அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் :உச்சநீதிமன்றம் அளித்த உன்னதத் தீர்ப்பு -செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:42

வள்ளலார், "ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே' என்று இறைவனுக்கு நன்றி சொல்லிப் பாடினார். அவ்வாறு இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை இந்தத் தமிழுலகம் உள்ளதனை உள்ளபடி உணர இது உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகின்றேன்.

உண்மையில் தீர்ப்பினை மேலெழுந்தவாரியாக நோக்கினால் குழப்பம் வருவது இயற்கைதான். எதனால் இந்தக் குழப்பம் நேர்கிறது? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணையை தீர்ப்பு ரத்து செய்யவில்லை. ஆனால்கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு. இங்கே தான் பலரும் குழப்பம் அடைகிறார்கள். என்ன காரணம் என்றால் ஆகம விதிப்படிதான் நியமனம் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் அதாவது பிராமணர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றல்லவா பொருள் என்று பலரும் நினைக்கிறார்கள்.

இவ்வாறு நினைத்துக் கொள்கிற இவர்கள் தீர்ப்பில் பிராமணர்கள்தான் ஆகமவிதிப்படி கோயில்களில் நியமிக்கப்பட வேண்டும் என்றா சொல்லி இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவே தவறுகிறார்கள். ஆகம விதிப்படி தான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறதே தவிர ஆகம விதிப்படி பிராமணர்கள் தான் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே!

அப்படி குறிப்பிடுவதானால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்துவிட்டல்லவா அப்படி குறிப்பிட முடியும்? எனவே அரசாணையை ரத்து செய்யாததனாலேயே தீர்ப்பின் எண்ணமோ நோக்கமோ அதுவாக இருக்க முடியாது என்று தெளிவாகத் தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஆகம விதிப்படி தான் நியமனம் என்பதில் இல்லாத பிராமணர் அங்கே எங்கே நுழைகிறார்? அது சிலரின் எண்ணப் பதிவினால் அவர்களாக இல்லாததை நுழைத்து எழுப்பும் கூக்குரலாக முடிகிறது.

இந்த எண்ணப் பதிவு எதனால் ஏற்பட்டது? ஆகமம் பிராமணர்களோடு தானே தொடர்புடையது என்ற அந்தச் சிலரின் தவறான புரிதல்தான் அதற்கு அடிப்படை.

உண்மையில் பிராமணர்களுக்கும் ஆகமத்திற்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. சிவாச்சாரியார்களுக்கும் ஆகமத்திற்கும் தான் தொடர்பு உண்டு. பிராமணர்கள் என்பவர்கள் ஸ்மார்த்தர்கள். இனத்தால் ஆரியர். சிவாச்சாரியார்கள் இனத்தால் தமிழர்கள். கோயிலோடு தொடர்புடையவர்கள் இந்த சிவாச்சாரியார்கள் தானே தவிர பிராமணர்கள் அல்லர்.

கோயிலில் அர்ச்சகர்களாக பணியாற்றும் சிவாச்சாரியார்கள் அதாவது குருக்கள்மார்கள் பூணூல் போட்டுக்கொண்டு திரிவதால் பிராமணர்கள் போலத் தானே தெரிகிறார்கள் என்று ஒரு ஐயக் கேள்வி எழுப்பலாம். இன்னும் சொல்லப் போனால் சிவாச்சாரியார்கள் தங்களை சிவப்பிராமணர்கள் என்றுதானே சொல்லிக் கொள்கிறார்கள் என்றும் கேட்கலாம். அப்படியானால் பிராமணர்கள் ஏன் தம்மை சிவப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை? இருவரும் ஒருவரேயானால் ஏன் அப்படி சொல்வதில்லை?

சிவப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிவாச்சாரியார்களை பிராமணர்களான ஆரிய ஸ்மார்த்தர்கள் பிராமணர்கள் என்றே ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல. இருவருக்குமிடையே கொள்வினை கொடுப்பினை என்பது கிடையாது. அதாவது பெண் கொடுத்து பெண் எடுப்பது என்பது கிடையாது.

