தமிழர்களின் எடுத்துக்காட்டாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொன்மையான யாழ் மற்றும் பஞ்சமுக வாத்தியம் போன்ற இசைக் கருவிகள், செட்டிநாட்டு சிற்ப வேலைப்பாடுகள், அழிந்து கொண்டிருக்கிற தோல்பாவை கூத்துக்களின் வடிவங்கள் ஆகியவற்றுடன் தமிழர்களின் அழிந்துவிட்ட, அழிககப்பட்டு வரும் மரபு சார்ந்த வண்ணங்களையும் அனைவரும் விரும்பும் வகையில் நவீன உத்திகளோடு ஓவியங்களிலும் வெளிப்படுத்தி வருபவர் ஓவியர் வீர. சந்தானம். நடிகர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு திடீரென சுயநினைவற்று, ஒரு மாத காலம் கோமாவில் கிடந்தவர் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையமான "தக்ஷின் சித்ரா' இவரைப்பற்றி "காமதேனு' என்ற குறும்படத்தை தயாரித்ததுடன், இவரது படைப்புகளைக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சி குறித்தும் - அவர் கடந்து வந்த வாழ்க்கை குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"சிறுவயதிலேயே டிராயிங் மாஸ்ட்டராகவோ அல்லது தமிழாசிரியராகவோ ஆக வேண்டும் என்ற இரண்டு வேட்கைகள் இருந்தன. காரணம் சீக்கிரமாக படித்து முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற குடும்பச் சூழல். தமிழாசிரியராக முடியவில்லை. அதனால் அடுத்த வேட்கையான ஓவியத்தின் மீது கவனம் திரும்பியது. ஓவியத்தின் மீது ஆர்வம் ஏற்பட இன்னொரு காரணம் எனது ஊர் திருநாகேஸ்வரம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த ராகு ஸ்தலம்தான் திருநாகேஸ்வரம். அருகாமையிலேயே உப்பிலியப்பன் கோயில். ஆக, கலைகளின் உறைவிடமாக விளங்குவது தஞ்சாவூர். இதனால் இயல்பாகவே என்னிடம் கலை ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. என் தந்தை ஒரு கட்டட தொழிலாளியாகவும் விவசாயியாகவும் இருந்ததாலும் இந்த கலை ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். மேலும், மழை, காற்று, நல்லது கெட்டது என என்னுடைய பதினெட்டு வயதுவரை பெரும்பகுதி கழிந்தது வீட்டின் அருகிலிருந்த கோயிலில்தான். அந்த கோயிலில் இருக்கும் சுவர் ஓவியங்களும், சித்திர வேலைப்பாடுகளும், சிற்பங்களும்தான் ஓவிய ஆர்வத்தை என்னுள் அதிகம் விதைத்தன.
அதன் பிறகு எங்களது ஊரில் இருந்து 5 மைல் தூரத்திலிருக்கும் கும்பகோணம் சென்று ஐந்து ஆண்டுகள் படித்தேன். தினமும் நடந்து சென்று வருவதைக் கண்ட கோயில் அதிகாரியான மீசை ÿனிவாசன் ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார். அதை வைத்துக் கொண்டு கும்பகோணத்துக்கு போய் வந்து கொண்டிருந்தேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பள்ளிப் படிப்பு முடிந்ததும் பையன் ஏதாவது வேலைக்குப் போவான், வாழ்க்கைக்குத் துணையாக இருப்பான் என்று நினைத்த என் தந்தைக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஒரு கட்டத்தில் இவன் நமக்கு பயன் இல்லாத பதராக போய்விட்டான் என்று வெறுத்தே போனார். நான் என் பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க எண்ணிய காலத்தில் அவர்கள் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம். ஓவியத்தின் மீது ஏற்பட்ட தீராத காதலால், சென்னை வந்து படித்தேன். ஓவியத்தை முழுதும் கற்று முடிக்க மேலும் ஆறு ஆண்டுகள் ஆகியது. பிறகு நெசவாளர் சேவை மையத்தில் ஒரு டிசைனைராக வேலை கிடைத்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல உதவி இயக்குநரானேன். துணை இயக்குநரானேன், என்னுடைய பணிக்காலத்தில் எனது பணி மத்திய அரசின் பணி என்பதால் அவ்வப்போது கேரளா, பெங்களூரு, நாக்பூர், திரிபுரா என ஊர் ஊராக மாற்றலாகிக் கொண்டே இருந்தேன். இதற்கிடையில் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் அழிந்து வரும் கலைகளையும், பாரம்பரியங்களையும் ஆராய்ந்து அதனை ஓவியமாக்கி வந்தேன். ஒரு கட்டத்தில் நமக்கு வேண்டியது நம்ம ஊரிலேயே இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. வேலையைவிட்டுவிட்டு வெளியே வந்துவிட்டேன். காரணம், தமிழ், தமிழன், தமிழ்நாடு என எனக்கு இருந்த சமூகப்பற்றுதான். அரசு உத்தியோகத்தில் கட்டுப்பட்டுக் கிடக்க அதற்குமேல் மனம் இல்லாமல் போனது.
அதன்பிறகு முழு நேர ஓவியன் ஆனேன். இதற்கிடையில் பெங்களூரு சென்று இருந்தபோது தோல்பாவை ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டேன். அதில், மனிதன், மனித நேயம், ஒரு நவீன போக்கு இருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது. அதன் காரணமாக அதன் மீது ஈர்ப்பு அதிகரித்து கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களைச் சுற்றி தோல்பாவை கோட்டோவியங்களைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அதை அப்படியே உள்வாங்கி நவீன யுத்திகளோடு என்னுடைய கருத்துகளுடன் வரையத் தொடங்கினேன்.
இதைத்தவிர, தமிழகத்தின் கலைகளையும், பண்பாட்டையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று எழுந்த ஆசையினால், சில ஆய்வுகள் செய்தேன். அப்போது. ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மை உள்ள மகர யாழ், சகடயாழ், செங்கோட்டு யாழ் போன்றவற்றின் வடிவம் திருவாரூரில் பஞ்ச முக வாத்தியம் என இருந்தது. இவற்றையெல்லாம் என்னுடைய படைப்புகளின் மூலம் பதிவு செய்திருக்கிறேன். மேலும் செட்டிநாட்டு மர சிற்பங்கள், கோயில் சித்திரங்கள், தோல்பாவை கூத்து இதனுடைய களப்பணி வழிதான் இப்போது நான் செய்து வரும் ஓவியங்கள் என்றும் சொல்லலாம். இவை தவிர தற்போது மறைந்து வரும், மறைக்கப்பட்டு வரும், அழிந்து வரும் நமது பாரம்பரியங்களையும், குறியீடுகளையும் ஓவியமாகவோ, கோட்டோவியமாகவோ நான் இருக்கும் காலத்துக்குள் பதிந்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன்.
இதைத்தவிர பன்னாட்டு நிறுவனங்களின் வருகையினால் இன்னும் சில காலங்களில் 25 மொழிகள் காணாமல் போகும் என்று ஐ.நா. அறிவித்திருக்கிறது. அதில் தமிழ் மொழி எட்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிந்திருக்கிறது. அப்படி தமிழும், தமிழ் பாரம்பரியங் களும் அழிந்துவிடக்கூடாது என்று என்னால் முடிந்தவரை என்னுடைய ஓவியங்களின் மூலம் பதிவு செய்துவைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் தற்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறேன்.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில், 10 அடி உயரம் 50 அடி நீளத்தில், 5 அடி உயரம் 55 அடி நீளத்தில் இரண்டு கருங்கல் சிற்பங்கள் உருவாக்கியிருக்கிறோம். நான் வரைந்து கொடுத்த ஓவியத்தை சிற்பமாக வடித்திருக்கிறார்கள். 2009இல் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களின் அவலநிலையை கற்சிலையாக உருவாக்கியிருக்கிறோம்.
எனது படைப்புகளையும், என்னைப்பற்றியும் ஒரு கண்காட்சி வைக்க வேண்டும் என்று தென்னக பண்பாட்டு மையமான தக்ஷின் சித்ராவின் தலைவர் முடிவு செய்து என்னிடம் கேட்டார். சரியென்றேன். இந்தப் பணிக்குப் பொறுப்பாளராக அந்த அமைப்பில் பணிபுரியும் கீதா என்ற ஓவியப் பெண்மணி ஒருவரை நியமித்திருந்தார்கள். அவர் சுயநலம் பாராது முழு அர்ப்பணிப்புணர்வுடன் என்னுடைய கோட்டோவியங்களை, பிற ஓவியங்களை எல்லாம் சேகரித்து கண்காட்சி வைத்ததோடு, என்னைப் பற்றிய நூல் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் 35 நிமிடம் ஓடக்கூடிய என்னுடைய வாழ்க்கை வரலாற்றை "காமதேனு' என்ற பெயரில் குறும்படமாக இயக்கி, தயாரித்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஓவியன் என்கிற அடையாளத்தைத் தவிர, சினிமா நடிகன் என்ற மற்றொரு அடையாளமும் எனக்கு கிடைத்திருக்கிறது. முழு நேர நடிகன் இல்லை நான். என் நண்பர், கவிஞர் அறிவுமதி மூலம் பாலு மகேந்திராவின் "சந்தியா ராகம்' என்ற படத்தில் கதாநாயகனானேன். தொடர்ந்து "அவள் பெயர் தமிழரசி', பீட்சா, கத்தி, அரவான், மகிழ்ச்சி போன்ற நல்ல படங்களில் நானும் இருந்திருக்கிறேன். இதைத் தவிர தற்போது இயக்குநர் வ. கெளதமன் இயக்கி இருக்கும் "வேட்டி' என்கிற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். உலகம் முழுவதும் தற்போது திரையிடப்பட்டிருக்கிறது. கி. ராஜநாராயணனின் கதையைத்தான் கெளதமன் இயக்கி இருக்கிறார். தற்போது நடிப்பதற்காக மேலும் கேட்டிருக்கிறார்கள். மீண்டும் நடிப்பேன்.
கலை இலக்கியவாதிகளுடன், அரசியல்வாதிகளுடன் நெருங்கின பழக்கம் உண்டு. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அந்த கொள்கைகளுக்காய் தீவிரமாக நிற்பவன் என்கிற பெயரும் எனக்கு உண்டு. என்னால் இதிலிருந்து மாற முடியவில்லை.'
- நன்றி : தினமணி கதிர் 27-03-2016 |