அதிகாரியின் ஆணவத்தால் உயிரிழந்த ஈழத் தமிழர் - பழ. நெடுமாறன், ஹென்றி திபேன் போராட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 மார்ச் 2016 13:40

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் 540 பேர் வாழ்கின்றனர். இம்முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக தனது குடும்பத்துடன் இரவிந்திரன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் பிரவீன் என்ற 13 வயது மகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை திருமங்கலம் மருத்துவமனையில் இரவிந்திரன் சேர்த்துள்ளார்.

முகாமில் உள்ள அகதிகள் தினமும் இரண்டு முறை முகாம் அதிகாரிக்கு முன் நேரில் வந்து தனது இருப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த முகாமில் அதிகாரியான துரைப்பாண்டியிடம் தனது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவரத்தை இரவிந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதை ஏற்காமல் உடனடியாக மகனை அழைத்துவராவிட்டால் இருப்பை இரத்து செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அவர்காலில் விழுந்து இரவீந்திரன் எவ்வளவோ கெஞ்சியபோதிலும் அதிகாரியின் மகன் இரங்கவில்லை. இதனால் மனம் உடைந்த இரவீந்திரன் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார். ஆனால், அதிகாரி துரைப்பாண்டியன் கொஞ்சமும் மனம் இரங்காமல் செத்து தொலை என ஆணவமாக கூறியதின் பேரில் இரவீந்திரன் மின்கோபுரத்தின் உச்சிக்கு சென்று உயர் அழுத்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்துபோனார்.

முகாமில் இருந்த மற்ற ஈழத் தமிழர்கள் அதிகாரியைச் சுற்றி வளைத்துப் போராட்டம் நடத்தினார்கள். காவல் துறையினர் அவர்களை அடித்து விரட்டிவிட்டு இரவீந்திரனின் பிணத்தை எடுத்துச்செல்ல முயன்றனர்.

செய்தியறிந்த தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் உடனடியாக உச்சப்பட்டிக்கு விரைந்து சென்று உடலை எடுத்துச்செல்லவிடாமல் தடுத்தார். தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் எம்.ஆர். மாணிக்கம், பொதுச் செயலாளர்கள் கா. பரந்தாமன், ஆவல் கணேசன், மாறன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர். மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் திரண்டனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆட்சித் தலைவரும் நேரில் வந்து நியாயம் வழங்க வேண்டும். அதுவரை உடலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இரவு 10 மணிக்கு மேல் கண்காணிப்பாளரும் ஆட்சித் தலைவரும் அந்த இடத்திற்கு வருகை தந்தார்கள். ஏற்கெனவே உள்ளூர் காவல் அதிகாரிகள் இரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக அவர் மனைவியின் பெயரால் பொய்ப் புகார் தயார் செய்து அதன்அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தயாரித்திருந்தனர். மேல் அதிகாரிகள் முன்னிலையில் இரவிந்திரன் மனைவி மஞ்சுளா வரவழைக்கப்பட்டு அவர் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முகாம் அதிகாரி துரைபாண்டியன் இரவீந்திரனின் சாவிற்கு தூண்டுகோலாக இருந்ததுடன் அவர் மின்கோபுரத்தில் ஏறுவதை தடுக்காததும் செத்துத் தொலை என்று கூறியதும் பதிவு செய்யப்பட்டு அதன் பேரில் மறு குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது.

முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குறைகளை நேரில் கேட்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நெடுமாறன் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்து குறைகளைக் கேட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

முகாம் அதிகாரி துரைப்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறுநாள் மாலையில் நடைபெற்ற இரவீந்திரன் இறுதிச் சடங்கில் பழ.நெடுமாறன் கலந்துகொண்டார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.