பொறுப்பான ஆளுங்கட்சியும் விழிப்பான எதிர்க்கட்சியும் தேவை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:44

சென்னை மாகாண சட்டமன்றம் இந்தியாவில் உள்ள பிற மாகாணங்களின் சட்ட மன்றங்களுக்கு முன்மாதிரியாகவும் எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது. இச்சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல் பதவி வகித்தார். இச்சட்டமன்றத்தில் அமைச்சர்களாக இருந்த வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள் பிற்காலத்தில் குடியரசுத் தலைவர்களானார்கள். பின்னர் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவர் ஆனார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகமது இஸ்மாயில் சாகேப் அவர்கள் அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவரானார். தமிழக பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக இருந்த உ. முத்துராமலிங்கத் தேவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

சென்னை மாகாண சட்டப் பேரவையும் தமிழ்நாட்டு சட்டப் பேரவையும் மேற்கண்டவர்களுக்குச் சிறந்த பயிற்சிக் களங்களாகத் திகழ்ந்தன.
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்ற 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் யாவும் இணைந்து ஐக்கிய சனநாயக முன்னணி அமைத்து பிரகாசம் அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தன. தன்னை முதல்வராக்க வேண்டும் என அவர் ஆளுநர் சிறீபிரகாசா அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுநர் இராஜாஜியை மேலவை உறுப்பினராக நியமித்து அவரை முதல்வர் பதவியை ஏற்க வைத்தார்.

காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பலரை சேர்த்துக்கொண்டு சட்டமன்றத்தில் இராஜாஜி 206 உறுப்பினர்களின் ஆதரவை நிரூபித்துக்காட்டினார்.

ஆனாலும் சட்டமன்றத்தில் ஐக்கிய சனநாயக முன்னணி வலிமையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. பிரகாசம், பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், உ. முத்துராமலிங்கத் தேவர், முகமது இஸ்மாயில், பி.டி. இராசன் போன்ற சிறந்த தலைவர்கள் தங்களின் வாதத்திறமையால் ஆட்சியாளர்களுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினர். ஆனால், எந்தக் காலக் கட்டத்திலும் சட்ட மன்ற மரபுகளுக்கு எதிராகவோ, சனநாயக நடைமுறைகளுக்கு எதிராகவோ அவர்கள் ஒருபோதும் செயல்படவில்லை.

முதல்வர் இராஜாஜி சட்டமன்றத்தில் பேசும்போது கம்யூனிஸ்டுகளை தனது முதலாவது எதிரியாக வர்ணித்தார். ஆனால், பெரியாறு அணை நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய அப்போதைய திருவாங்கூர் - கொச்சி மாநில முதலமைச்சராக இருந்த பட்டம் தாணு பிள்ளை அவர்களிடம் பேசி உடன்பாடு காண்பதற்கு இராசாசி தேர்ந்தெடுத்த தூதர் யார் என்றால் கம்யூனிஸ்ட் தலைவரான பி. இராமமூர்த்தியேயாகும். அவரும் மறுக்காமல் தமிழ்நாட்டின் நலனை மனதில் கொண்டு பட்டம் தாணுபிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் உற்பத்தி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார்.

அதைப்போல கம்யூனிஸ்ட் தலைவரான ஜீவானந்தம் சட்டமன்றத்தில் பேசும் போது தனது வண்ணாரப்பேட்டை தொகுதியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். முதல்வரான இராஜாஜி தனக்கேயுரிய குறும்புடன் "சர்வதேசியவாதியான ஜீவா கேவலம் ஒரு தொகுதியைப் பற்றியே கவலைப்படுவானேன்' என கேலி செய்தார்.

உடனடியாக ஜீவா "ஆம். கம்யூனிஸ்டுகள் சர்வதேசியவாதிகள்தான். ஆனாலும் ஒரு தொகுதியிலிருந்து அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். அம்மக்களுக்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்பட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் ஒருவருக்குப் பதில் சொன்னால் போதும்' என்று கூறியபோது சட்டமன்றமே சிரித்து ரசித்தது.

அதைப்போல 1957ஆம் ஆண்டில் முதலமைச்சராக காமராசரும் எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க. தலைவர் அண்ணா, காங்கிரஸ் சீர்திருத்தக் குழு வி.கே. இராமசாமி முதலியார், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் உ. முத்துராமலிங்கத் தேவர், கம்யூனிஸ்டுத் தலைவர் எம். கல்யாண சுந்தரம், சோசலிஸ்ட் தலைவர் பி.எஸ். சின்னத்துரை போன்றவர்கள் வீற்றிருந்து மன்றத்தின் பெருமையை உயர்த்தினர். முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை ஒட்டி நடைபெற்ற அடக்குமுறைகளைக் கண்டித்து காமராசர் அமைச்சரவையின் மீது எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. பதற்றம் நிலவிய அந்தச் சூழ்நிலையிலும் இருதரப்பிலும் கூச்சல், குழப்பம் எதுவும் இல்லாமல் வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக இருந்தாலும் சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கு எத்தகைய பங்கமும் நேரவில்லை.

