நவம்பர் 13- கடலூரில் - ஏரி, குளங்களை தூர்வாரியிருந்தால் கடலில் கலக்கும் ஏராளமான நீரைச் சேமித்து சேதத்தைத் தவிர்த்திருக்க முடியும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது-
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் பெரும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி சரிவர சென்றடையவில்லை. மருத்துவ உதவிகள் கிராமப்புறங்களுக்கு போய்ச் சேர வேண்டும். இல்லாவிடில் தொற்றுநோய் ஏற்பட்டு, மேலும் பலர் இறக்க நேரிடும். வேளாண்மை பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுப்பைத் தொடங்கவில்லை. கணக்கெடுப்பு எடுத்தால்தான் இழப்பீடு வழங்க முடியும்.
வெள்ளச் சேதத்துக்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே முக்கிய காரணம். வீராணம் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளை மார்ச், ஏப்ரல் மாதங்களில் தூர்வாரியிருந்தால் ஏராளமான நீரைச் சேமித்திருக்கலாம். சேதத்தையும் தவிர்த்திருக்கலாம். வீராணம் ஏரி தூர்வார ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மூன்றரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்காலான வெள்ளியங்கால் ஓடை சரியாகத் தூர்வாரப்பட்டிருந்தால் சேதம் ஏற்பட்டிருக்காது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன, 30க்கும் மேற்பட்ட படகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இது குறித்து அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மட்டுமல்லாமல் இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டும். மத்திய அரசு பெருமளவில் நிதி உதவி செய்ய முன்வர வேண்டும்.
தமிழகம் கண்டிராத பெரு மழையும், வெள்ளமும் ஏற்பட்டு விவசாயி களும், ஏழை, எளிய மக்களும் வாழ்விழந்து தவிக்கிறார்கள். இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் பிரச்சனை. எனவே இப்பிரச்சனையை அரசியல் ஆதாயம் தேடும் பிரச்சனையாகக் கருதாமல் அனைத்துக் கட்சிகளும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வரவேண்டும். தமிழக அரசும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வ கட்சிக் குழு அமைத்து உதவிப் பணிகளை மேற்பார்வையிட செய்யவேண்டும் என பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
அப்போது, கடலூர் மாவட்டத்தலைவர் ஆ. செ. பழமலை, மாவட்டச் செயலர் வை. பாலசுப்பிரமணியன், வடக்குமாங்குடி மோகன், மாநில மாணவர் அமைப்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். |