இடியென அந்த செய்தி என் காதில் விழுந்த கணத்திலிருந்து நிலைகுலைந்துபோனேன். எப்படி இதுபோல் நடக்க முடியும்? புகைப்படங்கள் வந்து சேர்கின்றன. பார்த்தவுடன் நெஞ்சாங்கூடே வெடித்து விடுவது போன்று பெரும் வலி. எங்களின் இருபது அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி அடித்து, நெருப்பால் சுட்டு, கத்தியால் கீறி, அதன் பிறகு கைகளை கட்டி காட்டில் போட்டு அருகிலேயே நின்று துப்பாக்கியால் சுட்டு... சாத்தானும், பிசாசுகளும் கூட செய்யத் துணியாத கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறது ஆந்திர அதிகார கும்பல்.
தமிழ்நாடு அரசு ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்திய அரசு ஒரு பேச்சுக்குக்கூட வாய்திறக்கவில்லை. சித்தம் கலங்கியவனாக உறைந்து போய் கிடந்த நிலையில் என்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து கொண்டிருக்கும் அமுல்ராஜிடமிருந்து இரவு பத்து நாற்பத்தைந்திற்கு ஒரு அலைபேசி அழைப்பு. சுடுபட்டு இறந்தவர்களில் ஏழு பேர் திருவண்ணாமலைக்கு பக்கத்திலுள்ள "படவேடு'' என்கிற தனது ஊரை சார்ந்தவர்களென்றும். படவேடு பக்கத்தில் உள்ள மலைவாழ் மக்கள் ஆறுபேர் என்றும் மீதமுள்ளவர்கள் தர்மபுரியை சேர்ந்தவர்களென்றும் கூறி அனைவரும் அப்பாவிகள், பேருந்துப் பயணம் செய்தவர்களை வழிமறித்து ஆந்திர அரசின் காவல்துறை இழுத்துச் சென்று பழிவாங்கியிருக்கிறார்கள். இன்று இரவு பிணங்கள் வருகிறது. விடிய விடிய அவைகளை புதைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் வர முடியுமா அண்ணா என்று கேட்க. மறு யோசனை இல்லாமல் "போகலாம்'' என்றேன்.
அமுல்ராஜோடு சேர்த்து என்னோடு நான்கு பேர் தயாரானோம். அதிகாலை நான்கு மணிக்கு புறப்படலாம் என்று முடிவு செய்து ஒரு மகிழுந்தில் கிளம்பினோம். சரியாக எட்டு மணிக்கு "படவேடு' கிராமத்தின் முகப்பை நெருங்குகிறோம். பயணத்திற்காக வேட்டிக்கட்டி சென்ற நான்... மகிழுந்தை நிறுத்தச்சொல்லி "பேண்ட்'' அணியவேண்டுமென்க.. "வேட்டி' நல்லாத்தானே இருக்கு எதுக்கு பேண்ட் என பிரதீப் கேட்க... "நம்மள காவல்துறை பூப்போட்டு வரவேற்கும்னு நெனக்காத... போறது போர்க்களத்துக்கு'' என்றபடியே உடை மாற்றி புறப்பட்டோம். நினைத்தது மாதிரியே ஊரின் வாசலில் கும்பல்கும்பலாக காவல்துறை. எங்களை ஏற இறங்க பார்த்தார்கள்.
மலையடி கிராமமான அந்த ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியாக இருந்தது. பெண்கள் தலையிலும் மாரிலும் ஓங்கி ஒங்கி அடித்து அழுது கொண்டிருந்தார்கள். காவல்துறை அந்த ஊரின் முக்கியமான நபர்களை அழைத்து விரைவில் அடக்கம் செய்வதற்கான வேலைகளைச் செய்யுமாறு கட்டளையிட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பச்சை ஓலைகளை பின்னும் வேலைகள். கூரைகளும், குடிசைகளுமாக "தரித்திரம்'நிரந்தரமாக வந்து தங்கியிருக்கும் அவர்களது வாழ்க்கை சித்திரங்கள். இவர்களா கோடிகள் புரளும் "செம்மரத்தை' வெட்டி எடுத்துவந்து விற்பவர்கள்? அப்படியென்றால் "படவேடு' மாட மாளிகைகளும், கூட கோபுரங்களாகவுமல்லவா இருந்திருக்க வேண்டும். அங்கிருக்கும் வீடுகளுக்கு சரியான கதவுகள் கூட இல்லையே. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்ணை நன்னன் என்கிற மன்னன் செங்கத்தை தலைநகராக கொண்டு ஆண்டிருக்கிறார். செல்வம் கொழித்த அந்த பூமியில் மக்கள் மட்டுமல்ல மந்திகளும், மான்களும், ஆடு, மாடுகள் கூட ஆனந்தமாக வாழ்ந்தது என்று ஒரு சங்கப்புலவன் "மலைபடுகடாம்'' என்கிற காவியத்தில் எழுதியிருக்கிறானே. ஆனால் இன்று? குடிக்க தண்ணீர்கூட இல்லாமல் குரங்குகள் செத்திருக்கின்றன. கிணறு தோண்டி மண் சரிந்தும், கயிறு அறுந்து விழுந்தும் ஒன்பது தமிழர்கள் மாண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? இந்த மண்ணை ஆண்டவர்கள் ஏன் இவர்களின் வாழ்வாதாரத்தை "நேர்'' செய்யவில்லை.
அடக்க முடியாத கோபத்தோடு... "முகம் முழுக்க கறுத்து வீங்கிய நிலையில் மூக்கும் வாயும் சிதைந்து - வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு பதப்படுததப்பட்ட பெட்டியில் சவமாக கிடக்கும் சக்திக்குமாரை முதலில் சென்று பார்த்தோம்.'' பெண்கள் ஓங்கி குரலெடுத்து அழுதார்கள். அதே இடத்திலிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளி இன்னொரு சவம். அய்யோ... நான் தலியறுக்கப்போறேனா?... "நெஞ்சம் பதறுகிற அழுகை ஓலங்கள்.
கண்கள் கலங்க... பெருமூச்சோடு பெரியவர்கள் சிலரை அழைத்து பேசினேன். "ஏற்கெனவே சுட்டு, பொசுக்கி கொண்டாந்து போட்டுட்டானுவோ... இனிமே போராடி என்ன செய்யப்போறோம்.... நாங்களே உசுர கையிலே புடிச்சுக்கிட்டு கெடக்குறோம்.. வேனாம் தம்பி'' என்றபடி கலைந்துவிட்டார்கள்.
நடுத்தர வயதுள்ளவர்கள் சிலரை அழைத்து பேசினோம். அதில் சிலர் கட்சிக்காரர்களும் இருந்தார்கள். உச்கிரமாக பேசியதை கேட்டுக்கொண்டிருந்த வர்கள் "இதோ வர்றோம்'' என்று போனவர்கள் ஆளுக்கொரு பக்கமாக கலைந்து சென்றுவிட்டார்கள். அதற்குள் நேரம் காலை, 9.30ஐ கடந்துவிட்டது. தூரத்தில் பார்க்க முன்பைவிட காவல்துறை எணணிக்கை பெருக்கிக்கொண்டேயிருப்பது தெரிந்தது.
எங்கே காவல்துறைக்குப் பயந்து புதைத்துவிடுவார்களோ என்று பதட்டமாகிக் கொண்டேயிருந்தது எங்களுக்கு. இளைஞர்கள், மாணவர்களை மட்டும் ஓரிடத்தில் திரட்டினோம்.
"இத்தனை பேர சுட்டு.. கொண்டுவந்து போட்டுட்டு போயிட்டானுங்க ஆந்திர போலீஸ்காரனுங்க... இப்படியே விட்டா இன்னும் பத்துபேர இழுத்துக் கிட்டு போயி சுட்டு வீசிட்டு போயிடுவானுங்க... இந்த சவங்களை ரோட்ல வச்சு போராட போறமா...? அடிச்சாலோ.. சுட்டாலோ... மொத ஆளா நா சாவறேன்... போராட நீங்க தயாரா...? மானமுள்ள தமிழனா இருந்தா வாங்க... இல்ல என் வேலையைப் பார்த்துக்கிட்டு நான் போறேன்....'' என்றதும் எல்லோரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் "நாங்க தயார்'' என்றார்கள். இது நடந்து கொண்டிருந்த நிலையில் எனது பக்கத்தில் தாயை சொறிந்தபடி, பழைய லுங்கி, கிழிந்த பனியனோடு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். எனது அருகில் வந்த பிரதீப்...''அண்ணா ஒரு தம்பி சொன்னான் உங்க பக்கத்துல நிக்கிறவர் ஊருகாரர் இல்லை. போலீஸ்காரர். அவரது இடது கையில் அலைபேசி. கையை பிடித்து தூக்கிப் பார்க்க நான் இதுவரை பேசியதையெல்லாம் "ரெக்கார்ட்' செய்து அவர் மேலதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தது தெரிந்தது.