அது மட்டுமல்ல, பிராமணர்களுக்கும், அவர்கள் ஏற்றுக்கொள்கிற ரிக், யசூர், சாம, அதர்வண வேதத்திற்கும் கோயிலே கிடையாது. அதனால் பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கும் கோயில் தொடர்பான ஆகமத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. எனவே ஆகம விதிப்படி கோயிலில் அர்ச்சகர் நியமனத்தில் பிராமணர் மட்டுமே நியமிக்கப்பட முடியும் என்று எண்ணிக் கொள்வதைவிட பேதைமை வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி ஆகம விதிப்படி பிராமணரை நியமிக்க நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கோயில் குருக்கள்மார்களாகிய சிவாச்சாரியர்ர்கள் தான் முதலில் முந்துவார்கள்.

காரணம், பிராமணர்கள் ஆகிய ஆரிய சுமார்த்தர்கள் கோயிலில் கொடி மரத்தைத் தாண்டி நுழைந்தால் கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லி பிராயச்சித்தமாக கோயிலில் அந்தரித வகை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று ஆகமத்திலே எழுதி வைத்தவர்களே இந்த சிவாச்சாரியார்கள்தாம்.

எனமே ஆகம விதிப்படி அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சொன்னால் அதன்படி பிராமணர்கள் மட்டுமே நியமிக்கப்பட முடியும் என்பது சட்டத்தின் படியும் செல்லாது, ஆகமத்தின் படியும் ஒத்து வராது. எனவே இப்படி யாராவது நினைத்துக் கொண்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தால் முதலில் அந்த நினைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

அடுத்து, வால் போய் கத்தி வந்தது என்ற கதையாக, ஆரிய பிராமணர்களை விடுங்கள், சிவப்பிராமணர்களாகிய எங்களை மட்டுமே ஆகம விதிப்படி அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று சிவாச்சாரியார்கள் கச்சை கட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம். ஏன், அப்படி கச்சை கட்டிக் கொண்டு ஏற்கெனவே சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கு தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதான இந்த வழக்கு.

சிவாச்சாரியார்கள் வழக்கு தள்ளுபடி

நல்ல வேளையாக தீர்ப்பு ஆகம விதிப்படி சிவாச்சாரியார்களைத் தான் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. அதற்கு மாறாக சிவாச்சாரியார்கள் போட்ட வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்திருப்பது தான் இந்தத் தீர்ப்பு. ஆகவே தீர்ப்பின் படி ஆரிய பிராமணரோ அல்லது சிவப்பிராமணரோ, அந்த இருவர்களில் எவருமே எங்களைத் தான் ஆகம விதிப்படி அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று உரிமை கோர முடியாது. உரிமை கோரி மேல் முறையீடு எதுவும் செய்ய முடியாது.

ஆனால், நேரிடையாக எங்களைத் தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று சொல்லாவிட்டாலும் ஆகம விதிகள் எல்லாம் சிவாச்சாரியார்களாகிய எங்களைத்தானே கோயில் பூசைக்குரியவர்கள் என்று கூறுகின்றன என்று சிவாச்சாரியார்கள் மனப்பால் குடித்து மகிழவும் முடியாது.

காரணம், ஆகம விதிகள் அப்படி இல்லை என்பது தான் வெள்ளிடை மலையாகத் தெரியும் உண்மை.
காரணாகமத்தில் நித்தியார்ச்சனா விதிப் படலத்தில், "ஆதி சைவர்களுடைய பூசை தான் கீர்த்தியையும் பலனையும் தருவதாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்து, "இந்த ஆதி சைவர்கள் யார் என்றால் ஆதி சைவர் சிவம், ருத்ரர், பரிசுத்தான்மாவான சுத்த சைவனாக உள்ளவர். ஆதலால் சிவத்தின் கிரியைகளான பிரதிஷ்டை, உத்ஸவம், பிராயச்சித்தம் முதலியன ஆதி சைவர்களாலேயே செய்விக்க வேண்டும் என்க''என்று காரணாகமம் விளக்கியுள்ளது.

இதில் ஆதி சைவர்கள் பரிசுத்தான்மாவான சுத்த சைவர் என்று சொல்லி இருக்கிறதே ஒழிய ஆதி சைவர் என்ற பகுப்பு பிறப்பால் அமைந்தது என்று சொல்லாதது உற்று நோக்கி உணரத்தக்கது.

அடுத்து பரிசுத்தான்மாவான ஆதி சைவர்க்கு இலக்கணம் என்ன என்பதையும் காரணாகமம் விளக்குகிறது.

