கடிதோச்சி மெல்ல எறிக! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:10

"குற்றவாளியைக் கட்டித் தழுவி அவரை விருந்திற்கு நீதிபதி அழைக்க வேண்டும் என யாரும் எதிர்பார்க்க இயலாது. ஆனால், விசாரணையின் போதும் தண்டனை வழங்கும்போதும் மனிதநேயம் நீதிபதிகளின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கு மானால், நிலைமைகள் சீர்திருந்தும். ஆளைக்குறித்துக் கவலைப்படாமலும், அப்பால் நின்றும் நீதிபதிகள் தாங்கள் வழங்கும் தண்டனையின் விளைவுகளைக் குறித்து சிறிதளவே அறிந்திருப்பார்கள். ஆனால், அவர்களின் விழிப்புணர்வு மேலும் பெருகி, குற்றவாளியை மனிதநேயத்துடன் அணுகுவார்களானால் அது சமூகத்திற்கு நன்மை பயக்கும். இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு ஏற்படும்போதுதான் இது நடைபெறும்'' என இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒருமுறை கூறினார்.

நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து நேரு வெளியிட்ட இந்தக் கருத்துக்கள் நீதி வழங்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் படைத்த அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் சிலர் பற்றிய பிரச்சினை இழுபறியாக நீடித்துக்கொண்டே போகிறது. வழக்கறிஞர் சமுதாயத்தில் வேதனை ஆழமாகப் பரவியிருக்கிறது. 42 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக் கிறார்கள். மேற்கண்ட வழக்கறிஞர்கள் மீது அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 15-10-15 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வில் ஒரு பெண் வழக்கறிஞர் மற்றும் சில வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு "தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு'' எனப் பொறிக்கப்பட்ட பதாகையைத் தூக்கிப் பிடித்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்கள். அரசுத் தலைமை வழக்கறிஞர் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தில் மேற்கண்ட வழக்கறிஞர்கள் குறித்துப் புகார் செய்தார். அதனடிப்படையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டப்படவில்லை.

மேலும் சென்னை, மதுரை கிளை உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த 30 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் 42 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சிலர் மீது அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றும் சிலர் சென்னை, மதுரை உயர்நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவர்கள் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடமுடியவில்லை.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு உண்டு. ஆனால் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டுத் தண்டனை வழங்கியிருக்கிறது. மேலும் தண்டனைக்குள்ளான வழக்கறிஞர்கள் குறித்து கருநாடக வழக்கறிஞர்கள் சங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழக வழக்கறிஞர்கள் 42 பேரும் ஒவ்வொரு வாய்தாவிற்கும் பெங்களுரு சென்று திரும்பிக் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் ஆகிய மூவரும் தன்முனைப்பு இல்லாமல் இணைந்து பணியாற்றுவதின் மூலமே நீதியை நிலைநாட்டுவதற்கும், சமுதாயத்திற்கும் சிறந்த வகையில் தொண்டாற்ற முடியும். ஆனால், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கை மேற்கண்ட குறிக்கோளுக்கு எதிராக அமைந்திருக்கிறது.

கடந்த 4-2-09 அன்று ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழகத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது 22 வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்து இரவு 7 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களுக்காக பிணை மனுக்களைத் தாக்கல் செய்ய வந்திருந்த சுமார் 200 வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பல வழக்கறிஞர்கள் படுகாயமடைந்தனர்.

17-2-09 அன்று உயர்நீதிமன்றத்திற்கு சுப்பிரமணியசாமி வந்திருந்த போது அவர்மீது முட்டைகளை வீசியதாக 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அன்று பிற்பகல் மூன்று மணியளவில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் காவல் படை உள்ளே புகுந்தது. உயர்நீதிமன்றத்தின் அத்தனை வாயில்களும் பூட்டப்பட்டன. பொறிக்குள் சிக்கியவர்கள் போல வளாகத் திற்குள் சிக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்மீது மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை நாலரை மணி நேரத்திற்கு மேலாகக் கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம், வழக்கறிஞர் களின் அறைகள், நீதிபதிகளின் அறைகள் ஆகியவை சேதப்படுத்தப் பட்டன. சில நீதிபதிகள் உள்பட ஏராளமான வழக்கறிஞர்களும் அலுவலர்களும் படுகாயமடைந்தனர்.

தாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் ஓடிச்சென்று முறையிட்டபோது அரசுத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தினார். நீதிமன்ற வளாகத்தில் யாருடைய அனுமதியின் பேரில் காவல்படை புகுந்தது என்று அவர் எழுப்பிய கேள்விக்கு காவல் துறையிடமிருந்து பதில் இல்லை. நீதிமன்ற வளாகத்திலிருந்து இருந்து காவல்துறை உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் வழக்கறிஞர் களை கைது செய்யக்கூடாது என்றும் இந்நிகழ்ச்சி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் ஆணை பிறப்பித்தார்.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இத்தாக்குதலைக் கண்டித்து மதுரையில் ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்களை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படம் ஊடகங்களில் வெளிவந்தது.

தலைமை நீதிபதியும், தலைமைப் பதிவாளரும் காவல் துறையைத் தாங்கள் அழைக்கவில்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்து விசாரித்த உச்சநீதிமன்ற ஆயம் இரண்டு கேள்விகளை எழுப்பியது.

1. நீதிமன்ற வளாகத்திற்குள் காவலர்களை அழைத்தது யார்?

2. தடியடிக்கு உத்தரவிட்டது யார்?

நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கூறப்படவில்லை. இந்நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ÿகிருஷ்ணாவை உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர் அளித்த அறிக்கையில் காவல் துறையின் வரம்பு மீறிய நடவடிக்கை களையும் எல்லைமீறிய தாக்குதல்களையும் கண்டித்தார். அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம் இந்நிகழ்ச்சிக்குக் காரணமான சில அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது. ஆனால் அவர்களை இட மாற்றம் மட்டுமே செய்து அப்போதைய தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தது. வழக்கறிஞர்கள் மீது மிகக்கொடுமையான தாக்குதல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு இடமாறுதல் மட்டுமே தி.மு.க. அரசு விதித்த தண்டனையாகும். உச்சநீதிமன்றத்தின் ஆணை இவ்வாறு கேலிக்கூத்தாக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் உள்பட பலர் விரட்டி விரட்டி காவல்துறையினரால் தாக்கப்பட்ட கொடுமைக்குக் காரணமானவர்கள் இன்றுவரை எவ்விதத் தண்டனைக்கும் ஆளாகவில்லை.

நீதிமன்றத்தை அவமதித்ததாகவும், வேறு காரணங்களுக்காகவும் குற்றம் சாட்டி 42 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இன்றுவரை அவர்களை அலைக்கழிக்கும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 2009ஆம் ஆண்டில் வழக்கறிஞர்களை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கொடுமையாகத் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வாயையே திறக்கவில்லையே ஏன்?

மேற்கண்ட வழக்கறிஞர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில் அவர்கள் மீதான இடைநீக்கம் தொடர்வது சரிதானா? அவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது நீதிதானா?

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

"நல்லவை நீங்காமல் நிலைத்திருக்க வேண்டும் என்றால் மிகக் கடுமையாக தண்டிப்பவர் போல் தொடங்கி அளவு கடவாது தண்டிப்பாராக'' என்று வள்ளுவர் கூறியதற்கிணங்க 42 வழக்கறிஞர்கள் இதுவரை அனுபவித்த தண்டனையே போதுமானது என்று கூறி அவர்களின் மீதான இடைநீக்கத்தை உடனடியாகத் திரும்பப்பெற்றுத் தனது பெருந்தன்மையை நிலைநாட்டுவது அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்.

நன்றி : தினமணி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.