"நீயெல்லாம் உண்மையான தமிழனா... செத்தவன் உன் சொந்த அண்ணந் தம்பியா இருந்தா.. இந்த வேலை செய்வியா?'' என்றதும் "மன்னிச்சிடுங்க'' என்றபடி அவர் நகர்ந்துவிட்டார்.
எங்களுக்கு முழு அளவில் ஆதரவு தந்தவர் ஆசிரியர் இரவிச்சந்திரன் அவர்கள். எல்லாம் சரி போராடுவதற்கு பிணத்தை தர அவர்களின் சொந்தக்காரர் கள் அனுமதிக்க வேண்டுமே. செத்துக்கிடக்கும் முருகனின் அண்ணன் வந்தார்.
"ஏற்கெனவே செதைச்சு சின்னாபின்னபடுத்திட்டானுவோ... இதுக்குமேல அது இருந்தா என்ன? கெட்டா என்ன? நான் தரேன் போராடுங்க'' என்றார். நாங்கள் பிணத்தை தூக்க-வீட்டருகே செல்வதற்குள் நூற்றுக்கணக்கான காவலர்கள் எங்களைச் சூழ்ந்துவிட்டார்கள். டி.எஸ்.பி. வைத்தியலிங்கம் என்னைப் பார்த்து... "ஏய்.. யார் நீ...? ஒனக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்... வெளிய போ...'' என்றார். எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஆரம்பமாகி "நான் பேசறதும், இவுங்க பேசறதும் ஒரே மொழி... இதத்தாண்டி வேற என்ன சம்பந்தம் வேணும்... நாங்க அறவழியிலே போறாடுறோம். இதுவரைக்கும் ஒரு கலெக்டர் வரல... ஒரு எம்.எல்.ஏ. வரல... ஒரு மினிஸ்டர் வரல.... என்னய்ய இப்ப நடக்குது. நாங்க போராடுவோம்... இந்த ஊரு மக்கள் வேணா. என்னை வெளியே போவ சொல்லட்டும்'' என்றதும் ஆண்களும், பெண்களும் அனைவரும் சேர்ந்து காவல்துறையை பார்த்து "வெளியே போங்க'' எனக் கத்த அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள். பிறகு கெஞ்சியபடியே ஒரு மணி நேரத்திற்குள் கலெக்டர் அல்லது மினிஸ்டர் வருவார் என்று சொல்ல... உங்களை நம்ப முடியாது இன்னும் ஒரு மணி நேரம்.. இருநூறு, முன்னூறு போலீஸ்தான் வரும். எங்களுக்கு போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று சொல்லி "தூக்குங்க'' என்றதும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு சவப்பெட்டியை தூக்கிவிட்டார்கள். போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மிகப்பெரிய தள்ளுமுள்ளு. ஒரே கத்தல்களும், கூச்சல்களும், சில அடிகள் கடப்பதும், காவல்துறை மடக்கி சவப்பெட்டியை கீழே கிடத்துவதும். மீண்டும் அவர்களை தளளிவிட்டு பெட்டிகள் இரண்டும் நகர்வதும் என அந்த இடமே புழுதிக்காடாக மிதந்தது. நூறு அடிகளை கடந்த நிலையில் பத்து பதினைந்து பேர் கொண்ட காவல்துறை குழு ஒன்று என்னை மட்டும் குறிவைத்து கூட்டத்திலிருந்து பிரித்தெடுத்து தனியாக தள்ளியது. என் செருப்புகள் சிதற நான் தடுமாறி நிற்பதற்குள் ஒரு அதிகாரி'' யோவ் அவன தூக்கி அந்த பள்ளத்துல வீசுங்கையா... எல்லாம் இவனாலதான்'' என்று கத்த... ஆறடி உயரம் கொண்ட ஒரு அதிகாரி இறுக்கமான முகத்தோடு என்னை கட்டி இறுக்கி தூக்கி அருகிலிருந்த இரண்டு ஆள் பள்ளங்கொண்ட குழியில் ஓங்கி எறிய போக.. எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. படவேடு இளைஞர்கள் பாய்ந்து வந்து அந்த அதிகாரியின் கழுத்தினை ஒருவர் சுற்றி வளைத்தார் மற்றவர்கள் என் இடுப்பில் கை கொடுதது ஒரு பூவைப்போல அந்த அதிகாரியின் கைகளிலிருந்து என்னைப் பிரித்தெடுத்தார்கள். வேறு சில இளைஞர்கள் கைகளில் கற்களை எடுத்துக்கொண்டார்கள். "இதுக்கு மேல கை வச்சீங்க... நடக்கறதே வேற'" என்றதும அப்போதைக்கு விலகி நின்றனர். காவல் துறையினர்
