போராடி வென்ற பத்திரிகையாளர் "மிஸ்டர் கமலரத்னம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:06

பத்திரிகையாளர்கள் என்றால் யார் தெரியுமா? உடனடியாக இன்றே இந்தத் தொழில் தகராறு மீது நடவடிக்கை எடுங்கள்?''
இப்படிக் கூறியவர் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன்.

இது நிகழ்ந்தது மதுரை மாநகரில் அறுபதுகளின் தொடக்க நாட்கள் அவை.

பிற்காலத்தில் தமிழகத் தொழிலாளர் நலத்துறையின் பிரபலமான ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற திரு. கமலரத்னம் அந்நாட்களில் மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை அதிகாரியாக இருந்தார்.

ஆர்.வி.மில். தொழிலாளர்களுக்கும், மில் நிர்வாகத்துக்குமிடையே நிலவிய தொழில் தகராறைத் தீர்த்து வைக்க மதுரைக்கு வந்திருந்த அப்போதைய சென்னை மாகாண தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் அன்று அவ்வாறு தனது துறை அதிகாரியிடம் கூறிய வார்த்தை சாதாரணமானது அல்ல. உழைக்கும் பத்திரிகையாளர்களின் உரிமைச் சாசனமாக "பாதுகாப்புக் கேடயமாக விளங்கி வரும் நாடாளுமன்றம் நிறைவேற்றித் தந்த சட்டம். தொடக்க காலத்திலேயே உச்ச நீதிமன்றம் வரை சென்று பல நீதிபதிகளால் ஆராயப்படவும், அந்த சட்டம் நியாயமானது என்று ஏற்கப்படவும், உதவிய வாசகங்கள் அவை.

மதுரையில் பரிந்துரைத்ததோடு நில்லாமல் அதன் மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரையில் "ஆர்.வி.'' என்று இரண்டெழுத்துக்களால் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிற திரு. ஆர். வெங்கட்ராமன் அக்கறை செலுத்தி ஆதரவுக்கரம் நீட்டினார்.

தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு முன்னணியில் நின்று ஆக்கமும் ஊக்கமும் அளித்த தமிழ்ப் பெரியவர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பெற்ற கருமுத்து தியாகராஜரும் அவரது பிள்ளைகளும் மதுரையில் மிகச் சிறந்த ஒரு நாளேட்டை "தமிழ்நாடு என்ற யெரில் ஒரு தனித்தமிழ் நாளேடாக நடத்தினர். அதில் பிழைதிருத்துபவராக உழைத்து வந்த தோழர் எல் ராமையாவும் மற்ற உழைக்கும் பத்திரிகையாளர் சிலரும் தொழிற்சங்க உறுப்பினர்களாகச் சேர்ந்து பத்திரிகையாளரிடம் ஒற்றுமையை உருவாக்கிய நேரத்தில், திடீரென்று நிர்வாகம் தோழர் ராமையா அவர்களை தாங்கள் நடத்தி வந்த விசாலாட்சி அச்சகத்துக்கு மாற்றி, மாற்றல் உத்தரவை அளித்தார்கள். "இது சரியல்ல. சட்டப்படி செல்லாது'' என்று கூறியும் நிர்வாகம் கேட்க மறுத்ததால் தொழிலாளர் நலத்துறையை அணுகி சட்டப்படி நிர்வாகத்தை அழைத்துப்பேசி உதவுமாறு தோழர் ராமையா கேட்டார். பல மில்கள், கல்லூரி ஆகியவற்றை நடத்திய சக்தி வாய்ந்த நிர்வாகம் என்பதால் மண்டலத் தொழிலாளர் நலத்துறை அதிகாரின் அதன்மீது நடவடிக்கை எடுக்காது காலங்கடத்திய போதுதான் ஆர்.வி.யின் மதுரை வருகையும் அதிகாரிக்கு அவர் பரிந்துரைத்ததும் நிகழ்ந்தது.

ஒரு தொழிலாளியை அவ்வாறு மாற்றுவது தனக்குள்ள சட்ட உரிமை என்று நிர்வாகம் உறுதியாக இருந்ததால், வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றது. தோழர் ராமையாவை விசாலாட்சி அச்சகத்துக்கு மாற்றம் செய்தது தவறு என்றும் வேலையில்லாதிருந்த நாட்களுக்கான சம்பளத்தைக் கொடுத்து அவரை மீண்டும் வேலையில் அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்பை முழுவதுமாக ஏற்பது கடினம் என்று கூறி நிர்வாகம், உயர்நீதிமன்ற பெஞ்சை அணுகியது. "பணம் வேண்டுமானால் பெற்றுக்கொள்ளட்டும், ஆனால் மீண்டும் வேலை கொடுக்க வேண்டுமென்பதை ஏற்க முடியாது' என்று நிர்வாகம் கூறியது. உயர்நீதிமன்ற பெஞ்ச் விசாரணை நீண்டது. சட்ட நுட்பங்கள் அலசி ஆராயப்பட்டன. முடிவில் உயர்நீதிமன்றத்தில் முன்னர் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பே சரியானது என்று டிவிஷன் பெஞ்ச் கூறிவிட்டது. நிர்வாகம் அது கண்டு சளைக்கவில்லை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
***
"எனது வழக்கைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் தோழர் பிரையன் பாபு வழக்கும் வேறு சிலவும் நடந்தன. எல்லாவற்றிலும் யாம் வெற்றி பெற்றோம்.
இந்த இடத்தில் எல். மீனாட்சி சுந்தரம் பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டும். மதறாஸ் மெயில் ஆங்கில நாளேட்டின் துணை ஆசிரியராக இருந்த அவர் வக்கீலுக்குப் படித்தவர் என்றே நான் நம்பிக்கொண்டிருந்தேன். தொழிலாளர் நலச் சட்டங்கள் அவருக்கு அந்த அளவு அத்துப்படி.''
இப்போது மூப்பெய்தி வறிய நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகின்ற மாதாந்திர ஓய்வுத் தொகையைப் பெற்று வரும் தோழர் லெ. ராமையா அவர்கள் இந்த விவரங்களைத் தெரிவித்ததோடு அப்போது நிலவிய தொழிற் சங்கச் சூழ்நிலைமை பற்றியும் அவர் மேலும் கூறியதாவது:

