மொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியச் செழுமை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பல நாடுகளைக் கொண்டதே இந்தியத் துணைக்கண்டம் என்ற உண்மையை மறைத்து ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு, அதுதான் பாரதம் என்ற ஒரு மாயையைத் திணிக்கும் போக்குத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பிற தேசிய இனங்கள் அனைத்தின் இறையாண்மையையும் பறிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் தேசிய இனங்களின் அடிமை முறிச் சட்டமாகும். இந்திய வல்லாதிக்க அரசமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியலாக இந்தியத் தேசியம் என்னும் மாயைத் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.
1917-ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வெடித்தெழுந்த யுகப் புரட்சியின் விளைவாக ஜார் கொடுங்கோலாட்சி ஒழிக்கப்பட்டு, சோவியத் கூட்டாட்சி உருவானது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த பல்வேறு தேசிய இனங்கள் வாழ்ந்த நாடுகள் தாமாகவே விரும்பி இணைந்து சோவியத் கூட்டாட்சியை உருவாக்கின. இதுகுறித்து லெனின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார். "தாமாகவே விரும்பி இணைந்த நாடுகளின் கூட்டாட்சியையே நாம் விரும்புகிறோம். பாரம்பரியமான நம்பிக்கை ஒன்றினையே அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து தாமாகவே முன்வந்த நாடுகளின் சம்மதத்துடன் தான் சோவியத் கூட்டாட்சி உருவாக்கப்பட்டது'' என்றார்.
ஆனால், இந்திய கூட்டாட்சி அமைக்கப்படும் போது அதில் அங்கம் வகித்த பல்வேறு தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த கூட்டாட்சியாக உருவாகவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த தேசிய இனங்கள் கட்டுண்ட நிலையிலேயே இந்தியக் கூட்டாட்சிக்குள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மையை ஆங்கிலேயர் பறித்தனர்; அடக்கி ஒடுக்கி ஆண்டனர். அவர்கள் வெளியேறும் போது அந்த இறையாண்மை அந்தந்த தேசிய இனங்களுக்கு உரிமையானதேயாகும். ஆனால், இந்த உண்மை மறைக்கப்பட்டு தேசிய இனங்களின் இறையாண்மை அந்த இனங்களின் ஒப்புதலின்றி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தங்கள் தனித்தன்மையை நிலை நிறுத்தவும் காத்துக்கொள்ளவும் மொழி வழித் தேசியம் ஒன்றினால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து பல்வேறு தேசிய இனங்களும் தங்களின் தன்னுரிமையை வலியுறுத்திப் போராடி வருகின்றன.
தமிழ்த் தேசிய இனமும் தனது மொழியை, பண்பாட்டை, மண்ணைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வருகிறது. இங்ஙனம் போராடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்பதிலும் தமிழருடைய பகைவர்கள் யார் என்பதிலும் தெளிவாயிருக்க வேண்டும். அதில் எவ்வகையான தடுமாற்றத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
மொழிவழித் தேசியத்தை மறுத்து இந்தியத் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் நமது முதன்மையான எதிரிகளாவர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தால்தான் தங்களின் முழுச் சுரண்டலுக்கு எவ்வகைத் தடையும் இருக்காது என்ற காரணத்தினால் ஒற்றை இந்தியக் கொள்கைக்குப் பொருளியல் அடிப்படையில் ஆதரவு தரும் இந்தியப் பெருமுதலாளியமும் அதனுடன் கைகோர்த்து நிற்கும் பன்னாட்டு முதலாளியமும் நமது இரண்டாவது எதிரிகள் ஆவர்.
சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களைப் பிளவுபடுத்தி, இயற்கையான மொழி வழித் தேசிய உணர்வை அழிப்பதன் மூலம் தங்களின் சாதி-மத அடிப்படையிலான மேலாண்மையையும் சுரண்டலையும் நிலைநிறுத்திக்கொள்ள முயலும் பார்ப்பன சமற்கிருதப் பண்பாட்டுத் தேசியம் நமது மூன்றாவது எதிரியாகும்.