"ஆதி சைவர்கள் தான் ஆன்மார்த்த பூசை செய்ய வேண்டுமாம்; செய்யத் தகுதி உடையவராம். சிவன், பிராமணன் குரு, ஆதி சைவர்களை சிவனென்றும் சிவப்பிராமணன் என்றும் குரு என்றும் சொல்லப்படுகிறது.''

இங்கேயும் எந்த இடத்திலும், அதாவது ஆதி சைவர்க்கு இலக்கணம் கூறும் இடத்திலும் பிறப்பு பற்றிய பேச்சே இல்லாதது காண்க.
சரி, இலக்கணம் போகட்டும்; ஆதி சைவ பாரம்பரியம் என்பது நடைமுறையைச் சொல்வதாயிற்றே, அதில் காரணாகமம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

"மனோஞமான கயிலாயத்தில் எழுந்தருளி இருக்கும் மகாதேவராகிய பரமேசுவரரது பூஜா நிமித்தம் கெளசியர், காசிபர், பாரத்வாஜர், கெளதமர், அகத்தியர் ஆகிய ஐந்து பேர்களிடத்தினின்றும் ஐந்து சந்தானங்கள் உண்டாயின. இவர்களே துர்வாசர், குரு, ததீசி, சுவேதர், உபமன்யு என்பவர்களாம், மந்தான காளீசம் என்னும் கோத்திரத்தில் மடமென்றும் - அதைச் சுற்றிலும் நான்கு மடங்கள் ஆமர்த்கி, கோளகீ, புஷ்பகிரி, ரணபத்ரம் என்னும் பேர்களால் விளங்கும். மந்தான காளீச முதல் ரணபத்ரம் ஈறாகிய மடங்களுக்கு அதிபராய் உள்ளவர்கள் முறையே துர்வாசர், குரு, ததீசி, சுவேதர், உபமன்யு என்பவர்களாம். இவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர்களே ஆதி சைவர்களாம்.''
மேலே குறிப்பிட்ட ஐந்து பேர்களிடம் சிவபூசை செய்வதற்காக ஐந்து வாரிசுகள் தோன்றின என்கிறது காரணாகமத்தின் இந்தப் பகுதி. பூசைக்காக வாரிசு என்றால் அது குரு சிஷ்யன் என்ற முறையில் ஞான பரம்பரையாகத்தான் இருக்க முடியுமே ஒழிய அந்த வாரிசுகள் குறிப்பிட்ட அந்த ஐந்து பேர்கள் பெற்ற பிள்ளைகளாக இருக்க முடியாது. அது வாரிசுகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே தெளிவாகிறது. கெளசியரின் பிள்ளை துர்வாசர் என்றோ, காசிபரின் பிள்ளை குரு என்றோ, பாரத்வாஜரின் பிள்ளை ததீசி என்றோ, கெளதமரின் பிள்ளை சுவேதர் என்றோ, அகத்தியரின் பிள்ளை உபமன்யு என்றோ எந்த புராண வரலாறும் கூறவில்லை. உபமன்யு அகத்தியரின் பிள்ளை இல்லை, வியாக்ரபாதரின் பிள்ளை என்று திருமந்திரம், பெரிய புராணம், உமாபதி சிவம் எழுதிய கோயிற் புராணம் போன்றவை கூறுகின்றன.
எனவே பரம்பரையைப் பார்த்தாலும் குரு-சீடன் என்ற பரம்பரையாகத்தான் உள்ளதே தவிர பிறப்பினால் தொடரும் பரம்பரையாக அது இல்லை. அடுத்து சீடர்களாகிய துர்வாசர், குரு, ததீசி, சுவேதர், உபமன்யு என்பவர்களும் ஐந்து மடங்களைத்தான் அமைத்தார்கள் என்று காரணாகமம் கூறுகிறதே ஒழிய அந்த மடங்களை எங்கெங்கே அமைத்தார்கள் அந்த மடங்களெல்லாம் இப்போது என்னவாயின என்றும் ஒரு விவரமும் காணப்படவில்லை. மேலும் பெயர்களை எல்லாம் கேட்டால் அவற்றிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

