நேதாஜிக்கு அள்ளித் தந்த தமிழர்-லியோன் புருசாந்தி PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:21

ஆங்கிலத்தில் : ஜே.பி.பி. மேன் (பாரிஸ்) - தமிழாக்கம் : தமிழோசை க.விசயகுமார்
பிறப்பு : 1901 மே 1 இறப்பு - 1969 - பிறந்த ஊர் : பாண்டிச்சேரி

வரலாற்றுப் பின்னணியும் உள்ளடக்கமும்

தமிழர்களுக்கு தென்கிழக்காசியா, சீனம் ஆகியவற்றுடன் மிக நீண்ட காலமாகவே வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பாக பத்தொன் பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல ஆயிரம் தமிழர்கள் பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் தொழிலாளர்களாகச் சென்றனர்.

1860களில் பிரெஞ்சுக் காலனியான இந்தோ - சீனம் என்றழைக்கப்பட்ட வியட்நாம், கம்போடியா, லாவோஸ் முதலான நாடுகளில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள். வணிகம் ஆகியவற்றின் ஈர்ப்பு காரண மாக பாண்டிச்சேரித் தமிழர்கள் அப்பகுதிகளுக்குச் சென்றனர். பலர் இடம் பெயர்ந்தனர் - குறிப்பாக தமிழர்கள் பலரும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சைகோனுக்கும் இந்தோ-சீனத்துக்கும் வந்து சேர்ந்தனர். அவர்களில் பலர் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும் தமிழ் இசுலாமியர்களும் ஆவர். 1937 கால கட்டத்தில் இந்தோ-சீனத்தில் சுமார் 6000 இந்தியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

leon

1930களில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கமும் பிரிட்டிசாரிடமிருந்து முழு விடுதலை என்ற கோரிக்கையும் இந்தியத் தமிழர்கள் பலரையும் கவர்ந்தன.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உயர் பதவி வகிக்கும் இந்தியர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும் என்ற காந்தி யடிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தோ-சீனத்தில், சைகோனில் பதவி விலகிய தமிழர் லியோன் புருசாந்தி ஒருவர் மட்டுமே. அவர் பிரெஞ்சு கிரெடிட் வங்கியில் அதிக ஊதியம் கிடைத்து வந்த தனது பதவியை விட்டு விலகினார். இச்செய்தி பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த பிராங்கோ-இந்திய ஏடான "லா இன்டி இல்லஸ்த்ரே' யில் வெளியாகியுள்ளது.

லியோன் பாண்டிச்சேரியில் 1901 மே 1 அன்று நடுத்தர வகுப்புத் தமிழ்க் கிறித்தவக் குடும்பமொன்றில் பிறந்தார். பாண்டிச்சேரியர்கள் பிறரைப் போலவே அவரது தந்தையும் இந்தோ-சீனத்துக்குக் குடி பெயர்ந் தார். அங்கு பிரெஞ்சுக் காவல்துறையில் பணிபுரிந்தார். பிரெஞ்சுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைப் படித்தார் லியோன். பட்டப்படிப்பிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார்.

தனது இளம் அகவையிலேயே மனைவியை இழந்த லியோன் பின்னர் விதவை ஒருவரை மறுமணம் புரிந்து கொண்டார். சைகோனிலிருந்த இந்திய நிலக் கிழார்களில் ஒருவரான பாண்டிச்சேரியைச் சேர்ந்த சவேரிக்கண்ணு பிரவுச்சாண்டியின் மனைவிதான் அந்த விதவைப் பெண்மணி. சவேரிக்கண்ணுவுக்கு இந்தோ -சீனாவில் ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அங்கு வேளாண்துறையில் அவரது பங்களிப்பைப் பாராட்டி 1914இல் பிரெஞ்சு அரசு அவருக்கு "செவாலியர்' பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

சவேரிக்கண்ணுவின் சித்தப்பாவான தர்மநாதன் பிரவுச்சாண்டி தான் நீராவிக்கப்பல் ஓட்டிய முதல் தமிழர். 1891லிருந்து மீகாங் ஆற்றில் கப்பல் போக்கு வரத்து நடத்தி வந்தார். சைகோனையும் தாய்லாந்து அல்லது பாங்காக்கையும் நீராவிக் கப்பல் போக்குவரத்தின் மூலம் இணைக்க அவர் எடுத்த முயற்சியை சைகோனிலுள்ள பிரெஞ்சு காலனிய அரசு தடுத்து விட்டது.