இந்த மூன்று பிரிவினரின் அடிப்படை நோக்கங்கள் ஒரே தன்மையுடையவை.
மேற்கண்ட நோக்கங்கள் எல்லாவற்றிலும் காங்கிரஸ், சங்கப்பரிவாரம் மற்றும் பல அனைத்திந்தியக் கட்சிகள் ஒன்றுபட்டிருக்கின்றன. பதவிப் போராட்டங்களினால் அவை வேறுபட்டிருக்கின்றனவே தவிர அடிப்படையில் இக்கட்சிகளுக்கிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை.
வரலாற்றுப் பெருமையும், தொன்மைச் சிறப்பும் மிகுந்த தமிழினத்தின் விடிவுக்காக நாம் போராடுகிறோம் என்பது நமது நினைவில் எப்போதும் இருக்க வேண்டும். நமது முழுக்கவனமும் தமிழ்த் தேசிய இன மீட்பு என்பதை நோக்கியே இருக்கவேண்டும். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அந்த இலக்கை நோக்கியே செல்வதாக அமைய வேண்டும்.
தமிழர்களுக்கே உரிமையானதும் தொடர்ந்து பன்னெடுங்காலமாகத் தமிழகத்திற்கே சொந்தமாக விளங்கிவந்ததுமான பகுதிகள் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது ஆந்திர, கேரள, கருநாடக மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன. இழந்த நமது பகுதிகளை மீட்டு, மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதும் இருப்பதைக் காப்பதும் நமது நீங்காக் கடமையாகும். திராவிட பதவி வெறிக் கட்சிகளின் அறைகூவல்
இந்திய தேசியத்தை எதிர்த்து திராவிடத் தேசியம் பேசிவந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடப் பதவிவெறிக் கட்சிகள் இந்தியத் தேசியத்திடம் பதவிகளுக்காக மண்டியிட்டு தங்கள் கொள்கைகளைக் கைவிட்டன. கடந்த 40 ஆண்டு காலமாக மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து மத்திய அமைச்சர் பதவிகளில் இரு கழகங்களும் மாறி மாறி அமர்ந்திருக்கின்றன. ஆனாலும் ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை, மீனவர் பிரச்னை கச்சத் தீவுப் பிரச்சினை போன்ற தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டன.
தமிழ்நாட்டில் 46 ஆண்டு காலத்திற்கு மேலாக திராவிட பதவிவெறிக் கட்சிகளின் ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பறிபோயின. தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தமிழை ஆட்சிமொழியாகவோ, பயிற்சி மொழியாகவோ ஆக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டைவிட்டு வெளியேறி 68 ஆண்டுகள் ஆன பிறகும் ஆங்கிலமே அரசோச்சுகிறது. ஆங்கில வழிக் கல்வி அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவி நிற்கிறது. இந்தி கூடவே கூடாது என முழங்கியவர்கள் என்றென்றும் ஆங்கிலமே என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள்.
வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரையிலும் மற்றும் பல்வேறு தமிழ்ச் சான்றோர்களும் மது என்னும் தீமை குறித்து மக்களுக்கு உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்தினர். பெரியார் அவருடைய துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார் ஆகியோர் தமிழகத்தில் கள் ஒழிப்புக்காக ஆற்றிய பெரும் தொண்டினை காந்தியடிகளே பாராட்டியுள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது மது ஒழிப்பை இரத்து செய்ய உறுதியாக மறுத்தார். அத்தகையோர் வாழ்ந்த தமிழ் மண்ணில் மதுவை ஆறாக ஓடச் செய்து சில தலைமுறையினரை அதற்கு அடிமையாக்கி குடும்பங்களைச் சீரழித்தவர்கள் திராவிட பதவிவெறிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே.
