"லெனினும் இந்திய விடுதலைப் போரும்' என்ற தலைப்பில் நாற்பது பக்கத்திற்கும் மேல் உள்ள ஒன்பதாம் பாகம் இந்தப் புத்தகத்தின் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்க்கிறது எனலாம். இந்தியாவின் மீதும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மீதும் தீர்க்கதரிசியான லெனினின் பார்வை எவ்வாறு இருந்தது என்றும், இந்திய சுதந்திரப் போராட்ட முன்னகர்வுக்கு தன்னுடைய ஆலோசனைகளையும், உதவிகளையும் எந்த அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திருந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் இதில் உள்ள ஆறு பகுதிகள் இருக்கின்றன. 1915 பிப்ரவரி 15ல் சிங்கப்பூரிலிருந்த இந்திய ராணுவம் நடத்திய புரட்சியை வியந்து நோக்கிய லெனின், புரட்சிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தம்மைச் சந்தித்துப் பேசிய மேடம் காமாவை "ஜோன் ஆஃப் ஆர்க்' குடன் பொருத்திப் பார்த்த லெனின், "ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் தேசியவாதிகளானாலும் கம்யூனிஸ்டுகளானாலும் மிதவாதிகளானாலும் புரட்சிவாதிகளானாலும் அவர்கள் அனைவரும் தமக்குள் ஒன்றுபட்டு அய்க்கிய முன்னணி அமைத்துப் போராட வேண்டும். அடிமைப்பட்டுக் கிடக்கும் காலனி நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஜனநாயக தேசிய இயக்கங்களுக்குக் கம்யூனிஸ்டு அகிலம் ஆதரவு தர வேண்டும்' என்ற தன்னுடைய கருத்தை மறுத்த எம்.என்.ராயின் நிலைப்பாட்டை பொறுமையுடன் பார்த்த லெனின், இந்தியாவில் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டு, "முன் எப்போதும் இல்லாத படுகொள்ளையின் எதார்த்த வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய நிலையை அங்கு காணலாம். இத்தகைய வர்க்கங்களின் கொள்கை இதுவேயாகும். இப்போது நடைபெறும் போர் அதனுடைய தொடர்ச்சியே ஆகும்' என்று தற்போதும் வேறு வடிவத்தில் நடத்திக்கொண்டிருக்கின்ற, 2015ன் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் நடைமுறையை அப்போதே கணித்த லெனின், ஆசியாவின் விழிப்புச் சகாப்தத்தில் இந்தியா முதலிடம் வகித்திருந்ததை கண்டுணர்ந்த லெனின், தன் தலைமறைவு வாழ்க்கையை நீலக்குறிப்பேடாக வெளியிடவைத்ததைப் போல, இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டுவந்த காலனி ஆதிக்கக் கொள்கையை அம்பலப்படுத்துகின்ற வகையில் "நீலப்புத்தகம்' ஒன்றை சோவியத் அரசு வெளியிட வைத்த லெனின் என - ஒரு அகன்ற, விசாலமான தொலைநோக்குப் பார்வையை இந்தியாவின் மீது செலுத்திய லெனினை இப்பாகம் முழுமைக்கும் உலவவிட்டிருக்கிறார் நூலாசிரியர்.
உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கதாநாயகன், புரட்சிப் பாதையில் நடைபோடத் துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் மாயாஜால மந்திரச் சொல், பாட்டாளி வர்க்கத்தின் இரும்புக்கரம், தத்துவஞானிகளுக்கெல்லாம் தலைமைத் தத்துவன், சோசலிசத்திற்கான தன்னுடைய தத்துவத்தினை தன் நாட்டின் கடைக் கோடி மக்களிடமும் கொண்டு சேர்த்ததோடு அதனை நடைமுறைப் படுத்தி, செழிப்பையும், வளர்ச்சியையும் நிரூபித்துக்காட்டிய ஒரே தலைவனான, அந்த உன்னதத் தலைவனான மாமேதை லெனினைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம், "லெனின் அவர்கள்' என்று நூலாசிரியர் குறிப்பிடும்போது லெனின் பற்றி அவர் அடைந்திருக்கும் பிரமிப்பை நமக்கும் உணர்த்த வைக்கிறார். அதனூடாகவே, நூற்றாண்டைக் கடந்து நடக்கவிருக்கின்ற அரசியல் நடைமுறையை முன் கணித்த லெனின், இந்தத் தவறு நடக்கும், அந்தத் தவறினால் சோவியத் ஒன்றியம் உடையும் என்பதையும் கணித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் நமக்கு இயல்பாகவே எழுகிறது. எத்தனையோ தலைவர்கள், புரட்சியாளர்கள், அறிவியலாளர்ள், விஞ்ஞானிகள் என இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்குப் போய் லெனினைப் பார்த்திருந்தாலும், அவரிடம் ஆலோசனைகளைப் பகிர்ந்து வந்தாலும், இந்தியாவிற்கே வந்திராத லெனினின் இந்தியா மீதான பார்வையும், அனுமானமும் அக்கறையும் பிரபஞ்ச அதியங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
நூலின் பத்தாவது பாகமான அதில் உட்பிரிவாக அ,ஆ,இ,ஈ என்றும் அதில் ஒவ்வொன்றிலும் உள்ளடக்கமாக பத்தொன்பது பகுதிகளான நூறு பக்கங்களில் அமைந்துள்ள இப்பாகத்தை மகத்தான பங்களிப்பாக இந்நூலுக்குச் செய்திருக்கிறார் ஆசிரியர். ரஷ்யப் புரட்சியுடன் தன் மனதையும் ஆன்மாவையும் லயிக்கச் செய்து, அதன் காரிய விளைவாக இந்திய சுதந்திரப் புரட்சியை நடத்திய முக்கியத் தலைவர்களான விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர், காந்தியடிகள், நேரு, இந்திரா பிரியதர்ஷினி, மாவீரன் பகத்சிங், நேதாஜி ஆகிய தலைவர்கள் பற்றியும் அவர்களுக்கான இந்திய ரஷ்ய உறவுகள் பற்றியும், அக்டோபர் புரட்சியின்பால் அவர்களது பார்வை, அந்தப் புரட்சியின் வீச்சை இந்திய சுதந்திரத்திற்காக எந்த வகையில் பயன்படுத்தினார்கள், எதிலிருந்து முரண் பட்டார்கள், எதையெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தார்கள் என்ற விரிவான விவரணைகளைக் கொண்ட இந்த பத்தாவது பாகம் ரஷ்யப் புரட்சியின் பின்னணியில் அதன் நினைவுகளுடனும், அது சர்வதேசத்திற்கு காட்டுகின்ற அரசியல் தெளிவுடனும், மார்க்சிய லெனினியக் கோட்பாட்டைச் சுமந்துகொண்டும் (சுகமான சுமை) இந்தியா முழுமைக்கும் நம்மை பயணிக்கத் தூண்டுகிறது.
விபின் சந்திரபாலர் மகாகவி பாரதியின் அழைப்பை ஏற்று சென்னை வந்து அவரைச் சந்தித்ததையும், சென்னையில் பல கூட்டங்களில் அவர் உரையாற்றியதையும், லாலா லஜபதிராயின் வீரம் செறிந்த முன்னெடுப்புகள், "ரஷ்ய ஒடுக்குமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் சட்டபூர்வமான அரசாங்கம் என்பது இராணுவக் கொடுங்கோலாட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த முறைகளை அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால் ரஷ்ய முறைகளையே பிரிட்டிஷ் அரசு கடைப்பிடிக்கிறது என மக்கள் நினைப்பார்கள். இந்த அடக்குமுறைகள் நீடித்தால் ரஷ்ய அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை என்று மக்கள் கருதுவார்கள்' என்று சொன்ன திலகர் பற்றியும், காந்தியடிகளுக்கும் டால்ஸ்டாயிக்குமான உறவு, அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், டால்ஸ்டாயை காந்தியடிகள் தமது குருநாதராக மதித்துவந்ததன் இலக்கிய அரசியல் பின்னணி, காந்தியடிகள் ரஷ்யப் புரட்சியின் பாலான தன்னுடைய அபிமானத்தையும் விமர்னத்தையும் லெனின் எப்படிப் பார்த்தார், காந்தியடிகள் ரஷ்யப் புரட்சியிடம் கற்றுக்கொண்ட தீரத்திற்கு எந்த மாதிரியான மறுவடிவம் கொடுத்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அஹிம்சையைக் கடைப்பிடித்தார் போன்ற எண்ணற்ற விவரங்கள் தொடர்ச்சியாக மடைதிறந்த வெள்ளமாக இப்பகுதி முழுமைக்கும் வந்துகொண்டே இருக்கின்றது.