சவேரிக்கண்ணுவின் பெரும் செல்வம் முழுவதும் லியோன் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சைகோனில் உதவி தேவைப்பட்டவர்களுக்கும் பொது நோக்கங்களுக்கும் நிறைய பொருள் உதவிகள் செய்து வந்ததால் சைகோனில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. சைகோனில் புருசாந்திகளுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான மாளிகையில் தனது பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

பிரவுச்சாண்டியின் உடைச் சீர்திருத்தம்

மகாத்மா காந்தியின் வேண்டுகோளை ஏற்று பதவி துறந்தார் லியோன் என்பதற்காக அவர் காந்தியடி களை அனைத்து வகையிலும் பின்பற்றியவர் என்று ஒருவரும் நினைத்துவிட வேண்டாம். இந்துக்களிடையே நிலவி வரும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் நோக்கத்தை புகழ்ந்துரைத்தார்; பாராட்டினார். காந்தியின் அரிசன் சேவா சங்க நிதிக்கும் நிதியுதவி அளித்தார்.

மாறாக, இந்தியர்கள் தங்களை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தார். எனவே 1933இல் சைகோன்வாழ் தமிழர்களிடையே "உடைச் சீர்திருத்தம்' என்றதொரு நடவடிக்கையை லியோன் தொடங்கினார். சைகோன் வாழ் தமிழர்கள் லுங்கி, கோவணம் அல்லது வேட்டி ஆகியவற்றிற்கு மாறாக ஐரோப்பிய உடைகளை - குறைந்தது நகர்ப்புறங்களுக்குச் செல்லும் போதாவது அணிந்து கொள்ள வேண்டும்; அதேபோல் குடுமிக்கு மாறாக கிராப் வெட்டிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். சப்பானியர்களையும் சீனர்களையும் இதற்கு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நடவடிக்கை இந்திய இனக்குழுவினருக்கு நல்ல பெயரை அளிப்பதுடன் அனைத்துச் சமூக முன்னேற்றத்துக்கும் உதவும் எனக் கருதினார். புருசாந்தியின் உடைச்சீர்திருத்தத்திற்கு ஆதரவாக முதலில் குரல் தந்தது பிராங்கோ தமிழ் ஏடான "லா இன்டி இல்லஸ்த்ரே' ஆகும். சைகோனிலிருந்த இதர பிரபல சங்கப் பிரமுகர்களும் "உடைச்சீர்திருத்தத்திற்கு' ஆதரவு தெரிவித்தனர்.

தனது நோக்கத்தை நிறைவேற்ற இந்தியாவிலுள்ள தனது நண்பர்கள் பலருக்கும், ஊடக வியலாளர்களுக்கும் கடிதம் எழுதி தன் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் புருசாந்தியின் நோக்கத்தை ஊக்குவித்தனர் என்று தெரிகிறது. தனது உடைச்சீர்திருத்தத்தை மேற்கொள்ள இந்தியர்களுக்கும் அழைப்பு விடுத்தார். மகாத்மா காந்தியும் ஈ.வெ.ராவும் தனது முயற்சிகளுக்க ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது தவிர, பிரிட்டிஷ், பிரெஞ்சு இந்தியாவிலிருந்தும் குடியேறியவர்கள், இந்து, முசுலீம்கள், கிறித்தவர்கள் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டார்.