அத்துடன் இன்று தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குருக்கள்மாராக பூசை செய்து வரும் சிவாச்சாரியர்கள் எவரும் மேற்கூறிய ஐந்து பரம்பரையில் ஒரு பரம்பரையையும் தொடர்புபடுத்தி தாம் இந்திந்த முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று பிறப்பால் அடையாளப்படுத்திக் கொள்வதே இல்லை. எனவே ஆதி சைவர்களுக்குப் பிறப்பால் ஒரு பரம்பரையைக் கற்பித்துக் கூற முடியாது என்றும் தெளிவாகிறது.
இவ்வாறு ஆதி சைவர்கள் என்பவர்கள் சுத்தமான சைவர்கள் என்பதிலும் அவர்களின் இலக்கணம் இது என்பதிலும், அவர்களது பரம்பரை இது என்பதிலும் பிறப்பு வழி தகுதியோ முதன்மையோ எந்த இடத்திலும் காரணாகமத்தில் இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெளிவாகிறது.
பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களா?

ஆகையால் ஆகம விதிப்படி பிறப்பின் அடிப்படையில் சிவாச்சாரியார்கள் தாம் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூற ஆகமத்தில் எந்த விதியும் இல்லை என்பது திண்ணமாக தெரிகிறது.

ஒரு வேளை இதையும் மீறி பிறப்பின் அடிப்படையில் ஆகமம் ஒரு விதியைப் புதுவதாகப் புகுத்தினாலோ இடைச்செருகலாகச் செருகினாலோ கூட இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக அறுதியிட்டுக் கூறி இருக்கிறது.

தீர்ப்பின் பத்தி 41-இல் அது அடிக்கோடிட்டுக் கூறுவது இதுதான்:
அதாவது இந்திய அரசியலமைப்பின் சட்டக் கட்டாயப்படி, அது இயற்கையாகவே சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் மீறி நடைமுறைக்குக் கொள்ளப்பட வேண்டும், என்று தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது.

ஆ! தொன்று தொட்டு வரும் மரபு அல்லது வழக்கம் என்பது முக்கியமில்லையா? அதைத் தூக்கி எறிந்து விட முடியுமா? அவற்றிற்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 பாதுகாப்பு அளிக்கின்றனவே என்று மறுப்பை எழுப்பலாம். இதையும் தீர்ப்பு மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது.

"இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே எவையும் அனுமதிக்கப்படும் என்பது சட்டத்திற்குள்ளாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சொல்லப்படும் ஒரு மரபோ அல்லது வழக்கமோ சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26இல் கூறப்படும் பாதுகாப்பு வளையத்திற்கு மாறாக மீறுமானால், நிச்சயமாக சட்டம் அதன் விதிகளை மேற்கொண்டு செயல்பட்டே தீரும்.''

இதைவிட தெளிவாக வேறு என்ன சொல்ல முடியும்? அதெல்லாம் சரி, எந்த மரபும் அல்லது வழக்கத்திற்கும் இது பொருந்துமா? சிலவற்றை மாற்றவே முடியாதே! குறிப்பாக ஆகமம் இந்தப் பிரிவினர் தான் தகுதியுடையவர் என்றோ அல்லது தகுதியில்லாதவர் என்று விலக்கியோ வைக்குமானால் அதில் கூடவா சட்டம் தலையிட முடியும்? அப்படி தலையிட்டால் அவரவர் சமயக் கொள்கைகளை அவரவர் மேற்கொள்வதற்கு எந்தத் தடையுமில்லை என்று சட்டம் சொல்வது என்னாவது என்று கேட்கலாம். இதையும் மிக மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது தீர்ப்பு. அந்தப் பகுதி (பத்தி 43) வருமாறு:

"இது குறித்து ஏற்கெனவே சட்டப்பிரிவு 16 (5)-இல் குறிப்பிட்டுள்ளதான அர்ச்சகர் நியமனத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவு அல்லது வரையறை செய்யப்பட்ட பிரிவினரையே அமர்த்த வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சமயம் வரையறை செய்யுமானால் அதன்படி தான் செய்ய வேண்டும் என்பது சட்டப்பிரிவு (14)க்கு மாறானதல்ல என்பதை எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள முடியும் என மீண்டும் வற்புறுத்துவது கட்டாயமாகிறது. அதாவது அந்த நியமனம் சாதி மற்றும் பிறப்பு மற்றும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் ஏற்கத்தக்கது என்று எவையெவை கூறப்பட்டுள்ளனவோ அவற்றின் அடிப்படையில் அமையாத வரை தான் சட்டப்பிரிவு 16 (5) செல்லும் என்று எடுத்துக் கொள்ள முடியும்.''

