தமிழுக்குக் கிழக்கின் கொடை கராஷிமா - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:21

தென்னிந்திய வரலாறு, தென்னாசிய வரலாறு ஆகியவற்றில் ஆசியாவின் மிகச்சிறந்த அறிஞரான நொபொரு கராஷிமா அவர்கள் நவம்பர் 26ஆம் தேதி அன்று காலமான செய்தி உலகத் தமிழர்களுக்கு மிகுந்த துயரத்தை அளிப்பதாகும்.

டோக்கியோ பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக விளங்கிய அவர் ஜப்பானிய வரலாற்று அறிஞர் ஆவார். இந்திய - ஜப்பானிய கலாச்சார உறவுகள் மேம்படுவதற்கு அவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் இந்திய அரசு அவருக்கு 2013ஆம் ஆண்டு பத்மÿ விருதினை வழங்கியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் டோக்கியோ சென்றபோது அவரை நேரில் சந்தித்து இந்த விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

1985ஆம் ஆண்டில் இந்தியக் கல்வெட்டியல் கழகத்தின் தலைவராக பதவி வகித்தார். 1996 முதல் 2000ஆம் வரை தென்னாசிய ஆய்வுக்கான ஜப்பானிய கழகத்தின் தலைவராகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் தலைவராக 1989ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற 8ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மிகச்சிறப்புடன் நடத்திய பெருமை அவருக்கு உண்டு.

18-09-2009 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக மாவட்ட ஆட்சியாளர் மாநாட்டில் உரையாற்றும்போது தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை 2010ஆம் ஆண்டில் சனவரியில் தமிழகத்தில் நடத்தப்போவதாக திடீரென அறிவித்தார்.

1995ஆம் ஆண்டுக்குப் பிறகு 15 ஆண்டு காலமாக உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை. அதை நடத்துவதற்கு இதுவரை அக்கறை காட்டாத அவர் திடீரென இவ்வாறு அறிவித்ததில் பின்னணி உண்டு. ஈழத் தமிழர் பிரச்சினையில் தாம் செய்துவிட்ட மாபெரும் தவறை மூடி மறைப்பதற்காக இந்த மாநாட்டை நடத்தி தன்மீது படிந்துவிட்ட மாறாத களங்கத்தைத் துடைப்பதற்கு அவர் திட்டமிட்டார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவருடன் கலந்து பேசி அவர் மூலம் அம் மன்றத்தின் ஒப்புதலைப் பெற்று இந்த மாநாட்டினை நடத்த முயன்றிருக்க வேண்டும். ஆனால், அறிவிப்பைச் செய்துவிட்டு அம்மன்றத்தின் தலைவராக இருந்த நொபொரு கராஷிமா அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர் இதற்கு உடன்பட சம்மதிக்கவில்லை. நான்கு மாத கால அவகாசத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த இயலாது குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அவகாசமாவது வேண்டும் எனக் கூறினார். மேலும் கீழ்க்கண்ட நிபந்தனைகளை விதித்தார்.

1. 2010 டிசம்பர் அல்லது 2011 சனவரியில் மாநாட்டை நடத்தலாம்.

2. ஆய்வு மாநாடு தனியாகவும், அரசியல் நிகழ்ச்சிகள் தனியாகவும் நடத்தப்படவேண்டும்.

3. 1995ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் கட்டுரைகள் அச்சிடப்பட்ட 5 தொகுதிகள் வெளியிடுவதற்கு தயாரான நிலையில் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் உள்ளன. இது குறித்து தமிழக முதல்வருக்கு பல வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பியும் பயனில்லை. 5 ஆண்டு காலமாக அவை வெளியிடப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக வெளியிடவேண்டும்.

வெவ்வேறு வகையான அழுத்தங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்ட போதிலும் அவர் மன்றத்தின் தன்மதிப்பை நிலை நிறுத்துவதில் உறுதியாக இருந்தார். தங்களைக் கேட்காமல் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்தது முதல் தவறு. மாநாடு நடத்துவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டாண்டு அவகாசம் வேண்டும். அப்போதுதான் உலகளாவிய தமிழறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க முடியும். இவற்றையெல்லாம் கொஞ்சமும் யோசித்துப்பாராமல் தான் எண்ணியதைச் செய்ய நினைக்கும் முதலமைச்சரின் கைப்பாவையாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இயங்க முடியாது என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டார்.