இசுலாமின் மீதும் பிரெஞ்சுக் குடியரசின் மீதும் லியோன் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. வினோதமான பழக்க வழக்கங்களை உடைய பார்ப்பனியத்திற்கு எதிராக, தன்மான இயக்கத்தைப் பெரும் சீர்திருத்த இயக்கமாகக் கருதினார் புருசாந்தி. சாதி சமத்துவமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க பெரியாரின் அறிவுரையை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என லியோன் வலியுறுத்தினார்.

லியோன் புருசாந்தியின் அரசியல் தியாகம்

ஆனால் இதற்கெல்லாம் மாறாக, மேற்கத்திய வெள்ளையினச் சக்திகளின் காலனிய நலன்களுக்கு எதிராக கிழக்காசியாவில் சப்பான் மேலும் மேலும் வலிமை பெற்று வந்தது. இந்தோ-சீனாவிலும் மலேசியாவிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள் சப்பானின் ஆளுகைக்கு உட்பட்டனர். பிரபல இந்திய நாளேடான சைகோன் டிமான்சோவில் லியோனும் ரால் ராமராஜ் வெர்னியரும் சப்பானியரின் சாதனைகளைப் பாராட்டிக் கட்டுரைகள் எழுதி வந்தனர். நாம் முன்பே பார்த்ததைப் போல இந்தியர்கள் சப்பானியர்களைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தார் புருசாந்தி.

1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஜெர்மன் ஆதரவு பிரெஞ்சு அரசு ஒன்று மார்சசெல் பெட்டெய்னின் தலைமையில் 1940 ஜூனில் விச்சியில் பதவியேற்றது. இந்தோ - சீனம் உட்படப் பிரெஞ்சுக் காலனிகள் விச்சி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டன.

1942 பிப்ரவரி 15 அன்று பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூர் சப்பானிடம் சரணடைந்தது. சிங்கப்பூரி லிருந்து வெளிவந்து கொண்டிருந்த பிராங்கோ தமிழ் இதழில் பி.எம்.ஏ. மஜீத் போன்றவர்கள் சப்பானிய அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.
சுபாஷ் சந்திர போஸ் 1943 பிப்ரவரியில் அபித் அசன் என்பவருடன் ஜெர்மனியிலிருந்து டோக்கியோ வந்தார். டோக்கியோவில் அவர் சப்பானியர்களிடம், பிரிட்டிசாரிடமிருந்து இந்தியாவை விடுவிக்க உதவி கோரினார்.

ஜூலை 4இல் சிங்கப்பூரில் இந்திய சுதந்திரக் கழகத்தின் (Indian Independence Leage) தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆகஸ்ட் 8 அன்று அவர் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் தலைமையில் ஜான்சிராணி பெண்கள் படைப் பிரிவைத் தொடங்கினார். அவருக்கு உதவியாக திருமதி தேவர் என்ற இன்னொரு தமிழ்ப் பெண்மணி செயல்பட்டார். கிழக்காசியாவில், இருக்கும் 30 இலட்சம் இந்தியர்களிடமிருந்து குறிப்பாக மலாயா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களிடமிருந்து - ஐ.என்.ஏ.வுக்கு வீரர்களையும் பொருளுதவிகளையும் திரட்ட விரும்பினார். அப்போது ஜெய் ஹிந்த், டெல்லி செல்வோம் (டெல்லி சலோ) என்பனவே போசின் போர் முழக்கங்களாக இருந்தன. ஏற்கேனவே 75000 ஆசியர்கள் - அவர்களில் பெரும்பாலோர் மலாயாத் தமிழர்கள், சயாம், -பர்மா மரண இரயில்வே பாதைப் பணிக்கு சப்பானியர்கள் கட்டாயப்படுத்தி அவர்களைப் பயன்படுத்தி வந்தனர். அதில் 12,000 பேர் மட்டுமே தப்பி வந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