சகல துறைகளிலும் தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்தவர்களும் திராவிட பதவிவெறிக் கட்சியினரே. தமிழகத்தில் இலஞ்சமும், ஊழலும் பரவி நிற்கின்றன. மல்லிகைத் தோட்டமாக விளங்கிய தமிழகத்தைக் கள்ளிக்காடாக மாற்றியவர்கள் இவர்களே. விரிப்பின் பெருகும்.
வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வாரி வழங்கியும், ஊழல் மூலம் திரட்டிய பணத்தின் ஒரு சிறு பகுதியை அள்ளி வீசியும் தமிழ் மக்களை தன்மானமற்றவர்களாகவும், இரு கை ஏந்தி இரந்து நிற்பவர்களாகவும் மாற்றியவர்கள் திராவிட பதவிவெறிக் கட்சியினரே என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் ஜனநாயகத்தை அழித்துப் பண நாயகத்தைத் தலைதூக்கச் செய்தவர்களும் இவர்களே.
திராவிட பதவிவெறிக் கட்சிகள் உருவாக்கியிருக்கிற கள்ளிக்காட்டை வெட்டி எறிந்து தமிழ் மண்ணைப் பண்படுத்த வேண்டிய கடமை தமிழ்த் தேசியர்களுக்கு உண்டு. நம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும். வேறு யாரும் செய்ய முடியாது.
தமிழக அரசியல் சந்தர்ப்பவாதமும், சுயநலமும், மேனாமினுக்கித் தனமும், ஊழல் மயமும் நிறைந்த அரசியலாக திராவிட பதவிவெறிக் கட்சிகளால் மாற்றப்பட்டுவிட்டது. இந்த தீமைகளைச் சுட்டெரிக்கும் தியாகத் தீயை மூட்டுவதற்குத் தமிழ்த் தேசியர்களால் மட்டுமே முடியும். இந்திய தேசியத்தை எதிர்க்கும் துணிவை இழந்ததோடு மட்டுமல்ல இந்தியத்தின் பின் ஓடும் கட்சிகளாக திராவிட பதவிவெறிக் கட்சிகள் மாறிவிட்ட நிலையில் தமிழக அரசியலில் திராவிடக் கட்சியினருக்கான தேவை தீர்ந்துவிட்டது. அகில இந்தியக் கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இல்லை. இனி அக்கட்சிகள் தொடர்வது தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் தீங்கு பயப்பதாகும்.
பாசிச அறைகூவல்
இந்துத்துவா வாதிகள் மொழிவழித் தேசிய உணர்வுக்கு எதிரானவர்கள். ஒரு நாடு - பாரதம், ஒரே மொழி - சமஸ்கிருதம், ஒரே பண்பாடு-பாரதப் பண்பாடு, ஒரே மதம் - இந்துமதம் என்பதே அவர்களின் கொள்கையாகும்.
இக்கொள்கைகளை படிப்படியாக நிறைவேற்ற பா.ஜ.க. ஆட்சி முயலும் என்பதில் ஐயமில்லை.
தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றுவரையிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் சமஸ்கிருத பண்பாட்டிற்கு எதிராகத் தொடர்ந்து போராடி தங்களின் தனிப் பண்பாட்டை நிலை நிறுத்திக்கொண்டுள்ள இனம் தமிழ் இனமேயாகும். எனவே பா.ஜ.க. ஆட்சியில் நமக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகமாகும்.
சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை முதன் முதல் நிலை நிறுத்தியது தமிழகமே. ஆனால், இந்துத்துவாவாதிகள் இதற்கு எதிரானவர்கள். வருணாசிரம தர்மத்தை கட்டிக்காப்பதிலும் படிமுறை சாதிக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதிலும், பார்ப்பனிய மேலாண்மையை மேலும் மேலும் ஓங்கச் செய்வதிலும் அழியாத நம்பிக்கை கொண்டவர்கள்.