இதன்படி ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு உரிய ஒரு குறிப்பிட்ட ஆகமம் ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பிரிவினர்தான் அர்ச்சகராக நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினாலும் சட்டப்பிரிவு 16 (5)ன்படி அப்படியே செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் அது சாதி மற்றும் பிறப்பு அடிப்படையில் வரையறை செய்யுமானால் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆக, இவ்வாறு பல வேறு கோணங்களை அலசி ஆராய்ந்து அர்ச்சகர் நியமனம் பிறப்பு அல்லது சாதி அடிப்படையில் அமைய வேண்டும் என்ற கருத்தை சட்டப்படி தூக்கி எறிந்திருக்கிறது தீர்ப்பு. இனி, சிவாச்சாரியார்கள் மட்டுமல்ல வேறு எவரும் அர்ச்சகர் நியமனத்தை பிறப்பின் அல்லது சாதியின் அடிப்படையில்தான் செய்ய வேண்டும் என்று மனுச் செய்யவே முடியாதபடி அவர்கள் முகத்தில் அறைந்து கதவைச் சாத்தியிருக்கிறது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இதன் அடிப்படையில் தான் இந்தத் தீர்பபு குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்யாமல் விட்டது என்றும் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்தத் தீர்ப்பில் சிலர் வேறு சில சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அவற்றையும் பார்ப்போம்.

அதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் அர்ச்சகர் நியமனம் செய்யும் போது அந்தந்தக் கோயில்களுக்கு உரிய ஆகமத்தை ஆராய்ந்து தான் அர்ச்சகர் நியமனம் செய்ய வேண்டும். இதில் ஏதும் பிரச்சினை எழுந்தால் அதன் பொருட்டு தனித்தனியே உரிய நீதிமன்றங்களின் மூலம் தீர்வைத் தேட வேண்டும் என்று தீர்ப்பு சொல்வது எப்படி என்று விளங்கிக் கொள்ள முடியவில்லையே என்று அறிவு சார்ந்த சில பெரியவர்களும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இது எதன் அடிப்படையில் எழுந்தது என்றால், எல்லாக் கோயில்களும் ஒரே ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டவை என்றும் அவற்றில் வேறுபாடே இல்லை என்றும் கருதும் கருத்தின் அடிப்படையில் தான் அவர்கள் இப்படி நினைக்கிறார்கள். உண்மையில் நடைமுறையில் நிலைமை வேறு. எல்லாக் கோயில்களும் ஒரே ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டவை அல்ல. ஒரு குறிப்பிட்ட சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட ஆகமத்தினாலும் வேறு சில குறிப்பிட்ட தொகைக் கோயில்கள் வெவ்வேறு சில ஆகமங்களினாலும் கட்டப்பட்டிருக்கும். இன்னும் சொல்லப் போனால் பல கோயில்கள் ஆகமத்தின் அடிப்படையிலேயே கட்டப்பட்டிராதவை தாம். இன்னும் சில கோயில்களில் இரண்டு அல்லது மூன்று ஆகமங்களில் கூறும் கட்டுமானமும் கலந்து விட்டிருக்கும் இவற்றை ஆகம விற்பன்னர் கள் சங்கீரணக் கோயில்கள் அதாவது கலவையான கோயில்கள் என்பர்.

எனவே எல்லாக் கோயில்களுக்கும் ஒரே ஆகம விதியைக் கொள்ள முடியாது என்பதை முதன்முறையாக இதுவரை முன்னெந்த தீர்ப்புகளும் எண்ணியும் பாராத நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது அனைத்து வகைக் கோயில்களையும் கணக்கில் எடுத்து அரவணைத்துத் தொகுத்து வழங்கிய தீர்ப்பு. அதனால் தான் பலருக்கு இது விளங்கிக் கொள்ள கடினமாக உள்ளது என்று கூறலாம்.