1943அக்டோபர் 21அன்று சிங்கப்பூரில் 50,000 பேர் பங்கேற்ற பேரணியின் முடிவில் போஸ் தற்காலிக சுதந்திர இந்திய அரசை அறிவித்தார். எஸ். அப்பாத் துரை ஐயர் அமைச்சர வையில் இடம் பெற்றிருந்தார். மலாயாத் தமிழர்களான கரீம் கனியும் ஜான் திவியும் ஆலோசகர்கள் குழுவில் இருந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு நிதி நன்கொடை அளிக்க வேண்டும் என்று இந்தியர்களை போஸ் கட் டாயப்படுத்தினார்; டிசம்பரில் சப்பானியர்கள் தற்காலிக சுதந்திர இந்தியாவுக்கென அந்தமான் நிக்கோபார் தீவினை அளித்தனர். தென்னிந்திய மருத்துவரான கர்னல் ஏ.டி. லோகநாதன் என்பவரை, அதன் முதல் நிர்வாகியாக போஸ் அறிவித்தார்.

முன்னதாக, 1943 ஆகஸ்ட் 9 இல் சைகோன் சென்ற போஸ் அங்கு சப்பானியத் தூதர் மட்சு மோட்டாவுடன் ஆலோசனைகள் நடத்தினார். சைகோன் வாழ் இந்தியர்கள் - தமிழர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். விமான நிலையத்திலிருந்து அவர் தங்கியிருந்த மெஜஸ்டிக் விடுதி வரை திறந்த காரில் சைகோனில் முதன்மைச் சாலை ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். காரில் ஏறி தங்க மாலை ஒன்றை போசுக்கு அணிவித்து வரவேற்றார் புருசாந்தி. ஆயிரம் பேர் இந்தியர் - தமிழர் கொண்ட பேரணி ஒன்றிலும் போஸ் பேசினார். சைகோனில் இந்தியவிடுதலைப் போராட்டத்தின் முதன்மையான ஆதரவாளராகவும் நன் கொடையாளராகவும் புருசாந்தி மாறினார்.

1945 மார்ச் அன்று சைகோனிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் தளங்களையும் தன் வசம் எடுத்துக்கொள்வதற்காக சப்பானியப் படைகள் நுழைந்தன. மார்ச் 10 அன்று சைகோனிலுள்ள சப்பானியத் தூதர் வியட்நாம் விடுதலை அடைந்து விட்டதாக அறிவித்தார். சப்பானியக் காவல்துறையும் சப்பானிய அரசபடையான கெம்பித்தாயும் சப்பானிய எதிர்ப்பாளர்கள் எனக் கருதிய இந்தியர்கள் பலரைக் கைது செய்தது.
1945 ஜூலை 4அன்று இந்தோ - சீனாவிலுள்ள இந்தியர்கள் முதன் முறையாக நேதாஜி வாரம் கொண்டாடினர். இந்தியத் தமிழர்கள் பங்கேற்ற பெரும் கூட்டமொன்று சைகோனின் ஏடன் திரையரங்கில் நடைபெற்றது. சைகோன் வாழ் முன்னணி இந்தியப் பிரமுகர்கள் அதில் பங்கேற்றனர்.

இக்காலகட்டத்தில், "இந்தியன் இன்டிபென்டன்ஸ் லீக்'கின் (இந்திய சுதந்திரக் கழகத்தின்) தலைமைச் செயலகம் பாண்டிச்சேரி புருசாந்தி குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ பால் பிளாங்கி தெருவி லுள்ள (தற்போது ஹாய் பா ட்ரூங்) 76 எண் கொண்ட பெரிய மாளிகையில் தொடங்கப்பட்டது. 1930களிலிருந்தே இந்தியத் தமிழ் வட்டாரங்களில் முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த புரூசாந்தி, தனது வீட்டை வாடகையின்றி இலவசமாகக் கொடுத்தார். அது சைகோனில் "இந்திய இன்டிபென்டன்ஸ் லீக்' கிளை அலுவலகமாக இயங்கியது.

