மரபினம், நாடு, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இனம் உருவாக முடியாது. மொழியின் அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாக முடியும். ஒரு தேசிய இன உருவாக்கத்திற்குக் கீழ்க்கண்ட 6 அம்சங்கள் காரணங்களாக உள்ளன.
1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை, 4. இலக்கிய உடைமை, 5. பொதுப் பழக்க வழக்கங்கள், 6. சமூக மரபு நிலை. இந்த வரையறுப்பின் அடிப்படையில் தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரா? - என்ற வினாவிற்கான விடையை ஆராய்வோம்.
1. நில எல்லை : இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழர்கள் வாழும் நாட்டிற்குத் திட்டவட்டமான எல்லைகள் தொல்காப்பியர் கால முதலே வரையறுக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தின் சிறப்பாயிரத்தில் "வட வேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலம் முதல் பாரதி காலம்வரை தோன்றிய தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தமிழ் நாட்டின் எல்லைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வேங்கடம் முதல் குமரிவரை தமிழர்கள் வாழும் நிலப்பரப்பு சிற்சில மாறுதல்களுடன் அன்று முதல் இன்றுவரை அப்படியே நிலவி வருகிறது.
2. அரசு : சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய அரசுகளும் பிற மன்னர்களின் அரசுகளும் ஆட்சி செலுத்தி வந்துள்ளன. தமிழர்கள் தங்களுக்கென தனியான அரசுகளை அன்று தொட்டு அமைத்து வாழ்ந்தனர் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டை வெவ்வேறு அரசுகள் ஆண்ட போதிலும் சோழ நாட்டுத் தேசியம், பண்பாடு; சேரநாட்டுத் தேசியம், பண்பாடு; பாண்டிய நாட்டுத் தேசியம், பண்பாடு; எனத் தனித் தனி தேசிய உணர்வுகளும் தனித்தனிப் பண்பாடுகளும் உருவாகி விடவில்லை. பல்வேறு அரசர்கள் ஆண்ட பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரையும் தமிழ் மொழியும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் இணைத்து வைத்தன. மக்கள் அனைவரும் தமிழர்களாகவே வாழ்ந்தார்கள். அரசுகளும் தமிழர் அரசுகளாகவே இருந்தன.
3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை : தமிழ்நாடு பல மன்னர்களால் ஆளப்பட்டாலும்கூட அவர்களின் கீழிருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை என்பது எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒருபடித் தானதாக அமைந்திருந்தது. தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படும் தமிழர்களின் அக, புற வாழ்க்கை முறைகளும் கடைப்பிடித்த பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாகத்தான் அமைந்திருந்தன.
4. இலக்கிய உடைமை : மொழி ஒரு தேசிய இனத்தை உருவாக்கியதைப்போல அந்த மொழியின் இலக்கியங்களும் அந்தத் தேசிய இனத்திற்குரிய பண்பாடுகளை உருவாக்குகின்றன. பிற இனப் பண்பாடுகளின் ஊடுருவலின் விளைவாக சங்கப் புலவர்களின் பாடல்கள் அழிந்துபடும் நிலை தோன்றியபோது அவற்றைத் தொகுத்துப் பேணிய மூவேந்தர்களின் செயல்களில் தேசியத் தன்மை உண்டு. இதைப் பற்றித் தமிழறிஞர் திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் "உண்மையில் சங்க இலக்கியங்கள் தேசியக் கவிதைகளே'', தேசியக் கவிதைகள் என்பது நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்றவை என்ற பொருளில் அல்ல; ஒரு வலுவான தேசிய இனத்தின் குரல் அக்கவிதைகளின் கருவில் அமைந்து கிடக்கிறது என்ற பொருளில்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
5. பொதுப் பழக்க வழக்கங்கள் : தென்புலத்தாரைத் தெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கம், நடுகல் நாட்டி வணங்கும் வழக்கம் போன்ற தமிழர்களின் பொதுப் பழக்கங்கள் ஒரு தேசியத் தன்மையின் அடிப்படையில் அமைந்தவையாகும். இது போன்ற பழக்க வழக்கங்கள் தமிழர்களை ஒன்றுபடுத்தியுள்ளன.