"மரணப்படுக்கையில் இருந்த முதுபெரும் ரஷ்யத் திருத்தொண்டரான டால்ஸ்டாய் ஏந்தியிருந்த தெய்வீகத் தீபத்தினை இளம் இந்தியரான காந்தி தமது கைகளினால் ஏற்றுக்கொண்டார். டால்ஸ்டாய் தமது ஆன்மாவில் வைத்துப் போற்றிப் பாதுகாத்து வந்த அமர ஜோதியைத் தமது அன்பினால் அரவணைத்துக் காத்தும், தியாகத்தினால் பேணி வளர்த்தும் காந்தியடிகள் அந்த ஜோதியின் துணைகொண்டு, இந்தியாவில் கவிந்து இருந்த அடிமை இருளைப் போக்க முயன்றார். அந்த அற்புத தீபத்தின் ஒளிக் கதிர்கள் சகல பகுதிகளிலும் ஊடுறுவின' என்று காந்தி டால்ஸ்டாய் உறவுபற்றி பிரெஞ்சு தத்துவஞானி ரோமன் ரோலண்டு குறிப்பிட்டுள்ளதை ஆசிரியர் அற்புதமாக மேற்கோள் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, லெனின் எழுதிய "இரு முனைகளும் நடுவாந்திரமும் இந்திய டால்ஸ்டாயும்' என்ற நூல் பற்றிய பார்வையில், லெனின் அவர்கள், காந்தியைத்தான் இந்திய டால்ஸ்டாயாக வர்ணித்துள்ளதாகவே பலரும் நம்புகிறார்கள் என்பதையும் நூலாசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.
"மார்க்சையும் லெனினையும் கற்றது என் மனத்தில் ஒரு வலிமைமிக்க விளைவை ஏற்படுத்தியது. வரலாற்றையும் நடப்பு விவகாரங்களையும் ஒரு புதிய ஒளியில் காண எனக்கு உதவியது. வரலாற்றின், சமுதாய வளர்ச்சியின் நெடிய சங்கிலித் தொடரில் ஏதோ ஓர் அர்த்தம், ஏதோ ஒரு தொடர்ச்சி இருப்பதாகத் தோன்றியது. வருங்காலம் அதன் தெளிவின்மையை ஓரளவு இழந்துவிட்டது' என்று எழுதிய நேருவுக்கும், ரஷ்யாவுக்குமான நெருக்கத்தை விளக்குகின்ற பகுதியில், அக்டோபர் புரட்சியின் பத்தாவது ஆண்டுவிழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்று கலந்துகொண்டதையும், "பீட்டோகிரேடு நகரத்தின் இறுதி நாட்கள்' என்ற திரைப்படத்தை அங்கே பார்த்ததையும், தவிர பல்வேறு அரசியல் நுணுக்கங்களை அங்கே நேரு கற்றுக்கொண்டதையும் இப்பகுதியில் நாம் வியப்போடு பார்க்க முடிகிறது. "வருங்காலம் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறதென்றால், பெருமளவிற்கு அது சோவியத் நாட்டினால்தான். மேலும் ஏதாவது உலகப்போர் குறுக்கிடாமல் இருக்குமானால் இந்தப் புதிய நாகரீகம் பிற நாடுகளுக்கும் பரவும். முதலாளித்துவம் ஊட்டி வளர்க்கின்ற போர்களுக்கும் மோதல்களுக்கும் முடிவு கட்டிவிடும்' என்று நேரு குறிப்பிட்டதை ஆசிரியர் சுட்டிக்காட்டுவதன் வாயிலாக, நேருவின் அரசியல் அறிவையும் ஞானத்தையும், தீர்க்கதரிசனத்தையும் நம்மை அறியவைக்கிறார். நேருவின் வாரிசாக வந்த இந்திராவோ, சீறிப் பாய்ந்து இந்தியா ரஷ்யாவுக்கும் இடையில் இராணுவ உடன்பாடு செய்துகொள்ளும் வகையில் அவரை ரஷ்யா நேர்மறையாக பாதித்திருந்ததையும் நாம் புரிந்துகொள்ள வைக்கின்றார் ஆசிரியர்.