மாளிகையின் உச்சியில் இந்தியா, வியட்நாம், சப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கொடிகளும் பறந்தன. ஐ.என்.ஏ. வீரர் ஒருவர் அலுவலக நுழைவாயிலில் காவல் காத்தார். தற்காலிக இந்திய அரசு இந்தியர்கள் அனைவருக்கும் பொதுமொழியாக இந்துஸ்தானியை ஏற்றுக் கொண்டது. சைகோன் வாழ் தமிழர்களுக்கு இந்துஸ்தானி கற்க வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்துஸ்தானிச் சொற்கள் 76, ரூ பால் பிளாங்கி தெருவிலுள்ள, "இந்தியன் இன்டிபென் டன்ஸ் லீக்' அலுவலகத்தில் உருவாக்கப்பட்டன. இந்திய தேசிய இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பிரிவும் இங்கு தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. அதன் செயலாளராக இருந்தவர் அப்துல் மஜீத் என்ற தமிழ் இசுலாமியர். ஆட்களைத் தேர்வு செய்வது, பயிற்சி குறித்த அனைத்தும் இ.இ.லீக் செயலகத்திலிருந்து பெறப்பட்டன. இக்கால கட்டத்தில் சைகோனிலுள்ள இ.இ.லீக்கின் தலை வராக நூருதீன் என்பவர் இருந்தார்.

இ.இ.லீக்கில் புருசாந்தி வகித்த பங்கு என்பது நமக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் 1943 லிருந்தே நேதாஜியின் இந்திய விடுதலைப் போராட் டத்தின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந் துள்ளார். அவர் எப்போதும் "நாம் தாளில் மட்டுமே பிரெஞ்சுக்காரர்கள்; ஆனால் மனதளவில் நாம் இந்தியர்கள்' எனக் கூறுவார் ஐரோப்பிய நாகரிகத்தில் நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு மோசமா னவற்றை விட்டுவிட வேண்டும்' என்று கூறுவார். இந்தியாவிலுள்ள அந்நிய சக்திகள் அனைத்தும் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். நேதாஜியின் போர் நிதிக்கு தங்கம், நகைகள், பணம் எனப் பல வகைகளில் ஏராளமாக நன்கொடை வழங்கினார்; பல நேரங்களில் அவரது மனைவி, குடும்பத்தார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி உதவி செய்துள்ளார். ஜப்பான் போரில் தோற்கடிக்கப்பட்டால் இந்தோ-சீனாவிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள அவரது சொத்துக்கள் அனைத்தும் பிரெஞ்சு அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று பிரெஞ்சு ஆதரவாளர்கள் அச்சுறுத்தினர். ஆயுதவழியிலான இந்திய விடுதலைப் போராட்டத்தை புருசாந்தி ஆதரிப்பதை அந்த அச்சுறுத்தல்களால் தடுக்க இயலவில்லை. சைகோனில் பெரும் நிலக்கிழார்களும் வணிக நலன்களைக் கொண்டவர்களுமான இந்தியச் செல்வந்தர்கள் - குறிப்பாக செட்டியார்களும் தமிழ் இசலாமியர்களும் - பலர் இருக்க இந்திய இன்டி பென்டன்ஸ் லீக்கின் செயலகம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டது மிகவும் வியப்பானது. சைகோனின் இந்தியத் தமிழ்ச் சமூகத்தின் முன்னணித் தலைவர் என்ற முறையில் புருசாந்தி இந்திய விடுதலையில் காட்டிய அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.

