"வடநாட்டில் திருக்குறளைப் பரப்புவேன்" தருண் விஜய் முழக்கம் - க. தமிழ்வேங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:11

பெங்களூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா மற்றும் திருவள்ளுவர் நாள் விழாவும் பெங்களூரில் உள்ள டியூட்ராப்ஸ் ஹோட்டலில் கடந்த 01-05-2016 அன்று நடந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான திரு. இராமமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடந்தது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், திருக்குறளை வடஇந்தியாவில் பரப்பி வருவதோடு ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் வள்ளுவருக்கு சிலை அமைக்கப் பாடுபட்டு வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு. தருண் விஜய் அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார். விழாவில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், சட்டத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் க. வேங்கடபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

tharunvijay-ayya

நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்கள் பேசும்போது, ்தமிழ் அன்னைக்கு என் முதல் வணக்கம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு, தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என் வணக்கம் என்று தமிழிலேயே பேசினார். மேடையில் இருந்த மற்றவர்களை ஜி என்று அடைமொழியிட்டு அழைத்தவர் பழ. நெடுமாறன் அய்யா அவர்களே என்று தமிழில் பேசினார்.

காந்தி, அம்பேத்கர் வழியை நாம் பின்பற்றவேண்டும். திருவள்ளுவர் நாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் அன்னையின் ஈர்ப்பால் திருக்குறளை நாடெங்கும் பரப்பும் பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகிறேன். கிருஷ்ணன் தேவகியின் குழந்தையானாலும் யசோதையிடம் அவன் வளர்ந்தான். அதுபோல, நான் பிறந்தது உத்தரகண்ட் மாநிலமானாலும் தமிழ்நாட்டின் பிள்ளையாகவே வாழ விரும்புகிறேன்.

இந்தியாவின் தலைசிறந்த நூல் திருக்குறள். இந்தியாவில் நன்னெறி அணிகலன் திருக்குறள். திருக்குறளை வாசிக்கவும் நேசிக்கவும் கிடைத்த வாய்ப்பு ஆண்டவன் எனக்களித்த பெரும்பேறாகும். கணியன்பூங்குன்றன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியதுபோல இந்திய மக்களை, உலக மக்களை ஒருமைப்படுத்தும் மிகப்பெரிய ஆற்றல் திருக்குறளுக்கு உள்ளது.

மொழியையும் பண்பாட்டையும் நேசிக்கும் கலையை தமிழர்களிடம்தான் கற்கவேண்டும். தமிழர்கள் திருக்குறளை மிகவும் நேசிக்கிறார்கள்.இந்தியாவின் தேசிய பாரம்பரியமாக திருக்குறள் விளங்குகிறது. திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே சொந்தமானது.

வட இந்தியாவில் திருக்குறளை போதிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறேன். இந்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திருக்குறளை பரப்ப இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலட்சியம் நிறைவேறும் வரை ஓயமாட்டேன். பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாட கேட்டுக்கொண்டபோது அதற்கு பிரதமர் மோடியும், மனிதவள மேமம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் அனுமதி வழங்கினர். இதனால் வட இந்தியாவில் 5 ஆயிரம் பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் போதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹிமாச்சல் போன்ற மாநிலங்களிலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் திருக்குறள் கற்க ஆதரவு அளித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் 133 மாணவர்களை அழைத்துச் சென்று திருக்குறளை ஓதச் செய்தோம். இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் வல்லமை திருக்குறளுக்கு உள்ளது. கங்கைக்கரையில் அமைந்துள்ள ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கத் திட்டமிட்டு, அதன் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பீடம் அமைக்க ரூ. 20 இலட்சம் நன்கொடையாக அளித்திருக்கிறேன். சிலை அமைக்க அனைவரும் ஒன்றுகூடி ஆதரவு தரவேண்டும். திருக்குறளின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லவே இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரை போல சுப்ரமணிய பாரதியையும் இந்தியர்கள் போற்றித் துதிக்கவேண்டும் என்று கூறியவர், தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு திருக்குறள் தெரியுமா, திருக்குறளைப் பின்பற்றுகிறாரா என்று கண்டறியுங்கள். திருக்குறளைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டும் தமிழக மக்கள் வாக்களிக்கவேண்டும். அப்படிப்பட்ட வேட்பாளர்கள் கிடைக்காவிட்டால் நோட்டா (யாருக்கும் ஆதரவில்லை) பொத்தானை அழுத்திவிடுங்கள்.
எதிர்காலத்திலாவது திருக்குறளை பின்பற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தால் கூட அவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பதை தமிழக மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் இணைந்து, ஒரு கப் டீ கூட குடிப்பதில்லை. திருவள்ளுவர் சக்தியால், திருக்குறளை பரப்புவதற்கு அனைத்து கட்சியினரும் ஒரே மேடையில் அமர்ந்தனர்.

பெங்களூரில் திருக்குறள் மன்ற நூலகத்தை சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. எனது ரத்தம் கொதிக்கிறது. நூலகத்தை மீண்டும் செயல்பட அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். நூலகத்தை திறக்கும் போது, நானும் அதில் கலந்துகொள்வேன்.

மனிதர்களை சாதி அடிப்படையில் பிரிக்கக் கூடாது. தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் கலப்பு திருமணம் செய்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இது மிகவும் கொடுமையானது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நாம் சம மரியாதை கொடுக்கவேண்டும். பூமியில் பிறக்கும் போது அனைவரும் ஒரே மாதிரியாக பிறக்கிறோம். பிறக்கும் நாடுகளை பொருத்தும், செய்யும் தொழிலை பொருத்தும் நாம் வேறுபடுகிறோம் என்பதை ிபிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்ீ என்ற குறள் மூலம் திருவள்ளுவர் நமக்கு கூறியுள்ளார். இதை படித்து மறந்துவிடாமல் அதை பின்பற்றவேண்டும் என்பதையும் ிகற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தகீ என குறள் மூலம் நமக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்” என்று திருக்குறளின் திருவள்ளுவரின் சிறப்பை விளக்கினார்.

