தமிழர்களின் தீர்ப்பை மதியுங்கள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

நார்வே நாடு மேற்கொண்ட சமரச முயற்சிகளின் விளைவாக இலங்கையில் 20 ஆண்டுக் காலத்திற்கு மேலாக நடைபெற்று வந்த போர் நிறுத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் நிறுத்த உடன்பாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கையெழுத் திட்டனர்.

இதைத் தொடர்ந்து பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஓஸ்லோ ஆகிய இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் ஆறுமுறை பேச்சு நடத்தினர். முதல் கட்டப் பேச்சு வார்த்தையின் போதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாகக் கூட்டாட்சி முறையைப் பரிசீலிக்க புலிகள் ஒப்புக்கொண்டமை மிகப்பெரிய விட்டுக் கொடுத்தலாகும். புலிகள் உண்மையிலேயே அமைதியை நாடுகிறார்கள் என்பதை உலகம் உணர்ந்தது.


வடகிழக்கு மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சுதந்திரமாக ஆட்சி நடத்திவரும் புலிகள் இந்த அளவுக்கு இறங்கி வர ஒப்புக் கொண்டதே பெரிய செயலாகும்.

இருதரப்பினரும் ஆறுமுறைநடத்திய பேச்சின் விளைவாக இனப்பிரச்னைக்கு இறுதித்தீர்வு காண்பதற்கு முன்னதாக மக்களின் அன்றாடப் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதற்காக வட - கிழக்கு மாநிலத்தில் இடைக்கால அரசு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிணங்க 2003ஆம் ஆண்டு சூலை மாதம் சிங்கள அரசு தற்காலிக நிர்வாகக் கவுன்சில் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரி வசூலித்தல் ஆகியவை தொடர்பாக எல்லா அதிகாரங்களும் சிங்கள அரசிடமே இருக்கும். இடைக்கால அரசுக்கு அளிக்கப்பட மாட்டாது.

புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் ஆகியவை தொடர்பான அதிகாரங்கள் மட்டும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படும். இடைக்கால அரசில் புலிகளுக்குப் பெரும்பான்மை அளிக்கப்படும். இவைதான் சிங்கள அரசு தர முன்வந்த அதிகாரங்களாகும்.

சிங்கள அரசின் இத்திட்டம் கண்டு தமிழர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். வட - கிழக்கு மாநிலத்தில் நிர்வாகம், வரி வசூலித்தல், சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டுதல், நீதிமன்றங்கள், பாதுகாப்பு போன்ற பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தனி அரசே நடத்திவரும் புலிகள் தங்கள் வசமுள்ள அதிகாரங்களை இழக்க வகைசெய்யும் சிங்கள அரசின் உருப்படாதத் திட்டத்தை ஏற்க மறுத்து மாற்றுத்திட்டத்தை அளிப்பதாகக் கூறினார்கள்.

உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள், பிற நாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன் பின்னரே மாற்றுத்திட்டம் ஒன்றினை வடிவமைக்க வேண்டும் என பிரபாகரன் விரும்பினார். அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழுவினர் உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 12 நாட்கள் இக்குழுவினர் பிரான்சு, டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று பலவேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுத் தாயகம் திரும்பினார்கள்.

தமிழீழத்திலும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையகத்தமிழர் பிரதிநிதிகள், தமிழ் அமைச்சர்கள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினர்.

பரவலாக அனைவரின் ஆலோசனையைப் பெற்று வரைவுத்திட்டம் ஒன்று உருவாக்கப் பட்டது. பிறகு 31-10-2003 அன்று இத்திட்டம் நார்வே பிரதிநிதிகள் மூநூ+ம்பூக சிங்க- அவசுக்கு அபுலூ யி-க்கலூúட்டது.

புலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத்திட்டத்தை பிரதமர் ரணில் பரிசீலிப்பதாக உறுதி கூறினார். ஆனால் சந்திரிகாவும், சிங்கள தீவிரவாதக் கட்சிகளும் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் ரணில் அரசுக்கு நெருக்கடி உருவாகி அவர் பதவி விலகினார். இதையொட்டி நடைபெற்ற தேர்தலில் புலிகளின் திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்டது.

தமிழர்கள் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தவும் சந்திரிகா திட்டமிட்டார், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் தேர்தல் நடைபெறவிருந்தது. சரியாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் மார்ச் 2ஆம் நாளன்று மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தளபதி கருணாவை கலகக் கொடி உயர்த்த வைத்தனர். சிங்களர் ஆட்டுவித்தபடி அவர் ஆடினார்.

புலிகளின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியாதபடி மிரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தமிழ்த்தேசியக் கூட்டணி 22 இடங்களில் பெரு வெற்றிபெற்றது.