1945 ஆகஸ்ட் 6, 9 ஆகிய நாட்களில் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று சப்பான் சரணடைந்தது. 16 அன்று மேஜர் ஜெனரல் மொகமத் ஜமான் கியானி, மேஜர் ஜெனரல் அழகப்பன் ஆகியோரிடம் சிங்கப்பூர் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தனது தோழர்கள் கர்னல் ஹபிபூர் ரகுமான் கான், கர்னல் பிரதம் சங், மேஜர் அபித் ஹசன். எஸ்.அப்பாத்துரை ஐயர் ஆகியோருடன் பாங்காக் பறந்தார் போஸ். அங்கிருந்து ஆகஸ்ட் 17 அன்று நெருக்கமான சில தோழர்களுடன் சைகோன் பறந்தார் போஸ். இந்திய தேசிய இராணுவத்தை கலைத்துவிட்டு, "டெல்லிக்குச் செல்லப் பல வழிகள் உண்டு. டெல்லிதான் இன்னும் நமது இலக்கு' என்று கூறினார். தற்காலிக சுதந்திர இந்திய அரசின் அலுவலகத்தில்தான் போஸ் தனது அமைச்சரவையின் கடைசிக் கூட்டத்தை நடத்தியதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் நான் அறிந்த வரையில் 76. ரூ பால் பிளாங்கித் தெருவிலுள்ள புருசாந்தியின் மாளிகையில்இ.இ.லீக்கின் தலைமைச் செயலக உச்சியில் மூன்று கொடிகள் - சப்பான், வியட்நாம், இந்தியா - பறந்து கொண்டிருந்தன. 17, 18 தேதிகளில் அம்மாளிகையில் ஆட்கள் போய்வந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். இ.இ.லீக்கின் செயலகத்தில்தான் போஸ் தனது இறுதிக்கட்ட விவாதங்களையும் அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தினார் என்பது தெளிவு. மேஜர் ஜெனரல் கியானி தனது நினைவுக் குறிப்புகளில் "சைகோனில்' உள்ள இ.இ.லீக்கின் செயலகத்தில் இரவைக் கழித்தார்; தனது தோழர்களுடனும் சைகோனிலிருந்த சப்பானியத் தூதர் ஃபீல்ட் மார்சல் கவுன்ட் டெராச்சியின் பிரதிநிதிகளுடனும் சைகோனில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் சைகோனிலிருந்து பெயர் தெரியாத இடம் ஒன்றுக்கு ஹபிபூர் ரகுமானுடனும் தங்கம், ஆபரணங்கள் நிறைந்த 2 பெட்டிகளுடனும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

1945 செப்டம்பர் 2 அன்று வியட்நாமின் விடுதலையை அறிவித்தார் ஹோசிமின். பிரெஞ்சுக் காலனியவாதிகள் இக்கட்டான நிலைக்கு ஆளாயினர். 1945 செப்டம்பர் 8 அன்று பிரிட்டிஷ் அரசின் 20 ஆவது இந்தியப் படைப்பிரிவு சில பிரெஞ்சு வீரர்களுடன் தென்வியட்நாமில் நுழைந்தது. மீண்டும் தங்களது காலனிய ஆட்சியை ஏற்படுத்த நினைத்த பிரெஞ்சுக்கு இது பெரும் நிம்மதி அளித்தது. வியட்நாமியர்களுக்கும் - வியட்மின்களுக்கும் சேதம் விளைவிக்க கூர்க்கா படைகள் ஏவப்பட்டன. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாக, 1945 செப்டம்பர் முழுவதும் உள்ளூர்த் தமிழ்ச்சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் செய்தனர்; தமிழர்களது உடைமைகள் சூறையாடப்பட்டன. உள்ளூர்த் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டனர். 70க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டனர். வியட்நாமியர்களையும், சப்பானியர்களையும் பழிவாங்க வேண்டும் என்ற மனநிலையில் பிரெஞ்சுக்காரர்கள் சிலர் இருந்தனர். சப்பானியர்களுக்கு ஒத்துழைத்தவர்களும் இ.இ.லீக்கினரும் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சப்பான் சரணடைந்த போது சைகோனில் சிக்கிக் கொண்டிருந்த ஆசாத் ஹிந்த்தின் நிதி அமைச்சர் ஏ.சி. சாட்டர்ஜி ஊர்ப்புறங்களுக்குத் தப்பியோடினார். இ.இ.லீக்கினர் பலர் கைது செய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். மேலும் அதிக அளவில் பிரெஞ்சுப் படைகள் வந்ததையடுத்து காலனிய ஆட்சி சைகோனில் தன் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியது.