நேதாஜி பற்றி சொல்லப்படுகின்ற பக்கங்கள் மிகவும் காத்திரமானவை மாத்திரம் அல்ல, புதிய புதிய செய்திகள், பீதியைக் கிளப்புகின்ற தகவல்கள், அவரின் அளவற்ற துணிச்சலின் வெளிப்பாடுகள், நேதாஜியின் வெற்றியை நோக்கிய நடவடிக்கைகள், எங்கே எவ்வாறு அவர் சறுக்கினார் என்பதையும் நாம் ஊகித்துக் கொள்கின்ற வகையிலான கருத்துக்களை பல்வேறு ஆராய்ச்சியின் வாயிலாக நமக்கு நிறைய வைத்திருக்கிறார் நூலாசிரியர். சுபாஷ் பற்றி குறிப்பிடுகையில் "மரபு சிக்கலான அரசியல் எதிர்காலத்தைக் கொண்டிருந்த மனிதரான சுபாஷ்' என்று சொல்லப்படுவது சிந்திக்கத்தக்கதாகவும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவுமே தோன்றுகிறது. மாவீரன் பகத்சிங்கின் தீவிர புரட்சித் தோழரான பிருதிவிசிங் ஆசாத் பற்றிய செய்தி சிலிர்ப்பை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
இந்த வகையில் இந்தியாவிற்கும் இந்தியத் தலைவர்களுக்கும் ரஷ்யாவிற்குமிடையே மலர்ந்த பொது மற்றும் குடும்ப உறவுகள் பற்றியும் அதன் பயனை இந்தியச் சுதந்திரப் போராட்டம் எவ்வாறு அடைந்தது என்பது பற்றியும் இந்தப் பத்தாம் பாகம் சொல்லி வந்தாலும், கடைசிப் பகுதியான "புரட்சியில் பூத்த மண மலர்கள்' என்ற பகுதியில், ஏழு வருடக் குழந்தையாக புரட்சி இருந்தபோது, அதனைக் கட்டிக் காத்து வளர்த்த, வரலாற்றில் என்றைக்குமே அழிக்க முடியாத, மறைக்க முடியாத, மகத்தான மாவீரன் ஜோசப் ஸ்டாலின் என்ற ஒரு மாபெரும் மனித அவதாரம் இந்தியாவின் சம்மந்தி (பிரஜேஷ் சிங் உடனான ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா காதல் திருமணம்) என்று சொல்லப்படும் ஒரு செய்தியானது அற்புதமான பெருமிதத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பதினோறாவது பாகமாக நாம் பார்ப்பது "ரஷ்யப் புரட்சிகளும் தமிழகத் தலைவர்களும்' என்ற தலைப்பில் செக்கிழுத்த சிதம்பரனார், சிங்காரவேலர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, தமிழ்த்தென்றல் திரு.வி.க, டாக்டர் பி.வரதராஜூலு, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, சீனிவாச அய்யங்கார், இராஜாஜி, தோழர் ஜீவானந்தம் என முத்தான பத்து தலைவர்கள் பற்றியும் அவர்களின் தமிழக அரசியல் பணியையும், அதற்குத் தொடர்பாக ரஷ்ய புரட்சி அவர்களுக்குக் கொடுத்த உத்வேகத்தை அவர்கள் புகுத்திய யுத்திகளையும் இப்பாகத்தில் உள்ள பகுதிகள் தெளிவுபடுத்துகின்றன. "சோவியத் நாட்டிற்குச் சென்று லெனினைச் சந்தித்த இந்தியத் தலைவர்களிடம் "சிங்காரவேலர் எப்படி இருக்கிறார் என்ற கேள்வியைத்தான் லெனின் கேட்பதுண்டு' எனத் தமிழகக் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி கூறியுள்ளார்' என்கின்ற பெருமை கொண்ட சிங்காரவேலர்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக தொழிலாளர் நாளான மே தினத்தைக் கொண்டாடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மேலும் அவர், "நானும் என்னை ஒரு மாஸ்கோ ராஸ்கல்' என்று கூறிக்கொள்வதற்குப் பெருமைப்படுகின்றேன் என்று சொன்னது பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நியாயப்படி பார்ப்போமேயானால் உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷ்ய ஜார் வம்ச அரசாங்கமே மிகமிகக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கிறது. அதனாலேயே சமதர்ம முறை அனுபவத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று' என்று சொன்ன பெரியார், சோவியத் சென்று திரும்பியவுடன், இயக்கத் தோழர்கள் ஒருவரையொருவர் "தோழர்' என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும். சமதர்மக் கட்சி என்ற அரசியல் பிரிவை ஏற்படுத்தி அதற்கான செயல்திட்டமாக ஒன்பது கொள்கைகள் பெரியாரால் வகுத்தளிக்கப்பட்டன. ஜெர்மன் சோவியத் யுத்தத்தின்போது இந்தியாவில் துவக்கப் பட்ட "சோவியத் நண்பர்கள் சங்கத்தின்' தமிழகக் கிளைக்குத் தலைவராக திரு.