6. சமூக மரபு : தமிழர்கள் மரபுவழியில் நிலையான தன்மை கொண்டிருந்தனர். உடல் அமைப்பு, பண்பாட்டுக் கூறுகள், ஒழுக்க நியதிகள் ஆகியவற்றில் அவர்களிடம் ஒன்றுபட்ட தன்மை இருந்தது. எனவே தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரே என்பது பெறப்படும்.
ஒரு தேசிய இனத்திற்கு மொழியே அடிப்படையாக அமைகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் மொழியின் அடிப்படையிலேயே தங்கள் தேசிய இனத்தை அறிமுகப் படுத்திக் கொள்கின்றனர். ஒரு தேசிய இனத்தைச் சுட்டிக் காட்டும் சிறந்த அடையாளமாக மொழியே விளங்குகிறது.
தமிழர்களும் மொழியின் மூலமாகவே தங்களை அடையாளப்படுத் திக் கொண்டனர். தமிழர்களைப் போலவே தொன்மையான இனத்தவரான கிரேக்கரும் மொழியின் அடிப்படையிலேயே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர். சீனர், பாரசீகர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், அராபியர் போன்ற பலரும் அவ்வாறே அழைக்கப்பட்டனர்.
"தமிழ் எனும் சொல் மக்கள் கூட்டத்தையும் நாட்டையும் குறிக்க வந்திருக்கலாம்'' என கே. சிவராசப்பிள்ளை கருதுகிறார்.
தமிழ் இனத்தைப் பொறுத்தவரை அகச் சான்றுகளை வைத்து நோக்கின் மொழியைக் கொண்டே தமிழினம் பெயர் பெற்றுள்ளமை தெளிவாகும். மொழியைச் சார்ந்தே இனம், நாடு, பண்பு ஆகியவற்றைக் கண்டனர். தமிழர் - தமிழ்- தமிழகம் - தமிழ்நாடு, தமிழ் உலகம் என்பன மொழி, இனம், பண்பு ஆகியவற்றின் கருத்தைக் குறிக்க எழுந்த பிற வடிவங்களேயாகும்.
"பழந்தமிழ் நூற்களில் பயின்றுவரும் திணை, குடி, குலம், கணம், இனம் ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருள்களை உடையனவாக விளங்குகின்றன. விழுத்திணை, தொல்குடி, நல்லினம் போன்ற சொற்கள் தொடக்கத்தில் கால்வழி என்ற பொருளைத் தந்தன. காலப் போக்கில் இனம் என்ற சொல் மட்டும் மிகுந்த பொருளைத் தரும் சொல்லாக மாறிவிட்டது.
தமிழில் வழங்கும் தேசிய இனம் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள
Nation என்ற சொல்லுக்குரிய நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாகும். நாட்டினம் என்ற சொல்லோ, தேசிய இனம் என்ற சொல்லோ 19ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியங்களில் கையாளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். தேசிய இனம் பற்றிய சிந்தனை ஏதாவது ஒரு வடிவில் தொன்மைக் காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. எனினும், அதை விளக்குவதற்குரிய கலைச் சொல் உருவாகவில்லை.''
"நாட்டவர், நாட்டகம் எனப் பழந்தமிழில் வழங்கிய சொற்களை இன்று வழங்கும் நாட்டினம் என்ற சொல்லுக்கு இணையானவையாகக் கருதலாம்''
நாடு என்ற சொல்லே நாட்டினத்தைக் குறிக்க வருவதாகத் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் கருதுகிறார். Nation என்ற சொல்லுக்கு ஆங்கிலப் பேரகராதி பின்வரும் பொருள் தருகிறது. பொது மரபினாலோ, பொது மொழியாலோ, பொது வரலாற்றாலோ பரந்து விரிந்துபட்ட மக்கள் ஒரு குழுவாக இணைந்து தங்களுக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அரசை நிறுவி வாழ்பவர். "அந்த மண்ணிலேயே பிறந்து அந்த மண்ணிலேயே வாழ்ந்து மடியும் கூட்டம்'' என்ற பொருள்களோடு வேறு பல பொருள்களையும் தருகிறது. இந்த இரு பொருள்களே Nation என்ற சொல்லுக்கு நெருங்கிய தொடர்புடையன. "நாடு' என்ற சொல் நாட்டினத்தைக் குறிக்கும் என்று முனைவர் தெ.பொ.மீ. முன்னே கூறிய கருத்து இங்கே வலுப்பெறுகிறது.
"பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவர்க்கு இறையொருங்கு நேர்வது நாடு' (குறள் 733) - என்ற குறள் விளக்கும் கருத்தில் நாட்டினம் என்ற பொருளே தொக்கி நிற்கிறது.
மேலும், வள்ளுவர் நாடு என்ற அதிகாரத்தில் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஒரு நாட்டினத் தன்மையை (தேசிய இனப்பான்மை) அல்லது ஒரு நாட்டினம் பெற்றிருக்க வேண்டிய சிறப்புக் கூறுகளை விளக்கிக் காட்டும் போக்கிலேயே அமைந்துள்ளன.
"வரையறுக்கப்பட்ட எல்லை' (குறள் 737) "(அதில்) ஒரே அரசு' (குறள் 735) "வேந்தமைவுடைய தன்மை' (குறள் 740) "தன்னிறைவுடைய நிலைமை (நாடாவளம்)' (குறள் 739) "மக்களின் அரசப்பற்று' "மக்களின் ஒருமைப்பாட்டுணர்வு' (குறள் 733) "இன்ப வாழ்வு காணும் மக்கள்' (குறள் 738)
ஆகியன ஒரு நாட்டுக்கு இன்றியமையாதன என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு நாட்டினத்தை வரையறுப்பதற்கும் மேற்கண்ட கூறுகள் இன்றியமையாதன என்று இன்றைய சமூகவியலாளர் கருதுகின்றனர்.
தேசம் - தேசியம் தமிழ்ச் சொற்களே
தேயம், தேசம், தேசியம் ஆகியவை தூயத் தமிழ்ச் சொற்களே என்பதை சொல்லாராய்ச்சி அறிஞர் முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
பழந்தமிழில் தேயம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. நாடும் தேயமும் என்பது அகநாநூறு 383:4. "தன் கோல் இயங்கா தேயத்து உரையும் சான்றோன்.' புறம் 217:10-11. "ஊரது சார்பும் செல்லும் தேயமும்' - தொல் காப்பியம்.
இவ்வாறு தேயம் என்ற சொல் நாடு , ஊர், இடம் என்ற பொருள்களில் பழந்தமிழில் நிறைய இடங்களில் ஆளப்பெற்றுள்ளது. இன்னும் சில சான்றுகள். "தேயமும் நாடும் எல்லாம் உடையான்' - நாவுக்கரசர் தேவாரம் 4ஆம் திருமுறை 90வது பாடல். "தேயத்துள்ளே எங்கும் தேடித்திரிவார்கள். காயத்துள் நின்ற கருத்தறியாரே.' - திருமூலர் 2071 பாடல். "காயமும் நாடும் தேயம் என்ப' - பிங்கல நிகண்டு இவ்வாறு சொல்கிறது. "நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்' - தொல்காப்பியம்.
இவ்வாறு தேயம் என்ற சொல்லுக்கு புகழ், ஒளி என்னும் பொருளும் இருக்கிறது. நாடு என்பது புகழுக்குரியதும், ஒளி நிறைந்ததுமாகும். தேய் என்ற சொல் ஒளியையும் தமிழில் குறிக்கும். ஒளியைக் குறித்த தேய் என்ற சொல்லே புகழையும் நாட்டையும் இடத்தையும் குறிக்க தொன்றுதொட்டு வழக்கில் நிலை பெற்றுள்ளது.
மொழி பெயர் தேயம் என்று சங்க காலத்தில் இந்த தேயம் சொல் நாட்டினைக் குறித்துள்ளது. அயலூர் - அசலூர், குயவன் - குசவன், நேயம் - நேசம் போல யகரம் சகரமாக மாறி தேயம் என்ற சொல்லே தேசம் என்றானது. எனவே தேசம் என்ற சொல் தமிழ் வேரில் ஒளியில், புகழில் தோன்றி இடத்தையும் நாட்டையும் குறிக்கப் பிறந்தது. தேசம் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கி இயம்புவதே தேசியம் ஆகும். தேசம் + இயம், தேசம், தேசியம் ஆகிய தமிழ்ச் சொற்களை வடசொல் எனக் கூறுவது பெரும் பிழை. ஆரியர்களின் தேசம் எது என்று இன்னும் உலக அறிஞர்கள் தேடிக்கொண்டுள்ளார்கள். தேசமே இல்லாத ஆரியர்கள் தேசியத்திற்குச் சொந்தக்காரர்களாக முடியாது.
