவோர் அமர்ந்து நீதி வழங்கினர்.
சங்க காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் இத்தகைய அவையம் இயங்கி வந்ததை நற்றிணை, புறநானூறு ஆகியவை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையில், அறம் கூறும் அவையம் இருந்ததை, மதுரைக் காஞ்சி சிறப்பாக எடுத்துரைக்கிறது. அறம் கூறும் அவையத்தில் வீற்றிருந்த சான்றோர்கள் நீதி வழங்கினர். எனவே அறங் கெழு நல்லவை எனவும் இந்த அவையை அழைத்தனர். முறையிடுவோரின் அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி, செற்றமும் உவகையும் செய்யாது காத்து, துலாக்கோல் போல் நடு நிலையுடன் இந்த அவையம் இயங்கியது என மதுரைக் காஞ்சி புகழ்கிறது. செங்கோன்மை எனும் அதிகாரத்தில், நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர்.
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய் வஃதே முறை. - என்று கூறுகிறார்.
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவு நிலைமை பொருந்தி (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும்.
வள்ளுவர் காலம் தொடங்கி சங்க காலத்திலும், பல்லவ, பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், நாயக்கர், மராட்டியர், மகமதியர்கள் காலம் வரையிலும் அறமன்ற மொழியாகத் தமிழ் மட்டுமே விளங்கியது. இம் மன்றங்களில் முறையிட்டவர்களும், நீதி வழங்கியவர்களும் தமிழ் மொழியையே பயன்படுத்தினார்கள். அரசர்களின் அவைகளிலும் ஊர் தோறும் அமைக்கப்பட்டு இருந்த அறம் கூறும் அவையங்களிலும் தமிழ் மட்டுமே அறமன்ற மொழியாக விளங்கியது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அறமன்ற மொழியாக விளங்கிய தமிழ், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. ஆங்கிலம் அறமன்ற மொழியாக ஆக்கப்பட்டது.
ஆனால், நமது நாடு விடுதலை பெற்ற பிறகுகூட இன்னமும் நீதிமன்றங்களில் ஆங்கிலம் அரசோச்சுகிறது. நீதி மன்றங்களில் முறையிடுவோரும் தமிழர்களே, நீதி வழங்குபவர்களும் தமிழர்களே, உயர்நீதிமன்றத்தில் மட்டும் 1975க்குப் பிறகு, வேற்று மொழி பேசும் நீதிபதிகள் சிலர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்குப் புரியாத மொழியில் வழக்கறிஞர்கள் வாதாடுவதும் நீதிபதிகள் தீர்பபுச் சொல்வதும் அப்பட்டமான சமூக அநீதியாகும். அதோடு மட்டுமல்ல, மக்களாட்சிக்கு எதிரான செயலுமாகும். ஆங்கிலம் அறியாத தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியுமாகும்.
(தமிழே நீதிமன்ற மொழி பக்கம் - 4) |