"அந்தக் கட்டத்தில் என் போலவே நிர்வாகத்தின் மாற்றல் நடவடிக்கைகளால் பாதிப்புக்கு ஆளான தோழர்கள் பொன்னுசாமி, சுப்பிரமணியம் ஆகியோரும் வழக்கில் என்னோடு இணைந்து கொண்டார்கள்.

இந்த வழக்கை நமது சங்கம் ஏற்று நடத்தியதோடு வேலையில்லாது இருந்த எங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.50 மணியார்டர் அனுப்பி வந்தது. அந்த நாட்களில் உணவுக்கு அந்தத் தொகை உதவியாக இருந்தது.

"வழக்கு நெடு நாள் நடக்கக்கூடும். அவ்வளவு காலமும் நீங்கள் மூவரும் உறுதி குலையாது ஒத்துழைக்க வேண்டும். பத்திரிகையாளர் அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய வழக்கு இது' என்று நமது தோழர்கள் ஆர். நரசிம்மன், சித்தரஞ்சன், எல். மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வலியுறுத்தியபடி நாங்கள் உறுதி குலையாது இருந்தோம்.

நமது சங்கம் இந்த வழக்கை மிகவும் கவனமாக வெற்றி இலக்கை எட்டும் வரை ஓய்வறியாது நடத்தியதற்கு துணை நின்று உரம் ஊட்டியவர்கள் வழக்கறிஞர் மோகன் குமாரமங்கலமும், வி. சங்கரனும் என்பதை நாம் யாரும் மறக்கக்கூடாது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து நிர்வாகத்தின் முறையீட்டைத் தள்ளுபடி செய்தபோது எல்.மீனாட்சி சுந்தரம் மதுரைக்கு வந்து இருந்து நாங்கள் வேலையில் சேர்ந்த நாளில் என்னோடு "தமிழ்நாடு' பத்திரிகை அலுவலகத்துக்கும் வந்திருந்தார்.''
***
"பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் வேலை கோரக்கூடாது என்ற வாதம் நீதிமன்றத்தால் ஏற்கப்படக்கூடாது என்று நமது சங்கம் வாதாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்தக் கருத்தை ஆதரித்து சென்னை நகரில் மூவாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் ஊர்வலம் நடத்தி அந்த வாதத்துக்கு வலுவூட்டினார்கள். தொழிலாளர் சங்கம் முழுவதையுமே பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய சட்டப் பிரச்சனையாக அது இருந்ததால் எஸ்.சி.சி. அந்தோணி பிள்ளையும் அவரைப் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் பலரும் அதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்.
சக்தி வாய்ந்த நிர்வாகம் என்பதால் எங்களை எப்படி நடத்துமோ என்பது பற்றியெல்லாம் தோழர்கள் சிலர் அச்சம் தெரிவித்திருந்தனர். ஆனால் நிர்வாகத்தினர் அத்தகைய உணர்வுகளுக்கும் பண்புக் கேட்டுக்கும் இம்மியும் இடமளியாது உயர்வாக நடந்துகொண்டார்கள். ஒரு சட்டப் பிரச்சினை எழுந்தது. அது இப்போது தீர்க்கப்பட்டுவிட்டது என்ற அளவில் நிலைமையை அவர்கள் அணுகினார்கள்.

ஆனால் வழக்கு நீடித்த காலத்தில் எனக்கு வந்த நிர்பந்தங்களை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. நான் சார்ந்த சமூகத்தைக் சேர்ந்த பெரியவர்கள் பலரும் தமிழ்நாடு பத்திரிகை நிர்வாகத்திடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள் என்பதால் என்னை அழைத்து, "வழக்கு தொடர்ந்து நடத்திச் செல்லப்பட வேண்டிய ஒன்றா?' என்ற கேள்வியை எழுப்பினார்கள். நிர்வாகத்தின் சொல்படி கேட்டால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி இனிக்கக் கூடிய விஷயங்களைக் கூறினார்கள். ஆனால் என் உள்ளத்தில் நமது தலைவர்கள் சொன்னவை வேர் ஊன்றி இருந்தது. உழைக்கும் பத்திரிகையாளர் சட்ட ஷரத்துக்கள் செல்லுமா? செல்லாதா? என்ற மூலமுதற் கேள்வி நீதிமன்றத்தில் என் வழக்கு மூலம் எழுப்பப்பட்டிருப்பதால் சொந்த லாபம் கருதி நான் குலைந்து போனால் பத்திரிகையாளர் குடும்பத்தின் எதிர்கால நலனே பாதிக்கப்பட்டு விடும் என்பதுதான் அது.

இந்த விஷயம் தலைவர் காமராஜ் வரை சென்றது. தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தைச் சேர்ந்த என் தமையனார் வள்ளியப்பனை அழைத்து அது என்ன வழக்கு என்று மட்டும் கேட்டறிந்தார். மற்றபடி அவர் தலையிடவே இல்லை.

அந்த வழக்கு நெடு நாட்கள் நீடித்த போதும் மனக் குழப்பமோ சீர்குலைவோ இல்லாமல் நடந்து கொண்டதை எண்ணி நான் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்! ஓங்குக ஒற்றுமை!''

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.