சனநாயகப் பண்புகள் நிலவுகிறதா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:04

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இராசஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் மெட்ரிகுலேசன் வரை படித்திருக்க வேண்டும் என்ற தகுதி வரையறைக்கப்பட்டுள்ளது. இதைக் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திருத்தம் தான் அது.

இதை ஒட்டிப் பேசிய பிரதமர் மோடி "மாநிலங்களவையில் என்ன நடந்தாலும் அது மக்கள் அவையில் மட்டுமன்றி, சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தாக்கத்தை உருவாக்கும். நாடாளுமன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்த நேருவின் சிந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மதிப்பு அளிப்பதுடன், நடப்புக் கூட்டத்தொடரில் முக்கிய சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றவும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டார்.

நாடாளுமன்ற சனநாயகம் சீரழிந்து கொண்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்திலாவது நேருவை பிரதமர் மோடி நினைவு கூர்வது நல்லதே.
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது என நேரு முடிவு செய்தபோது அப்போதைய கவர்னர் - ஜெனரல் மவுண்ட் பேட்டன் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். படிப்பறிவில்லாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுப்பது வேண்டாத விளைவுகளுக்கு காரணமாகிவிடும் என எச்சரித்தார். ஆனால், பிரதமர் நேரு, தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

1952ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றபோது இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் மட்டுமே. ஆனால், அந்தத் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பல தேர்தல்களிலும் படிக்காத பாமர மக்கள் வாக்குரிமையை சரியாகவே பயன்படுத்தினார்கள். தேர்தலில் வாக்களிக்கும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளருக்கும் தனித்தனிப் பெட்டிகள் வைக்கப்பட்டது முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தவரை மாற்றங்கள் அனைத்தை யும் நன்கு கவனித்து பாமர வாக்காளர்களில் பெரும்பான்மையினர் சரியாகவே வாக்களித்தார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காதவர்கள் யார்? - என்ற விவரத்தை நோக்கினால் அதிர்ச்சியடைவோம். படித்தவர்கள், பணியில் உள்ளவர்கள், மேல் தட்டு மக்கள் ஆகியோரே வாக்களிக்க வராமல் தங்களின் சனநாயகக் கடமையைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால், படிக்காத பாமர மக்கள் தவறாது வாக்களிக்கிறார்கள். ஆனால் அதற்கு பணம் சாதி, மத உணர்வு ஆகியவை காரணம் என்று கூறுவது சரியாகாது. ஏன் எனில் அவ்வாறு வாக்காளர்கள் வாக்களித்திருந்தால் குறிப்பிட்ட கட்சிகளே ஆட்சியில் தொடர்ந்து இருந்திருக்கும். அவ்விதம் நடக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கே வாக்களித்தார்கள் என்பதை பல தேர்தல்களில் நாம் பார்த்தோம்.

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் படித்த வர்களின் எண்ணிக்கை சராசரி 65 சதவிகிதத்திற்கும் அதிகமானதாகும். இந்தக் காலக் கட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சொல்வது சனநாயகத் தேரின் ஓட்டத்தைத் தடுப்பதாகும்.

நமது அரசியல் சட்டப்படி நாடாளுமன்றமே உயர் அதிகாரம் படைத்த அமைப்பாகும். மக்களின் குறைகள், கருத்துக்கள் ஆகியவற்றை நாடாளு மன்றத்தில் எடுத்துரைப்பதின் மூலம் அரசாங் கத்தின் நடவடிக்கைகளை சரியான திசைவழியில் செலுத்துவதும், கட்டுப்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். நாட்டு மக்களின் காவலனாக நாடாளுமன்றம் திகழவேண்டும். நாடாளுமன்றம்தான் அரசைத் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் நாடாளுமன்றம் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளையும், நிருவாகக் கோளாறுகளையும் தட்டிக் கேட்கும் உரிமையும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போது அதை அம்பலப்படுத்தி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் எதிர்ககட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு மட்டுமல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் உண்டு. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் அடிப்படை நோக்கம் இதுதான்.

ஆனால் இந்தியா குடியரசான பிறகு 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கக் காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் நிலவிய சனநாயகப் பண்புகளும் உணர்வுகளும் இப்போது நிலவுகிறதா? என்பது பெரும் கேள்விக்குறியாகும்.

பிரதமர் நேரு அமைத்த அமைச்சரவையில் காங்கிரசின் மூத்த தலைவர்களான வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் போன்றவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சாராத அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டியார், சியாம பிரசாத் முகர்ஜி, என். கோபாலசாமி அய்யங்கார், ஜான் மத்தாய், பல்தேவ் சிங், சி.டி. தேஷ்முக் போன்ற நிருவாகத் திறமையும், நேர்மையும் உள்ள தலைவர்களும் அங்கம் வகித்தார்கள்.

இரு அவைகளிலும் எதிர்க்கட்சி வரிசையில் கிருபளானி, இராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மதுலிமாயி, பிரேம்பாசின், என்.ஜி. கோரே போன்ற சோசலிஸ்டுத் தலைவர்களும், ஏ.கே. கோபாலன்,எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஜி, பூபேஷ் குப்தா, சோம்நாத் சட்டர்ஜி, பி. இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி போன்ற கம்யூனிஸ்டுத் தலைவர்களும். ஏ. இராமசாமி முதலியார், ஹெச்.ஏ. காமத், ஏ. கிருஷ்ணசாமி, என்.ஜி. இரங்கா, எம்.ஆர். மசானி, ஹெச்.எம். படேல், பிலுமோடி, முகமது இஸ்மாயில், ஈ.வே.கி. சம்பத், இரா. செழியன் போன்ற மக்கள் செல்வாக்கும் சொல்வன்மையும் படைத்த தலைவர்களும் வீற்றிருந்து, சனநாயகத் தேரை வழிநடத்த உதவினார்கள்.

நேரு உண்மையான சனநாயக வாதியாக தனது சொல்லாலும், செயலாலும் விளங்கினார். நாடாளு மன்ற சனநாயக முறையை நிலை நிறுத்த அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியதாகும். 17 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பு வகித்த நேருவிற்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தது. ஆனால் அந்த வலிமையைக் காட்டி எதிர்க்கட்சிகளை அலட்சியம் செய்ய அவர் ஒரு போதும் முயன்றதில்லை. எதிர்க் கருத்துக்களுக்கு மதிப்பளித்தார். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான முறையில் ஆட்சிக்கு எதிராக கூறப்பட்ட விமர்சனங்களுக்குச் செவிசாய்த்தார். மிகக் கடுமையாக அவரின் ஆட்சியை குறைகூறிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட அவரை மிகவும் மதித்துப் போற்றினார்கள் என்பதே அவருடைய சனநாயக உணர்வு எத்தகையது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

கருத்துச் செறிவுமிக்க விவாதங்களும், ஆட்சி யாளர்களைத் திக்குமுக்காட வைக்கும் கேள்விக் கணைகளும், சூடும், சுவையுமிக்க சொல்லாடல் களும் இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் இப்போது தேவையற்ற குறுக்கீடுகளும், மோதல்களும், நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கும் போக்குகளும் மலிந்து சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டன. நாடாளுமன்ற விதிமுறை கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. உண்மையான மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகின்றன. இந்தக் குற்றங்களில் எல்லாக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. எந்த மக்கள் தங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களோ அந்த மக்களை அடியோடு மறந்து உறுப்பினர்கள் செயல்படுகின்றார்கள். இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அடிக்கடி கூச்சல், குழப்பம் மேலோங்கி அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. நாடாளுமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.2.5 இலட்சம் செலவாகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டு தோறும் 32 இலட்ச ரூபாய் ஊதியமாகவும் இதர செலவுகளுக்காகவும் அளிக்கப்படுகிறது. இதுபோக தொடர்வண்டியின் முதல் வகுப்பில் தனது மனைவியுடன் எங்கு வேண்டுமானாலும் ஆண்டு முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யலாம். ஆண்டிற்கு 40 முறை இலவச விமானப் பயணம். டில்லியில் உள்ள தங்கும் இல்லத்திற்கு வாடகை கிடையாது. மின்சாரம் இலவசம். ஆண்டிற்கு 1,70 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் இலவசம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 855 கோடி செலவிடப்படுகிறது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.

கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பல தலைவர்கள் உருவாக்கிய உன்னதமான சனநாயக மரபுகளும், நெறிகளும் மறக்கடிக்கப்பட்டு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரவையிலும், மாநில அமைச்சரவைகளிலும் உள்ள அமைச்சர்களுள் கிரிமினல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளானவர்களை விலக்கி வைக்கும்படி உச்சநீதி மன்றத்தின் அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் 27 சதவிகிதத்தினரும், மாநில அமைச்சர்களில் 23 சதவிகிதத்தினரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை சனநாயக சீர்திருத்தங் களுக்கான அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் அம்பலப்படுத்தின. ஆனாலும் இவர்களை பதவிகளிலிருந்து விலக்கும் துணிவு பிரதமருக்கும் வரவில்லை. முதலமைச்சர்களுக்கும் வரவில்லை.

இந்தப்பட்டியல் பத்திரிகைகளில் வெளியாகி உலகத்திற்கு முன் நம் நாட்டை தலைகுனிய வைத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி தாவுகின்ற போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டன. பல்வேறு கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை வலை வீசிப் பிடிப்பதை பெரும் சாதனையாகக் கருதி கொண்டாடும் போக்கு வெட்ககரமானது.

இத்தகைய தவறான நடவடிக்கைகளின் மூலம் சனநாயகம் சாகடிக்கப்பட்டு பண நாயகம் தலை தூக்குகிறது என்பதையும் அதன் விளைவாக சர்வதிகாரம் படரும் அபாயம் உருவாகும் என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.

உயரிய இலட்சியங்களுக்காகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு எண்ணற்ற துன்பங்களைத் தாங்கி அளவற்ற தியாகங்களைப் புரிந்து உண்மையாகத் தொண்டாற்றிவரும் பல நேர்மையாளர்கள் இன்னமும் நாட்டில் இருக்கிறார்கள். இந்த சனநாயகச் சீரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மேற்கண்டவர்களுக்கு உண்டு. அவர்கள் துணிந்து மக்களுக்கு நல்வழியைக்காட்டவும், மக்கள் போராட்டங்களை நடத்தவும் முன்வராவிட்டால் சனநாயக விளக்கு அணைக்கப்பட்டு நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்து போகும்.

நன்றி : தினமணி 18-3-2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.