ஆகமம் இல்லாத கோயில்கள்

உதாரணத்திற்குத் திருப்பதிக்கு அடுத்த படியாக மிக அதிகமாக நிதிவரவுடைய பழனித் திருக்கோயில் எந்த ஆகமப்படியும் கட்டப்படவில்லை. அது போகர் என்ற சீனச் சித்தர் தம் கருத்தின்படி கட்டிய கோயில். அதே போன்று சைவ சமய குரவர்களில் ஒருவரான மணிவாசகர் கட்டிய திருப்பெருந்துறைக் கோயில் ஆகமப்படி கட்டிய கோயில் அல்ல. திருச்செந்தூர் முருகன் கோயிலும் ஆகமப்படி அமைந்ததல்ல. அங்கு மூலவர் சந்நிதியில் போற்றிகள் என்ற வகுப்பினர்தான் அர்ச்சகர்களாக பணியாற்றுகின்றனர்; சிவாச்சாரியார் கள் அல்லர். திருவானைக்காவல் கோயிலிலும் அகிலாண்ட நாயகி கோயிலில் பூசை செய்கிற பிரிவினர் புடவை கட்டிக் கொண்டுதான் பூசை செய்ய வேண்டும். இப்படி கோயிலுக்குக் கோயில் பூசை முறைகள் மாறும்; பூசைப் பிரிவினர் மாறுவர்.

இவற்றிற்கெல்லாம் மட்டையடியாக ஒரே தீர்பபு வழங்கிவிட முடியாது. இதைக் கருத்தில் கொண்டே இந்த உச்சநீதிமன்றத் தீர்பபு அந்தந்தக் கோயிலுக்கு உரியதை அங்கங்கே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அந்தக் கருத்திற்கு அது வந்ததற்கு உறுதுணையாக தீர்ப்பில் கூறியவை வருமாறு:

"பல நேரங்களில் தீர்ப்புகளை கூற அமர்வதற்கு முன், இதுதான் எங்கள் சமய வழக்கம் என்று ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினர் அல்லது வரையறுக்கப்பட்ட பிரிவினர் முன் வைக்கும் போது அந்த சமய நம்பிக்கை அல்லது வழக்கம் அந்தச் சமயத்தின் அடிப்படையான கருப்பொருள் தானா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. இது பற்றிய முடிவை நீதிமன்றம் நீதி வழங்குவதற்கு அடிப்படையாகக் கொள்வது கடமை ஆகிறது. இது அவ்வளவு எளிதான பணி என்றோ அல்லது எங்களுக்கே உரியது என்ற பெருமைக்குரிய பணியாகவோ கருதிக் கொள்ள முடியாது. உண்மையில் நீதிமன்றங்கள் தாம் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற பணிக்கடன் இல்லை. காரணம் சமயக் கருத்துக்களைத் தீர்மானிக்கிற வேலை நீதிமன்றத்திற்கு பணிக்கப்பட்டு இருப்பதாகக் கருத முடியாது. ஆனால் நீதி மன்றங்கள் இது போன்றவற்றில் ஒரு நடுவராகப் பணியாற்றலாம். இவ்வாறு சமயக் கருத்துக்களில் நுழைந்து தீர்ப்பளிப்பது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26இல் அளிக்கப்பட்ட சமய சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா என்று அச்சப்படத் தேவையில்லை. காரணம், இது குறித்த எவற்றிலும் சட்ட உரிமைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என்று உரசிப் பார்த்து உறுதிப்படுத்துவதே நீதிமன்றம் செய்யத்தக்கது.''

அதாவது எந்தெந்தக் கோயிலுக்கு எந்தெந்த ஆகமம் உரியது, அதைக் கட்டி முடித்த பின் எந்த வரையறுக்கப்பட்ட பிரிவினர் ஆளுகையில் அது செயல்படப் போகிறது அல்லது செயல்பட்டு வருகிறது என்பது பற்றி எல்லாம் நீதிமன்றம் கவலைப்படத் தேவை இல்லை. ஆனால் வரையறுக்கப்பட்ட பிரிவினர் என்று ஒரு கோயிலில் குறிப்பிடப்படுவது சமயக் கருத்தின் அடிப்படையில் இல்லாமல் சாதி, பிறப்பின் அடிப்படை யில் சட்டப் பிரிவுகளுக்கு எதிராகவோ அல்லது ஆகம விதிகளின் மூலக் கருத்து சமூக அமைப்பிற்கும், நீதிக்கும் அமைதிக்கும் சட்டப்பிரிவுகளுக்கு எதிராகவோ அமைந்திருந்தால் அதைக் களைவது தான் நீதிமன்றத்தின் வேலை என்பதை தீர்ப்பு மிகச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறது.