சைகோனிலிருந்து புறப்பட்ட போஸ் சாவைத் தழுவினார். அவரது மரணம் குறித்துப் பல கதைகள் கூறப்படுகின்றன. போஸ் விமான விபத்தில் மரணம டையவில்லை என்றும் சிலர் கூறினர். ஆனால் எந்த வரலாற்றாளரும் நேதாஜியை இறுதி வரை ஆதரித்த, பின்தொடர்ந்த இந்தியர்கள் அல்லது தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போசின் மரணம், சப்பானியர் சரணடைவு ஆகியவற்றுக்குப் பின்னால்அவர்கள் பட்ட துன்பங்கள், இழைக்கப்பட்ட கொடுமைகள், இந்திய விடுதலைக்கு அவர்கள் செய்த தியாகம் குறித்து ஒரு நூல் கூட எழுதப்படவில்ல்ை

சப்பானியர் சரணடைந்து, போர் முடிவுக்கு வந்ததற்குப் பின் 1945 செப்டம்பர் இறுதி நாள் ஒன்றில் பிற்பகல் வேளையில் காலனிய அரசின் இராணுவ வாகனம் ஒன்று அதுவரை இ.இ.லீக்கின் செயலகமாக இயங்கி வந்த 76 ரூ. பால் பிளாங்கி தெருவிலுள்ள லியோன் புரூசாந்தியின் மாளிகை முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய படைவீரர்கள் சிலர் அவ்வீட்டின் உச்சியில் அதுவரை பறந்து கொண்டிருந்த மூன்று கொடிகளை (இந்தியா, வியட்நாம், சப்பான்)யும் கீழிறக்கினர். லியோன் புருசாந்தியைக் கைது செய்து எங்கோ கண்காணாத இடத்திற்குக் கொண்டு சென்றனர். இச் செயல் ஏதும் செய்ய வக்கற்ற நிலையில் இருந்த அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தார் முன்னிலையில் நடந்தது. அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் அனைவரும் கதறி அழுதனர். அப்போது சப்பானிய எதிர்ப்புப் பாண் டிச்சேரியினர் சிலரும் அங்கு இருந்தனர். அவர்கள் தான் புருசாந்தியின் கைதுக்குப் பின்னணியில் இருந்தனர். அப்போது 45 அகவையுடைய தங்களது குடும்பத் தலைவரின் கைது அவரது குடும்பத்தாரிடையே குழப்பத்தை - பீதியை ஏற்படுத்திற்று.

3 மாதங்களுக்குப் பின் புருசாந்தி வீடு திரும்பினார். ஆனால் முன்பிருந்ததைப் போன்று உற்சாகம், துடிப்பு மிக்க இளைஞராக இல்லை. அவர் முற்றிலும் உருமாறியிருந்தார். அவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தார். வேறு சொற்களில் கூறுவதானால் அவர் தன் உணர்வை இழந்திருந்தார். காவலில் விசாரிக்கப்பட்ட பொழுது அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அவரது வாழ்வும் வளமான எதிர்காலமும் இளம் வயதிலேயே சாகடிக்கப்பட்டுவிட்டன. தன் நாட்டின் விடுதலைக்காகத் தனது வாழ்வையும் தன் எதிர்காலத்தையும் தியாகம் செய்துள்ளோம் என்பதைக் கூட அவர் என்றும் அறிந்ததில்லை.

