தமிழ்த் தானைத் தளபதி தமிழண்ணல் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:20

முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகத்தை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

80க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மத்திய அரசின் தமிழறிஞர்களுக்கான செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகியவற்றை பெற்றவர் தமிழண்ணல் ஆவார்.

தமிழ் காக்கும் போரில் ஈடுபட்டு தனது இன்னுயிரையே ஈகம் செய்வதற்கு முன்வந்தவர். 1990ஆம் ஆண்டில் தமிழ்வழிக் கல்வியைவலியுறுத்தி நூறு தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது அதற்குத் தலைமை தாங்கிய பெருமைக்குரியவர் தமிழண்ணல் ஆவார்.

கடந்த ஆண்டு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாடு நடைபெற்றபோது இவருக்கு உலகப் பெருந்தமிழர் என்னும் விருது வழங்கப்பட்டது.

தமிழுக்காக வாழ்ந்தவர். தமிழாக வாழ்ந்தவர். தமிழுக்குக் கேடிழைக்க யார் துணிந்தாலும் அவர் எத்தகையவராக இருந்தாலும் எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும் எதிர்த்துப்போராடிய தானைத் தளபதியாகத் திகழ்ந்தவர். சங்க கால நக்கீரனைப் போல் நம் கண் முன்னால் வாழ்ந்துகாட்டிய தீரமிக்கவர். அவரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவரின் மறைவினால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.