தமிழக விவசாயத்தை பாழாக்கும் கெயில் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:07

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி தமிழக அரசு அளித்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக உழவர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாகச் சீரழிக்கும் இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயச் சங்கங்கள் ஆகியவை போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

எரிவாயுக் குழாய் திட்டத்துக்காக விவசாய நிலங்களை எடுக்க மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் களில் பலருக்குவயது 50ஐ கடந்துவிட்டது. இந்த நிலையில் அவர்களின் நிலத்தை அரசு பறித்துக் கொண்டால், அவர்கள் வேறு தொழிலுக்கு செல்ல முடியாது. விவசாயம் மட்டுமே தெரிந்தவர்களால், மூட்டை தூக்கவோ, காவல், மளிகை கடை வேலை களுக்கோ செல்ல முடியாது. எனவே, விவசாய தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கின்றனர் விவசாயிகள்.

விவசாயிகளை அழிக்கும் எரிவாயுக் குழாய் திட்டத்துக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இத்திட்டத்தை எதிர்த்து விவசாய நிலங் களில் உயிர் போனாலும் அனுமதிக்க மாட்டோம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றிப் போராடி வருகின்றனர்.
இந்தியன் ஆயில் நிறுவனம் தனது செலவை மிச்சப்படுத்துவதற்காக சென்னை எண்ணூரில் இருந்து மதுரை வரை 615 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் மூலம் வாயு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகளை கடந்த சில ஆண்டுகளாக சத்தமில்லாமல் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. அடுத்தவன் வீட்டு விவசாய நிலத்தில் புகுந்து சர்வே எடுத் துள்ளது. அந்த நிலங்கள்தான் வேண்டும் என்று அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக மூன்று போகம் விளையும் நிலங்களை எரி வாயு குழாய் புதைக்க கேட்கிறது.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் கேரளா, கர்நாடகா இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விசாய நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அறிவிப்பு வழங்கும் பணியில் தற்போது அரசு நிர்வாகம் இறங்கி உள்ளது. இதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விவசாய நிலங்களின் நடுவே குழாய் புதைக்கப்படுவதால் விவசாய நிலங்களை மேம்படுத்தவோ அல்லது விவசாயத்துக்குப் பயன்படுத்தவோ முடியாது.

ஏற்கனவே, உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட தால், அந்தப் பகுதியில் உள்ள நிலமே எதற்கும் பயன்படாமல் வீணாக போய் உள்ளது. இந்நிலையில் எரிவாயு குழாய் விஷயம் விவசாயிகளின் பொருளாதாரத்தை அடியோடு நாசமாக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது.
பாசனக் கிணறு மூடும் அபாயம்-

ஏரி மாவட்டமான காஞ்சிபுரத்தில் விவசாயம் பாசன கிணறு, குழாய்க் கிணறுகள் மற்றும் ஏரிகளில் எரிவாயுக் இருந்துகொண்டு வரப்படும் தண்ணீர் மூலமே நடக்கிறது. ஆனால், எரிவாயு குழாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ராட்சத பாசன கிணறுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட லாம். மேலும் குழாய்க் கிணறு பயன்படுத்த முடியாமல் போகலாம் போன்ற ஆபத்துகள் உள்ளன. சில ஏக்கர் நிலத்தை வைத்து பயிர் செய்யும் விவ சாயிகள், பாசன கிணறு மூடும் நிலையில் விவசாய நிலத்தை தரிசாக போட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்ல வேண்டியதுதான் என்கின்றனர் விவசாயிகள்.

கூலித் தொழிலுக்கு அனுப்பும் திட்டம்-

ஒரு ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள விவசாயிகள் நிலங்களை வைத்துள்ளனர். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் சொந்த வீடு கட்டுதல் என்று அனைத்தும் செய்து கொள்கின்றனர். இவர்களின் நிலங்களுக்கு அவர்கள் வைத்துள்ள சிறிய மற்றும் பெரிய அளவிலான கிணறுகளும் காஸ் திட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றைய பொருளாதார சூழலில் புதிய கிணறுகளை வெட்டுவது என்பது சவாலான பணி. அப்படி கிணறுகளும் ஆர்ஜிதம் செய்யப்பட்டால், விவசாயி கள் இனி ஒரு ஏக்கர் நிலத்துக்காக புதியதாக கிணறுகளை வெட்ட முடியாது. அதற்காக பல இலட்சங்களை செலவும் செய்ய முடியாது. எனவே, அவர்கள் விவசாய கூலிகளாகவோ அல்லது தொழிற்சாலைகளுக்கு தினக் கூலிகளாகவோ தான் செல்ல முடியும். நிலத்தின் உரிமையாளராக இருக்கும் விவசாயிகளை கூலித் தொழிலுக்கு அனுப்பும் வேலைதான் இந்த எரிவாயுக் குழாய் திட்டம். எனவே, இந்த திட்டத்தை எப்பாடு பட்டாவது நிறுத்துவோம் அல்லது மாற்று வழியில் செயல்படுத்த நீதிமன்றத்தை நாடவும் தயங்க மாட்டோம் என்கின்றனர் விவசாயிகள்.

சென்னையிலிருந்து மதுரைவரை உள்ள விவசாய நிலங்களின் வழியே எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தினால் பல இலட்சக்ணக்கான விவசாயிகளின் வாழ்க்கைப் பாழாகும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.