1962ஆம் ஆண்டு முதல்வராக காமராசரும் எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவராக இரா. நெடுஞ்செழியன், சுதந்திரக்கட்சித் தலைவராக சா. கணேசன், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக டி.எல். சசிவர்ணத் தேவர், கம்யூனிஸ்டுத் தலைவர் எம். கல்யாணசுந்தரம் போன்றவர்களும் வீற்றிருந்து சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காத்தனர். வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தி.மு.க. தலைவர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக பி.ஜி. கருத்திருமன், சுதந்திரக் கட்சித் தலைவராக ஹெச்.வி. ஹண்டே, மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர் என். சங்கரய்யா, பிரஜா சோசலிஸ்டுக் கட்சியின் தலைவர் ஏ.ஆர். மாரிமுத்து போன்றவர்கள் வீற்றிருந்தனர். அவையின் நடவடிக்கைகளில் சனநாயக மரபுகள் பேணப்பட்டன. ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான கே.விநாயகம் தி.மு.க. ஆட்சிக்கு எச்சரிக்கை விடும் வகையில் "அண்ணா அவர்களே உங்கள் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன' என்று கூறினார்.

முதலமைச்சரான அண்ணா சிறிதும் கோபமடையாது "நண்பர் விநாயகம் அவர்களே, நான் எனது காலடிகளை எச்சரிக்கையாக எடுத்து வைக்கிறேன்' என்று பதில் கூறினார்.

1952ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை ஆளுங்கட்சியினாலும், எதிர்க்கட்சிகளாலும் கட்டிக் காக்கப்பட்ட சட்டமன்றத்தின் நெறிமுறைகள், உன்னதமான மரபுகள் எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணியம் ஆகியவை காற்றில் பறக்கவிடப்படும் நிலை உருவெடுத்தது.
1971ஆம் ஆண்டு தி.மு.க.வின் தலைவரான மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். தி.மு.க.வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் "கட்சியின் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்குகளை காட்டவேண்டும்'' எனப் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார். இதன் விளைவாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். 1972ஆம் ஆண்டு அக்டோபர்18ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

கருணாநிதி அமைச்சரவை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது, அது நீடிப்பது சரியா? என்ற கேள்வியை சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். எழுப்பினார். சபாநாயகராக இருந்த மதியழகன் "சட்டசபையை கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு நின்று மக்களைச் சந்தியுங்கள்'' என்று கூறிவிட்டு சபையை ஒத்திவைத்தார்.

இதன் விளைவாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவந்தது. இது குறித்து விவாதிக்க 2/12/1972 அன்று சட்டமன்றம் கூடியபோது "சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முதலில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். எனவே மதியழகன் தலைமை தாங்கக்கூடாது' என தி.மு.க. வலியுறுத்தியது. அக்கோரிக்கையை ஏற்க மதியழகன் மறுத்துவிட்ட காரணத்தினால் துணை சபாநாயகரான சீனிவாசன் சபாநாயகர் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து சபையை நடத்த முற்பட்டார். ஒரே நேரத்தில் இரு சபாநாயகர்கள் தலைமை தாங்கும் வேடிக்கை அரங்கேற்றப்பட்டது. இரு தரப்பிலும் கூச்சல் குழப்பங்கள் மேலிட்டன. மதியழகன் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக துணை சபாநாயகர் சீனிவாசனும், அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மதியழகனும் அறிவித்தனர். அவையிலிருந்து மதியழகனும் எம்.ஜி.ஆரும் வெளியேறியபோது அவர்களை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. சட்டசபை செத்துவிட்டதாக எம்.ஜி.ஆர். கூறிவிட்டு வெளியேறியவர் பின்னர் வரவேயில்லை.

தி.மு.க., அ.தி.மு.க. என பிளவுபட்டு ஆளுங்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் மாறி மாறி ஆண்ட காலத்தில்தான் சட்ட மன்றத்தின் மரபுகளும், சனநாயக நெறிமுறைகளும் மதிக்கப்படாமல் மிதிக்கப்பட்டன.

1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர் அ.தி.மு.க. செயலலிதா அணி என்றும் சானகி அணி என்றும் இரண்டாகப் பிளவுபட்டது. முதலமைச்சராக சானகி அம்மையார் பொறுப்பேற்றார். 28-1-1988 அன்று அவர் அமைச்சரவை மீதான நம்பிக்கைத் தீர்மானம் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு கொண்டுவரப்பட்டபோது வரலாறு காணாத கலவரம் மூண்டது. இரு தரப்பினரும் ஒலி பெருக்கிகளை பிடுங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும் சட்டமன்றத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் படுகாயமடைந்தனர். இவ்வளவு கலவரங்களுக்கிடையே செயலலிதா ஆதரவு 33 உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்திருப்பதாகவும் . அமைச்சரவையின்மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் அறிவித்தார். ஆனால், 30-1-88 அன்று மத்திய அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கெட்டுவிட்டதாகக்கூறி தமிழக அரசை பதவி நீக்கியது. சட்ட மன்றம் கலைக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது. அ.தி.மு.க. செயலலிதா அணி 27 இடங்களிலும், சானகி அணி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் 26 இடங்களைப் பெற்றது.

25-03-1989 அன்று சட்டமன்றம் கூடியபோது முதலமைச்சர் கருணாநிதி வரவு-செலவு திட்ட உரையைப் படிப்பதற்காக எழுந்தார். உரையை படிக்கக்கூடாது என செயலலிதா குரல் எழுப்பினார். இதைத் தொடர்ந்து பெரும் அமளி மூண்டது. தான் தாக்கப்பட்டதாகக் கூறி செயலலிதா அவையை விட்டு வெளியேறினார்.

1991ஆம் ஆண்டில் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று செயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். தி.மு.க.வின் சார்பில் கருணாநிதி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். இதன் விளைவாக அவர் தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அதற்குப் பின்னர் 1996ஆம் ஆண்டு முதல் இன்று வரை தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா சட்டமன்றத்திற்கு செல்வதில்லை. அதைப்போல அ.தி.மு.க. ஆளுங்கட்சியானால் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்திற்குச் செல்வதில்லை. இவர்களின் இந்த தவறான வழிமுறையை தே.மு.தி.க. எதிர்க்கட்சியான போது அதன் தலைவர் விஜயகாந்த் பின்பற்றி சட்டமன்றத்திற்குச் செல்வதைப் புறக்கணித்தார்.

மாநில முதல்வர் பதவி பொறுப்புமிக்க பதவியாகும். அலுவலகப் பணிகள், மக்களை சந்திக்கும் பணிகள் எவ்வளவு இருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட சட்ட மன்ற பணிகள் என்பது மிக மிக முக்கியமானவையாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கு சமமான மிக மிக முக்கியப் பதவியாகும். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதும் அவற்றின் மீது அரசின் கவனத்தைத் திருப்பிப் பரிகாரம் காண்பதும் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் யாராக இருந்தாலும் ஒரு தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பப் படுகிறார். சட்டமன்றத்திற்குச் சென்று கடமையாற்ற விருப்பமில்லா விட்டால் அந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து அவர் தவறி விட்டார் என்பதுதான் பொருள். அப்படியானால் சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலகி மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குச் செல்ல வழிவிடவேண்டும். சட்டமன்றத்திற்கும் போவதில்லை. பதவியைவிட்டும் விலகுவதில்லை. என்னும் நிலைப்பாடு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணையின்படிதான் ஒருவர் முதல்வர் ஆகிறார். மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார். மக்களின் ஆணையை மதிக்காதவர்கள் மக்களின் பகைவர்களே. முதல்வரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ யாராக இருந்தாலும் அவரவர் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்.

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்தவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்று தங்களின் சனநாயக கடமையை பொறுப்புடன் ஆற்றாத காரணத்தினால்தான் ஆட்சியில் இருப் பவர்கள் தங்குதடையில்லாத ஊழல்களிலும் நிருவாகச் சீர்கேடுகளிலும் இயற்கை வளங்களை சூறையாடுவதிலும் ஈடுபட முடிந்தது.

அது மட்டுமல்ல சட்டமன்ற விதிமுறைகளை மீறிச் செயல்படும் துணிவு ஆளுங்கட்சியினருக்கு ஏற்படுகிறது. சட்ட முன்வடிவுகளை சட்டமன்றத்தின் முன் வைத்து விவாதிப்பதற்குப் பதில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் போக்குப் பெருகிவிட்டது. சட்டமன்றங்கள் கூடும் நாட்களும் குறைந்துவிட்டன. கூடினாலும் கூச்சல் குழப்பத்துடன் ஒத்தி வைக்கப்படுவது பெருகிவிட்டது. மக்கள் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு கட்சி கண்ணோட்டத்துடனான பிரச்சினைகள் முன்னுக்கு வைக்கப்படுகின்றன. மக்கள் நலனைவிட கட்சியின் நலனே முக்கியமாக கருதும் போக்கு வளர்ந்துவிட்டது. இத்தகைய தவறுகளுக்கெல்லாம் ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியும் பொறுப்பாகும்.

முச்சந்திகளில் நின்று முழக்கமிடாமல் சட்டமன்றத்திற்குச் சென்று அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைத்துத் திருத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பெரும் கடமையாகும். அவர் அவ்வாறு செய்யத் தவறினால் ஆட்சி சீர்கெட்டுப்போகும் என்பதை வள்ளுவர்

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்.' என்றார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.