வி.க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு.வி.க. தான் தமிழ்நாட்டில் தோழர் என்ற தூய தமிழ்ச் சொல்லை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவராக இருந்திருக்கிறார். "சுதந்திரப் போராட்டம், இந்தியா சுதந்திரம் பெற ஆயுதம் ஏந்த வேண்டும்' என்ற கட்டுரையை எழுதி ஒன்பது மாதச் சிறைத் தண்டனை பெற்ற தமிழகத் தலைவர் டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு, வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணியசிவா, "நான் இங்குக் கண்டவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட இந்திய மக்கள் நடத்திவரும் உறுதியான போராட்டத்தில் எனக்கோர் உத்வேக சக்தியாக விளங்கிவரும். சோவியத் நாட்டின் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மனித குலத்துக்கு ஒரு ஜீவனுள்ள உதாரணத்தை வழங்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்' என்று மாஸ்கோவில் உரையாற்றிய சீனிவாச அய்யங்கார், அபேதவாதம் நூலை வெளியிட்ட ராஜாஜி, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்த தோழர் ஜீவானந்தம் என இப்பகுதியில் இடம் பெற்றுள்ள பத்து தமிழகத் தலைவர்கள் பற்றி வைக்கப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் அவர்களின் சோவியத் நாட்டுடனான பிணைப்புகளை நாம் படிக்கையில் அரசியல் மற்றும் சமுதாயப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒரு பூரணத்துவ நம்பிக்கை நம்மில் ஏற்படுவதைத் தடுக்க முடியாதபடிக்கு சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
அக்டோபர் புரட்சியின் பலமுனைத் தாக்கம், தேச பக்தப் போரின் போது நட்புறவு, கம்யூனிஸ்டு அகிலத்தின் தூதுவர்கள் - என்ற மூன்று தலைப்பில் முறையே 12, 13, 14வது பாகமாக அதில் உள்ளடக்கமாக 8 பகுதிகள் நூலில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் புரட்சியின் விளைவாக காங்கிரஸ் கட்சியும், இந்திய நாடும் அடைந்த மாற்றங்களையும், இரண்டாம் உலகப்போரின் போது இரு நாட்டு மக்களுக்கிடையே எழுந்த நட்புணர்ச்சியையும், ஆதரவுப் போக்கினையும் இந்தப் பகுதிகளில் விளக்குவதோடு, இருநாட்டு அறிஞர்கள் அரசியல் தலைவர்கள் தத்தமது எண்ண ஓட்டங்களை அலசி ஆராயச் செய்கிறார் நூலாசிரியர். "ஆயுத பலத்தின் மூலம் போல் விசத்தை நசுக்க முயல்வது என்பது வீணான முயற்சியாகும்' என்ற காந்தியின் கூற்றையும், "இந்தியாவும் சர்வதேசத் தொடர்புகளுக்கான அவசியமும்' என்ற தன்னுடைய கட்டுரையில், சோவியத் நாட்டுடன் அனைத்துத் துறைகளிலும் தொடர்புகளை நிறுவி அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்ற கருத்தை முன் வைத்து நேரு தொலைநோக்கோடு சொன்னதையும், "சுயராஜ்யம்' என்பது எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட திலகர் கூட சுயராஜ்யம் என்பதை வெறும் டொமினியன் அந்தஸ்து என்ற கருத்தில்தான் கூறினார், ஆனால் அக்டோபர் புரட்சிக்குப் பிறகே, சுயநிர்ணய உரிமை என்பது காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளாயிற்று என்ற கருத்தையும், அதன் முன்பின்னான சாட்சிகளாக இருந்த அக்டோபர் புரட்சியின் சமிஞ்ஞைகளையும் மிக அழகாக இந்தப் பகுதிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.