ஆனால், 2011ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இம்மாநாட்டை நடத்த வேண்டும் என விரும்பிய கருணாநிதி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பிளவுபடுத்தி உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக இம்மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அவ்வாறே நடத்தினார். அவர் எதிர்பார்த்த பயன் கிட்டவில்லை.

ஆனால், பல்வேறு நாட்டு தமிழறிஞர்கள் ஒன்றுகூடி ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட அயராத உழைப்பின் மூலம் உருவாக்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் புறந்தள்ளுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் தமிழக முதலமைச்சர் செய்த முயற்சியைக் கண்டு அளவில்லாத வேதனையடைந்த நொபொரு கராஷிமா மன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது குறித்து 23-07-2010 அன்று இந்து நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் "உள்ளூர் அரசியல் சுழலில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சிக்கிக் கொண்டுள்ளது. அதை நான் விரும்பவில்லை. அதிலிருந்து அம்மன்றத்தை மீட்க நான் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அதுவே எனது பதவிவிலகலுக்குக் காரணம். பதவியில் இருந்துகொண்டே அதைச் செய்ய என்னால் இயலவில்லை. எதிர்காலத்தில் ஆர்வமிக்க இளைய தமிழறிஞர்கள் அம்மன்றத்திற்குப் புத்துயிர் ஊட்டுவார்கள் என நம்புகிறேன்'' என்று கூறினார்.

கராஷிமா நூல்

"வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்'' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள நூலின் மொழி பெயர்ப்பாளர்கள் தங்களது குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:

"பேராசிரியர் அவர்களின் ஆய்வுகள் பெரும்பாலும் சமூக, பொருளியல் வளர்ச்சியும் மாற்றமும் பற்றியே இருந்து வந்துள்ளன. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற முன்னோடி வரலாற்றறிஞர்கள் அரசியல் வரலாற்றை நன்கு ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் சமூக பொருளியல் வரலாற்றில் ஈடுபாடு அதிகம் காட்டவில்லை. ஆகவே முன்னோர் கருதிப் பார்க்காத அல்லது குறையாக விட்டுச்சென்ற ஆய்வுகளில் இவ்வாசிரியர் மிகுந்த அக்கறை செலுத்தி நிறைவான முடிவுகளைக் காண முயன்றுள்ளார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் பல நேரங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும் (சில முதலில் ஜப்பானிய மொழியிலும் வெளியிடப்பட்டவை) யாவற்றுள்ளும் ஒரு கருத்துத் தொடர்ச்சி இருந்தே வந்துள்ளது என்பதை மூல ஆங்கிலக் கட்டுரைகளின் முன்னுரை மற்றும் முடிவுரைகளை நோக்கினால் தெரியும். பெரும்பாலும் ஒரு கட்டுரையின் முடிவு அடுத்த கட்டுரையின் தொடக்கமாக உள்ளதைக் காணலாம். அதாவது நீண்ட கால சமூக பொருளியல் மாற்றத்தினை அவர் எப்போதும் முன்னிறுத்தியே ஆய்வைத் தொடர்ந்துள்ளார். ஆய்வுப் பொருளை சிறிய நிலவட்ட அளவுக்கு உள்பட்ட அல்லது சிறிய காலவரையறைக்கு உள்பட்ட நிகழ்வுகளாகப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து வந்தார் என்றாலும் அதன் பேரெல்லைகளை அவர் எப்பொழுதும் மறக்கவில்லை.

இந்தியாவில் கல்வெட்டுச் செழிப்பு மிகுந்த பகுதி தென்னகம் ஆகும். அவற்றிலும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டிலேயே உள்ளன. இடைக்கால வரலாற்றுக்கு மிகுதியும் பயன்படும் இந்த ஏராளமான கல்வெட்டுக்களை முழுமையாகப் பயன்படுத்த வழக்கமான ஆராய்ச்சி அணுகுமுறைகள் போதுவதில்லை. அந்த வகையில் ஆசிரியர் கையாண்டுள்ள புள்ளியில் முறை மிகவும் பயனுடையது. பல புதிய கருத்துவிளக்கங்கள் செய்ய இந்த முறை கைகொடுக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் சத்தியநாதையர் "தொண்டை மண்டலத்தில் மகாசபைகள்'' என்ற ஒரு சிறிய ஆனால் மிகப் புதுமையான ஆய்வியல் புள்ளியியல் முறையை முதன்முதலில் கையாண்டார். (குtதஞீடிஞுண் டிண tடஞு அணஞிடிஞுணt ஏடிண்tணிணூதூ ணிஞூ கூணிணஞீச்ட்ச்ணஞீச்டூச்ட்) ஆனால் ஏனோ தொடர்ந்து அந்த முறையை அவரோ அல்லது மற்றவர்களோ பயன்படுத்தவில்லை. இப்பொழுது நொபொரு கராஷிமா அவர்கள் வழிகாட்டலின் பேரில் புள்ளியியல் முறை தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களால் பரவலாகக் கையாளப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