புலிகளின் இடைக்காலத்தன்னாட்சி அதிகாரசபைத்திட்டத்திற்கு தமிழ்மக்கள் அங்கீகாரம் வழங் கினார்கள். துரோகி கருணாவின் பிரதேசவாதத்திற்குச் சாவுமணி அடித்தார்கள்.

சந்திரிகா கட்சியும் பெரும் பான்மை பெற முடியவில்லை. ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உருமய போன்ற தீவிரவாதக் கட்சிகளின் தயவுடன் அவர் ஆட்சி நடத்த வேண்டிய நிலை உள்ளது.

சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு சந்திரிகாவிற்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் மிகப்பெரும் பான்மையான ஆதரவை பிரபாகரன் பெற்றிருக்கிறார். உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இந்த உண்மையை உலக நாடுகள் உணரவேண்டும்.

தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால அதிகார சபைத்திட்டத்தை ஏற்க மறுத்து சந்திரிகா பிடிவாதம் காட்டுவது அப்பட்டமான சனநாயக விரோதப் போக்காகும்.

உலக நாடுகள் குறிப்பாக இந்தியா சிங்கள அரசின் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

நார்வேயின் சமரச முயற்சிகளுக்கு வெறும் வாயளவில் ஆதரவு தருவதோடு நிற்கக் கூடாது.

பலவகையிலும் புலிகள் இறங்கிவந்து சமாதானத்தில் தங்களுக்குள்ள நாட்டத்தை வெளிப் படுத்தியிருக்கிறார்கள் என்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிங்களக் கட்சிகள் தமக்குள்ளே உள்ள பகைமை காரணமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவதை இந்தியா அனுமதிக்கக்கூடாது.

சிங்கள அரசின் பிரதிநிதிகள் அடிக்கடி தில்லி வந்து குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பலரைச் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத்தளபதிகள் கொழும்பு சென்று சிங்கள அமைச்சர்கள், தலைவர்களை மட்டும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பு கிறார்கள். ஆனால் ஒரு தடவை கூட யாழ்ப்பாணம் சென்று தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவில்லை.

எனவே இந்திய அரசு கீழ்கண்ட நடவடிக்கைகணை மேற்கொள்ள வேண்டும்.

1.
ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைக்கப்பட்டு அவர்களுடனும் இந்திய அரசு பேச வேண்டும். அப்போதுதான் உண்மை நிலைகளை அறிந்து கொள்ள முடியும்.

2.
சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்குவது, பயிற்சி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசு அடியோடு நிறுத்துவதன் மூலம் சிங்கள அரசின் போர் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்.

3.
தமிழருடன் நியாயமான உடன்பாட்டுக்கு வராமல் சிங்கள அரசு காலங்கடத்துமானால் அதற்கு அளித்துவரும் பொருளாதார உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்.

4.
இந்தியாவிலிருந்து எந்தப் பொருளையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது எனத்தடை விதிக்க வேண்டும்.

5.
இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்லும் விமானங்கள், கப்பல்கள் ஆபான்றவை இந்திய விமான நிலையங்களிலோ, துறைமுகங்களிலோ இறங்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இவ்வித நெருக்கடிகளை இந்திய அரசு அளித்தால் இலங்கை அரசு நியாயமான உடன்பாட்டிற்கு வருவதற்கும், அதை நிறைவேற்று வதற்கும் முன்வரும்.

எனவே இந்திய அரசு ஈழத்தமிழர் சிக்கலில் உறுதியான தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க முன் வரவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும்.


புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்

'தமிழீழ விடுதலைப்புலிகள்' இயக்கம், 1992ஆம் ஆண்டு இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, அத்தடை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதனையொட்டிச், சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள், கடந்த ஜúலை மாதம் ஒரு கருத்தறியும் முயற்சியை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று 54.2 விழுக்காட்டு மக்களும், நீக்கக் கூடாது என்று 45.8 விழுக்காட்டு மக்களும் வாக்களித்துள்ளனர்.

எனவே, தடை நீக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களின் விருப்பமாக உள்ளது என்பது புலனாகின்றது. இதனைத் தமிழக அரசும், நடுவண் அரசும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தடையை நீக்க ஆவன செய்திடல் வேண்டும்.

அதே மாணவர் குழுவினர், 'பொடா' சட்டம் நீக்கப்பட வேண்டுமா, கூடாதா என்பது குறித்தும் கருத்தறியும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
வாக்களித்தவர்களில் 61 விழுக்காட்டினர் பொடா சட்டம் நீக்கப்படுவதை வரவேற்றுள்ளனர், மீதமுள்ள 39 விழுக்காட்டினருள்ளும், 15 விழுக்காட்டு மக்கள், பொடாவை விடக் குறைந்த அதிகாரமுடைய ஒரு புதிய சட்டம் இயற்றினால் போதும் என்று கூறியுள்ளனர். எனவே, 24 விழுக்காட்டினர் மட்டுமே, பொடா சட்டம் நீடிப்பதை விரும்புகின்றனர்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.