"இன்று முதற்கொண்டு உங்களின் சமய நம்பிக்கை, உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் தேசிய மற்றும் கலாச்சார நிறுவனங்கள் யாவும் சுதந்திரமானவை: மீறவொண்ணாதவை என அறிவிக்கப்படுகிறது. உங்கள் தேசிய வாழ்வைச் சுதந்திரமாகவும் தங்கு தடை இன்றியும் முறைப்படுத்திக் கொள்ளுங்கள், இது உங்கள் உரிமை' என்று 1917 டிசம்பர் 3ம் தேதி அங்கே வெளியிடப்பட்ட அறிக்கையானது மிகவும் முக்கிய அம்சமாக இருக்கிறது. சோவியத் மீதான ஹிட்லர் படையெடுப்பின் போது உடனடியாக, 1941 ஜூலை 22 நாள் இந்தியாவில் சோவியத் நாட்டுடன் ஒருமைப்பாடு கொள்ளும் அகில இந்தியத் தினமாகக் கொண்டாடப்பட்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவின் புரவலராக ரவீந்திரநாத் தாகூர் விளங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட நாள் குறித்த சர்ச்சையும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ள இப்பகுதியில் கம்யூனிஸ்டு அகிலத்தின் தூதுவர்கள் இந்தியா வந்தது, இந்தியத் தூதுவர்கள் ரஷ்யா சென்றது உள்ளிட்ட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. காரல் மார்க்சை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது திலகர்தான் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் காந்தி – லெனின் இடையிலான வேறுபாடுகள் என இவை இரண்டு தகவல்களும் பெட்டிச் செய்திகளாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் இம்மூன்று பாகங்களும் இருநாட்டு புரட்சி இளைஞர்கள், பொதுமக்கள், அறிஞர்கள், அரசியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோருக்கு இடையே போரின் போது மலர்ந்து நிகழ்ந்த நினைவுகளின் சாட்சியங்களாக அமைந்திருக்கின்றன. மிக முக்கியமான தலைவர்களின் பெயர்களும் அவர்கள் தொடர்பான பயணங்கள், கட்டுரைகளின் முக்கிய பகுதிகள், அவர்களுடைய கருத்துகள் என பகுதி முழுமைக்கும் விரவிக் கிடக்கின்றன. ஹிட்லர் போலந்தைக் கைப்பற்றியது குறித்து, "போலந்து அரசின் கம்யூனிச எதிர்ப்பு என்னும் பிற்போக்கான கருத்தின் விளைவாக இத்துயர நிகழ்ச்சி அரங்கேறிற்று. ஏகாதிபத்திய அரசுகளின் சோவியத் எதிர்ப்பு என்னும் கொள்கைத் தடத்தைச் சிறிதுகூடப் பிசகாமல் பின்பற்றி, ஜெர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லர் முன் நெளிந்து, குழைந்து பணிந்து நிற்கப் போலந்து அரசு தவறவில்லை' என்ற கருத்து பதிவிட்டிருப்பதன் நோக்கத்தையும், ஒருவேளை சோவியத்தின் நட்புக் கரத்தை போலந்து ஏற்றிருந்தால் இரண்டாம் உலகப் போருக்கான துவக்கத்தின் காரண காரியங்கள் தடைபட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆக, உலக முதலாளித்துவ நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பும், ஏதாதிபத்தியமுமே மக்கள் நலனை அழிக்கின்ற சக்தி என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டே வந்திருக்கிறது.