சில அடி தூரம்தான் கடந்திருப்போம்.. புதிதாக வந்து சேர்ந்து கொண்ட காவலர்களுடன் மீண்டும் தள்ளுமுள்ளு.. அதன் பிறகு "ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியாத நிலை. எப்படித்தான் வீரம் வந்ததோ தெரியவில்லை... "படவேட்டு பெண்கள் மட்டும் ஒன்றாக சேர்ந்து சவப்பெட்டிகளை தூக்கி நடக்க ஆரம்பிக்க ஆண் காவலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதற்குள் பல அடிகள் கடந்து ஊரின் முதன்மை சாலைக்கு வந்துவிட்டோம். அதன்பிறகுதான் பெண் காவலர்கள் வந்து தடுத்தனர். காட்சி ஊடகங்கள் குவிய தொடங்கின. இதுவரைக்கும் எந்த அதிகார வர்க்கங்களும் வராததிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துவிட்டு உடனடியாக அப்போதைய முதல்வர்
ஓ. பன்னீர்செல்வம் வரவேண்டும். இதற்கு காரணமான ஆந்திர அரசை மத்திய அரசு கலைக்க வேண்டுமென்றும். சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்திரவிட வேண்டுமென்றும் பதிவுசெய்துவிட்டு நடு ரோட்டிலேயே போராட்டத்தை உக்கிரமாக்கினோம். காவலர்கள் மேலும் மேலும் குவிய தொடங்கினர். ஊரே ஒன்று திரண்டு நெருப்பாக நின்றது. தெப்பமாக நனைந்து கூட்டத்தில் நடுவில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி ஒரு பெரியவர் வந்தார். காவலர்கள் தள்ளியபோது என்னிடமிருந்த சிதறிய எனது இரண்டு செருப்புகளையும் கையிலேந்தியபடி அருகில் வந்து "கால்ல போடுங்க... அங்க ரோட்லயும் பள்ளத்திலயும் விழுந்து கிடந்தது'' என சம்பவம் நடந்து ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு... கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் தள்ளி நிற்கும் என்னிடம் வந்து என் காலடியில் பேரன்போடு போட்டது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது. "பாவிகளா,,, இப்படிப்பட்ட உன்னதமான மனிதர்களின் பிள்ளைகளை கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது'' என என் மனம் சபித்தது. இதற்கு காரணமானவர்களை. 12 மணி நெருங்கும் நேரத்தில் பா.ம.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் வேலு அவர்களுடன் சேர்ந்த சிலர் கையில் மாலைகளோடு ஊருக்குள் வந்தார்கள். நடக்கும் களேபரங்களை கண்டவர்கள் கொஞ்ச நேரம் நின்றார்கள். நான் அவர்களின் அருகில் சென்று மலர் வளையத்தோடு வந்திருக்கிறீர்களே நீதி கிடைக்க வேறு ஏதாவது செய்யுங்களேன்'' என்றதும் அவர்கள் அருகிலிருந்து வீட்டின் திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
இதற்கிடையில் எனக்கு தெரிந்த முக்கியமான இயக்குநர் ஒருவரின் அண்ணன் என்று கூறிக்கொண்டு ஒரு உயர்மட்ட காவல்துறை அதிகாரி என்னை தனியாக அழைத்து பக்குவமாக பேசினார். நானும் அவருக்கு மரியாதை கொடுத்து பேசி உயர்வான அதிகார வர்க்கத்திலிருந்து நடுவர் வந்து உண்மை யான உத்திரவாதமும், சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவும் வராத வரை என்னையோ இந்த ஊர் மக்களையோ சமாதானப்படுத்த முடியாது'' என்று உறுதியோடு கூறியதும் புறப்பட்டார்கள்.
