தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவரும், எண்ணற்றத் தியாகங்கள் புரிந்தவருமான சாலமன் அருளானந்தன் டேவிட் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.
கட்டிடக் கலை பொறிஞராக விளங்கிய அவர் பல்வேறு நாடுகளில் பணியாற்றி பல நகரங்களை உருவாக்கியவர். அந்தத் துறையிலேயே அவர் செயல்பட்டிருந்தால். மிகப் பெரும் செல்வராக விளங்கியிருப்பார். ஆனால், தனது கல்வியும் தான் ஈட்டிய செல்வமும் தமிழீழ மக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காக தனது தாய்நாட்டிற்குத் திரும்பி காந்தியம் என்ற அமைப்பை மருத்துவர் இராசசுந்தரம் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். தமிழீழத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அமைப்பின் மையங்கள் உருவாக்கப்பட்டன. 450க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் இந்த அமைப்பு நடத்தியது. இவற்றில் படிக்கும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு, கல்வி ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டன.
மலையகத்திலிருந்து குடியுரிமை பறிக்கப்பட்டு விரட்டப்பட்ட இந்திய வம்சா வழித் தமிழர்களை வவுனியாவில் குடியேற்றி அவர்களுக்காக முன்மாதிரியான பண்ணைகளை ஏற்படுத்திய பெருமை டேவிட் இராசசுந்தரம் ஆகியோருக்கே உண்டு.
1981ஆம் ஆண்டில் நான் தமிழீழம் சென்றிருந்தபோது அத்தகைய பண்ணை ஒன்றிற்கு இருவரும் அழைத்துச் சென்றனர். மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்த அவர்கள் இருவரையும் மனமாரப் பாராட்டினேன்.
அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் வெளிக்கடை சிறையில் இருந்த தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்பட 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் இராசசுந்தரமும் ஒருவராவர். அந்தப் படுகொலைகளிலிருந்து தப்பிய டேவிட் அவர்களும் மற்றும் பலரும் மட்டக் களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்கள். சிங்களவரை அதிரவைக்கும் வகையில் மட்டக்களப்புச் சிறை உடைப்பு நடைபெற்று டேவிட்டும் மற்றவர்களும் தப்பி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.
அதற்குப் பிறகு அவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. ஒரு நாள் சென்னையில் இருந்த எனது வீட்டிற்கு டேவிட், வசந்தன் ஆகியோர் வந்தனர். தங்களைப் படுகொலை செய்ய பிளாட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் திட்டமிட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். எனது வீட்டிலேயே நீங்கள் தங்கிக்கொள்ளலாம், உங்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க ஏற்பாடு செய்கிறேன் என ஆறுதல் கூறினேன். இரண்டு நாட்களில் திரும்பிவருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
ஆனால் இதை எப்படியோ மோப்பம் பிடித்த பிளாட் இயக்கத்தினர் வசந்தனைப் படுகொலை செய்துவிட்டார்கள். டேவிட் அய்யா அவர்கள் காரிலிருந்து கீழே தள்ளப்பட்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற படுகொலை அவரை மிகவுமாகப் பாதித்தது. உலகம் பூராவும் வாழ்ந்த தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும் என்ற கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தன்னுடைய இறுதிக் காலத்தை தாயக மண்ணில் கழிக்க வேண்டும் என விரும்பி புறப்பட்டுச் சென்றார். அங்கேயே அவருடைய இறுதி மூச்சு பிரிந்தது.
டேவிட் அவர்களின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவருடைய தியாகம், தொண்டு, துன்பம் ஆகியவை மறக்க முடியாதவை ஆகும். தனக்கென வாழாமல் தமிழினத்திற்கென வாழ்ந்து மறைந்த டேவிட் அவர்களுக்கு நமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். |