இலக்கியத் துறையில் மலர்ந்த நட்புறவு என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள பதினைந்தாம் பாகமானது பதினேழு பகுதிகளைக் கொண்டு தொண்ணூறு பக்கங்களில் விரிகிறது. மற்ற பாகங்களோடு ஒப்பிடும்போது இலக்கிய நயம் மிகுந்து காணப்படுகின்ற இப்பகுதியில், சுவையான, அற்புதமான, கருத்தாழமிக்க தகவல்கள் பரந்துவிரிந்து வைக்கப்பட்டுள்ளன. "திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் காந்தியடிகள் டால்ஸ்டாய் மூலமே அறிந்து கொண்டார் என்பது மற்றொரு வியப்பான செய்தியாகும்' என்று நமக்கு சொல்லப் படுகின்ற செய்தி எத்தனை வியப்பானது என்று எண்ணி எண்ணி நாம் வியப்பதில் வியப்பில்லை. "ரஷ்ய அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள, அணுவும் துளைக்க முடியாத சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் உலகின் மிகச் சிறந்த நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் ஒன்றாகும்' - இதைவிட பெருமை மிகுந்த, வியப்பின் உச்சத்தைத் தொட வைக்கின்ற இந்திய ரஷ்ய இலக்கியத் தொடர்பு குறித்த செய்தி வேறெதுவாக இருக்க முடியும்? தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.பி.கோபால் செட்டியார் டால்ஸ்டாயுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் உள்ளிட்ட தொடர்ச்சியான வியப்புச் செய்திகளை வரிகள் நெடுகிலும் இப்பகுதிகளில் காணமுடிகிறது.
லியோ டால்ஸ்டாயிடம் தொடர்பு கொண்டிருந்த மற்ற இந்தியர்கள், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்குமான தொன்மை தோய்ந்த இலக்கிய உறவுகள், இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள், கிழக்கின் விடியலுக்காக பாடிய பனிநாட்டுப் பறவைகள் என்ற தலைப்பில் ரஷ்ய இலக்கிய ஆளுமைகள், இருநாட்டின் இலக்கியம் குறித்த ஆய்வுகள், இருநாட்டு இலக்கியப் படைப்புகளில் மிளிர்கின்ற பொதுவான அம்சங்கள், அக்டோபர் புரட்சி பற்றி எழுதிய இந்திய எழுத்தாளர்கள் என அள்ளிக் குவிக்கப்பட்ட தகவல் களஞ்சியமாக இருக்கின்ற இப்பகுதியானது மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிற வகையில் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இந்தப் பாகத்தின் நிறைவாக வருகின்ற பகுதியில் "தாய்' காவியத்தின் கதாநாயகன் மக்சிம் கார்க்கியின் இந்தியத் தாகம் பற்றிய குறிப்புகள், அவர் காந்தியடிகள் மீது வைத்திருந்த அபிமானம் போன்றவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொண்ணூறு பக்கங்களில் வைக்கப்பட்ட விசயங்கள் எண்ணூறு பக்க விவரணைகளை உள்ளடக்கிய அதிசயங்களாக மிளர்கின்ற வகையில் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
நூலின் நிறைவாக "அக்டோபர் விடியலில் பாடிய குயில்கள்' என்ற தலைப்பில் வருகின்ற பதினாறாம் பாகமானது இந்தியப் பண்பாட்டின் சிறப்பான, சீரான கூறுகளை, அழகியல்களை உலகமெங்கும் பறைசாற்றுகின்ற வகையில், சில கவிஞர்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக நூலாசிரியர் உணர்த்துகிறார். மும்மொழிக் கவிஞர் மிர்ஜா காலிப், ரவீந்திரநாத் தாகூர், நஸ்ரூல் இஸ்லாம் எனத் தொடங்கி தென்கிழக்கு ஆசியாவின் முதல் தமிழ்ப் புரட்சிக் கவிஞன் என அறிமுகப்படுத்தி மகாகவி பாரதியாரின் சிறப்புகளை மிக விரிவாக எடுத்துரைத்த பின்னர் பாரதிதாசன் பற்றியும் அவருக்கும் புரட்சிக்கும் உள்ள பந்தத்தினையும் சொல்லி, அதனூடாக ரஷ்ய அறிஞர்களின் தமிழாராய்ச்சிப் பணிகளையும் எடுத்துரைத்து, ஈடுசொல்ல முடியாத தகுதி மிகுதி மிகுந்த இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலினை நிறைவு செய்திருக்கிறார் நூலாசிரியர் அய்யா பழ.நெடுமாறன். |