அடுத்து காவல்துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது உறவுக்காரர் ஒருவர் என்னை அழைத்து சமாதானப்படுத்த முயன்றார். அரசாங்கம் எல்லாம் செய்யும்'' என்றார். "இத நீங்க சொல்றத விட அரசாங்கம் சொல்லட்டும் என்றேன். ஏதேதோ பேசியும் நான் இசையவில்லை என்பதால் அவரும் புறப்பட்டுவிட்டார்.
படவேடு கிராமத்தில் ஒரே ஒரு பிணத்தை மட்டும் காவல்துறை காலையிலேயே அச்சுறுத்தி எரிக்க வைத்துவிட்டார்கள். இதற்கிடையில் பா.ம.க. பிரதிநிதிகள் சென்னையிலிருக்கும் வழக்கறிஞர் பாலுவிடம் தொடர்புகொண்டு பேசினர். நேரம் மதியம் ஒன்றரை கடந்து கொண்டிருந்தது. வழக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை முயற்சி செய்கிறேன். பாதிக்கப்பட்ட வர்களின் பெயர்களை உடனே குறிப்பெடுத்து மனுவாக மாற்றி "வாட்சு அப்''பில் அனுப்புங்கள் என்றார். எவ்வளவோ முயற்சித்தும் பிற ஊர்களிலும், மலை கிராமங்களிலும் கொலையுண்ட நபர்களின் விபரங்களை சேகரிக்க முடிய வில்லை. படவேடு கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குறிப்புகளை மட்டும் எழுதி அவர்களின் சார்பாக கொலையுண்ட சக்திக்குமாரின் மனைவி முனியம்மாள் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
கூடி நிற்கும் ஊர் மக்களையும், எங்களையும் ஏமாற்றி, கண்ணில் மண்ணை தூற்றிவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிணத்தை கைப்பற்றி புதைத்தோ, எரித்தோ விடலாம் என காவல்துறை கணக்கு போட்டு, காய் நகர்த்தி இன்னும் இன்னும் காவலர்களை குவித்துக்கொண்டேயிருந்தது.
அரசாங்க காரில் பெரும் உயர் அதிகாரி ஒருவர் காவலாளிகளின் பாதுகாப்போடு வந்திறங்கினார்.
"இதுக்குமேல வச்சிருந்தா பிணம் நாறும்... எல்லாரும் ஒத்துழைப்பு குடுங்க'' என்றார்.
"ஏற்கெனவே கொண்ணு நாறவச்சுதான் ஆந்திராக்காரன் அனுப்பி வச்சிருக்கான். இதுக்கு மேலே என்னங்கையா இருக்கு'' என்றேன். "அரசாங்கந்தான் நிவாரணம் அறிவிச்சிருக்கே'' என்றார்.
"முகலிவாக்கம் கட்டிட விபத்தில் செத்த ஆந்திர தொழிலாளர்களுக்கு.. தமிழ்நாடு ஆளுக்கு இருபது லட்சம் தந்திருக்கு.. ஆந்திர கும்பல் எங்கள் தமிழனை கொண்ணதுக்கு அரசாங்கம் இரண்டு இலட்சமும் அ.தி.மு.க. ஒரு லட்சமும் தரும்னா.. எந்த வகையிலிங்க ஞாயம்'' என்றேன்.
கடைசியில் அவரும் களைத்துப்போய் புறப்பட்டு விட்டார். மணி நான்கினை நெருங்கிக் கொண்டிருந்தது. இறுதியாக ஓடிவந்த ஆர்.டி.ஓ. உமாமகேசுவரி அவர்கள் எங்களை அழைத்து.. "நீங்கள் செய்வது அராஜகம்... அரசாங்கத்திற்கு ஒத்துழையுங்கள்'' என்றார். "இதுவரைக்கும் எம்.எல்.ஏ. எம்.பி., கலெக்ட்ர் கூட வரல... யார் செய்றது அராஜகம்... இந்த ஊரிலிருக்கிற. தாலியறுக்கப்பட்ட ஆறு பெண்களையும் கூப்பிட்றோம்.. நீங்களும் ஒரு பொண்ணுத்தானே.. அவுங்களுக்கு சமாதானம் சொல்லுங்க... நாங்க ஒதுங்கிட்றோம்'' என்றேன். அதன்பிறகு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஓரமாக ஒதுங்கி சக அதிகாரிகளுடன் ஒரு மரத்தடிக்கு சென்று விட்டார்.
