குறளும் கீதையும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

பாரதப் போர் தொடங்குவதற்கு முன் அருச்சுனனுக்குக் கிருஷ்ணன் செய்த உபதேசம் தான் பகவத்கீதை ஆகும். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் முதல் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திலகர், வினோபா வரை எண்ணற்றவர்கள் கீதைக்கு உரை எழுதி அல்லது விளக்கம் தந்து அதற்குப் பெரும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளனர். .

பிற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் கீதையைப் பற்றி எழுதியுள்ளனர். இந்திய நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளிலும் கீதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்தந்த மொழி இலக்கியங்களில் கீதையின் தாக்கமும் உள்ளது. ஆனால் தமிழ் மொழியில் சங்க காலத்திலிருந்து பதின்மூமூன்றாம் நூற்றாண்டு வரை தோன்றிய இலக்கியங்களில் கீதை பற்றிய குறிப்புக்களோ கீதையின் தாக்கமோ இடம் பெறவில்லை என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும்.

கீதை தோன்றியது எப்போது?

பகவத் கீதை எப்பொழுது எழுந்தது என்பது பற்றி நிலையான இறுதியான கருத்து இல்லை. பல்வேறு வரலாற்று அறிஞர்களும் இது குறித்துக் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். பாரதம் எழுதப்பட்ட காலம் குறித்து எவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றனவோ அவ்வாறே கீதை எழுந்த காலம் குறித்தும் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதை ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

டாக்டர் டி. டி. கோசாம்பி என்னும் மார்க்சிய அறிஞர், கீதை எழுதப்பட்ட காலம் கி. பி. 6-ஆம் நூற்றாண்டு என நிர்ணயிக்கிறார்.

ஆதிசங்கரர் கீதைக்கு விளக்கவுரை எழுதினார். கி. பி. 788 முதல் கி. பி. 820 வரையிலும் உள்ள காலத்தில் தான் சங்கரரின் வியாக்கியானம் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது. கீதைக்கு எழுந்த விளக்க உரைகளில் ஆதிசங்கரரின் விளக்க உரைதான் மிகப் பழமையானது. எனவே டாக்டர் கோசாம்பி அவர்கள் கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதிசங்கரரின் விளக்கவுரை எழுதப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது இயல்பாகும்.

ஆல்பர்ட் சுவைட்சர்

நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் இந்தியத் தத்துவங்கள் குறித்து விரிவாக ஆய்ந்திருக்கிறார். பகவத்கீதையானது பிராமணியத்தின் சாரம் என்றால், திருக்குறள் தமிழர்கள் பண்பாட்டின் சாரம் என்று அவர் கருதுகிறார்.

திருக்குறளில் உள்ள ஒழுக்கநெறிக் கோட்பாடுகளில், பிராமணியத்திலும், புத்த மதத்திலும், பகவத் கீதையிலும் உள்ளது போன்ற அளவுக்குச் செயலுக்குரிய நேர்பயன் (கைம்மாறு) என்கின்ற கருத்து அவ்வளவு முழுமையாக ஆதிக்கம் செலுத்தவில்லை. நன்மையை நன்மைக்காகக் கருதியே செய்தல் வேண்டும் என்கின்ற மெய்யறிவை நாம் ஏற்கெனவே இங்கே கண்டிருக்கின்றோம். அது பல்வெறு நீதிக் கருத்துக்களில் ஒளிவீசு கின்றது.

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

கீதையின் போதனைகள் பொதுநல நோக்கில் கடமையை வற்புறுத்துவன என்று கொள்ளும் போது யாருடைய, எத்தகு கடமைகள் என்பதை நுனித்து நோக்கினால் அதன் அடித்தளத்திலே குறிப்பிட்ட வருணச் சார்பு நலன் இருப்பதைத் தெளிவாக இனங்காணலாம். வருணதருமத்தைப் பாதுகாத்து உயர் வருணத்தினர் தம் உயர்நிலையைப் பேணிக்கொள்வதற்காக ஆக்கப்பட்ட நூல் அது என அந்நூல் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாது. நால்வருணத்தினரும் தத்தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மீறலாகாது என்பது கீதையிலே (2:35, 18:41-47) வற்புறுத்தப்பட்டமை இங்குக் கவனத்திற்கொள்ளத்தக்கது. இன்றைய நோக்கில் கீதையைக் கண்டிப்பவர்களுக்கு அதன் இந்த வருணச்சார்பு என்ற நிலை வாய்ப்பானதொன்றாக உள்ளது. குறளுக்கு இத்தகு பிரச்சனை இல்லை. அது தான் எழுந்த காலத்தின் நிலவுடைமைச் சூழலின் உழவுத்தொழில், முடியாட்சிக் கட்டமைப்பு என்பவற்றைச் சார்ந்த நூல் என்பது உணரப்பட்டாலும் அதன் உள்ளீடு ஒட்டுமொத்தமாகப் பொதுமக்கள் நலன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

(பழ. நெடுமாறனின் தமிழரும் கீதையும் நூலிலிருந்து)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.