15-03-82 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக திரு. கே.பி.என்.சிங் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை குறித்து, தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் ப.நெடுமாறன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினை, தமிழகத்தைப் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல. இந்தியா பூராவும் மொழி வழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற அடிப்படையிலே, இந்த தேசத்தில் தந்தை மகாத்மா காந்தியடிகள் வகுத்த கொள்கைக்கு எதிராக, இன்னொரு மொழி பேசுகிற ஒருவரை தமிழகத்தில் கொண்டு வந்து, தலைமை நீதிபதியாக நியமித்து, தமிழகத்திலே தமிழ்மொழி ஆட்சி மொழியாவதற்குத் தடை ஏற்படுத்துகிறது என்ற உணர்வோடு, நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று தமிழகத்தில் உள்ள சிவில் நீதிமன்றங்கள் உள்ளிட்ட சகல நீதிமன்றங்களிலும் தமிழ், ஆட்சி மொழியாகும் என்று இந்த அரசு அறிவித்திருக்கிறது. ஆனால்அறிவித்து ஒரு மாத காலம் ஆவதற்குள்ளாகவே அந்த அறிவிப்பின் மேல் இடி விழுந்தாற்போல், பீகார் மாநிலத்திலிருந்த ஒருவரை இங்கே கொண்டு வந்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையிலே அவர் மீது நமக்கு எந்தவித பகையோ, வெறுப்புணர்வோ இல்லை. மாறாக அந்த மொழி மக்களுக்குக்கூட இது பாதகமானது. பீகார் மாநிலத்திலே பீகாரி ஆட்சி மொழியாக இருக்கும்போது, இன்னொரு மாநிலத்திலிருந்து, தலைமை நீதிபதி நியமிக்கப்படுவாரேயானால். அந்த மொழி மக்களும் பாதிக்கப்படுவார்கள். இங்கே தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள். இந்த உணர்வை வெளிப்படுத்தி இதை சட்டமன்றத்திலேயே நாம் விவாதிக்கிறோம். நம்முடைய மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் இந்தியத் தலைமை அமைச்சர் அவர்களுக்கு இந்த சட்டமன்றத்தின் உணர்வை தெரிவித்துக் கடுமையாக வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறார்கள். இங்கே நாமும் விவாதித்திருக்கிறோம். இங்கே தலைமை நீதிபதியாக இருந்த மதிப்பிற்குரிய முகமது இஸ்மாயில் அவர்கள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, இம்மாநில மக்களின் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மொழி உணர்வுக்கு அப்பாற்பட்ட இறைவன் முன்னிலையிலேகூட ஆலயங்களிலே தமிழிலேதான் அர்ச்சனை போன்றவைகள் நடைபெற வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் காலத்திலே, சாதாரண பாமர மக்கள், நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்பட்டு நிற்கக்கூடிய ஒரு நிலையை இது போன்ற நியமனம் ஏற்படுத்தி விடுகிறது. ஆங்கிலத்திலே விவாதங்கள் நீதிமன்றத்திலே நடைபெறுகிறபோது, என்ன நடைபெறுகிறது என்று அவர்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஆகவே, அவரவர்கள் சொந்த மொழியிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் அமையுமேயானால், ஏழை எளிய மக்கள், நீதிக்கும் சட்டத்திற்கும் மிக அருகிலே வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த நிலைமைக்கு விரோதமாக, தலைமை நீதிபதி அவர்களின் நியமனம் இருக்கிறது என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மதுரையிலே பாண்டியனின் அவையிலே வழக்குரைத்த கண்ணகி சோழ நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும் கூட, முற்றிலும் வேறுபட்ட ஒரு நாட்டிலே, இன்னொரு மன்னனின் சபையிலே அவள் தமிழிலேதான் பேசி தன்னுடைய கணவன் கள்வன் அல்லன் என்பதை நிரூபித்துக் காட்டினாள். ஆனால் தமிழ்நாட்டிலே தலைமை நீதிமன்ற நீதிபதியாக எங்கோயிருந்து, யாரையோ - அவரே கூட முழுவதும் விருப்பப்படாமல் கொண்டு வந்து இங்கே நியமித்ததன் மூலம், தமிழ் நீதிமன்ற மொழியாவதற்கு எதிராக மைய அரசு செயல்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன் மூலம் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மட்டங்களிலும் ஆட்சிமொழியாக, நீதி மொழியாக ஆவதை மைய அரசு விரும்பவில்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது.
மத்திய அரசுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய இந்தச் செயலை மத்திய அரசுக்கு எடுத்துத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. இந்த மன்றத்தின் உணர்வுகளை மத்திய அரசுக்குத் தெரிவித்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் நாட்டின் நீதிமன்ற மொழியாக தமிழ் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இதைப்பற்றி விவாதிக்க இந்த அவையின் பிற அலுவல்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். |