"பதிஎழு அறியாப் பழங்குடியினராக' தமிழர்கள் 20, 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடாண்ட தொல் குடியினர். எனவே தேசம் என்பதையும் தேசியம் பற்றியும் பேசவும் எழுதவும் போராடவும் அவர்கள் முழு உரிமைப் படைத்தவர்கள்.
தமிழ் உணர்வு வெறும் மொழியுணர்வு மட்டுமல்ல; இன உணர்வையும் நாட்டுணர்வையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது என்பதை முனைவர் ப. கிருஷ்ணன் பின்வருமாறு விளக்குகிறார்.
"மொழி, இனம், நாடு ஆகிய மூன்றுணர்வுகளும் தனித்தனியானவை போல் தோன்றினும், நாட்டு (தேசிய) உணர்வு என்ற கோணத்தில் நோக்கும்போது இவை ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் வருபவையே ஆகும். தமிழ்நாட்டுணர்வைப் (தேசியத்தை) பொறுத்த வரையில் இவ்வுணர்வைத் தோற்றுவிப்பதற்கு மொழியே உயிர்க் கூறாக (ஙடிtச்டூ ஞிணூடிtஞுணூடிச்) இருந்திருக்கிறது. மொழியின் மூலமே இனமும் நாடும் பெயர் பெறுவதாலும் மொழி மக்களின் வாழ்வோடும் இடங்களோடும் ஒன்றி வருவதாலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத அளவிற்கு இம்மூன்றுணர்வுகளும் பிணைந்திருக்கின்றன. எனவே தமிழ் நூல்களில் காணப்பெறும் தமிழுணர்வை வெறும் மொழி நோக்கில் மட்டும் காணாமல் தமிழர் வாழ்வின் உள்ளியக்கமாகவும் காண்பதே மிகவும் பொருத்தமுடையது.
தமிழ் நாட்டுணர்வு மொழி வழியே உருப்பெற்றதெனினும் ஒவ்வொரு காலத்திலும் முதன்மை பெற்றிருந்த உணர்வுகள் கலந்தே வந்திருக்கின்றன. குறிப்பாக அரசு, மொழி, மதம், பண்பாடு, சமூகம் ஆகியன தமிழ்நாட்டுணர்வில் கலந்திருக்கின்றன.
நில எல்லைகளை வற்புறுத்தியும் அரசியலுணர்வுக்கு (கோனுணர்வுக்கு) முதன்மை தந்தும் இரட்டைக் காப்பியங்களின் காலம் வரையில் வளர்ந்து வந்த தமிழ்நாட்டுணர்வு (Territorial and political Nationalism) சமய காலத்தில் மாற்றம் பெறுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் இடப்பற்றும் (Soil attachment) கோனாட்சி உணர்வும் சமயங்களின் செல்வாக்கால் சமயகால இலக்கியங்களில் வெகுவாக மறைந்துவிட்டன. சமய இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற ஒருமை நோக்கில் பாடப்பட்ட பாடல்கள் பல இருப்பினும் அவை அரசியல் நோக்கில் பாடப்பட்டவை அல்ல; சமய/பண்பாட்டு நோக்கில் பாடப்பட்டவையாகும். இதே நிலை சமயக் காலத்தையடுத்த சிற்றிலக்கியக் காலத்திலும், அதனையடுத்த காலங்களிலும் தொடர்கிறது. "தமிழ் மக்களின் வாழ்க்கையில் பழமையுணர்வு மரபு வழிப்பட்ட தன்மை பேரிடம் பெற்றதைப் போலவே' இலக்கியங்களிலும் பழமையுணர்வு காலந்தோறும் வலுப் பெற்று வந்தது. இலக்கியங்களில் பழமையை நினைவு கூர்வதில் இலக்கிய இலக்கண மரபுகள், பழந்தமிழ் இலக்கியங்கள், புலவர்கள், சமய கால நிகழ்வுகள், பெருமைகள் ஆகியன இடம்பெற்ற அளவிற்குப் பழந்தமிழ் அரசியலோ, இனப் பழமையோ, நாட்டு எல்லைகளோ இடம் பெறவில்லை. எனவே தமிழ்நாட்டு (தேசிய) உணர்வு பண்பாட்டு வழிப்பட்டதாக மலர்ந்தது. இவ்வரலாற்றைத் தொகுத்துக் காணும்போது தொல்காப்பியர் காலத்திலிருந்து பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலம் வரையில் வளர்ந்து வந்திருக்கும் தமிழ் நாட்டுணர்வைப் "பண்பாட்டு வழிப்பட்ட நாட்டுணர்வு என்று கூறலாம்.''
பண்பாட்டுத் தேசியம்
"பண்டைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுடன், வேளிர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரும் தத்தமக்கேயுரிய நிலப் பகுதிகளில் தனியாட்சி செலுத்தி வந்தனர். அக்குறுநில மன்னர்களின் எண்ணிக்கை 12 என வரலாற்றாசிரியர் ஸ்மித் கூறுகிறார். சங்க இலக்கியங் களில் 300க்கு மேற்பட்ட அரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.''
தொல்காப்பியப் பாயிரத்தில் "வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து''
எனத் தமிழகத்தின் எல்லை தெளிவாகக் குறிக்கப் பட்டுள்ளது. அகண்ட இந்த நிலப்பரப்பு சங்க காலத்திலிருந்து வெள்ளையர் வரும் காலம்வரை ஒரு ஆட்சியின் கீழ் ஒருபோதும் இருந்ததில்லை. களப்பிரர், பல்லவர், பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் போன்ற தமிழ் மன்னர் குலங்களின் ஆட்சியிலும் அதற்குப்பின் அன்னியர்களான முசுலீம்கள், நாயக்க மன்னர்கள், மராட்டியர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலங்களிலும் ஒரு பேரரசு உருவாகவில்லை.
பிற்காலச் சோழரின் ஆட்சியில் சோழப் பேரரசை உருவாக்கும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. சோழப் பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே இலங்கை வரை விரிந்து பரந்திருந்தது. முதலாம் இராசராசன், இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலம்வரை நீடித்த இந்தப் பேரரசைப் பிற்காலப் பாண்டியர்கள் தகர்த்துவிட்டனர். அவர்கள் உருவாக்க முயன்ற பாண்டியப் பேரரசும் கி.பி. 1311ஆம் ஆண்டு மாலிக்காபூர் படையெடுப்பினால் தகர்ந்தது. சோழர், பாண்டியர் ஆகியோர் இடைவிடாது தமக்குள் போராடிக் கொண்டதன் விளைவாக இரு அரசுகளுமே பலவீன மடைந்தன. இதன் விளைவாக அன்னியர் படையெடுத்துத் தமிழகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டது.
பல்வேறு மன்னர் குலங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டுவந்த போதிலும் அனைத்துப் பகுதித் தமிழரையும் இணைக்கும் அம்சமாகத் தமிழ்மொழி திகழ்ந்தது. தமிழர்களை அடையாளப்படுத்தி ஒன்றுபடுத்தும் கருவியாக மொழி விளங்கிற்று.
பாணர்களும், புலவர்களும் எல்லைகளைத் தாண்டி பல நாடுகளுக்குச் சென்று அந்தந்த மன்னர்களிடம் தங்கள் புலமைத் திறனைக் காட்டிப் பரிசில் பெற்றனர். அரச குலங்கள் ஒன்றுடன் ஒன்று திருமண உறவு பூண்டன. வெவ்வேறு அந்தந்த நாட்டு மக்களும் தமக்குள் திருமண உறவு கொண்டனர். வணிகர்கள் எந்தவிதமான தங்குதடையுமின்றி அனைத்து நாடுகளுக்கும் சென்று வாணிகம் செய்து பொருளீட்டினர். சமண, பெளத்த, சைவ, வைணவத் துறவிகளும் அவ்வாறே அனைத்து நாட்டு மன்னர்கள், மக்களின் ஆதரவு பெற்றுத் தொண்டு புரிந்தனர்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்களும், பன்னிரு ஆழ்வார்களும் எல்லை கடந்து எல்லா நாடுகளுக்கும் சென்று பக்தி நெறியைப் பரப்பினார்கள்.
ஆக மொத்தத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டின் பலபகுதிகள் இருந்தாலும் மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இனவழித் தேசிய உணர்வு அந்தந்தக் காலக் கட்டத்தில் உருவாகாமல் இருந்தாலும், பண்பாட்டு அடிப்படையில் உருவான உணர்வு பரவியிருந்தது. மொழி அடிப்படையில் அமைந்த இந்தப் பண்பாட்டுத் தேசிய உணர்வுதான் மொழிக்கும் மக்களுக்கும் அரணாகத் திகழ்ந்தது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகம் வடநாட்டுப் பேரரசு எதற்கும் உட்படாமல் தனித்தே திகழ்ந்தது. அசோகர் பேரரசு முதல் அக்பர் பேரரசுவரை அவர்களின் ஆளுகைக்குட்படாத ஒரு நாடாகத் தமிழகம் விளங்கிற்று. ஆனால் அன்னியரின் வாள்முனைக்கு அடிமைப்படாத தமிழகம் வடமொழிப் பண்பாட்டிற்கு அடிமைப்பட்டது. சமஸ்கிருதம் பேசிய பார்ப்பனர் தங்களின் உடல் வலிமையால் தமிழகத்தை வெல்லவில்லை. மாறாகப் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி நமது மொழியையும், இனத்தையும், நாட்டையும் சீரழிக்க முயன்றனர். அவர்களின் இந்த முயற்சியைத் தொல்காப்பியர் காலம் முதல் தமிழர்கள் எதிர்த்துப் போராடி வந்திருக்கின்றனர்.
தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு நூல்கள் முதலியன தொகுக்கப்பட்டதற்கு அடிப்படையே தமிழ்மொழியையும், இலக்கியங்களையும் அழியாது பாதுகாக்க வேண்டும் என்கிற தமிழ்த் தேசிய உணர்வுதான் காரணமாகும். பழந்தமிழ் நூல்கள் இவ்வாறு தொகுக்கப்படாமல் போயிருந்தால் நமது இலக்கியங் கள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கியங்கள் அழிந்திருப்பின் மொழி அழிந்திருக்கும். தமிழ் இனத்தின் தனித்தன்மை அழிந்திருக்கும். நல்லவேளையாக வடமொழியின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து சில சேதாரங்களுடன் நாம் தப்பினோம்.
"தமிழ்வேறு திராவிடம் வேறு'
தமிழும் என்னும் பெயரை திரவிடம் எனத் திரிந்தது. ஆனாலும் தற்போதுள்ள நிலையில் திரவிடம், திரவிடர் எனக் கூறுவது எவ்வகையிலும் ஏற்க இயலாதது என்பதை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) "தமிழ்வேறு திராவிடம் வேறு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : தமிழ் என்னும் சொல், தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை "அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும். கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரார் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை வேறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும் மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திரவிடமாகத் திரிந்தது. திரவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்'' என்றனர் முன்னோர்.
"மொழி பெயர் தேசத்தராயினும்'' என்பது குறுந்தொகை (11). தமிழ் திரவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம் எனத் திரிந்தது.
ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வடசொல்), பவழம் - ப்ரவாளம் (வ), பித்தளை - இத்தடி (தெலுங்கு), குமி - குலி (தமிழ்). தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ்பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது, திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திரவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப் பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்யசீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட் சாஸ்த்ரம்' எனக் குறித்திருப்பதையும் காண்க.
தமிழ், தமிழன், தமிழ் நாடு என முழங்குவோம்
திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும் வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும், தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டுவிட்டமையாலும், ஆந்திர கன்னட கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மை யுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.
தமிழன், தமிழனல்லாதான்
எந்நாட்டிலும், மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற்குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும், ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.
தமிழன் உயர்ந்தவன்
உலகின் முதன் முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே. ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும், பொருட்படுத்தாது. "நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க.
தாழ்வுணர்ச்சி நீங்குந் தகைமைக் கட்டங்கிற்றே வாழ்வுயர்ச்சி காணும் வழி தமிழ் வாழ்க! |