விழா மேடையில் தருண் விஜய்க்கு தனி நாற்காலி அமைத்து அதில் அவரை உட்கார வைத்து கர்நாடகத்தின் பாரம்பரிய அடையாளமான மைசூர் தலைப்பாகையை அவருக்கு அணிவித்து பொன்னாடை, மாலை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் நாற்காலியிலிருந்து எழுந்து கைதட்டி தருண்விஜய்க்கு தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தியதைக் கண்ட தருண்விஜய் தான் மட்டும் சிறப்பு விருந்தினர் என்கிற முறையில் உட்கார வைத்து கெளரவிக்கப்படுவதை நினைத்து கூச்சமடைந்தவராய் இரண்டு முறை நாற்காலியைவிட்டு எழ எத்தனித்தவரை அவரது தோளில் கைவைத்து ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தருண் விஜயை உட்கார வைத்தார்.

பழ. நெடுமாறன் பேசும்போது, ஜி.யு.போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார். அதனால் டால்ஸ்டாய் போன்ற அறிஞர்கள் திருக்குறளின் மேன்மையை உணர முடிந்தது. டால்ஸ்டாய் மூலமாக அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்த மகாத்மா காந்திக்கு திருக்குறள் அறிமுகமாகிறது. இப்படி திருக்குறளை உலகறியச் செய்த ஜி.யு.போப்பை தமிழகம் நன்றியோடு நினைவுகூர்கிறது. இப்படிப்பட்டவர்களை தமிழ் அன்னையின் தத்துப் புதல்வர்களாகவே தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதுபோல, திரு. தருண்விஜய் அவர்களும் தமிழராகவே போற்றப்படுவார் என்று கூறினார். மேலும், திருக்குறளைப் பரப்பும் பணியை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். அதற்கு தமிழர்கள் துணை நிற்பார்கள் என்றார்.

திருக்குறள் நூலகம்

பிறகு பழ. நெடுமாறன் அவர்கள் அல்சூரில் உள்ள திருக்குறள் மன்ற நூலகத்தை நண்பகல் சென்று பார்வையிட்டார். நூலகக் கட்டடத்தைக் கைப்பற்றும் பொருட்டு சில சமூக விரோதிகளால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சூறையாடப்பட்டிருந்தன.

நூலகத்தை பாதுகாத்து வந்த திருக்குறள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ப. நல்லபெருமாள் அவர்களிடம் ஆறுதல் கூறியதோடு நடந்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார். புத்தகங்களைத் திரட்டி தருவதாகவும், அதன் முதல் கட்டமாக 150 புத்தகங்களை வழங்குவதாகவும் கூறினார்.

ஐயாவுடன் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் க. வேங்கடபதி, தமிழர் முழக்கம் ஆசிரியர் வேதகுமார், புலவர் இறையடியான், புலவர் வி. வில்வநாதன், கர்நாடக - தமிழர் நல ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் க. தமிழ்வேங்கை உள்ளிட்டோர் நூலகத்தைப் பார்வையிட்டனர்.

மாலை தருண்விஜயுடன் தனிப்பட்ட முறையிலான ஒரு சந்திப்புக்கு பேராசிரியர் இராமமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 20பேர் கொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு அவரவர்களின் சுய அறிமுகத்துடன் தொடங்கியது. அப்போது பேசிய தருண்விஜய் அவர்கள் நான் கடந்த காலங்களின் பெரியார் அண்ணாவை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளேன். ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்தபிறகுதான் அவர்களைப் பற்றிய மேன்மையை தெரிந்தகொண்டேன். கலப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கெளசல்யா தம்பதியினருக்கு நிகழ்ந்த கொடுமையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சாதி மறுத்துத் திருமணம் புரிபவர்களை யாராவது தாக்கினால் அவர்களை திரும்பத் தாக்கவேண்டும். நானே கலப்புத் திருமணம் செய்துகொண்டவன்தான் என்றார்.

மேலும், தமிழர்கள் இந்தி படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில் நான் உடன்படவில்லை. காரணம், வடக்கே இந்தி புத்தகத்தை அந்தந்த மாநில அரசாங்கங்கள் அச்சடித்து வழங்கி இந்திப் படிக்க வாருங்கள் என்றாலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இந்திப் படிக்க முன்வராதபோது மற்றவர்களை இந்தியைப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. இதை பல இடங்களில் நான் வலியுறுத்தியுள்ளேன். அதுமட்டுமல்லாமல், இந்திய வரலாற்றின் காலங்காலமாக அக்பர், ஹிமாயுன் என வடநாட்டு அரசர்கள் குறித்து பாடப் புத்தகத்தில் உள்ளது. ஏன் இராஜராஜன், இராஜேந்திர சோழன் குறித்து பாடத்தில் இல்லை? அவர்களும் இந்தியர்கள் தானே? அவர்களின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? என்று கூறியவர் அக்னிக் குஞ்சு ஒன்று கண்டேன் என்று பாரதியின் கவிதை வரியைப் பேசி பாரதி பாரதத்தின் தேசிய கவி என்றார்.

ஈழப் பிரச்சனைக் குறித்து அவரிடம் தனிப்பட்ட முறையில் ஐயா பழ. நெடுமாறன் பேசினார். கட்சியின் நிலைப்பாட்டில் நான் ஒரளவுக்கு கருத்துக் கூற முடியும். இருந்தாலும், இதுகுறித்து நான் பிரதமரிடம் பேசுகிறேன் என்றார்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.