கனடா நாட்டில் வாழும் தமிழ் இளந்தலைமுறையினருக்குத் தமிழர் வரலாறு, தமிழ்மொழி ,தமிழ் இலக்கியம்,தமிழர் கலைகள், தமிழ்ப் பண்பாடு மற்றும் விழுமியங்கள் முதலியன பற்றி அறிவூட்டி, அவற்றைப் பேணச் செய்யும் நோக்கோடு 1993 ஆம் ஆண்டுமுதல் கனடாத் தமிழ்க்கல்லூரி செயற்பட்டு வருகின்றது. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டாக இக்கல்லூரியானது தமிழ்த் தொடக்க நிலைப் பிரிவு, தமிழ் இடைநிலைப் பிரிவு, தமிழ்ப் பட்டப்படிப்புப் பிரிவு, தமிழ் நுண்கலைப் பிரிவு என நான்கு கற்கை நெறிப்பிரிவுகளையும் பதினாறு பள்ளிகளையும் கொண்டு இயங்கி வருகின்றது.
தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை ஊடகங்களில் பார்த்த மேற்படி கல்லூரி மாணவர் தாமாக முன்வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு இடருதவி வழங்குவதற்காக மூன்று லட்சம் இந்திய ரூபாவை (6000கனடிய டாலர்கள்) சேர்த்துக் கொடுத்து உள்ளார்கள். அவர்களது பண உதவியில் நடைபெறும் மருத்துவ முகாம் மற்றும் இடருதவி வழங்கல் படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
தமிழர் தேசிய முன்னணி நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் பரணிப்புத்தூர் முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரணிப்புத்தூரில் வெள்ளநிவாரண மருத்துவ முகாம் 06&02&2016 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.
தமிழர் தேசிய முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ். சுந்தரசேகர் தலைமை தாங்கினார். ஜே. ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். திரைப்பட இயக்குநர் வீ. சேகர் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பரணி பி. மாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திரு. ஹேமநாதன் நன்றியுரையாற்றினார்.
இம்முகாமில் மக்கள் திரளாகப் பங்கு பெற்றனர். 196 பேருக்கு இரத்தப் பரிசோதனையும், பொது மருத்துவ சிகிச்சை 203 பேர்களுக்கும் அளிக்கப்பட்டது. 127 பெண்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 59 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. 20 பேருக்கு கண் புரை நீக்க சங்கரா கண் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இம் முகாமில் மருத்துவர்கள் திரு. சுகுமார், பானு, நந்தினி ஆகியோர் இலவசமாக அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்தார்கள்.
துரைப்பாக்கம் மருத்துவ முகாம்
தென்சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயிலுக்கு எதிரில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வீ.மு. கோவிந்தன் தலைமை தாங்கினார். பழ. நெடுமாறன் முகாமைத் தொடங்கி வைத்தார்.
இம் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சித்த மருத்துவர் பாபு, அலோபதி மருத்துவர் எம். சிதம்பரம் ஆகியோர் மருத்துவச் சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன |