தேசம் தமிழ்ச்சொல்லே - பாவாணர் தரும் சான்று PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:51

திகை-திசை. திசைச்சொல் - செந்தமிழ் நிலத்திற்கப்பால், வெவ்வேறு திசைகளில் வழங்கும் கொடுந்தமிழ் நிலச்சொல்.

"கண்கால் கடையிடை தலைவாய் திசைவாயின்'' (நன். 302)
"பின்பா டளைதேம் உழைவழி யுழியுளி'' (நன். 302)
"பின்சார் அயல்புடை தேவகை எனாஅ'' (தொல். 566)
திசை-தேசம்-தேயம்-தேம்-தே. இச் சொல் வடிவுகளெல்லாம் இடப்பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின. தேவகை = இடவகை. தேசம் = திசை, நாடு, இடம், பகுதி.

"நெறியியற் னாற்றிய அறிவன் தேயமும்'' (தொல். 1021) என்னுமிடத்து, தேயம் என்பது பக்கம் (பகுதி) என்று பொருள்படுதல் காண்க. தேசம் என்னும் தென்சொல்லை யொத்தே, ஸீமா என்னும் வடசொல்லும் எல்லையையும் நாட்டையும் உணர்த்தும்.
வடமொழியில் திசா என்னும் சொற்கு திச்(கு) என்பதை மூலமாகக் காட்டுவர். திச் காட்டு. காட்டற் கருத்து திசைக் கருத்திற்கு மூலமாதற்குப் பொருத்தமானதே.
இந்தியில் திக்கா என்னுஞ் சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு-தேக்கு (த.வி.)-திக்கா (பி.வி.) ஒ.நோ: காண்-காட்டு. திக்கா என்னும் இந்திச் சொற்கு மூலமான சூரசேனிச் சொல் கிரேக்க நாட்டிற்குச் சென்றிருக்கலாம். அங்கிருந்து வேத ஆரியரின் முன்னோர் மொழிக்கு வந்திருக்கலாம். வடமொழியில் திக் என்னும் வடிவமும் உள்ளது. அதுவே திச் என்று திரிந்திருக்கலாம்.
ஆகவே, தமிழ்ச்சொல் எல்லைப்பொரு ளடியாகவும், வடசொல் காட்டற்பொரு ளடியாகவும், வெவ்வேறு வகையில் தோன்றியிருப்பதாகத் தெரிகின்றது.
வடமொழி வரலாறு - ஞா. தேவநேயப்பாவாணர், பக்கம் - 162

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.