ஆரிய இன வெறியை ஊட்டி ஜெர்மானிய மக்களே உலகை ஆளத் தக்கவர்கள் என்ற இட்லரின் தத்துவம் அவனது நாட்டை மட்டுமல்ல ஐரோப்பாவையே சுடுகாடாக்கிற்று. அந்த இட்லரைத் தங்களின் வழிகாட்டியாகக் கொண்டவர்கள் இந்துத்துவாவாதிகள்.
எனவே எதிர்காலத்தில் சிறிது சிறிதாக சகிப்புத் தன்மையையும், மத சார்பற்ற தன்மையையும் இறுதியாக சனநாயகத்தையும் அழித்து சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டும் திட்டத்துடன் இந்துத்துவாவாதிகள் செயல்பட்டுவருகிறார்கள்.
இந்தியத் தேசியக் கருத்தாளர்களுக்கும், இந்து தேசியக் கருத்தாளர்களுக்குமிடையே அதிக வேறுபாடு கிடையாது. பல கூறுகளில் இருவரும் ஒன்றுபட்டே இருக்கிறார்கள்.
பெருமுதலாளியம், பன்னாட்டு முதலாளியம், உலகவயமாதல் கொள்கை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுவதில் இந்தியத் தேசியர்களுக்கும், இந்து தேசியர்களுக்குமிடையே வேறுபாடு இல்லை.
காங்கிரசுக் கட்சி உதட்டளவில் சமவுடைமை (சோசலிசம்) பேசியது; பா.ச.க. காந்தியச் சமவுடைமை பேசியது. அரசுத்துறை ஊடகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் பேராயக் கட்சி அரசுக்கும், பா.ச.க. அரசுக்கும் வேறுபாடு இல்லை.
வலுவான நடுவண் அரசு என்னும் கோட்பாட்டை காங்கிரசுக் கட்சி கடைப்பிடித்து மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்தது. பா.ச.க.விற்கும் இதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்துக் குமுகாயத்தில் நிலவும் சாதிக்கொடுமை, தீண்டாமை போன்ற தீமைகளை ஒழிக்க காங்கிரசுக் கட்சி வெறும் உதட்டளவில் பேசியது. மண்டல் குழு அளித்த பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டது. பா.ச.க. மண்டல் குழுவை வெளிப்படையாக எதிர்த்தது.
சமற்கிருதம் அரியணையில் அமரும் சூழ்நிலை வரும்வரை இந்தி அந்த இடத்தைப் பெறும் என்ற கருத்தோட்டத்தில், இந்தியத் தேசியத்திற்கும், இந்து தேசியத்திற்குமிடையே எத்தகைய வேறுபாடும் கிடையாது.
மொழிவழித் தேசிய உணர்வை ஒடுக்குவதற்கு இந்தியத் தேசியர்கள் செய்த முயற்சிகளும். ஏவிய அடக்குமுறைகளும் நாடறிந்தவை. ஆனால், இந்துமதவெறியையூட்டி பல்வேறு மொழி பேசும் மக்களிடையே மதச்சண்டைகளை உருவாக்கி, மொழிவழித் தேசியத்தை அழிப்பதற்கு இந்து தேசியர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.
தமிழக மக்களுடன் தொப்புள்கொடி உறவு பூண்ட ஈழத் தமிழர் சிக்கலில் காங்கிரசுக் கட்சி சிங்கள அரசுக்குத் துணையாக நின்று தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தது. அதே பாதையில் இப்போது பா.ஜ.க. அரசும் செல்கிறது. ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இரண்டு அரசுகளும் எல்லாவிதத்திலும் துணை நின்றன. நிற்கின்றன.
தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிட பதவிவெறிக் கட்சித் தலைவர்களுக்கு இதெல்லாம் புரியாமல்இல்லை. ஆனாலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் தமிழ்நாட்டில் தங்களது ஊழல் ஆட்சியைத் தொடரவும் பா.ஜ.க.வுடன் கைகோர்க்க அவர்கள் முன்பும் தயங்கவில்லை. இனிமேலும் தயங்கப்போவதில்லை.