பழங்கால சமூக வளர்ச்சியின் ஒரு முக்கியக் கூறு நிலவுடைமை ஆகும். சோழர் ஆட்சியின் தொடக்க நிலையில் சமூக நிலவுடைமை நிலவியது. சோழர் காலத்தின் பிற்பாதியில்தான், அதாவது 12-13ஆம் நூற்றாண்டுகளில்தான் அதுவரை நிலவிய சமூகவுடைமைபோய் தனியார் நிலவுடைமை முறை தெளிவாக வெளிப்படுகிறது என்பது கரோஷிமா அவர்களுடைய முக்கிய கண்டுபிடிப்பாகும். அதற்குப்பின்பு தொடர்ந்து ஐந்து நூற்றாண்டுகள் நிலவுடைமையில் எப்படி படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை இரண்டாம் தொகுதியில் தெளிவாக்கியுள்ளார்.''
ஆராய்ச்சி நிலையங்களின் எதிர்காலம்

இந்தியாவில் அரசு சார்பில் நடத்தப்படும் ஆராய்ச்சி நிலையங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை நொபொரு கராஷிமா வெளிப்படுத்தினார். "இந்திய பழம்பொருளாராய்ச்சி நிலையத்தின் தலைமை இயக்குநராக பழம்பொருளாராய்ச்சி அறிஞர் ஒருவர்தான் இருக்க வேண்டும். ஆனால், இடைக்காலத்தில் பல ஆண்டு காலமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அப்பதவியில் நியமிக்கப்படுகிறார்கள். பழம்பொருளாராய்ச்சி பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. மாநில அரசின் பழம்பொருளாராய்ச்சி துறைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. கல்வெட்டு ஆராய்ச்சி பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது. இதன் விளைவாக கல்வெட்டு ஆராய்ச்சித் துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இத்துறையில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவது தடைபட்டுள்ளது.''

1962ஆம் ஆண்டு உதகமண்டலத்திலுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி அலுவலகத்திற்கு நொபொரு கராஷிமா சென்றிருந்தபோது முனைவர் கே.வி. ரமேஷ், முனைவர் வி.ஆர். கோபால் மற்றும் முனைவர் எஸ்.ஹெச். ரித்தி ஆகிய இளம் கல்வெட்டு ஆராய்ச்சி உதவியாளர்களைச் சந்தித்து உரையாடினார். அவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருவதைப் பாராட்டினார். ஆனால் இப்போது அத்தகைய சூழ்நிலை அங்கு இல்லை. அது குறித்து அவர் மிகவும் வருந்தினார். கல்வெட்டு ஆராய்ச்சி அறிவு இல்லையென்று சொன்னால், பண்டைய மற்றும் இடைக்கால வரலாறு குறித்து எதுவும் ஆய்வு நடத்த முடியாது. படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் சுருக்கம் மட்டுமே அத்துறையினால் வெளியிடப்பட்டுள்ளது. இதை நம்பி மட்டுமே ஆய்வுப்பணிகள் நடைபெறுகின்றன. அக்கல்வெட்டுக்களின் முழுமையான பதிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது தென்னிந்தியாவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் ஆய்வு நடத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளது - என அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிறக்காத தமிழறிஞராக விளங்கினாலும் அவருடைய ஆய்வுப் பணிகள் மூலம் உலகெங்கும் தமிழ்மொழியின் சிறப்பைப் பரப்பிய பெருமைக்குரிய நொபொரு கராஷிமா அவர்களின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும்.

உலகத் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக 10 ஆண்டு காலம் அரும்பணியாற்றி அரசியல் ரீதியான நெருக்குதல்களுக்குப் பணியாமல் அம்மன்றத்தின் மதிப்பை பலமடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை நொபுரு கொராஷிமாவிற்கு உண்டு. அவர் கட்டிக் காத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குப் புத்துயிர் ஊட்டி, புதிய பொலிவுடன் ஒளிரச் செய்வதுதான் அவருக்குத் தமிழர்கள் ஆற்றும் நன்றிக்கடன் ஆகும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.