இதன் அடிப்படையில் அந்தந்தக் கோயிலுக்கு அதனதன் தனித்த பார்வை தேவைப்படுவதால் அதை அதை உரிய அந்தந்த நீதிமன்றங்களில் தீர்ப்பு செய்து கொள்ளலாம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது முன்னெந்த வழக்கின் தீர்ப்பிலும் காணாத மிகச் சரியான முடிவுதான் என்பதை நடுநிலையாளர்கள் எவரும் ஒப்புக் கொள்வர்.

அரசாணை செல்லும்

அடுத்ததாக தீர்ப்பு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் பிறப்பித்த அரசாணை எண் 118. நாள் 23-05-2006 என்பதை எப்படி நோக்கி இருக்கிறது என்பதும் அதன் அடிப்படையில் அதனை ரத்து செய்யாமல் விட்டிருப்பதும் உற்று நோக்கத்தக்கவை.

"முந்தைய பத்திகளில் கூறப்பட்ட விளக்கவுரைகள் இந்த அரசாணைக்குள் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் எத்தனை ஆழ்ந்து அமிழும் கனமானவை என்றும், விட்டால் அது இந்த இந்து சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் உணர்ந்தறியத் தக்க பாரதூரமான அளவு எத்தகையவை என்றும் கோடி காட்டியதை அறியலாம். அந்த அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்ட அரசாணையை (மூத்த வழக்கறிஞர் பராசரன் குறிப்பிட்டது போல சேஷம்மாள் வழக்கில் கண்டவாறு) தீர்வு செய்தது தொடரும் என்ற வகையிலோ அல்லது சட்ட ரீதியாக அது பிறப்பிக்கப்பட்ட வழிமுறை செல்லத் தக்கதல்ல என்று தீர்வு செய்வதோ அல்லது ஒட்டு மொத்தமாக நொறுக்கி ரத்து செய்வதோ சரியாக இராது என்பதோடு மட்டுமல்ல அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கத்தையே தோற்றுப் போகச் செய்யத் தக்க அளவில் வெற்று அறிவு ஜீவித்தனமாக முடிந்துவிடும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட வழிமுறையே சட்ட வழிமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என்று சொல்வதற்குக் காரணம், இத்தகைய பெரிய சமூகத் தாக்கமுள்ள ஒரு விஷயத்தை சட்ட ஏற்பின் பார்வையில் வலு குறைந்த சாதாரணமான ஒரு நிர்வாக அரசாணையாகப் பிறப்பித்திருக்கக் கூடாது. அப்படியே பிறப்பித்திருந்தாலும் அதனைச் சட்டமன்றத்தில் வைத்து சட்டமாக்கி அதன் வலுவைக் கூட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அரசே பின்னர் கருதி இருக்கிறது என்பது இந்த அரசாணைக் கருத்தை அப்படியே ஆளுநர் மூலமான ஒரு அவசரச் சட்டமாக்க முயன்றதில் இருந்து தெரிகிறது. அப்படியும் அவசரச் சட்ட நடைமுறைக் காலத்திற்குள் சட்டமன்ற மசோதாவாக முன் வைக்கும்போது சில முக்கியப் பிரிவுகளை மசோதாவில் தவிர்த்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலே கூறிய உண்மைகளின் உள்ளுறையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.''

மேற்கண்டதிலிருந்து பல வகையில் அரசாணை பலவீனமாக இருந்தும் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டங்கள் கருதும் சமூக நீதியைக் கருத்தில் கொண்டே அரசாணையை நிலைநிறுத்தியுள்ளது கண்டுணரத்தக்கது.