பெரியார் அவர்கள் தனது பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை, எளிமை, தியாகம், கொள்கை உறுதிப்பாடு போன்ற நற்பண்புகளைக் கடைப்பிடித்தார். அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் திராவிட பதவிவெறி அரசியல் கட்சிகள் ஊழல், கொள்கையற்றச் சந்தர்ப்பவாதம், ஆடம்பர வாழ்க்கை, தில்லியை எதிர்த்துப்போராட துணிவற்ற கோழைத்தனம், தியாக உணர்வை கொச்சைப்படுத்துதல், மக்களை மதியாத தன்மை, அதிகாரவெறி, பதவியை வைத்துப் பணம், பணத்தை வைத்துப் பதவி என்ற நச்சுச் சுழலைச் சுற்றிச்சுற்றி வரும் போக்கு ஆகியவற்றை பின்பற்றுகிறார்கள்.
பெரியாரை உண்மையாகப் பின்பற்றிய தொண்டர்கள். தங்கள் குடும்பம், சொத்து சுகம் ஆகியவற்றை இழந்து, தியாக உணர்வுடன் இலட்சியவாழ்வு வாழ்ந்தார்கள்.
திராவிட பதவிவெறிக் கட்சிகளின் தலைவர்கள் ஊழல் மற்றும் முறையற்ற வழிகளில் திரடடிய செல்வத்தின் மூலம் பெரும் கோடிசுவரர்களாகக் குறுகிய காலத்தில் மாறி சுகபோகங்களில் திளைத்து வருகிறார்கள்.
40 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் திராவிட பதவிவெறிக் கட்சிகள் தமிழை அரியணை ஏற்றுதல், சமதர்மத்தை நிலைநாட்டல், சாதிகளற்ற சமுதாயம் அமைத்தல், தூய்மையான ஆட்சி நடத்துதல் போன்ற எதையும் செய்யவில்லை. வாரிசு முறை அரசியலை கட்சியிலும், சர்வாதிகாரத்தை ஆட்சியிலும் கொண்டு வந்தனர்.
"அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு'' என மேடைதோறும் முழங்கியவர்கள். பிரிவினைத் தடைச்சட்டம் வந்தவுடன் திராவிடத்தை ஆழக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இப்போது தங்களது ஊழல் ஆட்சிக்கு எதிராக பொங்கி எழுந்த மக்களின் எதிர்ப்புவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும்போது தங்களைக் காப்பாற்றிக்கொள்ள "திராவிடத்தைக் காப்போம்'' என கூக்குரல் எழுப்புகிறார்கள்.
ஆனால் அவர்கள் விரிக்கும் இந்தச் சூழ்ச்சிவலையைப் புரிந்துகொள்ளாத சில திராவிட அமைப்புகள் ஊழல் கட்சிகளுக்கு ஆதரவாக வரிந்துகட்டுகின்றன. புதைச்சேற்றில் சிக்கி ஓலமிடும் வஞ்சக நரியின் ஓலத்தைக் கேட்டு அதைக் காப்பாற்றப்போனவர்களும் புதைச்சேற்றில் சிக்கி சீரழிவதற்கு ஒப்பாகும் இது.
தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திரர் என்னும் இழிவுப்பட்டத்தைத் துடைத்து தமிழர்களைத் தலைநிமிர வைத்தவர் பெரியார் என்பதை நன்றியுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
தமிழக அரசியலிலும் மற்றும் சகல துறைகளிலும் நிலவிய பார்ப்பனிய ஆதிக்கத்தைத் தகர்த்து தமிழர்களின் கரங்களில் அதிகாரம் கிடைக்கப்போராடியவர் பெரியார். அதன் விளைவை இன்று சகல துறைகளிலும் காண்கிறோம்.