இறுதியாக அவரது குடும்பம் பாண்டிச்சேரி திரும்பி, அங்கு ராஜ்நிவாஸ் அருகில் டூப்ளே தெருவில் உள்ள அவரது சொந்த இல்லமான வில்லா செல்வத்தில் புதியதொரு வாழ்வை தொடங்குவது என்று முடிவு செய்தது. லியோன் புருசாந்தியும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே பாண்டிச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநலமருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோர்க்கப்பட்டார். ஆனால் எப் பலனும் இல்லை. புரூசாந்திக்கு என்ன நேர்ந்த தென்று பாண்டிச்சேரியர்கள் பெரும்பாலோர் என்றும் அறிந்ததில்லை. அப்போது பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்ததால் மீண்டும் புரு சாந்திக்குச் சிக்கல் எழலாம் என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தாரும் வாய்மூடி அமைதியாயிருந்தனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சதந்திரம் பெற்றது. 1954 நவம்பரில் பிரெஞ்சு அரசு பாண்டிச் சேரியை விட்டு வெளியேறியது. இந்திய அரசின் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாறியது. ஆனால் இது எதுவும் புருசாந்திக்குத் தெரியாது. பிராங்கோ தமிழரான, பின்னாளில் பாண்டிச்சேரி முதல்வராக வந்த எட்வர்ட் குபேர் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே புருசாந்தியின் துயர நிலை தெரியும். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாள் கொண்டாட்டங்களின்போது உதவி செய்ய புருசாந்திக்கு தவறாமல் அழைப்பு அனுப்பி வந்தார். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியத்தை பாண்டிச்சேரி அல்லது இந்திய அரசிடமிருந்து புருசாந்தி ஒரு போதும் பெற்றதில்லை. 1945 லிருந்து தன்னுணர்வை இழந்திருந்த புருசாந்திக்கோ அல்லது அவரது குடும்பத்துக்கோ எந்த இழப்பீடும் தரப்பட்டதில்லை. புருசாந்தி தன் மரணம் வரை நினைவிழந்த நிலையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது இழப்பீடு கோரி விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம்.

புருசோந்தியிடம் இப்போது பணம் ஏதுமில்லை. ஆனால் எவராவது அவருக்குப் பணம் கொடுத்தாலும் அதனை அவர், வில்லா அரோம் (தற்போ தைய அரவிந்த ஆசிரம உணவகம்) முன்பு உள்ள அரசு பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் பிரித்துக்கொடுத்து விடுவார். நினைவிழப்பு நோய்க்கு ஆட்பட்டிருந்த போதிலும் அவரது கொடையளிக்கும் பண்பு அவரை விட்டுப் போகவில்லை. சில வேளைகளில் அவர் சாலையோரத்தில் உள்ள எளிய மக்களுடன், தொழிலாளர்களுடன் உட்கார்ந்து கொண்டும் அவர்களது உணவைச் சாப்பிட்டுக் கொண்டுமிருப்பார். அருகிலுள்ள கணேசர் கோயிலுக்குச் செல்வது வழக்கம். நினைவிழப்பு நோய்க்கு ஆட்பட்டு இருபது ஆண்டுகள் வில்லா செல்வத்தில்"இயந்திர மனிதன்' (ரோபோ) போல் வாழ்ந்து வந்த லியோன் புருசாந்தி இறுதியில் 1968 ஆம் ஆண்டில் ஒரு நாள் நீடித்த கடுமையான வயிற்றுப்போக்கால் இயற்கை எய்தினார். காலனிய நுகத்தடியிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் இந்தியர்கள், தமிழர்கள் கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தன் பொருள் மட்டுமின்றி தன் வாழ்வையே தந்த பாண்டிச்சேரியின் தலைமகன் புருசாந்தி; ஆனால் வில்லா செல்வம் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, அவரது குடும்பத்தார், நண்பர்களைத் தவிர, தமிழ்நாட்டிலிருந்தோ இந்தியாவிலிருந்தோ அரசியல் தலைவர்கள் எவரும் வரவில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்று போராடிய, இந்தியா, பாகிசுதான், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோ - சீனத்தைச் சேர்ந்த வீரர்கள் பலர் மிக எளிதாக மறக்கப்பட்டு விட்டனர்;அவர்கள் இன்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்களாகவே உள்ளனர். தன் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ, தங்கள் உயிரையும் உடைமைக ளையும் தியாகம் செய்த அப்படிப்பட்ட மாவீரர்களில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நமது லியோன் புருசாந்தியும் ஒருவர்.

தனித்தன்மை, உடை மற்றும் முடிச் சீர்திருத்தங்கள், காலனியத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தீவிர வேட்கை ஆகியவற்றால், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, இந்தியா உருவாக்கிய சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்து நிற்கிறார் லியோன் புருசாந்தி.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.