அரசியல் சட்ட மேலாண்மையை நிலை நிறுத்தியவர் நீதிநாயகம் சந்துரு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2015 11:41

இராசீவ் காந்தி கொலை வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. நால்வரின் கருணை மனு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த மனுவை ஆளுநர் பாத்திமாபீவி நிராகரித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநரின் ஆணை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் சந்துரு வாதாடினார். கருணை மனுக்கள் குறித்து மாநில அமைச்சரவைகள் அல்லது மத்திய அமைச்சரவை பரிசீலனை செய்து அனுப்பும் பரிந்துரைக்கேற்ப ஆளுநர்களோ, குடியரசுத் தலைவர்களோ முடிவெடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது. அவ்வாறு முடிவெடுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டார்.

"அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையில் 700க்கும் மேற்பட்ட கருணை மனுக்களில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் தன்னிச்சையாகவே முடிவு செய்திருக்கிறார்கள். அமைச்சரவையின் பரிசீலனைக்கு அவை வைக்கப்படவுமில்லை. அமைச்சரவைகள் பரிந்துரைகள் அனுப்பவும் இல்லை.'' என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

இடைமறித்து மூத்த வழக்கறிஞர் சந்துரு பேசுகையில் "இதுவரை அரசியல் சட்டத்திற்கு புறம்பான வகையில் நீங்கள் முடிவெடுத்திருக்கலாம். இந்த தவறு தொடரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கையே நாங்கள் தொடுத்திருக்கிறோம். இந்த நால்வருக்காக மட்டுமல்ல. எதிர் காலத்தில் அரசியல் சட்டப்படி அமைச்சரவை கூடி செய்கிற பரிந்துரைகளின்படி மட்டுமே ஆளுநர் செயல்படவேண்டும்'' என வாதாடினார்.

நீதியரசர் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு ஆளுநரின் ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை வழங்கினார். வரலாற்றில் முதன்முறையாக இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் மாநில அமைச்சரவைகள் கூடிச் செய்கிற பரிந்துரையை ஆளுநர்கள் ஏற்கிற நிலையும், மத்திய அமைச்சரவை கூடி செய்கிற பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் ஏற்கிற நிலையும் ஏற்பட்டது. பல்லாண்டு காலமாக அரசியல் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அரசியல் சட்டம் நிலை நிறுத்தப்பட்டது. அன்று மூத்த வழக்கறிஞராகவும் பிற்காலத்தில் நீதிநாயகமாகவும் விளங்கிய சந்துரு அவர்கள்தான் அதற்குக் காரணமானவர்.
(பழ. நெடுமாறன் உரையிலிருந்து)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.