பார்ப்பனிய ஆதிக்கம், கடவுள் நம்பிக்கை, மத மூடநம்பிக்கைகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், மக்களை மடமையில் ஆழ்த்தும் புராணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி தமது வாழ்நாளிலேயே பெரும் வெற்றியைக் கண்ட பெருமைக்குரியவர் பெரியாரே. அவர் ஊட்டிய பகுத்தறிவு உணர்வின் விளைவாக தமிழகத்தில் மத நச்சரவங்கள் நுழைய முடியவில்லை. ஆனால் அந்த நச்சரவங்களைப் பல்லக்கில் சுமந்துவந்து தமிழ்நாட்டில் நுழையவிட்டுப் பால் ஊற்றி வளர்த்தவர்கள் திராவிட பதவிவெறி அரசியல் கட்சியினரே.
பச்சைத் தமிழர் ஆட்சி என காமராசர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததற்கு, கல்வி, தொழில், வேளாண்மைத் துறைகளில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர் சமுதாயம் ஏற்றமடைந்ததே காரணமாகும்.
ஆனாலும் தனது அடிப்படைக் கொள்கைகளுக்காகத் தொடர்ந்து போராடவும் சிறைசெல்லவும் அவர் தயங்கவில்லை. அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, இராமன் பட அவமதிப்பு ஆகிய பெரும் போராட்டங்களை காமராசர் ஆட்சியில் நடத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.இப்போராட்டங்களில் ஈடுபட்டு பெரியாரும் அவரது தொண்டர்களும் மாதக் கணக்கில் சிறைவாசம் மேற்கொண்டனர்.
ஆனால், காங்கிரசோடும், பா.ஜ.க.வோடும் கூடிக்குலாவி மத்திய ஆட்சியில் பதவிபெற்ற திராவிட கட்சிகள் அந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல கொடுமைகள் அரங்கேற்றப்பட்ட போது அவற்றைக் கண்டிக்கவோ முணுமுணுக்கவோகூட முன்வரத் துணியவில்லை.
காமராசர் ஆட்சியை ஆதரித்தபோதிலும் அந்த ஆட்சியில் பங்கேற்கவோ அல்லது தனது கட்சி யினருக்கு சில சலுகைகளைப் பெற்றுத்தரவோகூட ஒருபோதும் பெரியார் முன்வந்ததில்லை.
ஈழப்பிரச்சினை காவிரி-முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்னை போன்ற பிரச்சினைகளில் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழர்களுக்குத் துரோகம் செய்தபோதிலும் திராவிட பதவிவெறிக் கட்சியினர். பதவி நாற்காலிகளில் பல்லிளித்தபடி வீற்றிருந்தனரே தவிர. தங்கள் பதவிகளைத் தூக்கி எறியத் துணியவில்லை. தாங்கள் புரிந்த ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக தமிழர்களின் நலன்களைத் தில்லியின் பலிபீடத்தில் காவுகொடுக்க திராவிட பதவிவெறிக் கட்சிகள் தயங்கவில்லை.
இத்தகைய பதவி வெறிபிடித்த திராவிட கட்சிகளைக் காப்பாற்றுவதற்கு பிற திராவிட அமைப்புகள் துடிப்பது ஏன்? பொது வாழ்வில் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான பெரியாரைப் பின்பற்றுவதாக சொல்லுபவர்கள் ஊழல் சாக்கடையில் மூழ்கிக்கிடப்பவர்களைக் கைத்தூக்கிவிடவும், கட்டித் தழுவவும் முன்வருவது எப்படி?
