தமிழ், தமிழ்நாடு, தமிழகம், தமிழுலகம்!
மொழி, நாடு, இனம், பண்பு ஆகிய எல்லைகள் குறிக்க எழுந்த வழக்குகள் இவை!
நான்கு வழக்குகளுக்கும் அடிப்படைச் சொல் தமிழ் என்பதே. அது நான்கு பொருள்களையும் ஒருங்கே காட்டுவது. இலக்கண இலக்கியங்களில் நான்கு பொருள்களிலும் அது வழங்குகிறது.
தொல்காப்பிய காலமுதல் இன்றுவரை "தமிழ்' என்ற சொல் தமிழரது மொழியின் பெயராய் வழங்குகிறது. சங்க இலக்கியத்திலே அது முனைப்பாக இனப்பெயராகவும், நாட்டுப் பெயராகவும் இடம் பெறுகிறது. தவிர, "தமிழ்' தமிழிலக்கிய முழுவதும் இனிமை என்ற பொருளுடன் தமிழரது பண்பின் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் என்ற சொல் இன்று மொழி, நாடு, இனம், பண்பு என்ற நாற்பொருளும் சுட்டவில்லை. மொழி என்ற ஒரே ஒரு பொருள்தான் சுட்டுகிறது. நாடிழந்த, இனமிழந்த, பண்பிழந்த, உரிமையிழந்த, ஒற்றுமை தட்டுக்கெட்ட தமிழன் வாழ்வில், இன்று அவனுக்கு எஞ்சியிருப்பது மொழி ஒன்றே! அது மட்டுமன்று. மொழியின் பெயர் என்ற முறையிலும், அதன் பொருளெல்லையில் மாறுபாடுகள், தேய்வுகள், குறுக்கங்கள் பல ஏற்பட்டுள்ளன.
தென்மொழி. கா. அப்பாத்துரை - பக்கம் - 20,21 |