நேரம் மாலை ஐந்தினை நெருங்கிக்கொண்டிருந்தது. உர் கலையாமல் உக்கிரமாக நின்று கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகளும், பெண்களும் கத்தி கதறும் சத்தம் ஊரையே கிழித்துக்கொண்டிருந்தது. ஊர் முழுக்க நின்ற காவலர்களின் தலையிலிருந்து வழக்கமா அணிந்திருக்கும் தொப்பி கழற்றப்பட்டு... அதற்குப் பதிலாக இரும்பு தொப்புகளை அணிந்து கொண்டிருந் தார்கள். ஒரு வாகனத்திலிருந்து நீண்ட தடிகள் இறக்கப்பட்டு அவர்களின் கைகளில் கொடுக்கபட்டுக்கொண்டிருந்தது. எங்களில் அருகில் வந்த ஒரு அதிகாரி கோர்ட் நிச்சயம் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு தராது. ஏன்ன இது இரண்டு மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினை... பாத்து நடந்துக்குங்க'' என்றார்.
ஏற்கனவே என்னைத்தூக்கி குழியில் அடிக்க பாய்ந்த அதிகாரிகளின் நகங்கள் கீறி எனது வலது கையில் ரத்தம் கசிந்து "எரிச்சல்' இருந்துகொண்டேயிருந்தது. இதனைக் கேட்டதும் மனதும் எரிய ஆரம்பித்துவிட்டது.. கோர்ட்டே சாதகமாக இல்லன்னாலும் சரி... எங்கள கொண்ணாலும் எங்கள் தமிழர்களை பொணத்த உங்கக்கிட்டே விட்டுடுவேன்னு நெனச்சிராதீங்க... என்றேன்.. ஊர் மக்களும் போர்க் களத்தில நிற்பது போல் துணிந்து நின்று கொண்டிருந்தார்கள்.
ஐநந்து பதினைந்து... ஐகோர்ட் தீர்ப்பு வந்தது. ஆறு தமிழர்களின் பிணங்களை பத்திரப்படுத்தி மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்று.. சற்று ஆசுவாசமானோம். அதிலும் சிறு வருத்தம். ஆந்திர மருத்துவர்களே இங்கேயும் பரிசோதனை செய்வார்கள் என்பது. பெரும் வருத்தம். இந்த கொடூர கொலைகள் நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது... இதுவரை ஆந்திராவில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையும் வரவில்லை. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த தேசத்தை ஆண்டு கொண்டிருக்கிற பாரதிய சனதா அரசும், அதன் பிரதமர் மோடி அவர்களும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. தமிழன் எங்கு செத்தாலும் எல்லா அரசுகளும் கொண்டாடுகின்றன.
ஈழத் தமிழர்களின் இன அழிப்பில் இதுவரை மூன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக வல்லரசுகளோடு சேர்ந்து இந்தியாவும் கூட்டு வைத்து அழித்து முடித்தது.
தமிழனை இல்லாதொழிக்க காங்கிரஸ் சிங்களனவனுக்கு தோள் கொடுத்தது. பாரதிய சனதா அவர்களை காப்பாற்ற தோழனாக நிற்கிறது. ஏழுநூறு தமிழ் மீனவர்களை கொன்ற சிங்களவன் எப்படி இந்தியனுக்கு நட்பு நாடாக இருக்க முடியும்...?
ஒரே ஒரு குஜராத்தியின் கை விரலை வெட்டியிருந்தால் கூட பிரதமர் மோடி சும்மா இருந்திருப்பாரா...? ஆந்திர கும்பல் என் தமிழனின் நாக்கை அறுத்திருக்கிறார்களே... கைகளை வெட்டியிருக்கிறார்களே.. உயிர்உறுப்பை சிதைத்திருக்கிறார்களே... ஏன் நீதி விாசரணைக்கு உத்தரவிடவில்லை?
அதிகார வர்க்கங்கள் எங்கள் நிலையை எங்கள் குமுறலை எங்கள் கோலத்தை புரிந்து கொள்ள வேண்டும். மனதில் மட்டுமே நிறைந்திருக்கும் இந்த கோபம் இப்பொழுது மரபணு முழுக்க பரவிக்கொண்டிருக்கிறது. எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இழந்தாலும் வரலாற்றை மட்டுமல்ல. வரைபடங்களையும் மீட்கும் காலம் வரும்.
எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்... எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்... |