தமிழ்த் தேசியத்தின் முதலும் முடிவான எதிரி இந்தியமே. இந்தியத்தை எதிர்த்துப்போராட திராவிட பதவிக்கட்சிகள் தயாராக இல்லை. எனவே, இந்தியத்தை அம்பலப்படுத்தும் தமிழ்த் தேசியவாதிகளை அடக்குமுறைச் சட்டத்தை ஏவி சிறையில் அடைத்தும், கட்சிகளைத் தடை செய்தும் ஒடுக்குகிற திராவிட பதவி வெறிக் கட்சிகள் தில்லி எஜமானனை திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்கின்றன என்பதை பிற திராவிட அமைப்புகள் உணர்ந்திருக்கின்றனவா?
உலகத் தமிழ் இனம் இன்று பேரிடரின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்கள இனம், சிறுபான்மையினமான தமிழினத்தை வன்முறையால் அடக்கி ஒடுக்கியபோது, இங்கே ஏழரைக் கோடித் தமிழர்களைக் கொண்ட தமிழகம் எதுவும் செய்ய இயலாமல் தத்தளித்துத் தேம்பி நின்றது. மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களை அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் அடக்கி ஒடுக்க முயல்வார்களானால், அந்தத் தமிழர்களைக் காப்பதற்குத் தாயகத் தமிழினத்தினால் இயலுமா? என்ற ஐயம் உலகத் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளது இந்த ஐயத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
உலக மயமாக்கலின் விளைவாக பல மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்து வருவதை யுனசுக்கோவின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கில வல்லாளுமையின் விளைவாக தமிழுக்கும் அந்நிலைமை நேரலாம் என்ற உண்மையை எத்தனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள்? மொழிக்கு நேரவிருக்கும் பேரழிவினைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யப்போகிறோம்?
தமிழகம் பன்னாட்டு நிறுவனங்கள், மார்வாடி, குசராத்தி, மலையாளிகள் ஆகியோரின் வேட்டைக் காடாக மாறி சூறையாடப்படுகிறது. வந்தேறிகளின் சுரண்டலைத் தடுத்து நமது பொருளியலை மீட்க நாம் என்ன செய்யப்போகிறோம்?
தமிழகத்தின் இயற்கை வளங்களான கனிமங்கள், கான் வளங்கள், ஆற்று மணல் போன்றவை சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நமது எதிர்காலத் தலைமுறை பாலையாகப் போன தமிழ்நாட்டில்தான் வாழநேரிடும் என்பதை உணர்ந்தோர் எத்தனைபேர் என்பது கேள்விக்குறியாகும்.
இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அரசியல் சூழ்நிலை அடியோடு மாறியிருக்கிறது. நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும், தமிழர்களாகிய நாம் பிளவுப்பட்டு நிற்போமானால், பேரழிவை நமக்குநாமே தேடிக்கொள்வோம் என்றுமில்லாத விழிப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் நமக்குத் தேவை. இல்லையேல் நம்மைக் காக்கும் திறனை நாம் இழந்துவிடுவோம். மொழியை மட்டுமல்ல இனத்தையும், நாட்டையும் பறிகொடுப்போம்.
தொண்டு, துன்பம், தியாகம் ஆகிய அடித்தளங்களின் மீது தமிழ்த் தேசியம் கட்டப்படவேண்டும். தமிழக அரசியலில் இந்த உயர்ந்த நோக்கங்கள் காணாமல் போய்விட்டன. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பணம், பதவி, சுயநல நோக்கங்களை மட்டுமே மனதில் கொண்டு வருகிறார்கள். இதன் விளைவாக தமிழகப் பொது வாழ்க்கை மக்களிடம் மதிப்பிழந்துவிட்டது. பொது வாழ்க்கைக்கு வரும் எல்லோரையுமே மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மாற்றவேண்டும் என்று சொன்னால் எத்தகைய தியாகமும் செய்ய தமிழ்த் தேசியர்கள் தயாராக இருக்கிறோம் என்பதை நாம் செயல் வடிவில் காட்டினால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை பிறக்கும். அத்தகைய தியாக வாழ்விற்குத் தயாராகும்படி தமிழ்த் தேசியர்களை வேண்டிக்கொள்கிறேன். |