அடுத்து இறுதியாக, உச்சநீதிமன்றம் இந்த முறை முந்தைய தீர்ப்புகளில் எல்லாம் கண்டது போல ஆகமத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ஆகமத்தை அதற்குரிய இடத்தில் சரியாக வைத்துப் பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தீர்ப்பில் ஆகமத்தைப் பற்றிய உண்மையான நடைமுறை நிலையை நீதிமன்றம் கண்டு கூறி இருப்பது போற்றத் தக்கதாக உள்ளது. இது பற்றிய தீர்ப்பின் பகுதிகள் வருமாறு:

"மேலும், ஆகமங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல தெளிவில்லாதன வாகவே காணப்படுகின்றன. இத்துடன் ஆகம நூல்கள் கிடைப்பதும் அவ்வளவு எளிதாக இல்லை. ஆகம அறிவுடையவர்களின் எண்ணிக்கை யும் குறைந்து கொண்டே வருவதுடன் ஆகம அறிவில் எவராலும் மறுத்தற்கியலா விற்பன்னர்களின் எண்ணிக்கையும் குறைந்துதான் காணப்படுகிறது.''

தீர்ப்பில் இந்தக் குறிப்புகளை பார்க்கும் போது தீர்ப்பு அளிக்குமுன் தொடர்புடைய நீதிபதிகள் ஆகமங்கள் அப்படி என்னதான் சொல்கின்றன என்று ஆகம நூல்களை வாங்கிப் பார்க்கவும் கருத்துக்களைக் கேட்டறிய ஆகம வல்லுநர்கள் எவரெவர் என்று தேடியும் இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது. அதன் விளைவாகவே மேற்கண்ட கருத்துக்களை தீர்ப்பில் அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

இது பற்றி நீதிபதிகள் மேல் சிந்தனைகளும் செய்துள்ளனர். அது தீர்ப்பின் இன்னொரு பகுதியில் இதே பத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
"ஏதாவது ஒரு உரிமையையோ அல்லது வழக்கத்தையோ, அவை இவை தாம் என்றும், இவையே இச் சமயத்தின் தவிர்க்க இயலா கருப்பொருள் என்றும் சொல்வதில் கூட ஒருமித்து ஏற்கத்தக்க போதிய கலந்தாய்வு அவை இல்லாத நிலையில் திண்ணமாக ஒன்றை ஒன்று மறுக்கும் கருத்துக்கள் அளவின்றிப் பெருகிக் கொண்டே போகலாம் என்பதும் வெளிப்படுகிறது.''

இது தற்போதைய ஆகமத் துறையில் உள்ள நிலையால் எதிர் காலத்தில் வரக்கூடிய சச்சரவுகளை இனம் கண்டு கூறியதாகக் கொள்ளலாம்.
தீர்ப்பின் முக்கியக் கூறுகள்

முடிக்கு முன் இத்தீர்ப்பின் சிறந்த கூறுகளாவன:

1. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அரசாணை சமூக நீதி கருதி ரத்து செய்யப்படவில்லை.

2. ஆகம விதிகளிலேயே பிறப்பு மற்றும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அரசியலமைப்பு சட்டங்களின்படி அவை செல்லாது என்று தீர்த்துச் சொன்னது.

3. ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித்தன்மைகளைக் காப்பாற்றியது.

இனி, இதனால் சில பக்க விளைவுகளும் இல்லாமல் இல்லை. அவற்றை இனம் கண்டு தொடர்புடைய அரசு உரிய குழு அமைத்து சிவாச்சாரியார்கள் உள்பட எல்லோரும் ஏற்கிற தீர்வுகளைக் காணலாம்.

எப்படிப் பார்த்தாலும் இந்தத் தீர்ப்பு வாராது வந்த மாமணி போல வந்த தீர்ப்பு. சமூக நீதியைப் பெரிதும் போற்றும் பெரியோர்களும், உண்மை வழிபாட்டினை நிலை நாட்ட விரும்பும் பரந்த மனப்பாங்கு கொண்ட பக்தர்களும் வரவேற்கத் தக்க தீர்ப்பு!

இதோ, சாதிச் சழக்குகள் கடந்து, வள்ளலார் வழிகாட்டிய பாடலோடு எல்லோருக்கும் கோயில் கதவைத் திறந்து விடுவோம் - நிரந்தரமாக!

திருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவம் திறந்தே
திருவருட் பேரொளி காட்டி திருவமுதம் ஊட்டி
கருத்துமகிழ்ந் தென்னுடம்பில் கலந்துளத்தில் கலந்து
கனிந்துயிரில் கலந்தறிவில் கலந்துலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
தொன்றாகிக் காலவரை உரைப்பவெலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கியருள் ஆடல்செய வேண்டும்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.